உயிருள்ள வகுப்பறைகள்

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 'நீட்' என்னும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தமிழகக் கல்வியாளர்கள், தமிழகப் பள்ளிக் கல்விப் பாடத்திட்டம், தயாரிப்புமுறை போன்ற பல அம்சங்களை விவாதித்து வருகின்றனர்.
'பொதுப்போட்டிக்குத் தயாராகாத' தமிழ்நாட்டுக் கல்விச்சூழல் குறித்துப் பல கடுமையான விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தியா பல்தேசிய சமூகமாக இருக்கிறது. மொழி உட்பட்ட தேசிய இனங்களின் அடையாளங்கள் பொதுக்கல்வியில் வகிக்கப்போகும் இடம் குறித்தெல்லாம் தெளிவான பார்வைகள் உருவாக்கப்படாமலேயே பொதுப்போட்டி முன்னிறுத்தப்படுவது கவனிக்கத்தக்கது.
கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நெருக்கடிகள், குழப்பங்கள் ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழக மாணவர்களைத் தயாரிக்கும் மாபெரும் வரலாற்றுக் கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம், அவற்றின் சமகாலப் பொருத்தப்பாடு, தற்கால நெருக்கடிமிக்க வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கும் அதன் திறம் என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவைகளாகின்றன.
வகுப்பறைக்குச் செல்லும் ஆசிரியர்கள் பொதுவாகப் பாடத்திட்டம் பற்றிய தெளிவோடும், தயாரிப்புகளோடும் செல்ல வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.
பாடத்திட்டத்தில் உள்ளவற்றை மாணவர்கள் மனங்கொள்ளும் வகையில் கற்றுத்தந்திட எளிய கருவிகளையும் வழிமுறைகளையும் ஆசிரியர்கள் தாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் இன்றைய தேவையே. ஆனால், இவை போதாது என்பதுதான் தற்காலக் கல்வி எதிர்நோக்கும் சிக்கல்.
சமூகம் எவ்வாறு ஒருபடித்தானதாக இல்லையோ, அவ்வாறே மாணவர்களும் ஒருவகையினராக இல்லை என்ற உண்மையை ஆசிரியர் உணர்வது இன்றியமையாதது. அதாவது மாணவர்களில் கற்றலில் இயல்பான தன்மையுடையோரும், மெதுவாகக் கற்போரும், விரைவாகக் கற்போருமாகப் பல திறத்தினர் உள்ளனர் என்ற புரிதல் அவசியமானது.
பாடத்திட்டத்தை மாணவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக் கொடுத்து, அதை அவர்கள் மனதில் பதிப்பதுதான் ஆசிரியர்களின் முதன்மையான வகுப்பறைப் பணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதுமட்டுமேதான் ஆசிரியரின் பணி என்பதில்லை.
குறிப்பாக, பாடத்திட்டத்தில் உள்ளவற்றை அடிப்படையில் உள்வாங்கிக் கொள்ளப் போராடும் மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்கும் வழிமுறைகளில் தன்னுடைய சேகரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
பாடத்தை எளிதாகப் புரிந்து கொள்ள உதவும் நோக்கோடு ஆசிரியர் பல்வேறு எளிய எடுத்துக்காட்டுகளைத் தயாரித்துக் கொள்ளுவது அவசியமானது.
அவ்வாறு பல்வேறு வழிமுறைகளைத் தொகுத்துக்கொள்ள ஆசிரியர் விரிவாகப் படிக்க வேண்டியது அவசியமானது.
அதேபோல, பாடத்திட்டங்களின் வரையறைகளைத் தாண்டும் வலுவுடைய மாணவர்களுக்கு ஆசிரியர் வகுப்பறைக்கு என்ன கொண்டு போகிறார் என்பது மிக இன்றியமையாத வினா. தேடலும் ஆர்வமும் மிக்க மாணவனைக் கல்வித்துறை வகுத்த பாடத்திட்டத்துக்குள் முடக்கிப் போட்டுவிடக் கூடாது.
தேடுதல் மிக்க மாணவர்களின் அறிவுப் பசிக்குத் தீனிபோட, ஆசிரியர் வகுப்புக்குக் கூடுதல் புத்தகங்களோடு செல்ல வேண்டியுள்ளது. அப்புத்தகங்கள் கண்களுக்குப் புலனாகாத புத்தகங்கள்; ஆசிரியர் ஏற்கெனவே படித்துச் செரித்து அறிவாக மாற்றிக் கொண்ட புத்தகங்கள்.
கண்ணுக்குப் புலப்படும் பாடப்புத்தகங்களைச் சுமந்து வகுப்பறைக்குச் செல்லும் ஆசிரியர், கண்ணுக்குப் புலப்படாத நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் சுமந்து செல்ல வேண்டும். அறிவார்ந்த மாணவர்களுக்கு அவற்றை எடுத்துக் கொடுக்க வேண்டும்.
'வீட்டுக்கு ஒரு நூலகம்' என்பது பொதுநிலையில் சாத்தியமாகிறதோ இல்லையோ, ஆசிரியர்களுக்கு அது அவசியத் தேவை. ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களைக் கற்றுச் சொல்லும் 'கற்றுச் சொல்லிகள்' இல்லை.
அவர்கள் அறிவுத்துறையினர்; தனது சமூகத்தின் அறிவுச் செயல்பாட்டின் துடிப்புமிக்க செயலி. ஆசிரியர்கள், தன்னுடைய பாடம் சார்ந்தும் பொதுநிலையிலும் வெளிவந்த நூல்கள் குறித்த எளிய அறிவுச் சேகரத்தைத் தங்கள் இல்லங்களில் கொண்டிருக்க வேண்டும்.
தனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கு எல்லாம் தெரியும் என்று மாணவர்கள் நம்புகிறார்கள். ஆசிரியர்கள் அந்த நம்பிக்கைக்குப் பங்கம் விளைவிக்காதவர்களாகவும் அந்நம்பிக்கையைச் சிறிதளவாவது காப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறானதல்ல.
'பாடப்புத்தகங்கள், நூல்கள், கூகுள் போன்ற தேடுதல் பொறிகள் யாவற்றினும் மேம்பட்ட அறிவுடையவர் எம் ஆசிரியர்' என்ற நம்பிக்கையை மாணவர்கள் மனத்தில் ஏற்படுத்துவது ஆசிரியர்களின் கடமையே.
அந்த நம்பிக்கையை உருவாக்குவதற்கு ஓர் ஆசிரியர், ஆத்ம சுத்தியோடு தொடர்ந்த அறிவுத்தேடலில் ஈடுபட வேண்டும் என்பது அவசியமானது.
நிறையக் கற்ற ஆசிரியரே, வகுப்பறையின் வினாக்களை இன்முகத்தோடு எதிர்கொள்ளவும் கருத்துகளுக்கு இடமளிக்கவும் விவாதங்களில் மாணவர்களைப் புடம்போடவும் செய்கிறார். வகுப்பறைக் கற்றலில் மாணவர்களின் துடிப்புள்ள பங்கேற்பையும் வேண்டுகிறார்.
அவ்வாறான ஆசிரியர்களின் வகுப்பறைகள், பேசும் வகுப்பறைகளாகவும் பாடும் வகுப்பறைகளாகவும் மாறும் என்பது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com