மக்கள் தகுதிக்கேற்ற அரசு

தமிழ்நாட்டில் நிலையான அரசு ஆட்சி செய்து வருகிறது என்ற நற்பெயர் மாறி, நிலையற்ற அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நிலையான அரசு ஆட்சி செய்து வருகிறது என்ற நற்பெயர் மாறி, நிலையற்ற அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஊழல், குற்றப் பின்னணியுள்ள அரசியல்வாதிகளின் ஆதிக்கம் ஆகியவை அகில இந்தியாவையும் பாதித்திருக்கும் இந்த வேளையில் பல மாநிலங்களின் இளைஞர்கள், நேர்மையான அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும் என்ற தங்களது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார்கள் என்ற கருத்து அரசியல் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
நேர்மையற்ற அரசியல் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதனை எதிர்த்து போராடாமல் வேறுபல கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்களை தீவிரமாக உருவாக்கி கலந்து கொள்கின்றனர் என்ற கருத்து வெளியிடப்படுகிறது.
துள்ளித்திரியும் காளை மாடுகளை ஒருமுறைகூட பார்த்திராத நகர்ப்புறத்து 14 வயது இளம் பெண் ஒருவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று தொலைக்காட்சியில் பேட்டியளிக்கிறார். எல்லா நிலைமைகளும் சரியல்ல என்பதுதான் காரணம். அன்னா ஹசாரேயின் போராட்டம் முதல், காஷ்மீரில் கல்லெறி போராட்டம் வரை அடிப்படையில் பொதுவான மக்களின் அதிருப்தியையே வெளிப்படுத்துகிறது.
நமது முந்தைய சரித்திரத்தை ஆராய்ந்தால் நேர்மையின் உறைவிடமாக இந்தியர்களான நாம் வாழ்ந்ததையும், அதனை ஆங்கிலேயர்கள் பாராட்டியதையும், தமிழ்நாட்டில் பொது வாழ்க்கையில் ஊழலற்ற பொதுநலம் தீவிரமாக பரவியிருந்ததையும் பெருமையுடன் நமது இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
1962-ஆம் ஆண்டு மூன்றாவது பொதுத்தேர்தல் நடந்து முடிந்தபின், ராஜாஜி "இந்திய வாக்காளர்கள் மேலைநாடுகளின் தரமான வாக்காளர்களின் நற்குணங்களை கொண்டவர்களாக இல்லை. பெருவாரியான ஏழை மக்களை உள்ளடக்கிய நம் நாட்டு வாக்காளர்கள் லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்கள்' என கூறினார்.
ஆங்கிலேயர் காலத்து தேர்தல்கள் தொடங்கி தமிழ்நாட்டில் நேர்மையையும், பொது நன்மையையும் முன்நிறுத்திய அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதல்களின்படி நடந்த தேர்தல்களை இன்றைய தேர்தல்களுடன் ஒப்பிடவே முடியாது.
ஆனால், இதை ஒரு பெரிய விவாதமாக உருவாக்கி வழிதேட வேண்டும் என்ற முனைப்பு நமது இன்றைய தலைவர்களிடமோ, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் பொது நன்மையில் ஈடுபாடுள்ள எந்த அமைப்பிடமும் கிடையாது.
நான் பள்ளிச் சிறுவனாக இருந்த 1956 முதல் 1960 வரையிலான காலகட்டம் நினைவில் வருகிறது. பஞ்சாயத்து தேர்தல் முதல் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் நடக்கும் பொதுத்தேர்தல் வரை ஓட்டுப்போட பணம் என்ற நிலைமை கிடையாது.
வாக்குச் சாவடிக்கு அருகில் மிகப்பெரிய அளவில் சமையல் நடக்கும். வாக்களிக்க வருபவர்கள் அங்கே சென்று உணவருந்திவிட்டு வாக்களிக்கச் செல்வார்கள். இதை ஒரு தவறான ஊழல் நடவடிக்கை என யாருமே கருதியதில்லை. காரணம், தேர்தலில் நிற்பவர்கள் அந்த கிராமத்தில் பெரிய தனவந்தர்கள் அல்லது அவர்கள் முன்னிறுத்தும் வேட்பாளர்களே.
தமிழ்நாட்டின் இந்த நிலைமை படிப்படியாக மாறி, நிறைய பணத்தை செலவு செய்து மிகப்பெரிய அளவில் போஸ்டர்கள், வண்ண நிறத்திலான விளம்பரப் பலகைகள், இசைக் கருவிகள் முழங்க ஊர்வலங்கள் என தேர்தல் களங்கள் மாற்றப்பட்டன. இது 1967-ஆம் ஆண்டிற்குப்பின் தி.மு.க. ஆட்சியமைத்த பின்னர்தான். அடுத்து வந்த ஆட்சிகளும் இதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டன.
எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், புதிய கட்சிகள் சில உருவாகின்ற போதும் அந்தக் கட்சிகள் நடத்தும் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களுக்குக்கூட பல லட்ச ரூபாய் செலவு செய்து வேண்டிய கட்டாயம் உருவாகியது.
சரி, இதுபோல் செலவு செய்யும் பணம் எங்கிருந்து வருகிறது என்ற அடிப்படை கேள்வி உருவாகிறது. கட்சியின் உறுப்பினர்களாகி தலைவர்களாக வரும் சிலர் தங்கள் சொந்தப் பணத்தை செலவிடுவதும், பல பெரும் தொழிலதிபர்களிடம் நன்கொடைகள் பெற்று செலவிடுவதும் நடைமுறையாகிறது. அப்படி செலவு செய்பவர்களின் ஒரே குறிக்கோள், நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தாங்கள் செலவு செய்த பணத்தைவிடவும் அதிக அளவு பணத்தை பெறும்படியான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதுதான்.
பதவியில் இருக்கும் அமைச்சர்கள் முதல் கட்சியின் வெவ்வேறு நிலைகளிலுள்ள தலைவர்களும் தங்களிடம் அரசுத் துறையில் வேலை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வருபவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டுதான் அரசு உத்தரவுகளை அவர்களுக்கு வழங்குகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
ஒரு கட்டடம் அரசின் அனுமதியைப் பெற சதுர அடிக்கு இவ்வளவு என கணக்கிட்டுப் பெறப்படுவதும், அரசு வேலைகளுக்கு ஒப்பந்தம் கிடைக்க அந்த வேலையின் மதிப்பீட்டில் குறிப்பிட்ட சதவீதம் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறை.
இந்த ஊழல் பணம் தவிர, 1980 முதல் நாடெங்கிலும் நேரடி அரசியலில் பல ரவுடிக் கும்பல்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டைப் பொருத்தவரையிலும், மற்ற மாநிலங்களைவிட இந்த நடைமுறை குறைவு எனலாம். குற்றப்பின்னணி உள்ள பலர் தேர்தலில் வென்று, தங்கள் தொகுதி மக்களுக்கு அரசு வழங்கத் தவறிய பல நன்மைகளை செய்து முடிக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
தங்கள் குடும்பப் பிரச்னைகளை இதுபோன்ற எம்.எல்.ஏ., எம்.பி.க்களிடம் கொண்டுசென்றால் அவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்து பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. வறுமையில் வாடும் பலருக்கு உணவு வழங்குவதும், ஏழை குடும்பத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதும் இதுபோன்ற தலைவர்களுக்கு கை வந்த கலை.
ஆக, இதுபோன்ற அரசியல்வாதிகளின் தாக்கம் நமது அரசியலை பாதித்துள்ளது உண்மைதான். அதை ஒழிப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி, "நமது அரசியலில் குற்றவாளிகள் புகுந்து இடம் பிடிப்பதை நிறுத்த வேண்டும்' எனக் கூறினார்.
ஆனால், தேர்தல் முடிந்த பின்னர் உருவான பா.ஜ.க. எம்.பி.க்களில் 35 சதவீதத்தினரின் பேரில் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதாவது, கடுமையான நடவடிக்கைகளை எடுத்தபோதும், இது மாதிரியான குற்றப்பின்னணி உள்ளவர்களை எந்த அரசியல் கட்சியாலும் தவிர்த்துவிட முடியாது என்பது உறுதி
யாகியுள்ளது.
தற்போது உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் காங்கிரஸில் 25% பேர், சமாஜவாதி கட்சியில் 29% பேர், பகுஜன் சமாஜ் கட்சியில் 38% பேர், பா.ஜ.க.வில் 40% பேர் ஆகியோர் குற்றப்பின்னணி உடையவர்கள் ஆவர்.
எல்லா கட்சிகளுமே இந்த அடிப்படையை, தவிர்க்க முடியாததாக ஏற்றுக்கொண்டு விட்டன என்பது தெளிவு.
தேர்தலில் பணம் தருவதை கட்சிகள் முன்நின்று செய்கின்றன என்பதைவிடவும், மக்கள் பணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்ற உண்மை நம்மை அதிர வைக்கிறது.
ஒரு இடைத் தேர்தலின்போது, ஒரு கட்சியின் வேட்பாளர் தனது தொகுதியின் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துகொண்டு போயிருக்கிறார். ஒரு தெருவில் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் எனக் கணக்கிட்டு, ஒரு வாக்காளருக்கு இவ்வளவு என பணம் வழங்கப்பட்டு தனது கட்சிக்கு வாக்களிக்க சத்தியம் செய்யச் சொல்லியிருக்கிறார்.
ஒரு வீட்டின் சுவரில் எதிர்க்கட்சியின் சின்னம் வரையப்பட்டிருந்ததால், அங்கே பணம் வழங்காமல் நகர்ந்து சென்ற வேட்பாளரிடம், அந்த வீட்டுப் பெண், "ஐயா, எங்களுக்கு பணம் கிடையாதா' என உரக்கக் கூவி கேட்டிருக்கிறார்.
தயக்கத்துடன் அவரிடம் சென்று வேட்பாளரின் ஆட்கள் அந்த வீட்டில் எத்தனை வாக்காளர்கள் என தெரிந்தபின் அதற்கான பணத்தை வழங்கிவிட்டு, எதிர்க்கட்சியைச் சார்ந்த அவரது குடும்பத்தினர் தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பார்களா எனக் கேட்டுள்ளனர். "ஐயா, நாங்கள் மிகவும் நேர்மையானவர்கள், கைநீட்டி பணம் வாங்கியபின் உங்கள் வேட்பாளருக்குதான் வாக்களிப்போம், இது சத்தியம்!' எனக்கூறியுள்ளார்.
இதுபோன்ற மக்கள் மத்தியிலிருந்து உருவாகி வரும் அரசியல்வாதிகளிடம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும் என்பது தெரியவில்லை.
ஒரு கட்சியின் இரண்டு பிரிவினர் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும்போது, நடுநிலையில் இருந்த ஒரு எம்.எல்.ஏ. பெருவாரியான பிரிவிடம் தனக்கு அமைச்சர் பதவி கேட்டுள்ளார். வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது என அந்த பிரிவினர் கூறியபின் எதிர்தரப்பிற்கு தாவி, கொள்கை ரீதியாகவும் தனது தொகுதி மக்களின் விருப்பப்படியும் தான் நடந்து கொள்வதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கிறார்.
இந்த சூழ்நிலைகளைக் கண்டு நாம் கொதிப்படைய முடியாது. காரணம் நமது சமூகம் இந்த நிலைமையை இப்போது அடைந்திருப்பது, பல வருடங்களாக நிகழ்ந்த வளர்ச்சியே.
அன்றைய ஆங்கிலேய பிரதமர் வின்ஸ்டன்ட் சர்ச்சில், "மக்கள் தங்கள் தகுதிக்கேற்ற அரசை பெறுகிறார்கள்' என்று கூறியது நினைவிற்கு வருகிறது.

கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com