தேவை விடுதலைப் போராட்டம்

இனிமை அல்லாதது இன்னல் (இன்+அல்=இன்னல்) எனப்படுவதுபோல ஊழ் (முறை) அல்லாதது ஊழல் (ஊழ்+அல்=ஊழல்) எனப்படுகிறது. ஊழல் என்பது முறைகேடு ஆகும்.

இனிமை அல்லாதது இன்னல் (இன்+அல்=இன்னல்) எனப்படுவதுபோல ஊழ் (முறை) அல்லாதது ஊழல் (ஊழ்+அல்=ஊழல்) எனப்படுகிறது. ஊழல் என்பது முறைகேடு ஆகும்.
ஒன்று நிறைவேற ஒருவருக்கு முறைகேடாகக் கொடுக்கும் பணம் அல்லது பொருள் அல்லது ஒன்றை நிறைவேற்ற ஒருவரிடமிருந்து பெறும் பணம் அல்லது பொருள் ஊழல் ஆகும். "ஊரைத்திருத்திட எண்ணினோம் } சொந்த ஊழல் மிகுந்திடப் பண்ணினோம்' என நாமக்கல் கவிஞர் ஊழல் குறித்து மனம் நொந்து பாடியுள்ளார்.
இலஞ்சம், இலஞ்ச லாவண்யம் (இலாவண்யமாக வாங்கும் இலஞ்சம் அல்லது இலஞ்ச மிகுதி), கவனிப்பு, களிதின்னல் (இலஞ்சம் வாங்குதல்), கிம்பளம், கைக்காணம், கைக்கூலி, கையூட்டு, கைலஞ்சம், சுற்றுப்பலி (கீழ் அதிகாரிகளுக்குக் கொடுக்கும் இலஞ்சம்), செலவு, பத்தியம், பரிதானம் (வந்த விவகாரத்தினில் இனிய பரிதானங்கள் வரும் என்றும் (குமரேசசதகம், 61), வாய்க்கட்டை, வாய்க்கரிசி, வாய்க்கூலி, வாய்ப்பூட்டு, வாய்முட்டுக்காசு (இரகசியத்தை வெளியிடாதிருக்குமாறு கொடுக்கும் இலஞ்சம்), வெட்டுதல் முதலியவை ஊழல் என்னும் பொருளில் வழங்கும் பிற சொற்கள்ஆகும்.
அரசுத் துறைகளில் ஊழலை ஒழிக்க, 1941-இல் சிறப்புக் காவல் அமைப்பு (Special Police Establishment) ஏற்படுத்தப்பட்டது. 1947 மார்ச்சு மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
"உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனி ஆட்சிக் காலத்தில் காணப்படும் அனைத்து இலஞ்ச லாவண்யங்களும் ஒழிந்துவிடும்' என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தனர்.
"இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1860', "வருமான வரிச் சட்டம் (வழக்குப் பிரிவு) - 1961', "இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 1986', "ஊழல் தடுப்புச் சட்டம் - 1988', "இரவல் பெயரில் பரிமாற்றங்கள் (தடுப்புச்) சட்டம் - 1988', "பண மோசடி தடுப்புச் சட்டம் - 2002', "அந்நிய செலாவணி மோசடி தடுப்புச் சட்டம்', "மருந்துகள் மற்றும் உணவு கலப்படத் தடைச் சட்டம்' முதலிய சட்டங்களின்படி ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படும் வாய்ப்பு இருந்தும் பெரும்பயன் விளையவில்லை.
இரண்டாம் உலகப் போரின்போது பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாட்டால் நாடு தவித்தபோது அப்பொருள்கள் வழங்கியதில் ஊழல் தலைவிரித்தாடியது; இதனால் அதிகாரத்தில் இருந்தவர்கள் பயன்பெற்றனர்.
1952 தேர்தல்களில் போட்டியிட்ட பலர் மீது ஊழல் புகார்கள் குவிந்தன. அப்புகார்கள் மீது எவ்வகை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொழிற்சாலை தொடங்குவதும் நடத்துவதும் மத்திய, மாநில அரசுகளின் அனுமதியினை, விருப்பத்தினைப் பொறுத்தே என்ற நிலைமை நிலவியபோது, பெர்மிட், லைசென்ஸ், கோட்டா ராஜ் என அதை இராஜாஜி சாடினார்.
1993 அக்டோபரில் முன்னாள் இந்திய உள்துறைச் செயலர் என்.என். வோரா வழங்கிய அறிக்கை, அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலியோருடன் குற்றவாளிகள் கொண்டுள்ள உறவினால் உண்டாகும் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டியது. என்ன பயன்? குற்றவாளிகளே கட்சித் தலைவர்களாக, அரசியல்வாதிகளாக, நாடாளுமன்ற } சட்டப்பேரவை உறுப்பினர்களாக, அதிகாரிகளாக ஆன அவலம்தான் நேர்ந்தது.
"மக்களுடன் மக்களாக ஆட்சியாளர்கள் கலந்து பணியாற்ற வேண்டுமானால் ஆடம்பர மாளிகைகள் கூடாது, எளிய இல்லங்களிலேயே அவர்கள் வாழ வேண்டும்' என்றார் அண்ணல் காந்தியடிகள். சட்டங்கள், அமைப்புக்கள், அறிக்கைகள் முதலியவற்றால் ஊழலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பெர்லினைத் தலைமையகமாகவும் 100}க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளையும் கொண்டுள்ள பன்னாட்டு வெளிப்படையமைப்பு (Transparency International) என்னும் நிறுவனம் இந்தியக் குக்கிராமங்களிலிருந்து அதிகார ஆக்கமிக்க ப்ரஸ்ùஸல்ஸ் (Brussels) வரை ஊழலின் மெளன சாட்சிகளாகவும் ஊழலால் பாதிக்கப்பட்டவர்களாகவும் விளங்குபவர்களின் உரத்தகுரலாக இயங்கி வருகிறது.
அதிகார துஷ்பிரயோகம், ஊழல், இரகசிய பேரம் முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கங்களோடும், தொழில் நிறுவங்களோடும், குடிமக்களோடும் இணைந்து முனைப்புடன் 1993 முதல் இயங்கிவருகிறது.
ஊழலற்ற உலகை உருவாக்குவது எனும் ஒற்றைக் குறிக்கோள் உடையது அது (கூடுதல் தகவல்களுக்கு https://www.transparency.org/ என்னும் தளத்தைப் பார்க்கவும்).
உலகின் 190 நாடுகளில் ஊழல் நிலை குறித்து இந்நிறுவனம் ஆண்டுதோறும் கணக்கெடுத்து வருகிறது. இக்கணக்கெடுப்பின்படி 2012, 2013}ஆம் ஆண்டுகளில் 36 புள்ளிகள் பெற்றிருந்த இந்தியா 2014, 2015}ஆம் ஆண்டுகளில் ஊழல் மிகுந்து 38 புள்ளிகளைப் பெற்றது.
2016}இல் 40 புள்ளிகள் பெற்று ஊழலில் முன்னேறி 190 நாடுகளில் 79}ஆவது இடத்தை எய்தியுள்ளது. இந்தியாவைவிட ஊழல்மிக்க நாடுகள் 78 இருப்பினும், ஊழல் குறைவாக உள்ள நாடுகள் 111 இருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரிய பிரச்னையாகவும் தடைக்கல்லாகவும் இருக்கும் ஊழல் அங்கிங்கெனாதபடி நோக்குமிடம் எங்கும் நீக்கமற எங்கும் எதிலும் நிறைந்துள்ளது.
நியாயமில்லாத } நீதியில்லாத } நேர்மையில்லாத } அறமில்லாத } முறையில்லாத முறைகளில் பொருள் ஈட்ட வேண்டும் என்னும் மனித ஆசையின் ஊற்றுக் கண்ணை அடைத்தாலன்றி ஊழலின் ஊற்றுக் கண்ணை அடைக்க முடியாது.
இந்நிலையில், ஆசையின் தளையிலிருந்து மக்களை விடுவிக்கவும், மாற்று ஜனநாயக அமைப்பு ஒன்றை உருவாக்கி ஊழலின் தளையிலிருந்து இந்தியாவை விடுவிக்கவும், புதிய இந்தியாவைப் பாருக்குள்ளே நல்ல நாடாக உருவாக்கவும் மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் இன்றியமையாத தேவை ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com