என்றும் வாழ்வார்

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடிய காந்திஜி கையில் எடுத்தது சாதாரண நூல் நூற்கும் ராட்டை. துப்பாக்கிகள் சாதிக்க தவறியதை இந்த ராட்டைதான் சாதித்தது.

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடிய காந்திஜி கையில் எடுத்தது சாதாரண நூல் நூற்கும் ராட்டை. துப்பாக்கிகள் சாதிக்க தவறியதை இந்த ராட்டைதான் சாதித்தது.
இந்தியாவில் உற்பத்தியாகும் பஞ்சை, மிக குறைந்த விலைக்கு வாங்கி, ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டிற்கு கப்பல் மூலம் கொண்டு சென்று, துணிகளாகத் தயாரித்து, அதை இந்திய மக்களிடம் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடைந்தனர்.
அதைக் கண்டு மனம் வெதும்பிய காந்தி, கை ராட்டையை தன்னிறைவடைந்த கிராமிய பொருளாதாரத்தின் சின்னமாக கருதுமாறு மக்களை வேண்டியதுடன், கை ராட்டையைப் பயன்படுத்தி அனைவரும் நூல் நூற்க வேண்டும் என்றார்.
காந்தியின் ராட்டையில் நூல் நூற்கும் வேள்வியும், அந்நிய துணி எதிர்ப்பு போராட்டமும் ஆங்கிலேயர்களின் துணி வர்த்தகத்தையும், இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தன.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக அறவழியில் போராடிய மகாத்மா காந்தி தனது ஆடைகளுக்கான துணியை சொந்த ராட்டையில் தாமாகவே நூலாகத் திரித்து பின் துணியாக நெய்து, தைத்து உடுத்தி வந்தார்.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் சிறைவாசத்தை அனுபவித்த போதெல்லாம் அவருக்கு துணையாக இருந்தவை படிப்பதற்கான புத்தகங்களும், நூல் நூற்பதற்காக பயன்படுத்திய ராட்டையும் தான்.
"உலகை மாற்றிய படங்கள்' என்ற தலைப்பில் "டைம்' பத்திரிகை வெளியிட்ட உலக வரலாற்றை புரட்டிப் போட்ட அரிய 100 புகைப்படங்களில் மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்பது போன்ற புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
1946-ஆம் ஆண்டில், இந்திய தலைவர்கள் பற்றிய கட்டுரைக்காக, மார்கரேட் பருக்கே என்பவர் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார். காந்தியின் சக்தி வாய்ந்த அடையாளமாக ராட்டை சக்கரம் உள்ளது, அந்தச் சக்கரத்தை அவர் சுழற்றும்படி எடுக்கப்பட்ட இந்தப் படம் எப்போதும் நீடித்து நிற்கும்.
"வெறும் ராட்டையை சுழற்றியபடி இந்திய துணைக் கண்டத்தில் அமைதியை நிலைநாட்டிய மகான்' என டைம் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.
அண்மையில், மகாத்மா காந்தியின் உருவப்படத்துடன் அமேசான் நிறுவனம் காலணி விற்பனை செய்வது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட அமேசான் நிறுவனம், இந்திய தேசிய கொடியின் படம் வரைந்த கால் மிதியடி விற்பனை செய்யப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு புகார்கள் வந்ததையடுத்து, அவரின் எச்சரிக்கைக் காரணமாக, அந்த மிதியடியை விற்பனை பட்டியலிலிருந்து அமேசான் நீக்கியதுடன், தனது செயலுக்காக இந்திய அரசிடம் மன்னிப்பும் கோரியது.
மகாத்மா காந்தியின் உருவப்படத்துடன் அமேசான் நிறுவனம் காலணி விற்பனை செய்வது இந்தியாவை அவமானப்படுத்துவது போலுள்ளது என்று உலகெங்குமுள்ள இந்தியர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைக்காக மகாத்மா காந்தி இருபத்தொரு ஆண்டுகள் தொடர்ந்து போராடினார். போரட்டத்தில் ஈடுபட்டதற்காக அவரை சிறையில் அடைத்தார் ஜெனரல் ஸ்மட்ஸ். ஆனாலும், தமது நூலகத்தில் இருந்த சிறந்த நூல்களை காந்திஜி படிப்பதற்காக சிறைசாலைக்கு அனுப்பி வைத்தார் ஸ்மட்ஸ்.
சிறையில் காந்திஜி காலணி தைத்கும் பணியைச் செய்து வந்தார். சிறையிலிருந்து அவர் விடுதலையானதும், ஜெனரல் ஸ்மட்ஸை சந்தித்தார். அப்போது, தான் தயாரித்த ஒரு ஜோடி காலணியை ஜெனரலுக்கு காந்தி பரிசளித்தார். நெகிழ்ந்து போனார் ஸ்மட்ஸ்.
பின்னாளில் அவர் காந்திஜியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். சிறையில் அடைத்த அந்த மனிதரின் (காந்திஜி) மகத்தான தயாள குணத்தை முதன் முதலில் கண்டு கொண்டேன். அவர் தந்த பரிசு சாதாரண காலணிதான். எனினும், அவற்றின் மீது கால் வைக்க எனக்கு மனம் வரவில்லை. அன்பு, தயாள குளம் ஆகிய இரண்டின் நினைவுச் சின்னமாகவே அவற்றைப் பார்க்கிறேன். எனவே, அந்த காலணிகளை பத்திரமாக பாதுகாத்து வருகிறேன் என்றார்.
இப்படியும் ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்தாரா என்று எதிர்கால உலகம் சந்தேகப்படும் என காந்தியை குறித்து வியப்பை ஏற்படுத்தியவர் விஞ்ஞானி ஐன்ஸ்டின்.
இந்தியாவில் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக குரலெழுப்பிய காந்தி, தனது வெற்றியை அன்பின் வழியில், அஹிம்சையின் ஒளியில் கைக்கொண்டார். அவருக்கு யாரிடமும் பகைமை இல்லை. ஆனால், சில சுயநலவாதிகள் அவரை பகைவராக எண்ணி அவர் மீது வெறுப்பை உமிழ்கின்றனர்.
அந்நிய நாட்டுத் துணிகளை காந்திஜி பகிஷ்கரிக்க சொன்னதுபோல், நம் தேசப் பிதா காந்திஜியை அவமதித்த நிறுவனப் பொருள்களை இந்தியர்கள் பகிஷ்கரிக்க வேண்டும்.
அப்போதுதான், நம் மக்கள் தேசத்தின் மீது கொண்ட பற்றையும், காந்திஜி மீது மக்கள் கொண்டிருந்த பாசத்தையும், அந்நிறுவனமும் உலக நாடுகளும் அறிய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com