கனவு தேசத்தில் தொடரும் படுகொலைகள்!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் மனிதப் படுகொலைகள் அடிக்கடி நடைபெறுவதே அந்நாட்டின் இப்போதைய மிகப் பெரிய கவலையாகும்.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் மனிதப் படுகொலைகள் அடிக்கடி நடைபெறுவதே அந்நாட்டின் இப்போதைய மிகப் பெரிய கவலையாகும். இந்த ஆண்டின் (2017) தொடக்கத்தில் இருந்து மார்ச் 13 வரை துப்பாக்கி தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் 11,191 நடைபெற்றிருக்கின்றன. இதில் 2,858 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
அமெரிக்க பொது சுகாதார அமைப்பின் அறிக்கைபடி, அந்த நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 33 ஆயிரம் பேர் (சராசரியாக ஒரு நாளைக்கு 90 பேர்) துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறார்கள். 85 ஆயிரம் பேர் காயமடைகிறார்கள்.
"அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கு கிடைப்பதில்லை. இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் நியாயமற்ற முறையில் நமது வேலைவாய்ப்புகளைத் தட்டிப் பறித்துக் கொள்கின்றனர்' என்ற பிரசாரத்தினால் அன்னிய தேசத்தினர் மீது ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வுக்கு உதாரணங்கள்தான் கான்சாஸ், வடக்கு கரோலினா, வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் இந்தியர்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்.
இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் புதிதல்ல.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், வாஷிங்டன் மாகாணம், பெல்லிங்காம் என்ற பகுதியில், 1907 செப்டம்பரில் 500 வெள்ளையர்களைக் கொண்ட கும்பல், இந்தியாவில் இருந்து குடியேறி மர மில்களில் பணிபுரிந்து வந்த 700-க்கும் மேற்பட்டவர்களைத் தாக்கினர். தாக்குதல்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் ஆசியர்களை வெளியேற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
அவர்களது முக்கிய நோக்கமே, இந்தியர்களைப் பணியிடத்தில் இருந்து வெளியேற்றுவதுதான். வன்முறையில் ஈடுபட்டவர்கள் இந்தியர்களைத் தாக்கியதுடன், அவர்களது உடைமைகளைக் கொள்ளையடித்து, வலுக்கட்டாயமாக நடுத்தெருவுக்கு விரட்டியடித்தனர். இந்தியர்களின் பாதுகாப்பு கருதி, அதிகாரிகள் அவர்களை "சிட்டி ஹால்' என்ற இடத்தில் அடைத்துவைத்தனர்.
பாதுகாப்பு என்ற பெயரில் 400 பேர் பெல்லிங்காம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், வன்முறைக்கு காரணமான ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. அதற்குப் பிறகு சில காலம் கழித்து, வாஷிங்டன் மாகாணத்தில் எவரெட் என்ற இடத்தில் இதுபோன்ற வன்முறை நிகழ்ந்தது.
எனினும், 100 ஆண்டுகளுக்குப் பிறகு, வாட்காம் கவுன்டியின் நிர்வாகி பீட் கிரெமென், பெல்லிங்காம் மேயர் டிம் டக்ளஸ் ஆகியோர் கூட்டாக, "ஆறுதல் மற்றும் சமரச நாள்' என 2007 செப்டம்பர் 4-இல் அறிக்கை வெளியிட்டனர்.
இந்தியர்கள் தாக்கப்பட்டதை ஒப்புக் கொண்டதுடன், அச் செயலுக்கு அவர்கள் வருத்தமும் தெரிவித்தது பாராட்டத்தக்கது.
ஆனால், இந்தியர்கள் மீதான வன்முறை முற்றுபெறவில்லை. அவ்வப்போது நடந்து கொண்டேதான் இருக்கிறது. 1980-களில் "டாட்பஸ்டர்ஸ்' என்ற கும்பல், நியூ ஜெர்ஸியில் இந்தியர்களைக் குறிவைத்தது.
இதைத் தொடர்ந்து 2001 செப்டம்பர் 11-இல் அல் காய்தா பயங்கரவாதிகளால் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்றது. இதில் 2,996 பேர் உயிரிழந்தனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 1,000 கோடி டாலர் அளவுக்கு சொத்துகள் நாசமாகின. 3 லட்சம் கோடி டாலர் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இது அமெரிக்காவின் சூழ்நிலையையே மோசமடையச் செய்தது. அதன் பிறகு தாக்குதல் அதிகரித்தது.
ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை பயங்கரவாதிகளாக சித்திரித்து தாக்குதல் நடத்தப்பட்டது பொருத்தமற்றது. இதில் சில இந்தியர்களும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என தவறாகக் கருதப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகினர். இது தவிர, 2006 ஏப்ரல் 5-இல் மின்னசோட்டாவில் ஒரு கோயிலும், 2012 ஆகஸ்ட் 5-இல் விஸ்கான்சின் மாகாணம், ஓக் கிரீக்கில் சீக்கிய குருத்வாராவும் தாக்கப்பட்டன.
இவை ஒரு சில உதாரணங்களே. துரதிருஷ்டவசமாக, இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இந்த வன்முறைகளின் ஆணிவேர் எது என்பதைப் புரிந்துகொண்டால்தான் அதற்கு ஏற்றவாறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். நோய்க்கான காரணத்தை சரியாகக் கண்டறிந்தால் மட்டுமே நோயைக் குணப்படுத்த முடியும்.
கருப்பர்கள் மீது வெள்ளையர்களுக்கும், வெள்ளையர்கள் மீது கருப்பர்களுக்கும், முஸ்லிம்கள், பிற இனத்தவர்கள் மீது வெள்ளையர்களுக்கும் உள்ள காழ்ப்புணர்வு தீவிர உணர்ச்சிக்கு ஆள்படாமல் ஆய்வு செய்யப்படுவதில்லை.
எனவே, இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கான முதல் செயல், இந்தக் கொலைகாரர்கள் யார், அவர்கள் அவ்வாறு மாறுவதற்கு என்ன காரணம், அவர்களது தோலின் நிறம் அல்லது இனத்தைக் கொண்டு முடிவு செய்யாமல் அவர்களது பொருளாதார, சமூகப் பின்னணி குறித்து தெரிந்து கொள்வதுதான்.
வன்முறை நிகழ்ந்தவுடன் அதை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ அல்லது இனத்துக்கோ தொடர்புபடுத்தும் முட்டாள்தனமான செயலை முதலில் கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமைப்படுத்துதல் மிகவும் அபத்தமானது. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட பகுதி, மதம், இனம் ஆகியவற்றுக்கும் வன்முறைக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது.
குற்றம்தான் களையப்பட வேண்டுமே தவிர, குற்றவாளி அல்ல. எங்கு குற்றம் அதிகமாக உள்ளதோ, அங்கு அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மீதான கவனம் குவிக்கப்பட வேண்டும்.
வறுமை அல்லது கல்வியறிவின்மை காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு குற்றச் செயல்களில் ஈடுபடுமானால், அந்தக் குழுவை பயங்கரவாதத் தன்மை கொண்டது என்று முத்திரை குத்தாமல், அதிலிருந்து மீள்வதற்குத் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும். ஒரு பகுதியினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அந்தப் பகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.
அமெரிக்காவில் ஒரு சில மாகாணங்களில் அதன் வரலாறு அல்லது வேறு பின்னணி காரணமாக வன்முறை செயல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வேல்டுஅட்லஸ்.காம் என்ற அமைப்பின் அறிக்கைப்படி, அமெரிக்காவில் 2014-இல் 14,249 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதில் கலிபோர்னியா (1,699) முதலிடத்திலும், டெக்சாஸ் (1,184), புளோரிடா (1,149), இலினாய்ஸ் (685) ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. வெர்மோன்ட் (10), நியூ ஹாம்ப்ஷயர் (12), வயோமிங் (16), தெற்கு டகோடா (20) ஆகியன மிகக் குறைவான கொலைகள் நடைபெற்ற மாநிலங்கள்.
மக்கள்தொகைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கையை ஒப்பிட்டால், இந்தத் தரவரிசை மாறலாம். அதுதான் சரியான அளவீடாகவும் இருக்க முடியும். தேசிய அளவில், அறிவியல்பூர்வமாக சிந்தனை செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.
இன, சமூகக் குழுக்கள், தனி மனிதர்கள் கொலை செயலில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க, மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் பலியாவதும் பல நேரங்
களில் நிகழ்கிறது.
கார்டியன் பத்திரிகையின் தொகுப்பின்படி, 2016-இல் காவல் துறையினரால் 1,092 பேரும், 2015-இல் 1,146 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதைக் கூறுவதனால், காவல் துறை அதிகாரிகள் அனைவருமே மோசம் என்றோ, அவர்கள் தாக்கப்படவில்லை என்றோ கூறுவதாகக் கருதக் கூடாது. 2004 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில், சராசரியாக 151 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்
கிறார்கள்.
மனிதப் படுகொலைகளுக்கு, துப்பாக்கிகள் சுலபமாகக் கிடைப்பதும் ஒரு காரணம். அமெரிக்க மக்களின் கரங்களில் 30 கோடி துப்பாக்கிகள் உள்ளன என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாகும்.
துப்பாக்கி வர்த்தகம் என்பது மிகப் பெரியது என்பதில் சந்தேகமில்லை. 4,900 கோடி டாலர் வர்த்தகம் இதில் நடைபெறுகிறது. இந்த வலிமையான தொழிலை முடக்குவது என்பது எளிதான செயல் அல்ல. எனினும், வர்த்தகத்தை விட மனித உயிர்கள் மதிப்புமிக்கவை.
2012 நிலவரப்படி, துப்பாக்கி வன்முறையால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கத்தின் மதிப்பு 22,900 கோடி டாலர் என்று கூறப்படுகிறது.
மன உறுதி இருந்தால், இந்த வன்முறைக்கு முடிவு கட்ட முடியும். குறுகிய நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டால், துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். மனித உரிமை மீறல், இனப் பாகுபாடு குறித்து காவல் துறைக்கு உணர்த்த வேண்டும்.
நீண்ட கால நடவடிக்கைகளாவன: சமூக - பொருளாதார சமச்சீரற்ற தன்மையைக் குறைத்தல், பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் பொறுப்புள்ள குடிமகன்களாக வளர நடவடிக்கை ஆகியவற்றுடன், குழந்தைகள் குற்றவாளிகளாக மாறாமல் இருக்க பள்ளிப் பாடத் திட்டத்திலேயே சமத்துவக் கொள்கை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் ஒரே நாளில் செயல்படுத்திவிட முடியாது. செயல்படுத்தினாலும் விளைவுகளை உடனடியாகக் காண முடியாது.
ஆனால், வன்முறையற்ற சமுதாயம் மலர வேண்டும் எனில் இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் அத்தியாவசியமானவை. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மன உறுதி வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com