யாகாவார் ஆயினும்...

ஒரு உறுப்பை வைத்து ஒருவரின் பண்பை எடைபோட முடியுமென்றால் அது நாக்குதான்

ஒரு உறுப்பை வைத்து ஒருவரின் பண்பை எடைபோட முடியுமென்றால் அது நாக்குதான். நாவின் வன்மையால் இவ்வையத்தில் வாழ்ந்தோரும் உண்டு. வீழ்ந்தோரும் உண்டு. எனவே நாக்கை நமது கட்டுப்பாட்டுக்குள் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
மக்களுக்கு செல்லிடப்பேசி கிடைத்தாலும் கிடைத்தது நாவிற்கு ஓய்வே இல்லாமல் போய்விட்டது. மக்கள் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொன்டே இருக்கிறார்கள். பொய், புறம், மற்றவர்களைப் பற்றி அவதூறு என்று கணக்கின்றி பேசுகிறார்கள்.
அலுவலகத்தில் இருந்து கொண்டு நான் இப்பொழுது அலுவலகத்தில் இல்லை என்று சொல்கிறார்கள். உள்ளூரில் இருந்து கொண்டு நான் இப்பொழுது வெளியூரில் இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.
மனிதர்கள் தாங்கள் தெளிவற்ற நிலையில் இருக்கும் பொழுதுகளிலும் , ஆத்திரம் தலைக்கு ஏறும் பொழுதுகளிலும் கொட்டும் வார்த்தைகளுக்கு 'நரம்பில்லா நாக்கு என்னவெல்லாம் பேசுகிறது' என்று நாக்கின் மீது பழி போடுவர்.
நல்லியல்பு உடையவர்களின் வார்த்தைகள் மனப்புண்களுக்கு மருந்தாகும். அவர்தம் வார்த்தைகள் நம்பிக்கை ஊட்டுவதாகவும், உத்வேகம் அளிப்பதாகவும், வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், வெற்றியையும் தருவதாகவும் அமையும்.
நல்லியல்பு அற்றோர் வார்த்தைகள் மனத்தைக் கீறிக் காயப்படுத்தும். சுடுசொற்கள் இறுதி மூச்சு வரை நம்முள் வடுவாக இருந்து நம்மைத் துன்புறுத்தும்.
மனிதர்கள், தங்களுக்கு எப்பொழுதும் நன்மையையே நாடுவர். ஆனால் நன்மை பயக்கும் சொற்கள் ஆயிரமாயிரம் இருக்க தேடிப்பிடித்து கடுஞ்சொற்களை மற்றவர் மீது வீசுவர்.
அலுவலகங்களில், அதிகாரிகள்தான் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களை கடுமையான வார்த்தைகளினால் துன்புறுத்துவர் என்றால், சில சமயங்களில் உடன் பணிபுரிபவர்களும் சுடுசொற்களால் மற்றவர்களைக் காயப்படுத்துவர். உறவுகளில் கூட இத்தகையோர் உண்டு.
வேலையில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவும், உறவுமுறை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் பல்லைக்கடித்துக் கொண்டு சகித்துக் கொண்டிருப்பவர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது.
விஷம் தோய்ந்த வார்த்தைகளால் நொந்து போனாலும் எல்லாவற்றையும் அகத்தினுள் மறைத்து புன்னகையுடன் உலாவுபவர்களை பாராட்டத்தான் வேண்டும்.
தம்மைவிட பலவீனமான மக்களை இப்படி வார்த்தைகளால் பந்தாடுபவர்கள் தாங்கள் செய்வது தவறு என்று உணர வேண்டும்.
வீட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அண்டை வீட்டினரிடம் கனிவாகப் பேச வேண்டும். கோபம் வரும் சமயங்களில் நாவில் இருந்து புறப்படும் வார்த்தைகளின் தீவிரத்தை மூளை உணர்ந்து கொள்ளாது.
தம்பதிக்குள் இதுமாதிரியான சூழ்நிலை ஏற்படும் சமயங்களில் இருவருள் ஒருவர் நாவை அடக்கிக் கொண்டால் பிரச்னை பெரிதாகாது. வீட்டில் அமைதி நிலவும்.
முதியோர்களிடம் பேசும் வார்த்தைகளில் பரிவும், பாசமும் இருக்க வேண்டும். குழந்தைகளிடம் மென்மையாகப் பேச வேண்டும். வறியவர்களிடம் ஏளனமாக, பரிகாசமான வார்த்தைகள் கூடவே கூடாது. கைகளால் அடுத்தவர்களுக்கு தீங்கு தருதல் எவ்வளவு பாவமோ அதைவிடப் பெரிய பாவம், மக்களை வார்த்தைகளால் வதைப்பது.
ஆசிரியர்களும், மாணவர்களுக்கு நாவை நல்லவிதமாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லித் தரவேண்டும்.
நாம் பேசும் வார்த்தைகள் அளவாகவும், மற்றவர்களுக்குப் புரியும் வண்ணமும் இருக்க வேண்டும். நாவின் வன்மை அல்லது பேச்சின் வன்மை என்பது ஒருவரின் பால் மற்றவர்களை ஈர்க்கவல்லது. நபிகள் நாயகம் அவர்களின் கனிவான பேச்சினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈர்க்கப்பட்டனர்.
விவேகானந்தர் போன்ற தத்துவ மேதைகள், ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்ற ஞானிகளின் நாவில் இருந்து பிறந்த வார்த்தைகளால் கவரப்பட்டு அவர்கள் பேசும் கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
இவர்களைப் போன்றே எத்தனையோ மகான்களும், ஞானிகளும் தங்கள் அறிவார்ந்த பேச்சால் உலகை வென்றனர். இவர்கள் அனைவரும் பேச்சில் மட்டும் வல்லவராக இருந்து விடாமல் தாங்கள் சொன்னதை தங்கள் வாழ்வில் பின்பற்றவும் செய்தனர்.
பேச்சும், செயலும் ஒன்றாக வாழ்ந்து காட்டியவர்களையே உலகம் எடுத்துக்காட்டாகக் கொள்ளும். நம் சொல்லும், செயலும் ஒன்றாக இருப்பது நம்மை உண்மையாளர்களாகவும், நம்பகத்தன்மை உடையவர்களாகவும் காட்டும்.
தாம் பேசுவது ஒன்று, செய்வது ஒன்று என்று வாழ்பவர்களை வேஷதாரிகள் என்று உலகம் கண்டு கொள்ளும்.
கொடுத்த வாக்கினை நிறைவேற்றுபவர்கள் தங்கள் நாவினை பொய் பேசுவதிலிருந்தும் தடுத்துக் கொண்டவர்களாவர். ஆட்சி செய்பவர்களுக்கும், ஒரு நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் இருக்க வேண்டிய முக்கியமான ஆளுமைப் பண்புகளில் வாக்குத்தவறாமை மிகவும் முக்கியமானதாகும்.
இதனால் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மீது குடிமக்களுக்கும், தலைமை அதிகாரிகள் மீது அவர்களின் கீழ் பணிபுரிபவர்களுக்கும் மரியாதையும், பணிவும் ஏற்படும்.
இத்தகைய மனிதர்களால் தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் மீது பெரும் தாக்கத்தையும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com