வேண்டாம் வினோத சிகிச்சைகள்

அண்மையில் பிரபல நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஹைதராபாத்தில், ஒரு மையத்தில் குறிப்பிட்ட வகை மீன்களை நிறைய வரவழைத்திருப்பதாகவும்

அண்மையில் பிரபல நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஹைதராபாத்தில், ஒரு மையத்தில் குறிப்பிட்ட வகை மீன்களை நிறைய வரவழைத்திருப்பதாகவும், அங்கு ஆஸ்துமா வியாதிக்கு சிகிச்சை பெற பல நோயாளிகள் காத்திருப்பதாகவும் வெளிவந்த செய்திதான் அது. கூடுதல் தகவல் என்னவெனில், தெலங்கானா மாநில அமைச்சர் ஒருவரும் அங்கு வருகை தந்திருக்கிறார் என்பது.
எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் கடுமையான மூச்சிரைப்பால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை எடுத்தும் பலனில்லை. தீவிரமான சைவ குடும்பத்தைச் சார்ந்த அவரிடம் கேட்டபோது, "எத்தனையோ மாத்திரைகளை விழுங்குகிறோம், அதிலெல்லாம் என்ன கலந்திருக்குமென்று யார் கண்டார்கள்?' என்று பதில் வந்தது (இன்று, அதே மையத்தில் சைவப் பழக்கமுள்ளவர்களுக்கு வேறு விதமான மாத்திரைகள் தருகிறார்களாம்).
கிட்டத்தட்ட இதேபோன்று, கோவையில் ஒரு சிற்றூரில் காது கேளாதோருக்கு, பல வருட முன் சிகிச்சை அளித்து வந்தார்கள். நிறைய விளம்பரங்கள் அதுபற்றி, வார ஏடுகளில் வரும். கருவி பொருத்தப்பட்டவர்கள் இங்கு வரக் கூடாது' என்ற வாசகம் விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கும்.
தற்போது, அந்தச் சிகிச்சை பற்றி அவ்வளவாக செய்திகளும், விளம்பரங்களும் காணப்படவில்லை. செவித் திறன் குறைவு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுப் பலரும் மூக்குக் கண்ணாடி போல, காதில் கருவி போட்டுக் கொள்வது ஒரு காரணமாக இருக்கலாம்.
மேற்சொன்ன இரண்டு சிகிச்சைகளையும் தூக்கிச் சாப்பிடும்படியான ஒரு செய்தி அண்மையில் ஆங்கில நாளேட்டில் வந்தது. ஆந்திர மாநிலம், சித்தூரில் இருக்கும் அம்மையார் ஒருவர் சிறுநீரகக் கற்களை வெறும் 250 ரூபாய் செலவில் குணப்படுத்துகிறாராம். வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்தால் இரண்டாயிரம் ரூபாயாம்.
ஏதோ சில மந்திரங்களை உச்சரித்த பின், நோயாளியின் உடலைத் தடவிக் கொடுக்கிறாராம். கற்கள் உதிர்ந்து விடுகின்றனவாம். "கற்களை இதுபோல் வெளியேற சாத்தியமே இல்லை' என்று மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
தன்னுடைய 12 வயது மகளை அந்த அம்மையார் குணப்படுத்தினதாக ஒருவர் சொல்கிறார். சித்தூர் மாவட்ட ஆட்சியர் இதுபற்றி விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார். அம்மையாரின் விந்தையான நிபந்தனை என்னவென்றால், "இங்கு சிகிச்சை பெற்றவர்கள், ஒரு மாதத்துக்கு எக்ஸ்ரே படம் எடுக்கக் கூடாது'.
சில நாள்பட்ட வியாதிகளுக்கு, தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகள் மாத்திரை உட்கொள்ள வேண்டியிருக்கும். மூன்று அல்லது நான்கு வருடமான பிறகு, மேற்சொன்னது மாதிரியான ஏதாவது "விசித்திர' சிகிச்சையை நாடுவார்கள். தற்செயலாக வியாதி குணமாகிவிடும். ஆஸ்துமா, நரம்புக் கோளாறு போன்ற நோய்களுக்கும் இது பொருந்தும்.
இன்று பல நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் புதிய வியாதிகள் இளம் வயதிலேயே பலரையும் பாதிக்கின்றன என்பதையும் மறுக்க இயலாது. அதனால்தானோ என்னவோ, மருத்துவர்களே மாத்திரைச் சீட்டு எழுதித் தரும்போது, வேறு வகை மருந்துகளையும் குறிக்கிறார்கள். எலும்பு, மூட்டு வலிக்கு, ஆயுர்வேதத் தைலத்தையும், அலோபதி மருந்துகளுடன் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
அலோபதி சிகிச்சை முறைக்கும், பிற சிகிச்சைகளுக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. அலோபதி மருத்துவம் உலகளாவியது. இந்தியாவில் எங்கு சென்றாலும் அலோபதி மருந்துகள் கடைகளில் கிடைக்கும். ஏன், அயல்நாட்டுக்கே போனாலும், மூலக் கூறின் (ஜெனரிக்) பெயரை வைத்து, மாத்திரைகள் பெறலாம்.
அவர்கள் அளிக்கும் சிகிச்சையில் முழு நிவாரணம் கிடைக்காவிட்டால், வேறு பெரிய நிபுணரைச் சந்திக்கச் சொல்லுகிறார்கள். சில நேரங்களில் மருத்துவர்களுக்குள்ளேயே கலந்து பேசி, இரண்டாவது கருத்து பெற்று நோய்க்கு ஏற்ற மருந்து தருகிறார்கள். தவிரவும், இன்ன கோளாறுதான் என்பதைத் துல்லியமாக அறிய, ஆங்கில மருத்துவத்தில் பற்பல சோதனைகள் இருக்கின்றன.
பிற மருத்துவ முறைகள் குணம் அளித்தாலும், தகுதியான டாக்டர்களும், சிகிச்சை மையங்களும் குறைவு. மேலும், ஒரு மாத்திரையையோ, மூலிகைத் தைலத்தையோ வாங்கக் குறிப்பிட்ட இடத்துக்குதான் செல்ல வேண்டும். அதுபோன்ற இடங்கள் வெகு தொலைவிலிருந்தால் நோயாளிக்கு அலுப்பு ஏற்படக்கூடும்.
ஒரு நோயாளியைக் குணப்படுத்துவதற்குப் பற்பல சிகிச்சை முறைகள் உள்ளன. பலவித முறைகள் இருந்தும்கூட, சிலர் விசித்திரமான சிகிச்சைகளை நாடுவது ஏன்? முதலாவது காரணம் விளம்பரம். பத்து வருடங்களுக்கு முன்பு, தோல் வியாதிக்கும் மலட்டுத் தன்மைக்கும் மட்டுமே விளம்பரங்கள் வரும்.
ஆனால் இன்று? ஓர் உள்ளூர் ஏட்டில், ஆஸ்துமாவிலிருந்து மூட்டு வலி வரை, ரத்த அழுத்தம் உட்பட பல வியாதிகளைப்பற்றி விளம்பரமொன்று வந்தது. இதில் வேடிக்கை என்னவெனில், அரசு வங்கியின் பொது மேலாளர் ஒருவரும், தமிழக அரசு அதிகாரி ஒருவரும் இந்த மருத்துவருக்கு நற்சான்று அளித்திருந்தனர்.
இரண்டாவது காரணம் எக்கச்சக்க செலவு. மருத்துவக் காப்பீடு இருந்தாலும் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியே வந்தவுடன் மாத்திரைக்காகத் தொடர் செலவுகள்; மருத்துவருக்கான கட்டணம். ஒரு நரம்பியல் நிபுணர் தன் கட்டணத்தை ரூ.1,200 என்று நிர்ணயித்திருக்கிறார். அதே நிபுணர் ஆஸ்பத்திரிக்கு வருகை தந்தால் ரூ.2,000.
ஆனால் அரிதாக கருணையுள்ள மருத்துவர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அறிந்த மருத்துவர் ஒருவர், மாதம் ஒரு நாள் ஏழைகளுக்கு ஐந்து ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கிறார். இவருடைய வழக்கமாகப் பெறும் கட்டணம் ஐநூறு ரூபாய்.
இன்று மருந்துச் சீட்டில், மூலக்கூறு பெயரை மட்டும் எழுதினால், மருந்துக் கம்பெனிகள் அதிக லாபத்திற்காக விலையை ஏற்றுவது குறையும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் வினோத சிகிச்சைகளை நம்பி ஏமாறுவது அறிவுடைமையல்ல. கண்களை விற்றுச் சித்திரம் வாங்கலாமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com