அருகி வரும் அறிஞர் இனம்

உலகில் முன்தோன்றிய மூத்த மொழி, உறுதியும் தெளிவுமிக்க இலக்கணக் கட்டமைப்பைக் கொண்ட மொழி, எண்ணற்ற இலக்கியங்களால் காலந்தோறும் செறிவேறிக் கொண்டேயிருக்கும் மொழி, தனித்து இயங்கும் தன்மை மிக்க
அருகி வரும் அறிஞர் இனம்

உலகில் முன்தோன்றிய மூத்த மொழி, உறுதியும் தெளிவுமிக்க இலக்கணக் கட்டமைப்பைக் கொண்ட மொழி, எண்ணற்ற இலக்கியங்களால் காலந்தோறும் செறிவேறிக் கொண்டேயிருக்கும் மொழி, தனித்து இயங்கும் தன்மை மிக்க மொழி என்பன போன்ற காரணங்களால் 'உயர்தனிச் செம்மொழி' என்ற சிறப்பினைப் பெற்ற தமிழ்மொழியில் மொழியறிஞர்களும், படைப்பாளர்களும், ஆய்வாளர்களும் தலைமுறைகள் தோறும் தோன்றினர்.
அத்தகையோரின் நீட்சியாக இன்றளவும் சிலர் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதுதான். ஆயினும் இதில் வருத்தப்படத்தக்க இரண்டு உண்மைகள் உள.
ஒன்று, நாம் இழந்திருக்கின்ற அறிஞர்களின் இடத்தை ஓரளவாவது நிறைவு செய்யத் தகுதியுள்ள மனிதர்கள் கிடைக்கவில்லை. மற்றொன்று, இருக்கின்ற அறிஞர்களுக்கு அடுத்த தலைமுறை தோன்றவில்லை.
1999 - ஆம் ஆண்டு ஏப்ரல் 25 - ஆம் நாள், தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 102 தமிழறிஞர்கள் காலவரையற்ற உண்ணா நோன்பினைத் தொடங்கினர்.
அன்று தமிழுக்காகப் போராடிய 102 தமிழறிஞர்களில் பலர் இன்று நம்மிடையே இல்லை என்பது மட்டுமல்ல, இன்றைக்கு அப்படி ஒரு போராட்டத்தை முன்னெடுத்தால் 102 தமிழறிஞர்கள் தமிழகம் முழுவதும் தேடினாலும் கிடைக்கமாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஒரு சமூகத்தின் பாதுகாவலாக இருப்பது மொழிதான். ஒரு சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் அதன் மொழிதான் வாழ வைக்கிறது, வழி நடத்துகிறது, கட்டிக்காக்கிறது. ஒரு மொழியின் இலக்கியங்களே அம்மொழியைப் பேசுகின்ற மக்களை அறவயப்படுத்துகின்றன, ஆற்றுப்படுத்துகின்றன, சில நேரங்களில் தேவையின் பொருட்டு ஆவேசப்படுத்தவும் செய்கின்றன.
ஒரு மொழி அதன் மண்ணில் வேரூன்றி மருத்துவம், இலக்கியம், கலைகள், கல்வி, இசை என்றெல்லாம் கிளை விரித்துச் செழிக்கும்போது அம்மொழியைப் பேசுகின்ற சமூகமும் செழிப்படைகிறது. இத்தகைய செழிப்பு நிலை மேலோங்குவதற்கு முதன்மையான காரண கர்த்தாக்களாக இருப்பவர்கள் அச்சமூகத்தின் மொழியறிஞர்களேயாவர்.
தமிழ் மொழியின் நெடிய வரலாற்றில், அதன் பெருமைகளை உரைப்பவர்களாகவும், அதில் சிறந்த இலக்கியங்களைப் படைத்தளிப்பவர்களாகவும் அறிஞர்கள் தலைமுறை தோறும் தோன்றிக் கொண்டேயிருந்தனர். இளைய தலைமுறையினருக்கும் தாங்கள் கற்றதையெல்லாம் அவர்கள் கற்றுக்கொடுத்தனர்.
அவர்கள் வாழ்ந்த காலம் வரை தமிழின் வாழ்நாள் தூதுவர்களாக விளங்கினர். மறைந்த பிறகும் தங்களது படைப்புகளால் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகையத் தொடர் நிகழ்வில் கடந்த 40 ஆண்டுகளில் பெரும்பின்னடைவு ஏற்பட்டது.
இந்த காலகட்டத்தில்தான் நாடு தழுவிய அளவில் பொதுத்தளங்களில் தமிழுக்கான பின்னடைவும், நாடகம், திரைப்படம், மேடைப்பேச்சு போன்ற பல்வேறு தளங்களில் தமிழின் பெருமையும் அரங்கேறின.
அறுதியிட்டுக்கூற முடியாத அகத்தியர் காலம் முதல் 1940-ஆம் ஆண்டு வரையில் வாழ்ந்த தமிழறிஞர்கள், படைப்பாளிகள், இலக்கண ஆசிரியர்கள், புலவர்கள் மற்றும் உரையாசிரியர்களின் எண்ணிக்கை பெரும் மலைப்பை ஏற்படுத்துகிறது.
அகத்தியர் முதல் அனந்த வீரியர் வரை 'அ' எனும் தொடக்க எழுத்தில் பெயர்களைக் கொண்ட தமிழ் அறிஞர்கள், உரையாசிரியர்கள், மற்றும் படைப்பாளிகளின் எண்ணிக்கை மட்டுமே 125-ஐத் தாண்டுகிறது. 'ஆ' எனும் எழுத்தில் ஆசாரியர் அநிருத்தர் முதல் ஆனந்தக் கூத்தர் வரை 57-க்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்துள்ளனர்.
இப்படியாகக் கணக்கிட்டால் தமிழின் வரலாற்றில் மொழியறிஞர்களும், படைப்பாளிகளும், புலவர்களும், உரையாசிரியர்களுமாக சற்றேறக்குறைய 2,000க்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது தேர்வுகளின்படி நூல்களை எழுதி, பல்வேறு ஆய்வுகள் செய்து, ஆய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தமிழை வளம்பெறச் செய்தவர்களாவர்.
அவர்கள் வாழ்ந்த காலக் கட்டத்தில் தமிழ் மக்கள் தொகையின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இத்தகையத் தமிழறிஞர்களின் எண்ணிக்கை மிகமிகக் கணிசமானதாகும்.
பாரதியின் காலத்தில் இந்திய மக்கள் தொகை 30 கோடி என்றால், அப்போதைய தமிழர்களின் எண்ணிக்கை அதிக பட்சம் 3 கோடியாக இருக்கலாம். பாரதியின் காலத்திற்கு முன்பு இந்தத் தொகை இன்னும் குறைவாகவே இருந்திருக்க முடியும்.
ஆயினும் அக்காலக் கட்டங்களிலும், அதற்கு முன்பும் தமிழறிஞர்களின் எண்ணிக்கை மிகக் கணிசமாக இருந்துள்ளது என்பதை ந.சி. கந்தையாபிள்ளையின் ஆய்வு நூல் தொகுப்பின் வாயிலாக அறியமுடிகிறது.
அகர வரிசைப்படி அவரால் அடையாளம் காட்டப்பட்டுள்ள 2000 தமிழறிஞர்களும் தாங்கள் மேற்கொண்ட தமிழ்ப்பணிகளில் சிறந்த சாதனையாளர்களாக விளங்கித் தங்களின் மொழி ஆய்வுத் திறனையும், படைப்பறிவையும் நிரூபணம் செய்தவர்களாவர்.
அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த தமிழறிஞர்களின் எண்ணிக்கை மேலும் சில ஆயிரங்களைத் தாண்டக்கூடும். ஆனால் இன்றைய தமிழகத்தின் மக்கள்தொகை ஏழு கோடிக்கும் மேலாகும். ஆனால் அவர்களுக்கான தேர்ந்த தமிழறிஞர்களின் எண்ணிக்கை வெறும் நூறைக்கூட தாண்டவில்லை. இந்த நூறு அறிஞர்களும்கூட 1940-களில் தோன்றி தமிழ் பயின்று தமிழ் வளர்த்து இன்று நம்மிடையே எஞ்சியிருப்பவர்களாவர்.
ஒரு நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப காவல் நிலையங்கள், காவலர்கள், மருத்துவமனைகள், மருத்துவர்கள், கல்விக்கூடங்கள், ஆசிரியர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்றெல்லாம் கணக்குப்போட்டு அத்தகைய எண்ணிக்கையை வலியுறுத்தியும் அவற்றை நிறைவேற்றியும் வருகின்ற நமது சமூகம், பல நூறு தலைமுறைகளாக தான் பேசி வருகின்ற, தனது மொழிக்கான அறிஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து அக்கறையற்றுக் கிடக்கிறது.
இந்த அவல நிலைக்குக் காரணம், கடந்த 40 ஆண்டுகளில் தமிழின் மீதும், தமிழ் அறிஞர்களின் மீதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்தப்பட்ட தாக்குதல்களேயாகும்.
இந்தக் காலகட்டத்தில்தான், தமிழ் எனும் தாய் மொழியைக் வளரிளம் பருவத்துப் பள்ளிப் பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கும் வகையில், ஆயிரக்கணக்கான ஆங்கில வழிப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் செழித்து வளர்ந்து, ஆயிரக்கணக்கான பிள்ளைகளைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் அள்ளிக்கொண்டன.
அதன் விளைவாக இன்னொரு பக்கத்தில், 'தமிழைப் படித்து வாழ முடியாது' போன்ற தமிழ் மொழியைத் தரம் குறைத்து மையப்படுத்திய மூடக் கருத்துகள் விதைக்கப்பட்டன. சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்பன போன்ற கருத்துகள் வலுவான ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்பட்டபோது, இந்த நாட்டில் அடுத்தவேளை உணவுக்கு வழியின்றி கொடும் வறுமையில் உழலுகின்ற 60 சதவீதம் மக்கள் புலவர்கள்தானா?
அப்படியே இருந்தாலும் தமிழைக் கற்றுத் தேர்ந்த, தமிழ்மொழியின் தூதுவர்களாக விளங்குகின்ற அவர்களை வறுமையில் உழலவிட்டது யார் என்பன போன்ற கேள்விகள் கேட்கப்படவில்லை.
புலவர்களிலும், அறிஞர்களிலும் எத்தனையெத்தனை செல்வந்தர்களும், சமூக ஆளுமை மிக்கவர்களும் இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள் என்பதெல்லாம் வெளிச்சமிடப்பட்டு பொதுமைப்படுத்தப்படவில்லை.
தமிழின் மிகப்பெரும் காட்சி ஊடகமாக இருக்கின்ற திரையுலகம் தமிழாசிரியர்களை இழிவான, கையாலாகாத, நகைச்சுவைக் கதாபாத்திரங்களாக சித்திரித்துக் காட்டியது. இதில் கூடுதலான துயரமாக அண்மைக்காலத் திரைப்படங்களில் உண்மையான தமிழறிஞர்கள் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க வைக்கப்படுகின்றனர்.
ஆக, தமிழ் என்றாலே அது வறுமை, இயலாமை, நகைச்சுவை என்று தமிழர்களின் பொது புத்தியில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. இத்தகையப் பொது புத்தியே தமிழறிஞர்களைத் தரம் குறைத்துக் காட்டியது.
தமிழ் மரபில் இதுவரை வாழ்ந்த தமிழறிஞர்களின் சராசரி வாழ்நாள் வெறும் 55 அகவை தான். அவர்கள் தங்களது 30-ஆம் வயது வரை தேடித் தேடித் தமிழைப் பயின்றனர். அடுத்த 25 ஆண்டுக் காலத்தில் தாங்கள் கற்ற தமிழை, ஆய்வு நூல்களாகவும், உரை நூல்களாகவும், இலக்கியங்களாகவும், சொற்பொழிவுகளாகவும் தமிழுலகிற்குக் கொடையளித்து மறைந்தனர்.
அத்தகையோரின் தொடர்ச்சி இன்று அறுபட்டுக் கொண்டிருக்கிறது. தன் மொழியையும், தன் மொழியின் அறிஞர்களையும் ஒரு சேரத் தவறவிட்டுக் கொண்டிருக்கின்றது தமிழினம்.
மொழியறிஞர்களையும், படைப்பாளர்களையும், உருவாக்கித் தருகின்ற வகையில் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ள மொழி வளர்ச்சி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், அவை தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தில் எத்தனை விழுக்காட்டினை நிறைவேற்றியுள்ளன என்பது ஒரு மிகப்பெரிய வினா.
இந்நிலையில், பலநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த தமிழறிஞர் மரபு அறுபடாமல் காப்பாற்றும் வகையில் புதிய புதிய இளம் தமிழறிஞர்களை உருவாக்கி, அவர்களைத் தமிழ்ப்பணியாற்றச் செய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்ச் சமூகத்திற்கு இருக்கிறது.
மேலும் கல்வி எனும் பெயரில் தமிழ் மொழியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுவிட்ட இளையோரைத் தமிழோடு இணைத்து செயலாற்ற வைப்பது குறித்தும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அறிஞர்களைத் தோற்றுவிக்கத் தவறிவிடுகின்ற ஒரு சமூகம் காலப்போக்கில் தன் அடையாளத்தையும் மொழியின் அடையாளத்தையும் முற்றாக இழந்துவிடும்.
'முன்னொரு காலத்தில் தமிழ்மொழி எங்களது தாய்மொழியாக இருந்தது. எங்கள் மொழியில் பல்லாயிரக்கணக்கான அறிஞர்கள் இருந்தார்கள். அவர்களது பெயர்ப்பட்டியலை மட்டும் நாங்கள் இப்போது வைத்திருக்கிறோம்' என்று சொல்லுகின்ற நிலை ஓர் இனத்திற்கு ஏற்படுமாயின் அந்த இனம் உயிரை இழந்து நடைப்பிணமாக நடமாடிக்கொண்டிருக்கிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்!

கட்டுரையாளர்:
கவிஞர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com