இழப்பீட்டில் பாகுபாடு ஏன்?

உலகின் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மனித வளமே அடிப்படை. மனித வளத்தை இழந்தால் மதிப்பிழந்து போவோம்.

உலகின் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மனித வளமே அடிப்படை. மனித வளத்தை இழந்தால் மதிப்பிழந்து போவோம்.
அமெரிக்க நாட்டை கண்டறிந்தது கொலம்பஸ் எனும் மனிதவளம். அந்த நாட்டை மட்டுமல்ல, உலகின் ஏனைய நாடுகளை செம்மைப்படுத்தியதும் மனிதவளங்களே.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. மானிடப் பிறவி எடுத்து சமுதாயத் தொண்டுகள் புரிவதன் மூலம் தெய்வீக நிலையை அடைய முடியும். இத்தகைய மானிடப் பிறவி எடுத்து மனித மனங்களை வென்றவர்கள்,காலத்துக்கும் அழியாப் புகழ் கொண்டவர்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். தமிழுக்கு பாரதி, வள்ளுவன் மற்றும் கம்பன்.
ஆங்கிலத்துக்கு ஷேக்ஸ்பியர், கீட்ஸ் மற்றும் பைரன். இதுபோல் ஒவ்வொரு மொழியிலும் இன்னும் ஏராளமானோர்.
சங்க காலத்தில்,மயிலுக்குப் போர்வையையும், முல்லைக்கு தேரையும் கொடையாகக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். அவற்றையும் ஓர் உயிராகப் பாவித்தார்கள். கொடை அளித்து வரலாற்றில் இடம் பிடித்தார்கள்.
கன்றுக்குட்டியை கொன்ற தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்கிற மன்னன். ஒரு கன்றின் உயிருக்கு தன் மகனின் உயிரை சமமாக்கியதால், வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றார்.
மனுநீதி கூறிய தமிழகத்தில் அண்மையில் நாளிதழ்களில் வெளியான உயிரிழப்பு - இழப்பீடூ தொடர்பான செய்திகளைப் பார்ப்போம்.
பாதாள சாக்கடை, கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளில் மனிதர்களை கொண்டு சுத்தம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரியும், துப்புரவுப் பணியின்போது விஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரியும், சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாடம் நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விஷவாயு தாக்கி இறந்த துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்
பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில்,உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், பலியான 141 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, மேலும் 13 பேரின் குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டு, இழப்பீடு வழங்குவதற்கான சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதைப் பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை மார்ச் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மற்றொரு செய்தியைப் பார்ப்போம். பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 20 காவலர்கள், தீயணைப்பு வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் சத்தீஸ்கர் மாவட்டம்,சுக்மா மாவட்டத்தில் நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த துணை ராணுவ வீரர் சங்கரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலே குறிப்பிட்ட உயிரிழப்பு தொடர்பான செய்திகளில் இழப்பீடு - நிதியுதவி சற்றே முரண்பட்டு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பொருள் ஈட்டுபவரை இழந்த குடும்பத்துக்கு இழப்பீடு என்பது அவசியமானது. மனிதநேயமிக்கது.
இந்நிலையில், ஓர் இடத்தில் உயிருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், பொதுவாக ரூ.3 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படுவது குறித்து தெளிவு இருத்தல் வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள், மேற்கண்ட செய்திகளில் பணியின் போது உயிரிழந்திருக்கும்போது, இழப்பீடு - நிதியுதவியில் மட்டும் ஏன் இந்த முரண்பாடு?!
சம்பந்தப்பட்டவர்கள் நிதியுதவி,இழப்பீடு குறித்து தெளிவு படுத்தும்போது அவை குறித்த புரிதல் மேம்பாடடையும் என்பது திண்ணம். பணியில் இறந்தவர்கள் எவருக்கும் வயது வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் ஒரே விதமான இழப்பீடு - நிதியுதவி எவ்வாறு பொருந்தக்கூடியதாக இருக்கும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஓர் இடத்தில் உயிரின் மதிப்பு ரூ.10 லட்சம், வேறொரு இடத்தில் பொதுவான நிதியுதவி ரூ.3 லட்சம் மற்றுமோர் இடத்தில் ரூ.20 லட்சம் என்றிருக்கும் போது, இவற்றுக்கு அடிப்படை எது எனும் கேள்வி எழுவது இயல்புதானே?
25 வயதில் உயிரிழப்பவரையும், 55 வயதில் உயிரிழப்பவரையும் சமமாகப் பாவிக்க முடியாது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
நிலைமை இவ்வாறிருக்க, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கும் நிதியுதவி சற்றே உயர்த்தப்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
இன்றைய காலக்கட்டத்தில், ரூ.3 லட்சம் என்பது இடைக்கால நிவாரணம் மட்டுமே. மனித வளங்கள் மதிப்பில்லாதவை. அவற்றுக்கு தோராயமாக மதிப்பிடும் போது,இழப்பீடு - நிதியுதவி வழங்குவதன் அடிப்படையில் புரிதல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
கல்வியறிவு கொண்டவர்கள் இதுபோன்ற விஷயத்தில் புரிந்து கொள்ளச் சிரமப்படும் போது, கல்வியறிவு பெறாதவர்களின் நிலைமை அந்தோ பரிதாபம். நாம் படித்தவர்கள், ஆனால் புரிந்து கொண்டவர்கள் அல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com