தாய்மொழி காப்போம்

உலகில் எந்த நாட்டிலும் தாய்மொழியே பயிற்று மொழியென்பதைக் கூறவேண்டிய தேவை எழவில்லை.

உலகில் எந்த நாட்டிலும் தாய்மொழியே பயிற்று மொழியென்பதைக் கூறவேண்டிய தேவை எழவில்லை. ஏனெனில் எல்லா நாடுகளுமே அவரவர் தாய்மொழி மூலம்தான் ஆட்சி செய்கின்றனர். கல்வி கற்பிக்கின்றனர்.
உலகெங்கும் ஆட்சி, கல்வி, வழிபாடு, நீதி, எழுத்து, பேச்சு என எல்லாவற்றிலும் அவரவர் நாட்டின் தாய்மொழியே கோலோச்சுகின்றது. எந்த நாட்டிலும் ஓர் அந்நிய மொழியைக் கல்வி மொழியாகத் திணிப்பதில்லை.
தாய்மொழி மூலம் கல்வி கற்றால் வருவாய்க்கு வழியுண்டா, வெளிநாட்டிற்குச் செல்ல முடியுமா என மற்றைய மாநிலத்தவர் நினைப்பதில்லை. பள்ளிப்படிப்பு முதல் உயர்நிலைக் கல்வி, தொழிற்கல்வி அனைத்துமே அந்நிய மொழியில் கற்றால்தான் உலகில் ஒளிமயமாக, யாவரும் மதிக்கத்தக்க முறையில் வாழ முடியும் என்ற தவறான சிந்தனைத்திறனால் தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது.
பரந்துபட்ட இந்நிலவுலகில் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சிந்தித்து, மக்கள் சிறந்து வாழ ஏற்ற பல நீதி நெறிகளை, அமுத மொழிகளை, நுண்கருத்துகளை, தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்கப்
புலவர்கள், ஒளவையார், சேக்கிழார், நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், வள்ளலார், சாக்ரடீசு, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற எண்ணற்றோர் பாடல்களாக, அமுத மொழிகளாக வழங்கியருளியுள்ளனர்.
அந்நிய மொழியைப் போற்றிப் புகழ்ந்து தம் தாய் மொழியை நிந்தித்துள்ளார்களா? இவற்றைச் சிந்திக்க வேண்டும். சிந்திக்காத சமுதாயம் அடிமைச் சமுதாயமே.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் பாரதிதாசன். தமிழைக் கட்டிக்காக்க எதை எதையோ செய்தவர்கள் எண்ணற்றோர். தமிழின் மேன்மையையும், தமிழ் மீது அளவற்ற பற்றையும் கொண்டிருந்த நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன், தமிழ்ப் பாடல்களுக்காகத் தன் உயிரையே துறந்ததை நந்திக்கலம்பகம் தெரிவிக்கிறது.
திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய மொழி, செம்மொழி என்பது இலக்கணம். அது தமிழ்மொழியின் கண்ணும் அமைந்திருத்தலால் செம்மொழி எனப் போற்றப் பெறுகின்றது.
தமிழைச் செம்மொழியாக அறிவிக்கபல தமிழ் ஆர்வலர்கள் குரல் எழுப்ப மத்திய அரசும் ஒப்புக் கொண்டது. ஏன்? இம்மொழியின் தொன்மைத் தலைமை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, திராவிட மொழிகளுக்குத் தாயாகும் தன்மை, பிறமொழித் தாக்கம் இல்லாத் தன்மை, பண்பாடு, கலை இவற்றிற் சிறந்த பொன்மொழிகளைத் தாங்கியமை, நடுநிலைமை, இலக்கிய வளம் போன்று பல பண்புநலன்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உயர்ந்த சிந்தனைக் கருத்துத் தமிழில் உண்டு. "தீதும் நன்றும் பிறர்தரவாரா' என்ற தொடர் எத்துணை உண்மைவாக்கு. இதனினும் வேறு சான்று வேண்டியதில்லை. பல மொழிகளைக் கற்ற வல்லுநரான பாரதி, "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல இனிதாவது எங்கும் காணோம்' என்று பெரு
மிதம் பொங்கப் பாடிச் செல்கிறார்.
உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே. தமிழே இன்பம் என்று பாடுகிறார் பாவேந்தர். தமிழைப் படித்தால் துன்பங்கள் நீங்கும்.
சீர்மை பெற்ற தமிழ்ப்பாவலர்களையும், அறிஞர்களையும் கொண்ட தமிழகத்தில் வேற்றுமொழி மோகம் புற்றீசல் போல் பரவி, தாய்மொழியில் வெளியுலகில் பேசுதல் கூட இழிவு என்று நினைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. படித்த இருதமிழர்கள் உரையாடுகையில், ஆங்கிலத்தில் பேசுவதையே நாகரிகமாக நினைக்கின்றனர்.
தனியார் பள்ளிகளில் தமிழும் ஒரு பாடமொழியாக இருப்பினும் அது கட்டாயமாக்கப்படாததால் தமிழைப் படிக்கக்கூடத் தெரியாமல் பள்ளிக் கல்வி,
கல்லூரிக் கல்வி முடித்து வெளிநாட்டிற்குச் சென்று பணியாற்றுகின்றனர். அவர்கள் தம்மைத் தமிழர்கள் என்று கூறிக்கொள்ளும் தகுதியற்றவர்கள் என்றே தோன்றுகிறது.
தங்கள் தாய்மொழியைப் பழித்தும், இழித்தும் பேசுபவர்கள் எங்கும் இல்லை. நம் நாட்டின் நிலைமையை எண்ணிப் பார்த்தால் உண்மை புலப்படும். தமிழை இகழ்ந்தானைத் தாய்தடுத்தாலும் விடாதே என்று முழங்கிய பாரதிதாசன் வாக்கை உறுதியாகப் பற்ற வேண்டும். தாய்மொழியை இழந்தால் அந்த இனமும் சீரற்று - சீந்துவாரற்றுப் போய்விடும்.
எல்லாத் துறைகட்கேற்ற தமிழ்ச் சொற்கள் தாய்மொழியில் பல்கிப் பெருகிக் கிடக்கின்றன. உலகம் போற்றும் இந்திய விஞ்ஞானிகளும், பற்பல அறிஞர்களும், மருத்துவர்களும் தாய்மொழியில் படித்ததால் சிறந்த சிந்தனைத் திறன் கொண்டவர்களாகச் செயலாற்ற முடிகிறது என்பது ஆய்வாளர்கள் கண்ட முடிபு.
நம் மொழி இலக்கிய மாண்பு, பன்முக ஆற்றல், அறிவியல் சார் பண்பு இவற்றைப் பெற்றுள்ளது. இத்தகு தாய்மொழியைக் கண்ணின் மணியாய்க் காத்து வளர்ப்பது தமிழர்தம் கடமை.
நம் நாட்டில் கற்று, மற்றைய நாடுகட்குச் சென்று உழைத்து, அந்நாட்டைத் தம் கல்வித் திறத்தால் உயர்த்தும் நன்றிகெட்ட மனிதனாக நடப்பவர்கள் எள்ளி நகையாடத்தக்கவர்கள்.
உலகில் எல்லா நாடுகளும் உலகத் தொடர்பு மொழியாக ஏற்றுக் கொண்டுள்ள ஆங்கில மொழித்திறனும் இன்றியமையாதது. தமிழ்மொழியை நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர் ஜி.யூ. போப் தமிழ்மொழி எம்மொழிக்கும் இழிந்த மொழியன்று எனப் புகழ்ந்துள்ளார். தன்னுடைய கல்லறையில் ஒரு தமிழன் உறங்குகின்றான் என்று எழுதுமாறு வேண்டினார்.
கன்னித் தமிழ் மொழியைத் தமிழ்நாட்டில் அனைவரும் கட்டாயப் பாடமாகக் கற்க வேண்டும் என்ற ஆணையைத் தமிழக அரசு பிறப்பித்தல் தலையாய கடன். தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், திரைப்படங்களிலும் தேவையின்றி ஆங்கிலச் சொற்களைப் புகுத்தும் போக்கு நிலவுகிறது. இதனை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் தாய்த்தமிழ் பொலிவு குன்றாமல் வாழும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com