வேலைவாய்ப்பும் வேலை பகிர்வும்

நாம் வாழ்வதற்கான மிக அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருக்க,

நாம் வாழ்வதற்கான மிக அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருக்க, ஆடம்பர பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மிக அதிக லாபத்தில் இருப்பது தான் இன்றைய உலகமயமாக்கலின் சாதனையாகும்.
மிக மிக அத்தியாவசியம் விவசாயம். இங்கு விவசாய பட்டினி சாவை பார்க்கிறோம். ஆடம்பர கார் உற்பத்தியாளர் இந்த காலண்டில் இவ்வளவு அதிக லாபத்தை அடைந்தார் என்ற செய்தியையும் படிக்கின்றோம்.
ஓராண்டிற்கு கார் உற்பத்தி, ஆடை உற்பத்தியை ஓராண்டிற்கு நிறுத்த முடியும். தங்க நகைகள் தயாரித்தல் போன்ற ஆடம்பர பொருட்களை தயாரிப்பதை நிறுத்தினாலும் மனிதன் உயிர் வாழ முடியும்.
ஆனால் விவசாயம் ஓராண்டிற்கு நிறுத்தப்பட்டால் மனிதன் மட்டும் அல்ல, நம்மை நம்பிவாழும் உயிரினங்களும் அழிவது நிச்சயம். விவசாயத்தை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. விவசாயம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 70 சதவீத வேலைவாய்ப்பை அளிக்கின்றது.
இனி அரசு வேலையை பற்றி பார்ப்போம். நாம் எந்த அரசு அலுவலகத்திற்கு சென்றாலும் நமக்கு கிடைக்கும் ஒரே பதில் இந்த பணியிடம் காலியாக உள்ளது. இந்த இரண்டு வேலையையும் சேர்த்து நான் தான் செய்கிறேன்.
இந்த அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியாளர் இரண்டு நாட்கள் இந்த இடத்திலும் அடுத்த இரண்டு நாட்கள் வேறு இடத்திலும் பணிசெய்ய வேண்டும். ஆகவே இன்று இவர் வரமாட்டார் என்ற பதில்களே நமக்கு கிடைக்கின்றது.
இதே நிலைதான் அனைத்து அரசு அலுவலகங்களிலும் காணப்படுகின்றது. அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கும் கண் மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. ஆகவே நீங்கள் கண் மருத்துவரை பார்க்க வேறு மருத்துவமனைக்கு செல்லுங்கள், எக்ஸ்ரே எடுக்கும் பணியாளர் இரண்டு நாட்கள் மட்டும் தான் இந்த மருத்துவமனைக்கு வருவார். ஆகவே இன்று நீங்கள் எக்ஸ்ரே எடுக்க அந்த மருத்துவமனைக்கு செல்லுங்கள். அறுவை சிகிச்சை மருத்துவர் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் தான் வருவார். ஆகவே நீங்கள் வேறு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்பது வாடிக்கையான ஒன்று.
இந்த அவல நிலைக்கு காரணம் வேலைவாய்ப்பு என்ற மாயை. தேவை வேலைவாய்ப்பு அல்ல, வேலை பகிர்வு. அரசு மருத்துவமனையில் ஒரு செவிலி 8 மணி நேரம் வேலை செய்கிறார். அவருக்கு தொடக்க நிலையில் மாதஊதியம் 40 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அதேபோல் மருத்துவர் 8 மணி நேரம் பணியாற்றுகிறார். அதே வேலையை 5 மணி நேரமாக பிரித்து இருவருக்கு பகிர்ந்தளித்தால் இரண்டு நபருக்கு வேலை கிடைக்கிறது. ஒருவருக்கு 5 மணி நேரத்திற்கு 20 ஆயிரம் அளிப்பதால் 100 பேர் 8 மணிநேரம் பணிக்கு அரசு செலவழிக்கும் தொகையில் 200 பேர் 10 மணிநேரம் என்ற அளவில் அரசுக்கும் மக்களுக்கு பயனளிக்கும்.
இதேபோல் ஆசிரியர்கள் கல்லூரிகளில் உள்ளது போன்று இரண்டு ஷிப்டில் இரண்டு மடங்கு ஆசிரியர்களுக்கு வேலை பகிர்வளிக்கலாம். இதனால் ஆசிரியர்கள் இல்லை என்ற நிலை மாறும்.
ஒரு பள்ளியில் இரண்டு ஷிப்டில் வகுப்புகள் நடத்தப்படுவதால் ஒரே கட்டடம் இரண்டு மடங்கு மாணவர்களுக்கு பயனளிக்கும். இதேபோன்று ஒரு தனியார் நிறுவனத்தில் 8 மணிநேர பணிக்கு ஒருவருக்கு சுமார் 12 ஆயிரம் மாதஊதியம் வழங்குவதாக வைத்துக்கொண்டால் அந்த நிறுவனம் 20 நபர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கின்றது. அதே நிறுவனம் வேலை பகிர்வளிப்பதால் 40 நபர்களுக்கு 5 மணிநேர பணிக்கு மாதம் 7 ஆயிரம் அளிக்கும்.
இது எந்த விதத்திலும் ஒரு தனிநபரின் குடும்பத்தை பாதிக்காது. எப்படி என்றால், ஒரு குடும்பத்தின் தலைவர் ஒரு நிறுவனத்தில் 8 மணிநேரம் பணிபுரிந்து 12 ஆயிரம் மாத ஊதியமாக பெறுகிறார். அதே குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு நபர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
வேலை பகிர்வினால் அந்த இருவருக்கும் அல்லது அதில் ஒருவருக்காவது வேலை கிடைக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அவர்களுடைய குடும்ப வருமானம் 3 பேருக்கும் சேர்த்து மாதம் 21 ஆயிரம் கிடைக்கும். அல்லது இரண்டில் ஒருவருக்கு வேலை கிடைத்தாலும் மாத குடும்ப வருமானம் 14 ஆயிரமாக உயரும். அதே நேரத்தில் ஏற்கெனவே பணியில் உள்ள தலைவர் ஒரு தனிதன்மை வாய்ந்த பணியை அந்த நிறுவனத்தில் செய்வதாக கொண்டால் 5 மணிநேர பணியை முடித்து மீதமுள்ள நேரத்தில் வேறு நிறுவனத்தில் 5 மணிநேர பணி பகிர்வை பெற்றால் அவருடைய வருமானம் மாதம் 12 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக உயர்கிறது.
மேலும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் யாருக்காவது ஒருவருக்கு வேலை கிடைக்கும்பட்சத்தில் அந்த குடும்பத்தின் வருமானம் மேலும் உயரும். தனி நபர் வருமானம் உயராவிட்டாலும் குடும்ப வருமானம் உயரும். இதனால் ஒட்டுமொத்த நாட்டின் வருமானம் அதிகமாகும். உற்பத்தி அதிகரிக்கும்.
அனைவருக்கும் வேலை என்ற நிலையை அடைவது என்பது சாத்தியமே தேவை அதை நோக்கிய சிந்தனையும், சரியான முறையிலான சீர்த்திருத்தமுமே. தனியார் துறையில் மட்டுமல்ல அரசின் அனைத்து துறைகளிலும் காலிபணியிடங்கள் நிறைந்துள்ளது. அவற்றை வேலை பகிர்வு என்ற திட்டத்தின் அடிப்படையில் பூர்த்தி செய்வதின் வாயிலாக அந்த நிறுவத்திற்கும் பயனளிக்கும். மக்களின் வேலையில்லா திண்டாடமும் குறையும்.
அரசு காலி பணியிடங்கள் முழுமையும் வேலை பகிர்வு திட்டத்தின் மூலம் நிரப்பப்படுவதால் அரசுக்கு எந்த அதிகபடியான நிதி சுமையும் ஏற்படாது. அதேபோன்று தனியார் நிறுவனங்களிலும் ஆள் பற்றாக்குறை அல்லது ஆள் இல்லை என்ற நிலை மாறும் என்பது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com