பகத்சிங்கின் பன்முக ஆளுமை!

பகத்சிங்கின் பன்முக ஆளுமை!

மாவீரன் பகத்சிங் 1931-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி மாலை லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு வயது இருபத்து மூன்று. அவருடன் தூக்கிலிடப்பட்ட ராஜகுரு, சுகதேவ் ஆகிய இருவருக்கும்கூட

மாவீரன் பகத்சிங் 1931-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி மாலை லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு வயது இருபத்து மூன்று. அவருடன் தூக்கிலிடப்பட்ட ராஜகுரு, சுகதேவ் ஆகிய இருவருக்கும்கூட ஏறக்குறைய அதே வயதுதான்.
மாவீரன் பகத்சிங் ஒரு புரட்சியாளர், தியாகி, தேசபக்தர் என்பதை அனைவரும் அறிவோம். இவையெல்லாம் அவரது அடிப்படைகளென்றாலும் ஆளுமைமிக்க தலைமைப் பண்பே அவரது தனிச் சிறப்பாகும்.
பகத்சிங்கின் குடும்பமே ஒரு ஆழமான தேசபக்த குடும்பம். பகத்சிங்கின் தாத்தா அர்ஜுன்சிங் ஆர்ய சமாஜத்தில் (சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயக்கம்) மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்தவர். ஆன்மீகத்தையும் அரசியலையும் இரண்டு கண்களாகப் போற்றியவர். இந்தி, சமஸ்கிருதம், உருது, பாரசீகம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
அர்ஜுன்சிங் படிப்படியாக ஆர்யசமாஜ இயக்கத்திலிருந்து விடுபட்டு காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். இந்திய விடுதலைக்காக சீக்கியர்கள் அமெரிக்காவில் உருவாக்கிய தீவிரமான அரசியல் இயக்கமான கதார் கட்சியின் இந்தியத் தொண்டர்களுக்கு ஆங்கிலேயே அடக்கு முறையின்போது தனது வீட்டில் அடைக்கலம் கொடுத் தார்.
அர்ஜுன்சிங்கிற்கு கிஷன்சிங், அஜித்சிங், ஸ்வரன்சிங் ஆகிய மூன்று ஆண் மக்கள் வாரிசுகளாக விளங்கினர். இந்த மூவருமே அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தேசபக்தர்கள். மூவரில் மூத்தவரான கிஷன்சிங்கின் மகனாகப் பிறந்தவர்தான் பகத்சிங்.
ஆங்கிலேயர்களின் அடக்கு முறைக்கு ஆட்பட்ட கிஷன் தலைமறைவாக நேபாளம் சென்றுவிட்டார். இவர், 'பாரதமாதா சங்கம்' என்ற அமைப்பின் மூலமும் தீவிரமாகக் களப்பணியாற்றி வந்தார். அதனால் அவர் குடும்பத்தாரோடு காலம் கழிக்க முடியாத சூழ்நிலை நிலவியது. அஜீத்சிங் பர்மாவுக்கு ஆங்கிலேயே அரசால் நாடு கடத்தப்பட்டிருந்தார். ஸ்வரன்சிங் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
வெவ்வேறு பகுதிகளிலிருந்த மூன்று சகோதரர்களும் கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் சொந்த ஊருக்குத் திரும்பினர். தற்செயலாக மூவரும் ஒரே நாளில் (1907-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி) தங்களது வீட்டிற்கு வந்தடைந்தனர். அதேநாளில்தான் பகத்சிங் பிறந்தார். அவர்கள் வருவதும் பகத்சிங் பிறந்ததும் பொருத்தமாக அமைந்தது.
பகத்சிங்கின் தாத்தா பஞ்சாபி மொழியில் அதிர்ஷ்டக்காரன் என்ற பொருள்தரும் 'பகன்வாலா' என்று பெயர் சூட்டினார். அதுவே பள்ளியில் பெயர்ப் பதிவு செய்யப்பட்டபோது 'பகத்சிங்' என்று சிறுமாற்றத்துடன் பதிவாயிற்று.
புகழ்மிக்க விடுதலைப் போராட்டத்தலைவர்களாக விளங்கிய ராஷ் பிகாரி போஸ், காமகட்டமாரு என்ற கப்பலில் கனடா சென்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தலைமையேற்ற புரட்சிக்குழுத் தலைவர் பாபா குர்திர்சிங், பிற்காலத்தில் அந்தமான் சிறைச்சாலையில் பல்லாண்டு காலம் தனிமைச் சிறையிலிருந்த பாய் பரமானந்தா, புரட்சியாளர் சசிந்திரநாத் சன்யால் போன்ற பல தலைவர்கள் பகத்சிங் குடும்பத்தாரின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும்தான் மாதக்கணக்கில் இருந்தனர்.
பகத்சிங்கின் சித்தப்பா அஜித்சிங் நாடு விடுதலை பெறும்வரை தலைமறைவு வாழ்க்கை நடத்துபவராகவும் தொடர்ந்து நாடு கடத்தப்படுபவராகவுமே வாழ்ந்தார். இன்னொரு சித்தப்பா ஸ்வரன்சிங் சிறைச்சாலையிலேயே மரணமடைந்தார்.
பகத்சிங் சிறுவனாக இருந்தபோதே, பூர்வீக கிராமத்திற்குச் சென்றிருந்த தனது தாத்தாவுக்கும் சிறையில் இறந்துபோன ஸ்வரன்சிங்கின் மனைவியான தனது சித்திக்கும் பலகடிதங்கள் எழுதியுள்ளார். அவற்றில் மூன்று கடிதங்கள் கிடைக்கப்பெற்று தில்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிப் பருவத்தில் தொடங்கிய கடிதம் எழுதும் பழக்கத்தை கடைசிவரை பகத்சிங் கைவிடவில்லை. தூக்குமேடையேறிய கடைசிநாளில் கூட ஒரு கடிதத்தை எழுதிவிட்டுத்தான் விடைபெற்றிருக்கிறார். இந்தியக் கடித இலக்கிய வரலாற்றில் பகத்சிங்கின் கடிதங்களுக்கு ஒரு தனித்த இடம் உண்டு.
கொடியவன் டயரால் ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ரவுலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகளின் அறைகூவலுக்கு இணைங்கித் திரண்ட நிராயுதபாணிகளான சத்தியாகிரகிகள் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி நடந்தது 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி.
அச்சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே பள்ளிக்குப் புறப்பட்ட பகத்சிங் ரயிலேறி அமிர்தசரஸ் நகருக்குச் சென்று ஜாலியன் வாலாபாக் பூங்காவில் மடிந்த சத்தியாகிரகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணை ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்துக் கொண்டு ஊர் திரும்பினார். அதனை வீட்டில் ஓர் இடத்தில் வைத்து தினமும் பூப்போட்டு வீர வணக்கம் செலுத்தியுள்ளார்.
லாகூர் டி.ஏ.வி. பள்ளியில் 9-ஆம் வகுப்புப் படித்த பிறகு இன்னும் இரண்டாண்டுகள் பள்ளியில் படிக்க வேண்டியிருந்தும் 1921-இல் லாகூரிலுள்ள தேசியக் கல்லூரியில் எஃப். ஏ. படிப்பதற்கு சிறப்பு தேர்வெழுதி பகத்சிங் சேர்ந்தார். இதை பகத்சிங்கோடு தேர்வு எழுதிய ஜெயதேவ் குப்தா தனது குறிப்பொன்றில் எழுதியுள்ளார்.
அப்போதுதான் ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு முடிவு கட்ட வேண்டுமென காங்கிரஸ் முடிவெடுத்தது.
'தேசியக் கல்லூரி' என்ற பெயரில் நாடெங்கும் கல்லூரிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. லாகூரிலும் ஒரு கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரியை விடுதலைப் போராட்டத் தலைவர்களின் ஒருவரான லாலா லஜபதிராய் முன்னின்று நிறுவினார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற மாணவர்கள் இக்கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதிலுள்ள பேராசிரியர்கள் தேசபக்த உணர்ச்சி மிக்கவர்கள். வழக்கமான பாடங்களோடு வரலாறு மற்றும் அரசியல் பாடங்களும் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை ஏற்படுத்தினர். முக்கியத் தலைவர்கள், தேசபக்தி மிக்க அறிஞர்கள் பலரை அழைத்துவந்து சொற்பொழிவாற்றச் செய்தனர்.
லாகூர் தேசியக் கல்லூரியில் சேர்ந்த பகத்சிங்கின் உற்றதோழர் சிவவர்மா, தனது கட்டுரையில், 'பகத்சிங் பெரும்பாலான நேரத்தை புத்தகம் படிப்பதிலேயே கழித்து வந்தார். விக்டர் ஹியூகோ, ஹால்கேன், டால்ஸ்டாய், தாஸ்த்தோவஸ்கி, மார்க்சிம் கார்க்கி, பெர்னார்ட்ஷா, சார்லஸ் டிக்கன்ஸ் ஆகியோர் அவரது அபிமான எழுத்தாளர்கள்.
அவர் பெரும்பாலும் தான் படித்த புத்தகங்களைப் பற்றியே பிறரிடம் பேசுவார். அந்நூல்களைப் பற்றி விவரித்து, எங்களையும் அவற்றைப் படிக்கச் சொல்வார். சில சமயம் புரட்சிக்காரர்கள் பற்றிய வீரஞ்செறிந்த வரலாறுகளைக் கூறுவார்.
கூர்கா எழுச்சி, கதார் கட்சியின் வரலாறு, கர்தார்சிங், சூஃபி அம்பா பிரசாத், பபர் அகாலிகளின் வீரக்கதைகள் போன்றவற்றை விவரிக்கும்போது அவர் தன்னை மறந்து விடுவார். அவருடைய வர்ணனையும், நடையும் மிகவும் கவர்ச்சி கரமாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.
கான்பூரில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கிய கணேஷ் சங்கர் வித்யார்த்தி நடத்தி வந்த 'பிரதாப்' என்ற ஆங்கில வார இதழில் பணியாற்றினார் பகத்சிங்.
பாபா சோகன்சிங் ஜோஷ் என்பவர் இந்தியப் புரட்சியாளர்களின் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர். 23 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலிருந்தவர். இந்திய விடுதலைக்காக அமெரிக்காவிலுள்ள சீக்கியர்களை ஒன்றிணைத்து கதார் என்ற புரட்சிகர அரசியல் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவராக விளங்கியதோடுஅதன் தலைவராகவும் திகழ்ந்தவர்.
அவரை ஆசிரியராகக் கொண்டு 1926-இல் வெளிவந்த 'கீர்த்தி' என்ற இதழின் துணையாசிரியராக பகத்சிங் பணியாற்றினார். தில்லியிலிருந்தபோது 'அர்ஜுன்' என்ற உருது இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார்.
பகத்சிங் 'ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுச் சங்கம்' என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தார். அத்தோடு தான் படித்த லாகூர் தேசியக் கல்லூரியில் 'நவஜவான் பாரத் சபா' என்ற ஒரு புதிய அமைப்பை தனது தோழர்களோடு சேர்ந்து நிறுவினார். இந்த அமைப்பு இது வழிநடத்தப்பட்ட முறை தனித்த ஆய்வுக்கும் சிந்தனைக்கும் உரியது.
கல்லூரி முதல்வரிலிருந்து பேராசிரியர்கள் மாணவர்கள் என்று பலரையும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே ஒரு அரங்கில் அமர வைத்து அனைவரையும் ஒன்றிணைக்கும் விரிந்த அமைப்பாகவும் அதே சமயத்தில் புரட்சிகரக் கருத்துக்கள் கொண்ட நாட்டு விடுதலைக்குக்குக் களப்பணியாற்றும் தேர்ந்த ஊழியர்களைக் கொண்ட அமைப்பாகவும் இவ்வமைப்பு செயல்பட்டது. பகத்சிங் ஒரு பக்குவப்பட்ட அமைப்பாளர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
அவர் சிறையில் இருந்தபோது எழுதிய சில புத்தகங்கள் ரகசியமாக வெளியில் கொடுத்தனுப்பப்பட்டன. ஆனால் அவை முறையாகப் பாதுகாக்கப்படாததால் தொலைந்து போய்விட்டன.
எஞ்சியுள்ள 'நான் நாத்திகன் ஏன்?' என்ற சிறு நூலும் பல கட்டுரைகளும், துண்டறிக்கைகளும், கடிதங்களும் அவரது பிரமிக்கத்தக்க எழுத்தாற்றலைப் புலப்படுத்துகின்றன.

(இன்று பகத்சிங் நினைவுநாள்)

கட்டுரையாளர் :
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com