நீர்வளம் காப்போம்

உலகத்திற்கே நீர்மேலாண்மையை கற்பித்த நம் தமிழகத்தில் வீடுகள் தோறும் இருந்த கிணறுகள் மூடப்பட்டு, ஆறுகள் அனைத்தும் கிணறுகளாக தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உலகத்திற்கே நீர்மேலாண்மையை கற்பித்த நம் தமிழகத்தில் வீடுகள் தோறும் இருந்த கிணறுகள் மூடப்பட்டு, ஆறுகள் அனைத்தும் கிணறுகளாக தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
முன்னோர் கூற்றுப்படி 'உணவே மருந்து' என்று வாழ்ந்து வந்த நாம், இன்று 'மருந்தே உணவு' என மருந்தை மட்டுமே உணவாக்கிக் கொண்ட அவலம் ஏன்?
விஞ்ஞான அறிவு வளர்ந்து கொண்டே போகிறது. அனைத்துத் துறைகளிலும் தமிழன் முதலிடத்தில் உள்ளான். நாசா, மைக்ரோசாப்ஃட், மருத்துவம், பொறியியல், கலை என்று அனைத்திலும் தமிழர் பங்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.
இன்றைய ஏட்டுக் கல்வி நம்முடைய விஞ்ஞான அறிவை அதாவது தொழில் அறிவை வளர்த்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தொழில் அறிவு மட்டும் போதுமா? நம் நாட்டில் மிக உயர்ந்த கல்வியாக கருதப்படும் ஐ.ஐ.டி. கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தரப்பட்ட உணவால் ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் நமக்கு கற்றுத்தந்த பாடம் என்ன?
சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் தனிமனித வாழ்க்கை என்பது அவனை மட்டுமே சார்ந்தது என்ற தவறான அணுகுதலே அதற்கு காரணம் என்பதை உணர முடியும். எந்த ஒரு தனிமனிதனும் தான்- சமுதாயம்-இயற்கை என்ற முக்கூட்டின் இணைப்பே.
அதில் எந்த ஒன்று பாதித்தாலும் அது தனிமனிதனையும் அவனை சார்ந்த சமுதாயத்தையும், இயற்கையையும் பாதிக்கும் என்பதே உண்மையாகும்.
நம்முடைய தொழில் கல்வியானது நமக்கும் இந்த சமுதாயத்திற்கும் உள்ள உறவை பற்றிய அறிவை விளக்கவில்லை. ஒரு பிடி உணவை எடுத்துக்கொள்வோம்.
அது எவ்வாறு நமக்கு கிடைத்தது என்றால் நிலத்தை பண்படுத்தியவர்கள், நெல் விதைத்தவர்கள், தவறாமல் சரியான அளவில் தண்ணீர் பாய்ச்சியவர்கள், களை எடுத்தவர்கள், உரமிட்டவர்கள், அறுவடை செய்தவர்கள், அறுவடை செய்த நெல்லை அரிசியாக பிரித்து பதப்படுத்தி பக்குவமாக வியாபாரத்திற்கு கொண்டு வந்தவர்கள், அதை வாங்கி வந்து நமக்கு சுவையான உணவாக சமைத்து தந்தவர்கள் வரை அனைவருடைய உழைப்பும் மறைந்துள்ளது.
பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளவர்கள் இந்த சமுதாயத்தை காக்கும் முக்கிய பொறுப்பில் உள்ளார்கள் என்பதை உணரவேண்டும். ஏன் என்றால் இந்த சமுதாயம் இல்லை என்றால் அவர்கள் தலைமுறை மட்டும் தனியாக வாழ்ந்து விடமுடியாது.
எத்தனை அறிவியல் முன்னேற்றம் வந்தாலும், தலைசிறந்த கருவிகளை உருவாக்கினாலும், அதை இயக்குவதற்கு ஒரு மனிதன் தேவை.
நாம் அனுபவிக்கும் அத்தனையும் இந்த இயற்கையிலிருந்து பெறப்பட்டு, அதன் தரமும், திறனும் மாற்றப்பட்டவையே. இயற்கை என்பது இயல்பானது, யாரும் உருவாக்கியதில்லை, உருவாக்கவும் முடியாது.
இயற்கையைப் பாதுகாப்பது நம் அனைவருடைய கடமை. காற்று என்பது இயற்கை, யாரும் காற்றுக்கு உரிமை கொண்டாட முடியாது. அந்த இயற்கையை நாம் மாசுபடுத்தினால் மீண்டும் சரி செய்வது என்பது முடியாத காரியம்.
நீர் என்பது இயற்கை, அதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது. நிலங்களில் உள்ள நீர்பகுதிகளை உரிமை கொண்டாடலாம். ஆனால் அனைத்து கடலும் பூமிக்கடியில் ஒன்றிணைந்துள்ளது. இயற்கையை நாம் உணராமல் அதை மாசுபடுத்துவதன் மூலம் நமக்கு நாமே தீமை செய்து கொள்கிறோம்.
அதிகாரிகளே, அரசியல்வாதிகளே உங்களிடம் வைக்கும் ஒரே கோரிக்கை தொழில் கல்வியுடன் சமுதாய கல்வியும், இயற்கையை பற்றிய கல்வியும் சேர்ந்து பயிலச் செய்யுங்கள்.
ஒருவர் எதை சாப்பிடவேண்டும் அல்லது வேண்டாம் என்பதை சட்டம் போட்டு மாற்ற முடியாது. மக்களுக்கு உணவைப் பற்றிய தெளிவான அறிவை அளித்தால் மட்டுமே அது சாத்தியம்.
சமுதாய கல்வியும், இயற்கைப் பற்றிய தெளிந்த அறிவும் மட்டுமே அனைத்திற்கும் தீர்வாகும். பன்னாட்டு வியாபாரிகளின் தந்திரம்போல் நாம் விழித்துக்கொள்ளும் வரை மட்டுமே எடுபடும். கருத்து திணிப்பு வேண்டாம். கருத்து தெளிவுதான் வேண்டும்.
பத்து தலைமுறை சொத்து இருக்கும். ஆனால் நம் அடுத்த தலைமுறை இருக்குமா என்று சிந்தியுங்கள். உங்கள் அடுத்த தலைமுறைக்காக சேர்த்து வைத்துள்ள எதையும் அளிக்க வேண்டாம்.
அடுத்த தலைமுறையை தாண்டி அடுத்தடுத்த பத்து தலைமுறைக்கு சேர்த்துள்ளவர்கள் ஒரு தலைமுறை பங்கை பிரித்து நீர் வளம் காக்க, மண் வளம் காக்க, நதிநீர் இணைக்க தாமாக முன்வந்து தானமாக அளியுங்கள். மரங்கள் வளர்க்க உதவி செய்யுங்கள்.
இரண்டாம் தலைமுறை, முன்றாம் தலைமுறைக்கு சேர்த்தவர்கள் ஒரு பங்கை பிரித்து விவசாயம் காக்க உறுதுணையாக இருங்கள். நீர் இன்றி அமையாது உலகு. நம் அடுத்த தலைமுறை சுகமாக வாழ நீர் வளத்தை காப்பாற்றுங்கள்.
விவசாயம் அழிந்தால் நாம் அழிவது உறுதி. ஒரு நாள் ஒரு விவசாயியுடன் வாழுங்கள் அல்லது நம் விவசாயி படும் இன்னலை முழுதும் உணர முற்படுங்கள். நமக்கு உணவளிக்கும் விவசாயிக்கு உணவு கிடைக்கிறதா என்பதை உடனிருந்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை இனிமையாக அமையும்.
நம் சொத்து, நம் இயற்கை, நம் சமுதாயம், நம் விவசாயம் மட்டுமே. நாம் ஒவ்வொருவரும் இணைந்து இயற்கையையும், விவசாயத்தையும், காப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com