எது உண்மை முகம்?

மனிதன் தனித்திருக்கும்போது ஒருவிதமாகவும், கும்பலில் இருக்கும்போது வேறுவிதமாகவும் சிந்திக்கிறான், அதற்கேற்ப செயல்படுகிறான் என்பது உண்மைதான்.

மனிதன் தனித்திருக்கும்போது ஒருவிதமாகவும், கும்பலில் இருக்கும்போது வேறுவிதமாகவும் சிந்திக்கிறான், அதற்கேற்ப செயல்படுகிறான் என்பது உண்மைதான்.
திருச்சியில் குறிப்பிட்டப் பகுதியில் அன்று ஏதோ ஓர் அமைப்பினர் நடத்தும் மாநாட்டில் பங்கேற்க ஏராளமானோர் நடந்தும், வாகனங்களிலும் நீண்ட வரிசையாக வரத் தொடங்கியிருந்தனர். சாலையின் இருபக்கமும் பொதுமக்கள் திரண்டு நின்றிருந்தனர்.
பேரணியாக வாகனங்களில் வந்த கல்லூரி வயது மாணவர்கள் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸாரை கண்டதும் பலத்த ஒலியெழுப்பி, தாங்கள் பிடித்திருந்த கொடிக்கம்புகளை போலீஸாரை நோக்கி வீசினர். அவர்களோ அமைதி காத்தனர்.
"அவங்க தனியா வரும்போது இந்த மாதிரி நடந்துக்குவாங்களா? கூட்டத்துல வர்ற தைரியம்தான் அவர்களை இப்படி செய்ய வைக்குது' என்றார் சாலையோரத்தில் நின்றிருந்த பெரியவர் ஒருவர்.
"இதுக்குக் காரணம் கும்பல் மனப்பான்மை. மத்தவங்கள இது துச்சமாக நினைக்க வைக்கும். சவ ஊர்வலங்கள்ள சும்மாவேனும் கடைகளையும், தெருவிளக்குகளையும் அடிச்சு நொறுக்கிட்டுப் போறாங்க.
இவங்கள்ல படிச்சவங்க, படிக்காதவங்க என்ற வித்தியாசமே கிடையாது' என்றார் அவரருகே நின்ற இளைஞர்.
"இப்ப படிக்கிற மாணவர்களுக்கு எல்லோமே ஈசியா கிடைக்குது. நாம படிக்கிறப்பெல்லாம் எந்த வசதியும் இல்லை. கம்ப்யூட்டர், இன்டர்நெட், செல்போன்,கேபிள் டிவி இப்படி எதுவும் கிடையாது.
இலவச கம்ப்யூட்டர், பள்ளிக்கு பஸ் பயணம் உள்பட எல்லாமே அரசாங்கமே கொடுக்குது. ஆனா அதை பெரும்பாலானவங்க சரியாகப் பயன்படுத்துறதில்ல' என்றார் பெரியவர்.
இந்த சம்பவம் நடந்து சில நாள்களுக்குப் பிறகு திருச்சியில் அரசு நகரப் பேருந்து பாலக்கரை பள்ளியருகே சென்றபோது பேருந்து நிறுத்தத்தில் சுமார் ஐம்பது, அறுபது மாணவர்கள் பள்ளி முடிந்து பேருந்துக்காகக் காத்திருந்தார்கள்.
பேருந்து வந்து நின்றதுதான் தாமதம். அவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். பாதிப்பேர் ஏறியவுடன் பேருந்து நிரம்பிவிட, படிக்கட்டில் ஒற்றைக்கால் வைத்து தொத்தியபடி பல மாணவர்கள் பயணித்தனர்.
பேருந்து கிளம்பியவுடன் பேருந்தில் ஏறிய மாணவர்களில் பெரியவர்களாக இருந்தவர்கள் உரத்த குரலில் ஹே! ஹே! என கோரஸாக வெறிகொண்டு எக்காளமிடத் தொடங்கினர். அவர்களின் கூச்சல் நீண்ட நேரம் தொடர்ந்தது. பேருந்திலிருந்த யாரையும் அவர்கள் சட்டை செய்யவில்லை.
அடுத்தடுத்து நிறுத்தங்கள் வந்தபோது பேருந்தில் யாரும் ஏறாதபோதும், இறங்காதபோதும் கும்பலாக இறங்கினர், ஏறினர். நடத்துநர் "சும்மா நிற்க மாட்டீங்களா' எனத் தொண்டை கிழியக் கத்தியும் பயனில்லை.
அப்போது அங்கேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய மாணவர்களில் ஒருவன் பேருந்து கிளம்பத் தொடங்கியபோது பேருந்துப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்தவர்களில் ஒரு மாணவரை "நீயும் இறங்குடா' எனக்கூறி அவனது புத்தகப் பையைப் பிடித்திழுக்க, நல்லவேளையாகத் தடுமாறி இறங்கிய அவன் மீண்டும் ஏறிக்கொண்டான்.
கொஞ்சம் பிசகியிருந்தாலும் அம்மாணவன் பேருந்துச் சக்கரத்தில் சிக்கியிருப்பான். வழிபோக்கர்கள் இதை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
இதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் வண்டியை நிறுத்தி படியில் நின்று அந்த மாணவனைப் பார்த்து, "உனக்கெல்லாம் ஸ்கூல்ல என்னடா சொல்லிக்கொடுக்குறாங்க' என்று கண்கள் சிவக்கக் கத்தினார்.
ஆத்திரத்தில் இருந்த பயணிகளும் மாணவர்களை கடுமையாகத் திட்டினர். "பஸ்ûஸ நேரா போலீஸ் ஸ்டேசனுக்கு விடுங்க. இவங்க பண்ற அராஜகத்தை நானே வந்து சொல்றேன்' என அங்கலாய்த்தார் ஒரு பயணி.
"எதுக்குத்தான் ஸ்கூல் நடத்துறாங்கன்னே தெரியல. அவங்க சொல்லிக் கொடுக்கற லட்சணம் நல்லாவே தெரியுது' எனப் பொரிந்தார் ஒரு பெண்.
அப்போது அருகே நின்றிருந்த அப்பள்ளி மாணவர்களிடம் "நீங்ககெல்லாம் இப்படி நடந்துகிட்டா எப்படி படிச்சு மேல வரப்போறீங்க எனக் கேட்டபோது, "அவங்கெல்லாம் பிளஸ் 1,பிளஸ் 2 படிக்கிறவங்க சார். யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க.
ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங் எப்பவாவது நடந்தாலும் அப்பா, அம்மாவை யாரும் கூட்டிட்டு வர மாட்டாங்க' என்றனர்.
"ஸ்கூல்ல போய் புகார் கொடுத்தா அவங்களோட பஸ் பாஸ் ரத்தாயிடும். இல்லாட்டி தினமும் இவங்க பஸ்ல நடந்துக்க செல்போன்ல பதிவு பண்ணி கலெக்டருக்கிட்ட காண்பிச்சா போதும். அவரு இவங்க மேல நடவடிக்கை எடுப்பார்' என்றார் மற்றொரு பயணி.
பின்னர் மாணவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து அவர்கள் இறங்கிவிட, பேருந்தில் அமைதி திரும்பியது.
அண்மையில் ஒரு நடிகரின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் ஊர்வலமாக சாலை முழுவதையும் அடைத்தபடி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த பேருந்து ஒலியெழுப்பியும் யாரும் வழிவிட
வில்லை. நீண்ட நேரம் கழித்தே பேருந்துக்கு வழிகிடைத்து, வேகமெடுத்தது.
பயணிகள் அவர்களை வசைபாடிச் சென்றனர்.
அப்பகுதியில் இருந்த கடையில் டிவி ஓடிக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அதில் பிரபல நடிகர் ஒருவர், "தனியா இருக்கறப்ப ஒரு முகம், நண்பர்களோட இருக்கறப்ப ஒரு முகம். ஓட்டுப்போட காசு வாங்கறப்ப ஒரு முகம். இதில் எது உங்களோட உண்மையான முகம்' என பார்வையாளர்களைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர் கேட்பது நியாயம்தானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com