இளைஞர் சக்தியை நல்வழிப்படுத்துவோம்!

உலக அரங்கில் இந்திய மாணாக்கர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணாக்கர்களுக்குத் தனி மதிப்பும் செல்வாக்கும் உள்ளது.

உலக அரங்கில் இந்திய மாணாக்கர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணாக்கர்களுக்குத் தனி மதிப்பும் செல்வாக்கும் உள்ளது. இதற்கு நமது கற்றல்-கற்பித்தல் பண்பாடும், மாணாக்கர்களின் நடத்தை நெறிகளுமே அடிப்படை.
சமீபகாலங்களில் இந்தப் பண்பாட்டுத்தளம் வெவ்வேறு வடிவங்களில் மெல்ல தகர்த்தப்பட்டு வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது. பேருந்து தினம் (Bus Day) கொண்டாட்டங்களும் பகடிவதை (Ragging)யும் அந்த வயது நிலைக்கு ஏற்ற இயல்பான ஒன்றுதான் என்றாலும் அவை வேறு வடிவம் கொண்டு விளையாட்டு வினையில் முடிகிற கதையாக வன்முறையிலும், குழு மோதல்களாகவும், உயிர் பலியிலும் முடிந்துவிடுகிறது.
தமிழக கல்லூரிகள் இந்திய உயர்கல்வி வரலாற்றில் தனியிடம் பெற்றவை. இந்த வரலாற்றினை இளம் தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளதா?
1786-இல் சமய போதகராக மதராஸ் வந்த ஆன்ட்ரூபெல் என்பவர் நமது திண்ணைப் பள்ளிக் கூடம், ஓராசிரியர் கல்வி முறையில் மூத்த மாணவர்களே ஆசிரியர்களாகவும் செயல்படும் முறையைப் பார்த்து வியந்து, அதைப் படித்துக்கொண்டு, தன் சொந்த நாட்டிற்குச் சென்று மதராஸ்முறை லன்க்காஸ்ட்டர் முறை என்று அக்கல்வி முறையை அங்கு அறிமுகம் செய்து பெரும் புகழ் அடைந்தார்.
இராணியார் (அரசர் மூன்றாம் ஜார்ஜ் மனைவி) அவர்களே இம்முறையைப் புகழ்ந்து பராட்டியுள்ளார். இம்முறை புகழ் பெறத் தொடங்கியதும் "மதராஸ் கல்லூரி' என்ற கல்லூரியைத் தொடங்கி இம்முறையில் பாடம் கற்பித்துப் பெரும் செல்வத்தை ஈட்டினார் என்பது வரலாறு.
தமிழ்நாட்டில் நூற்றாண்டு கண்ட பல கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு வரலாறும், அது உருவாக்கப்பட்டதின் பின்புலத்தில் வலி மிகுந்த போராட்டமும், எண்ணற்ற தியாகமும், பெரும் கனவும், நம்பிக்கையும், தொலைநோக்குப் பார்வையும் உள்ளன. அந்தக் காலடிச்சுவடுகளை அறியாமல் ஒருவர் அந்தக் கல்லூரியில் காலடி எடுத்துவைப்பது என்பது அர்த்தமற்றதாகிவிடும்.
தென்னிந்திய உயர்கல்வியின் முதல் வித்தாகத் திகழ்வது சென்னை மாநிலக் கல்லூரி. கிழக்கிந்தியக் கம்பெனியார் மதராஸ் நகருக்கு வந்து 38 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 1678-ஆம் ஆண்டில்தான், மக்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது.
என்றாலும் 1717-இல் கிறித்துவ சமயக் குழுக்களின் முயற்சியால்தான் முதன்முதலில் மதராஸில் இரண்டு பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன. உயர்கல்விக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கும் படியாக இருந்தது.
1838-ஆம் ஆண்டு மெட்ராஸ் கவர்னராகப் பொறுப்பேற்ற எல்ஃபின்ஸ்டன் பிரபுவுக்கு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதை அறிந்து கொண்ட, அப்போதைய அரசு வழக்கறிஞரான ஜார்ஜ் நார்ட்டன் (George Norton) 1839 நவம்பர் மாதம் பெரும் முயற்சி எடுத்து 70 ஆயிரம் பொதுமக்களிடம் கையொப்பம் பெற்று மதராஸ் நகரில் ஆங்கிலக் கல்லூரி ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என்று மனு ஒன்றினைக் கொடுத்தார். அந்த மனுவில் கவனிக்கத்தக்க வாசகம் இடம் பெற்றிருந்தன.
கல்வியின் அளவிடமுடியாத நன்மைகள் பற்றி நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம். பயனுள்ள அறிவு எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்பது எங்களுக்குப் புரிகிறது. நாட்டின் செழிப்புக்கு மக்களின் அறிவு வளர்ச்சியே சாதனம்.
இந்தப் புனிதமான கல்விப் பணிக்கு நாங்கள் எங்கள் பங்கை அளிப்பதில் பெருமைப்படுகிறோம். ஏற்படுத்தப்போகும் கல்வி நிறுவனத்தில் எங்களுடைய பங்கிருக்க வேண்டும். எங்களது குரலுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும். கல்வி நிறுவன மேலாண்மையியல் எங்களுக்கும் பங்கு வேண்டும்.
இதில் மக்களிடம் கல்வியின் மீது இருந்த தாகத்தையும், அது சுதந்திரத் தன்மையோடும், மக்கள் பங்கேற்போடும் இருக்க வேண்டும் என்ற உரிமைக் குரலையும் நம்மால் உணரமுடிகிறது. அதற்குப் பிற்பாடு தொடர்ந்து முயற்சித்ததன் வாயிலாக ஆளுநர் எல்ஃபின்ஸ்டன் பிரபு 1838-இல் தன்னுடைய சபைக் குறிப்பை எழுதினார்.
அதன் அடிப்படையில் மாநிலக் கல்லூரி 1840-இல் உருவானது. தொடக்கத்தில் எழும்பூரில்தான் மாநிலக் கல்லூரி இயங்கியது. சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு, அதாவது 1857 முன்னரே மாநிலக் கல்லூரி தொடங்கப்பட்டதால், தென் இந்தியாவின் உயர்கல்வியின் தாய் நிறுவனம் என்ற பெருமையை, புகழினை மாநிலக் கல்லூரி பெறுகிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் இல்லம் 1874-இல் தொடங்குவதற்கு முன்னர்வரை, சென்னைப் பல்கலைக்கழகமே மாநிலக் கல்லூரியில்தான் செயல்பட்டது என்பது வரலாறு.
அதுமட்டுமல்ல, நோபல் பரிசுபெற்ற அறிஞர்களான சர்.சி.வி. ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர் போன்ற அறிவியல் அறிஞர்களையும், சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர், தமிழறிஞர்கள் நெ.து. சுந்தரவடிவேலு, இலக்குவனார் போன்ற ஆளுமைகளையும் தந்தது மாநிலக் கல்லூரி.
இதேபோல சென்னைப் பச்சையப்பன் கல்லூரிக்கும் ஒரு தனித்துவமான வரலாறு உள்ளது.
பச்சையப்பர் கிழக்கிந்திய கம்பெனியின் இரு மொழியாளராக (துவி பாஷி)வும் முகவராகவும் பணியாற்றி தமது கடும் உழைப்பால் பெரும் செல்வத்தை ஈட்டியதோடு, மக்களுக்கு உதவி செய்து மக்கள் மத்தியில் புகழும் அடைந்தார்.
40 ஆண்டு காலமே வாழ்ந்த பச்சையப்பர் (1754-1794) தான் சேர்த்த சொத்துக்களில் தன் குடும்பத்தினர் உறவினர்களுக்கு என்று ஒரு பகுதியையும், சிவ - விஷ்ணு கோயிலுக்கு தர்மங்கள் செய்ய அன்றைய மதிப்பில் ரூ.3,71,745 ரூபாயும், மீதமுள்ள ரூ.3,89,761-ஐ மதராஸ், காஞ்சிபுரம், சிதம்பரம் ஆகிய ஊர்களில் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி அனைவருக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என விருப்ப ஆவணம் (உயில்) எழுதினார்.
அதனை நிறைவேற்றும் பொறுப்பினை-உரிமையினை அவரின் குருநாதரும் இருமொழியாளருமான பெüனி நாராயணப்பிள்ளைக்கு வழங்கி இருந்தார்.
அப்போது அட்வகேட் ஜெனரலாக இருந்த ஜார்ஜ் நார்ட்டன் முயற்சியாலும், வழக்குரைஞர் சர் அர்பாட்காம்டன் (Sir Herbert Compton) ஒத்துழைப்பாலும் 48 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றத்தில் ஆணை பெற்று அவரின் அறக்கட்டளைக்குச் சேர வேண்டிய சொத்தும் அதற்கு உரிய வட்டியும் பெற்றுத் தரப்பட்டது. அதன் அடிப்படையில் பச்சையப்பர் அறக்கட்டளை உயிர்பெற்று 1842-இல் பச்சையப்பர் பெயரில் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது.
1846-ஆம் ஆண்டு பச்சையப்பர் கல்லூரிக்கு, ஜார்ஜ் நார்ட்டனால் அடிக்கல் நாட்டப்பட்டு 1850-இல் அப்போதைய ஆளுநர் ஹென்றி பொட்டிங்கரால் பச்சையப்பன் கல்லூரி கட்டடம் திறக்கப்பட்டது
அப்போது உயர்கல்வி என்பது இலவசக் கல்வியாக இருக்கவில்லை. ஆனால் தென்னிந்தியாவிலே கட்டணம் இல்லாமல் உயர்கல்வி வழங்கியது பச்சையப்பர் அறநிலையம்தான்.
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் காசு பிரமானந்த ரெட்டி, மைசூர் மாநில முன்னாள் முதலமைச்சர் கே.சி.ரெட்டி மற்றும் தென் இந்தியாவில் அமைச்சர் நிலையில் இருந்த 13 திவான்கள், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த சி. விஜயராகவாச்சாரி, தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் தந்த அண்ணாதுரை, நெடுஞ்செழியன், க. அன்பழகன் போன்ற அரசியல் ஆளுமைகளும், கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன், நாடகமேதை பம்மல் சம்பந்த முதலியார் மற்றும் தென் இந்தியாவிலே முதன்முதலில் வெளியான நாளிதழான சுதேசமித்திரனை (மகாகவி பாரதியார் உதவியாசிரியராகப் பணியாற்றிய இதழ்) தோற்றுவித்த ஜி.சுப்பிரமணிய ஐயர் உள்ளிட்ட எத்தனையோ ஆளுமைகளைத் தந்தது பச்சையப்பன் கல்லூரி.
தமிழகத்தில் முதன்முறையாக பொதுமேடையில் மகாத்மா காந்தி உரையாற்றியதும் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில்தான்.
தொடக்கத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும் பணியையும் கல்வித் திட்டங்களை வகுத்துத்தரும் பணியையும் மட்டுமே செய்தது. மாணவர்களுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் பணியை பச்சையப்பன் கல்லூரியும், மாநிலக் கல்லூரியும், தாம்பரம் கிருத்துவக் கல்லூரியும் பகிர்ந்து கொண்டன.
1904-ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் பல்கலைக்கழகம் சில சிறப்புப் பாடங்களை நடத்தத் தொடங்கியது. பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணிகள் மட்டுமே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்தியாவில் முதன்முதலாக 1914-இல் மூன்று மகளிர் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதில் ஒன்று சென்னை இராணி மேரிக் கல்லூரி.
பெண்களுக்கு கல்வி கற்பிக்க இந்தியாவில் பெண் ஆசிரியர்களே இல்லாத நிலையில் இங்கிலாந்து நாட்டில் இருந்து பெண் ஆசிரியர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து கற்பிக்க ஏற்பாடு செய்தார்கள்.
இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் 2,344 கல்லூரிகள், 32 லட்சத்து 35 ஆயிரத்து 364 மாணாக்கர்கள் என்ற நிலையை அடைந்துள்ளோம்.
இத்துடன் இந்தியாதான் உலகிலேயே மிகவும் இளமையான நாடு. இன்றைய உலக மக்கள்தொகை 732 கோடி, இந்தியாவின் மக்கள் தொகை 125 கோடி. இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இந்த இளைஞர் சக்தி உலகில் வேறு எந்த நாட்டிற்கும் இல்லை.
நம்மிடம் உள்ள இளைஞர் சக்தியை நல்வழிப்படுத்தி, நெறிப்படுத்தி ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்குப் பயன்படுத்துவது காலத்தின் தேவை. சர்வதேச அளவில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்ட களங்களும் மானுட மேன்மைக்கான பயணங்களும், வரலாற்றுப் பதிவுகள்.
1939-ஆம் ஆண்டு செக்கோஸ்லாவியாவின் தலைநகர் பிராக்கிஸ் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணாக்கர்களின் எழுச்சிமிகு போராட்டத்தின் நினைவாக உலகம் முழுவதுவும் நவம்பர் 17-ஆம் நாளை சர்வதேச மாணவர் தினம் (International Student’s day) ஆக ஐக்கிய நாடுகள் சபை கடைப்பிடித்து வருகிறது.
இதேபோல் கிரேக்கத்தில் 1967-1974இல் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஏத்தன்ஸ் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் நினைவாக நவம்பர் 17 கிரேக்கத்தில் பொதுவிடுமுறை நாளாக உள்ளது.
நமது இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழக மாணவர்களிடையே வீறு கொண்டு எழுந்த விடுதலைப் போராட்ட எழுச்சி சர்வதேச மாணவர்களால் நினைக்கப்படுகிறது. வரலாற்றில் நிலைபெறுகிறது. மாணவர்களின் பொதுச்செயல்பாடுகள் நினைக்கப்படவேண்டுமே தவிர பழிக்கப்படக் கூடாது!

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com