தை பிறந்தது, வழி பிறக்குமா?

விவசாயிகள் தற்கொலைக்கும் அதிர்ச்சி மரணங்களுக்கும் பருவமழை பொய்த்துப்போனது மட்டுமல்ல காவிரித் தண்ணீர் வராமல் போனதும் முக்கியமான காரணம்
தை பிறந்தது, வழி பிறக்குமா?

விவசாயிகள் தற்கொலைக்கும் அதிர்ச்சி மரணங்களுக்கும் பருவமழை பொய்த்துப்போனது மட்டுமல்ல காவிரித் தண்ணீர் வராமல் போனதும் முக்கியமான காரணம். வறட்சிக் காலத்தில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்கிற வழிகளை காவிரி நடுவர் மன்றம் சொல்லியும் அதனை கர்நாடகம் கண்டுகொள்ளவில்லை. அடுத்தடுத்து உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவுகளையும் மதிக்கவில்லை. அங்கே அணைகளில் தண்ணீர் இருக்கிறது. இங்கே விவசாயிகள் கொத்துத் கொத்தாக செத்து மடிகிறார்கள்.
தமிழர்களின் தனிப்பெரும் அறுவடைத் திருநாளான பொங்கல் களையிழந்து போயிருக்கிறது. அப்படியென்றால் காவிரிப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
காவிரிப் பிரச்னையைப் பற்றி பேசும்போதெல்லாம் சிலர் கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தைக் கையிலெடுப்பார்கள். இது அரைநூற்றாண்டுகால கற்பனைப் பேச்சு. விமான பைலட்டாக இருந்த கேப்டன் தின்ஷாஜே தஸ்தூர் என்பவர் "பூமாலைக் கால்வாய் திட்டம்' என்ற பெயரில் முதன்முதலாக இந்தக் கனவைச் சொன்னார்.
இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகளையும் இந்தியாவின் மேற்கு, தெற்கு, கிழக்குப் பகுதிகளில் ஓடும் ஆறுகளையும் ஒன்று சேர்த்துவிட்டால், வறட்சியும் பற்றாக்குறையும் நீங்கிவிடும் என்பது அவரது கணக்கு. கேட்டதும் சிலிர்க்க வைக்கும் இந்த வண்ணக் கனவுக்கு வடிவம் கொடுக்கும் வகையில், 1968-இல் மத்திய நீர்ப்பாசன அமைச்சராக இருந்த கே.எல். ராவ் கங்கை - காவிரி இணைப்புக்கு திட்டம் போட்டுக் கொடுத்தார். அதன்பிறகு நீண்ட நாட்களுக்கு இது பேசுபொருளாக இருந்தது.
மாநிலங்களின் எதிர்ப்பு, கட்சித் தலைவர்களின் அரசியல் போன்றவற்றையெல்லாம் தாண்டி, மத்திய அரசின் ஆண்டு மொத்த வரிவருவாயைப்போல மூன்று மடங்கு தொகை அளவுக்கு செலவு பிடிக்கும் இத்திட்டம் இந்தியா போன்ற நாட்டில் எந்தக் காலத்திலும் சாத்தியமில்லை.
இதனை 1980 முதல் மத்திய அரசு பலமுறை தெளிவுபடுத்தி விட்டது. அரசியல், பொருளியல், சூழலியல், தொழில் நுட்பவியல் உள்ளிட்ட எந்த முனையிலும் துளியும் சாத்தியமற்றத் திட்டம் என பாசனத்துறை அறிஞர்களும் தரவுகளோடு விளக்கி விட்டனர்.
இதைப் போன்றே மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணையாறு - காவிரி ஆகியவற்றைச் சேர்க்கும் தென்னக நதிகள் இணைப்புத் திட்டமும் ஆய்வுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டு விட்டது. இதில் கோதாவரி - கிருஷ்ணா - காவிரி இணைப்பை மட்டும் செயல்படுத்தலாம் என்று ஒருங்கிணைந்த நீர் வளர்ச்சிக்கான தேசிய ஆணையம் கூறியது.
ஒப்பந்தப்படி குடிப்பதற்கும், பாசனத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் கொடுக்காத கர்நாடகமும், ஆந்திரமும் இத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு விடுமா என்ன? எனவே, இதைப்பற்றியும் பேசுவதற்கில்லை.
அடுத்தது ஆறுகள் தேசியமயம். இந்தியா முழுவதும் உள்ள அத்தனை ஆறுகளையும் மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலிலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவதே ஆறுகளை தேசியமயமாக்குதல். இவ்வாறு செய்துவிட்டால் மத்திய அரசே சட்டப்படி மாநிலங்களுக்குச் சேரவேண்டிய தண்ணீரைப் பிரித்துக் கொடுத்து விடும்.
இந்தியாவுக்குள்தான் இருந்தாக வேண்டும். எனவே, மாநிலத்தின் உரிமை, சுயாட்சி போன்ற முழக்கங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நதிகளை தேசிய மயமாக்குவதை ஆதரித்து விடலாம். ஆனால் அதிலும் சிக்கல் இருக்கிறது.
பிரதமர் தலைமையில் காவிரி ஆணையம் அமைந்தபோது, உத்தரவைப் பின்பற்றாத மாநிலத்தின் அணைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என்ற விதியையே நீக்க வைத்த கர்நாடகம், இதற்கு ஒருகாலும் ஒப்புக் கொள்ளாது.
அதையும் மீறி நதிகளைத் தேசியமயமாக்கினாலும், அடிப்படைத் தேவையான குறைந்தபட்சத் தண்ணீரை வாங்கித்தருவதில் நடுவுநிலைமை இல்லாமல் எல்லாக் காலங்களிலும் ஒருதலைச்சார்பாக நடந்து வந்திருக்கும் மத்திய அரசு, கர்நாடகத்தின் எதிர்ப்பை மீறி தமிழ்நாட்டுக்கான தண்ணீரை வழங்கிடுமா?
அடுத்து, தமிழகத்தின் காவிரிப் பாசனப் பகுதிகளில் மாற்றுப் பயிரிடும் திட்டம். கடல் மட்டத்தில் இருந்து ஐந்து மீட்டர் உயரத்தில் இருக்கிறது நாகப்பட்டினம் மாவட்டத்தின் பழையாறு. 50 மீட்டர் உயரத்தில் உள்ளது கல்லணை. இவை இரண்டுக்கும் இடையே அமைந்திருக்கிற காவிரி டெல்டா ஒரு வெப்பமண்டலப் பகுதி.
கடல் மட்டத்தில் இருந்து 200 மீட்டர் உயரத்தில் இருக்கும் மேட்டூருக்கு மேலே இருக்கிறது கர்நாடகா. கிருஷ்ணராஜ சாகர், ஹேரங்கி, ஹேமாவதி, கபினி போன்ற அணைகள் 300-லிருந்து 1000 மீட்டர் வரை உயரத்தில் இருக்கின்றன.
கர்நாடக பீடபூமியில் தமிழகத்தின் காவிரி டெல்டாவில் உள்ளதைவிட ஆண்டு முழுதும் காற்றின் ஈரப்பதம் பலமடங்கு அதிகம். இதனால்தான் அங்கே பருப்பு - பயறு வகைகள், சிறுதானியங்கள், காய்கனிகள் ஆண்டாண்டு காலமாக விளைச்சலை வழங்கி வந்தன. அந்த மண்ணில் நெல், கரும்பு போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை விளைவித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவைப் பொருத்தவரை, மண்ணின் தன்மைப்படி இது அதிகமாக நெல்விளையும் பகுதி. மற்ற பயிர்கள் இங்கே அவ்வளவாக எடுபடாது. வழக்கமாக குறுவைக்கு மேட்டூரில் தண்ணீர் திறந்துவிட்டால் டெல்டா முழுக்க நீர்நிறைந்திருக்கும். அதனால் ஈரப்பதம் உருவாகி, மேகங்களைத் தொட்டு கோடையிலும்கூட மழை பெய்யும்.
தற்போது நீர்ப்பதத்திற்கே பஞ்சம் வந்த பிறகு மழைக்கு எங்கே போவது? சரி, ஒரு வாதத்திற்கு காவிரி டெல்டாவில் தண்ணீர் அதிகம் தேவைப்படாத மாற்றுப்பயிர் சாகுபடியைப் பின்பற்றுவதாக வைத்துக் கொள்ளலாம். அந்தக் குறைவான தண்ணீராவது வேண்டுமல்லவா?
சென்னை உட்பட தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களுக்கு காவிரி தண்ணீர்தானே குடிநீர் ஆதாரம். பிறகு குடிப்பதற்கு என்ன செய்வோம்? அரபுநாடுகளைப்போல அதிக செலவு பிடிக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை ஊருக்கு ஊர் செயல்படுத்த முடியுமா?
அப்படி என்றால் காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
அரசியல் அழுத்தம் மட்டுமே ஒரேவழி. இங்கே எல்லாமே அரசியல் என்றான பிறகு அதன் வழியாகவே நாமும் பிரச்னையைத் தீர்ப்பதுதான் புத்திசாலித்தனம்.
வேறு எதில் வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளுங்கள். காவிரி என்று வந்துவிட்டால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், அறிவுஜீவிகள், அதிகாரிகள், ஊடகங்கள் என அத்தனைபேரின் குரல்களும் ஒன்றாக ஒலிக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக கைகோத்து நிற்க வேண்டும்.
காவிரிக்கு மட்டுமல்ல, மற்ற நதிநீர் சிக்கல்களிலும் தமிழ்நாடு ஒன்றாகவே இருக்க வேண்டும். இது மாநிலத்தின் உயிர்நாடி பிரச்னை என்பதை உணர்ந்து, மத்திய அரசுக்கு உணர்வுப்பூர்வமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்கள்போல் தமிழ்நாட்டவரும் நடந்து கொள்ள வேண்டும். கர்நாடகத்தின் ஒற்றுமைக்கும், அழுத்தத்திற்கும் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் அஞ்சுவதைப் போன்றநிலை, தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கை மீதும் அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.
இப்படிப்பட்ட அழுத்தத்தின் மூலம் சட்டப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து அதை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கர்நாடகம் ஏற்கெனவே கட்டிய அணைகளையும், செயல்படுத்திய திட்டங்களையும் ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால் மிச்சமாக வருகிற கடைசி தண்ணீரையும் தடுக்கவிருக்கும் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் தமிழகம் காவிரியை மறந்துவிட வேண்டியதுதான்.
கர்நாடகம் தண்ணீர் கொடுக்கவில்லை என்று புகார் கூறிவிட்டு, நமக்கென்று இருக்கிற நீர் ஆதாரங்களையும் அழிக்கிற வேலைகளை செய்து வருகிறோம். மணல் கொள்ளை போன்ற அக்கிரமங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
காவிரியோடு சேர்த்து நமக்கு கிடைக்கும் நீர்வளத்தை முறைப்படுத்தி, நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் கர்நாடகம் நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிக்கிறது. நாமோ அதிலும் கமிஷன் அடித்து, படுத்து தூங்கிவிட்டு பணம் வாங்கிக்கொண்டு போகும் வேலையாக்கி வைத்திருக்கிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயத்தின்மீது கர்நாடகம் காட்டும் ஆர்வத்தைவிட மூன்று மடங்கு அதிகமானஆர்வத்தை தமிழக அரசு காட்ட வேண்டும். வீழ்ந்து கொண்டிருக்கும் விவசாயத்தைக் காப்பாற்ற தனியாக நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) போட வேண்டும்.
முதல் வேலையாக நீர்ப்பாசனத்திற்கு என்று தனியாக அமைச்சரை நியமித்து, அவரின் கீழ் வேளாண்மையிலும் பாசனத்திலும் அனுபவம் உள்ள அதிகாரிகளைக் கொண்டுவர வேண்டும். பாசனப் பணிகளில் ஒரேவிதமான கொள்கைகளை ஏற்படுத்தி செயல்படுத்திட வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்தால் இதுவரை விட்டதையெல்லாம் பிடிக்க முடியுமா? தெரியாது. ஆனால், இருப்பதையாவது இழக்காமல் இருக்கலாம்.

கட்டுரையாளர்:
சமூக செயற்பாட்டாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com