வானவியல் காட்டும் ஒற்றுமை

திருவள்ளுவர் ஆண்டு தைத்திங்களை முதல் மாதமாகக் கொண்டு உள்ளது.

திருவள்ளுவர் ஆண்டு தைத்திங்களை முதல் மாதமாகக் கொண்டு உள்ளது. தமிழ்ச் சங்க காலத்தில் தை மாத சூரியன் தெற்கே 23.5 பாகை சாய்ந்து மகர ராசியில் இருந்தது. பாபிலோனிய "இயா' எனும் தெய்வக் குறியீடு, மகரம் எனும் நீர்ப்பிராணி. செம்மறியாட்டின் உடலும், மீனின் வாலும் கொண்டது. ஆழ்கடல் நன்னீரோட்டத்தின் கடவுளாகக் கருதப்படும்.
சூரியன் மீண்டும் வடக்குப் பயணம் தொடங்கும் நாள் "கூதிர் சந்தி'. அது மகரத்திற்கு முந்திய தனுசு ராசியில் மார்கழியில் (டிசம்பர் 21) நிகழ்ந்து விடுகிறது. அன்றைய தைந்நீராடல் இன்று மார்கழியிலும், கார்த்திகை ஒளிவிழா ஐப்பசியில் தீபாவளியுமாக முன்னேறி வருகின்றன.
இனி மகர சங்கராந்திக்குப் பதில் "தனுசு சங்கராந்தி' (மார்கழி) மாதமே "தைப்பொங்கல்' கொண்டாடி விடுவதுதான் நியாயம் (அதாவது உழவர் திருநாளாகிய "புதிய' தை மாதமும் டிசம்பர் மத்தியில் வர வேண்டும்).
பண்டைய வானவியல் குறிப்புகளின்படி, ஏசு கிறிஸ்து பிறந்த காலகட்டத்தில் - மகர சங்கராந்தி டிசம்பர் 21 முதல் 25 வரை எனக் கருதினால் அதுவே இன்று கிறிஸ்தவ ஆண்டு பிறப்பாகிவிட்டது.
சங்க காலத்தில் சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தில் - வான் நடுக்கோட்டினைக் கடக்கும் வசந்த (வேனல்) சமநோக்கு நாளின்போது சூரியன் மேச ராசியில் இருந்தது. பண்டை நாளின் சித்திரை தமிழ் மாதத் துவக்கமும் இதுவே.
தமிழ்ச் சங்க இலக்கியங்களில் ஒன்றான நெடுநல்வாடையில் (வரி 160) கோபெருந்தேவியின் கட்டிலுக்கு நேர் மேலாக "ஆடு தலை'யாக (அழ்ண்ங்ள்) பன்னிரெண்டு ராசி தோற்றமும் விதான ஓவியமாகச் சித்தரிக்கப் பெற்றுள்ளதும் அறிவோம். சங்க வரலாற்றுக் காலத்தினை உறுதிப்படுத்தும் வானவியல் ஆதாரம் இது.
இன்று வேனல் சமநோக்கு நாளின்போது (மார்ச் 21) சூரியன் மீன ராசியில் இயங்குகிறது. பங்குனியிலேயே "புதிய' தமிழ் புத்தாண்டும் பிறந்துவிடுகிறது.
இஸ்லாம் ஆண்டின் முதல் மாதம் "மெளஹரம்' (செட்பம்பர் 21). இலையுதிர் சமநோக்கு நாளினை ஒட்டி ஒவ்வொரு ஹிஜிரா ஆண்டும் தோடங்குகிறது.
இங்கு இன்னொரு ஒற்றுமை. 61-ஆவது ஹிஜிரா (கி.பி.672) ஆண்டில் ஈராக்கிலுள்ள கர்பாலா எனும் இடத்தில் ஒரு நிகழ்வு. அன்றைய இஸ்லாமிய மன்னரான யாஸித் என்பவர், அண்ணல் தீர்க்கதரிசியின் பெயரனும், அலியின் மகனுமான ஹுûஸனை வளைத்துப் பிடித்துப் பட்டினி போட்டுக் கொன்றார்களாம்.
அந்நிகழ்ச்சியின் நினைவாக - நீஸா எனுமோர் ஈட்டி முனையில் ஹுûஸன் தலையை ஒரு குறியீடாகச் செருகிவைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வழக்கம் - இவ்விழாவில் ஒரு முக்கிய அம்சமாம். முருகன் சூரபத்மனின் அரக்கத் தலையினைச் சூலத்தில் செருகி ஏந்திச் செல்லும் ஐப்பசி (அக்டோபர் இறுதி) சூரசம்ஹாரம், நினைவுக்கு வருகிறதா?
இஸ்லாமிய மரபில் ஹுûஸன் மாவீரனுக்குரிய பத்து நாள் கொண்டாட்டங்களும் "அஷுரகானா' எனப்படும். மொஹரம் மாதத்தின் பத்தாம் நாளினை இன்றும் "அஷுர' (அசுர?) என்றே குறிக்கின்றனர். அதிலும் இஸ்லாமியரில் ஷியா பிரிவினர்க்கு இது முக்கியப் பண்டிகை ஷியா-சிவா மாதிரியும் ஒலிக்கிறது.
அவ்விழாவின்போது "மர்சிய' வாகைப் பாடல் அந்தத் தியாகச் செம்மலின் புகழ் பாடும். கவனிக்க: "மர்ஹிய' அல்லது "மர்ரிய' (முருக?) என்பது மீண்டும் மரித்தோர் பெருமை போற்றுவதாகவும், "மறவ'னைப் பாடுவதாகவும் அமைகின்றன.
பாலி, பிராகிருத வடமொழிகளிலும் "மார்' என்றால் அடி, கொல் என்று பொருள். "மார்ஸ்' ஆகிய செவ்வாய் - கிரேக்கத்தின் போர்க் கடவுள் அல்லவா? (கரோஷ்டி மொழி வாசிப்பில் "மார்' என்ற சொல்லினைப் புரட்டி வாசித்தால் "ராம்' என்று வரும்)
தமிழ் ஆண்டின் ஒன்பதாவது மாதமான மார்கழி (டிசம்பர் - ஜனவரி) வளர்பிறையின்போது உண்ணா நோன்பு இருந்து ஸ்ரீவைகுண்ட ஏகாதசி அன்று - சொர்க்க வாசல் புகுவது இந்து மரபு. நம்மாழ்வார் வைகுந்தம் போந்த அதே நாளில் இறந்தால் சொர்க்கம் (முக்தி) என்கிற ஐதீகம் வைணவரிடை உண்டு.
இஸ்லாமின் ஆதாரத் தூண்களாகிய பஞ்ச சீலங்களில் ஒன்று - ரமலான். இந்த நோன்பினைத் தவறாமல் கடைபிடிப்போரே "ஏ-ரயான்' (முக்தி) அடைவர் என்பது அண்ணல் வாக்கு. இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதமே ரம்ஜான் (ரமலான்). "ராம்ஸ்' என்றால் "பாவங்களை நோன்பால் கொளுத்திடுக' என்க.
இது சூரியன் வடகோடியில் இருந்து தெற்குப் பயணம் தொடங்கும் கோடைசந்தி நாளை (ஜூன் 21) ஒட்டி அமையும். ஆனி (ஜூன் - ஜூலை) மாத வாக்கில் இஸ்லாமியர்களின் மிக முக்கிய விழா "ஈத்-உல்-ஃபிதர்'. ஒரு மாத நோன்பின் இறுதியில் "ரம்ஜான்' குத்பா பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. "ஈத்' என்றாலே அரபி மொழியில் "மீண்டும் மீண்டும் வரும் நன்னாள்' என்பது பொருள்.
கிறித்தவர்களின் புனித வெள்ளியும், ஈஸ்டர் ஞாயிறு பெருநாளும் பங்குனி இறுதியில் (அல்லது சித்திரை தொடக்கத்தில்) கொண்டாடப்படுகின்றன. இந்துக்களுக்கும் பங்குனி கடைசி வெள்ளி விசேஷம்தான். வசந்த சமநோக்கு நாளினை ஒட்டி கோடைக்கால ஆரம்பத்தில் கிராமங்களில் சிறு தெய்வங்களுக்குப் பலியிடுவது இன்றும் நடைமுறையில் உண்டு.
இஸ்லாமிய ஆண்டில் எட்டாவதான "ஷாபான்' மாதத்தில் 14-ஆவது நாளில் "ஷப்-பாரத்' எனும் பண்டிகை சித்திரைப் பெளணர்மியை ஒட்டியே கொண்டாடப்படுகிறது. "பராத்' என்றால் "பதிவேடு' என்று பொருள்.
அன்றைய இரவில் பூலோகத்தில் மனித சமுதாயத்தின் ஜனன - மரண, பாவ - புண்ணியக் கணக்குகளை குறித்து வைக்கப்படும் (சித்ரகுப்தன் பணி?) மறுநாள் வாணவேடிக்கைகளுடன் கூடிய புத்தொளி இரவு கொண்டாடப்படுமாம்.
வைகாசி மாதம் முருகக் கடவுளுக்கு விசேஷம். இஸ்லாமிய தேவ பெயரனான "இமாமே ஹுûஸன்' உதித்ததும் இதே "ஷாபான்' (சித்திரை - வைகாசி) மாதத்தில் என்பது மேலும் ஓர் பொருத்தம்.
தமிழ் ஆண்டின் இரண்டாவதான வைகாசி மாத வளர்பிறையின்போது சந்திரன், விருச்சிக விண்மீன் கூட்டத்தில் தோன்றும். "விசாகத் திருநாள்' தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்தது. வைகாசி விசாகத்தின்போது, பக்தர்கள் முருகனுக்கு அலகு குத்திப் பால் காவடி எடுக்கும் திருவிழா முதன்மை பெறுகிறது.
விசாகத்தினைத் தொடர்ந்து பெளர்ணமியன்று சிவபெருமானின் செல்வனாகிய சுப்பிரமணிய சுவாமி - தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம். அவ்வாறே, மொஹரம் பண்டிகையின் ஏழாவது நாளில் ஹுûஸன் மரணத்திற்கு முன்னதாக, அவரது மகளை மணம் முடிக்க ஹஸனின் புதல்வனாகிய அலாம்-இ-காஸிம் மாப்பிள்ளைக் கோலத்தில் வருவாராம்.
திருக்கார்த்திகை, திருவண்ணாமலை தீபத் திருநாளினை ஒட்டி, இஸ்லாமிய மூன்றாம் மாதத்தில் (ரபி-அல்-அவ்வால்) நபிகள் பிறந்த "ஈத்-மிலாட்-உன்-நபி' தினம் கொண்டாடப்படுகிறது. கி.பி.622 "ரபி-அல்-அவ்வால்' மாதத்தில் 12 நாள் நோயுற்று அண்ணல் சாந்தி அடைந்தார். "சாந்தி' (அமைதி) என்கிற முக்தி நிலையினை திருக்குரான் "ஹலாம்' என்கிறது.
இந்த "ஹலாம்' எனுஞ் சொல்லுக்கும் இன்றைய "ஹலோ' என்ற விளிப்புக்கும் மொழி ஒற்றுமை தென்படுகிறது அல்லவா? (சிந்து - இந்து, சமணம் - அமணம், சமயம் - அமயம் ஆவதைப்போல) இதனை "பாரா வாஃபத்' என வழங்குகின்றனர். உருது மொழியில் "பாரா' என்றால் "பன்னிரண்டு' என்றும், "வாஃபத்' என்றால் மரணம் என்றும் பொருள்.
இஸ்லாமிய ஆண்டின் பன்னிரண்டாவதான "தூ உல் ஹிஜ்ஜா' (ஆவணி) மாதத்தில் இஸ்லாமியத்தின் பஞ்ச சீலங்களில் மற்றொன்றான "ஹஜ்' குறிப்பிடத் தக்கது. இந்தப் புனிதப் பயணத்தில் மெக்காவின் காபாவிலுள்ள பெரிய மசூதியை ஒவ்வொரு இஸ்லாமியனும் ஏழு முறை வலம் வர வேண்டுமாம்.
அதன்போது தைக்கப்படாத ஒரு வேட்டியை அரையிலும், மற்றொரு துணியை வலது தோள் தெரிய - முப்புரிநூல் மாதிரி இது மார்பில் குறுக்கலாக அணிய வேண்டுமாம். தவிர, மூன்றாம் நாள் "ஈத்-உல்-ஆதா' அல்லது "ஈதுஸ-ஸýஹா' (பலி விருந்து) சிறப்பாகக் கொண்டாடப்படும். உயிர்ப்பலி கொடுமைதானதே என்றாலும் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஒளிந்திருக்கும் மிருகத்தினைப் பலியிடுவது என்பதே இச்சடங்கின் குறியீடாகும் (குர்ஆன்.22:37)
அன்றைய தினம், சாத்தானாக உருவகிக்கப்படும் மூன்று தூண்கள் மீது ஏழு குழாங்கற்களை எறிய வேண்டும். இச்சடங்கினை "ராமி' என்றே இஸ்லாமியர் வழங்குகின்றனர். அன்றைய தினம் "ஹலாக்' என்றபடி, திருச்செந்தூர் முருகனுக்கு வழங்குவது போன்று, தலையை வழித்து மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும்.
தமிழ் ஆண்டின் பன்னிரண்டாவதான பங்குனி மாதம் ஸ்ரீராம நவமியும் விசேஷம் ஆனது. பண்டை நாளில் இது சித்திரை ஒன்பதாம் (நவம்) நாளன்று அமைந்தது என்பதும் ஓர் வியப்பூட்டும் தகவல்.
இதில் இன்னுமொரு விபரீத ஒற்றுமை. பெரிய புராணத்தில் சிறுத்தொண்ட நாயனார் தன் மகன் சீராளனைப் பிள்ளைக் கறி சமைத்தார். விவிலியத்திலும் திருக்குரானிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் சுட்டப் பெறுகிறது.
அப்ரஹாம் தன் கனவில் ஆண்டவன் வேண்டியதற்கு இணங்க, தன் அருமை மகன் இஸ்மாயிலை வெட்டி அறுக்க முற்பட்டாராம். ஆண்டவன் அவன் செயலைத் தடுத்து - செல்வன் இஸ்மாயிலுக்குப் பதிலாக ஒரு ஆட்டினைப் பலி தானமாகத் தரும்படி இறைவன் வேண்டினாராம்.
உண்மையில் அப்ரஹாம் தன் மனைவி ஹஜரையும், மகனையும் எங்கேனும் ஒரு தொலை பள்ளத்தாக்கில் கொண்டு விட்டுவிட வேண்டும் என்பதே ஆண்டவன் கட்டளையாம்.
இந்து, இஸ்லாம், கிறித்தவம் ஆகிய இனத்தவரிடை நிலவும் சில பெயர் ஒற்றுமையைப் பாருங்களேன். ஈச(ன்) - யூசுஃப் - யேசு - யோசஃப்; தேவ(ன்) - தாவீது - தாவூது; பிராஹ்ம(ன்) - (இ)ப்ராஹிம் - (அ)ப்ரஹாம்; கிருஷ்ண - கிருஸ்து; சுலைமான் - சாலமன்.
வானவியல் அடிப்படையில் தோன்றிய சம்பிரதாயங்கள், வாழ்வியல் மதங்களிடையேயும் இன்றும் ஒரே கால கட்டங்களில் கொண்டாடப்பெற்று வருகின்றன. இந்த உண்மையினை வரலாற்று அறிவுடன் உணர்ந்து நம்மிடை ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com