விழலுக்கு இரைத்த நீர்!

அண்மையில் புதுதில்லியிலுள்ள ஜெர்மனி இல்லத்தில், இந்தியா பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. தொழில்திறன் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான அந்தக் கருத்தரங்கை ஜெர்மனி நாட்டு கொலோன்
விழலுக்கு இரைத்த நீர்!

அண்மையில் புதுதில்லியிலுள்ள ஜெர்மனி இல்லத்தில், இந்தியா பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. தொழில்திறன் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான அந்தக் கருத்தரங்கை ஜெர்மனி நாட்டு கொலோன் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. ஏழுபேர் ஜெர்மனியிலிருந்து வந்திருந்தனர். இந்தியாவிலிருந்து எட்டு பேர் கலந்துகொண்டனர். இதனை ஜெர்மானியப் பேராசிரியர் மத்தியா பில்ஸ் என்பவர் ஒருங்கிணைத்து வழி நடத்தினார். 
அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவரும் பல பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள். ஜெர்மனியர்கள் எதையும் மேம்போக்காகச் செய்யக் கூடியவர்கள் அல்ல. அந்தக் கருத்தரங்கிற்கு வந்தவர்கள் அனைவரும் அவரவர் ஆராய்ச்சி அறிக்கைகளுடன் வந்திருந்தனர். இந்த ஆராய்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இருநாட்டு வல்லுநர்களாலும் இணைந்து நடத்தப்பட்டவை. இதற்கான நிதியுதவியை ஜெர்மனி அரசாங்கம்தான் செய்திருந்தது. 
இந்திய அரசாங்கத்தின் திட்ட இலக்கு, அந்த இலக்கினை அடைய உருவாக்கப்பட்ட கொள்கை மற்றும் கட்டமைப்புகள் பற்றி விரிவாக விவாதித்தனர். இந்த ஆய்வு அறிக்கைகளிலிருந்துது நம் அரசாங்கத்தின் அறிவிப்புகளுக்கும் கள நிலவரத்திற்கும் உள்ள பெரும் இடைவெளி பளிச்சிட்டது. 
அரசாங்கம் கொள்கைகளாகவும், திட்டங்களாகவும் அவற்றை நடைமுறைப்படுத்த ஒதுக்கீடு செய்யும் நிதியும் செய்திகளாக நமக்கு வரும்போது கிடைக்கும் நம்பிக்கை, அவற்றை களத்தில் நடைமுறைப்படுத்தும் முறையைப் பார்க்கும்போது கிடைப்பதில்லை. இதே நிலை நீடித்தால் பணம் விரயம் ஆனதுதான் நாம் கண்ட பலனாக இருக்கும். 
நாம் நம் இளைஞர்களுக்குத் தொழில்திறன் பயிற்சி அளிப்பதன் மூலம் இளைஞர்களை வேலைக்குத் தகுதியானவர்களாக உருவாக்கி பொருளாதார வளத்தைப் பெருக்கமுடியும் என்று எதிர்பார்த்தது அனைத்தும் கனவாக இருந்துவிடும் என்பதை இந்த ஆய்வு அறிக்கைகள் எடுத்துக்காட்டின. 
ஜெர்மனியில் ஐம்பது ஆண்டுகாலம் கடின உழைப்பில் உருவான ஒரு தொழில்திறன் பயிற்சிக்கான கல்வித் திட்டத்தை இந்தியாவில் புரிந்தும் புரியாமலும் அரைகுறையாக இங்கே அமல்படுத்தியது, அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டபோது தெரியவந்தது. 
இந்த ஆராய்ச்சி அறிக்கைகளை விவாதித்தபோது, நம் ஆட்சியாளர்களும், கல்வியாளர்களும் எந்த அளவுக்கு வித்தை காட்டும் வித்தைக்காரர்களாக மாறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது. 
நம் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை ஜெர்மனியுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கையில், எந்தவொரு திட்டமோ, செயல்பாடோ புரிதலுடன் செயல்படுத்தப்படுவதில்லை என்பது தெரிகிறது. 
நம் அரசு தொடர்ச்சியாக ஜெர்மனி நாட்டு தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சியை நாமும் மேற்கொள்ள வேண்டும் என்று பேசினாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை உருவாக்காமல், பணத்தை விரயம் செய்து வருகிறது என்பதைத்தான் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 
இந்திய அரசு தொடர்ந்து இங்கிலாந்து (Anglo Saxon)  முறையைப் பின்பற்றி கொண்டுவந்த தொழில்திறன் பயிற்சியை அடித்தளத்தில் கட்டமைத்துவிட்டு, ஜெர்மானிய முறையிலான தொழில்திறன் பயிற்சி முறையைப் பயன்படுத்தித் தொழில்திறன் ஆற்றலை இளைஞர்கள் மத்தியில் வளர்க்க முயல்கிறது. அதனால், நாம் எட்ட நினைக்கும் இலக்கை எந்த வகையிலும் எட்ட முடியாது என்பது ஆராய்ச்சியின் மூலம் பதிவு செய்யப்பட்டது. 
ஜெர்மனியில் 350 தொழில்திறன் என்பது சமூகத்தில் உள்ள தொழில்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்த அங்கீகாரம் என்பது தொழில்திறன் வளர்ப்பில் அரசாங்கமோ, தொழிற்சாலைகளோ, வல்லுநர்களோ மட்டும் இணைந்து பதிவு செய்யப்பட்டது அல்ல. 
சமூகத்தால், தொழிற்சங்கங்களால், அறிஞர்களால், தொழில்துறையினரால் விவாதம் செய்யப்பட்டு, அதற்கான பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டு, அதற்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கான தரக்கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 
அதுமட்டுமல்ல, தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு என்பது இதற்குள் பிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
உலகத்தில் 2008-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி வந்தபோது எங்கு பார்த்தாலும் வேலை இழப்பு. உலகத்திலேயே குறைந்த வேலை இழப்பு, அதாவது வேலைவாய்ப்பின்மை குறைந்து விளங்கிய நாடு ஜெர்மனி மட்டுமே. அந்த நாட்டுப் பொருளாதாரம் அந்த அளவுக்கு வலுவாக இருந்ததுதான் அதற்குக் காரணம். 
அதேபோல் முப்பது ஆண்டுகளில் சீனா பொருளாதார, தொழில், கல்விக் கொள்கையையும் ஒரு சேர உருவாக்கி மிகப்பெரிய உற்பத்தி செய்யும் நாடாக இன்று திகழ்கிறது. அது மட்டுமல்ல, மிகப்பெரிய அளவில் வறுமைக் குறைப்பையும் செய்துள்ளது. 
அத்துடன், உற்பத்தியில் ஜெர்மனியை வீழ்த்தும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு, சூரியஒளி மின்சாரத் தயாரிப்பில் உலக நாடுகளுக்குத் தகடுகளைத் தயாரித்து விநியோகிப்பதில் தலைசிறந்த நாடு ஜெர்மனி. 
ஆனால், அப்படிப்பட்ட ஜெர்மனியைப் பயப்பட வைத்துவிட்டது சீனா. அது எதனால் முடிந்தது என்றால், தொழில்திறன் வளர்ப்புக் கல்வியால் சாத்தியமாயிற்று. பெருமளவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க இது பயன்பட்டது. 
இந்தியாவில், பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலங்களான குஜராத், ஹரியாணாவில் சாதியின் பெயரால் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஜாட், பட்டேல் இனத்தவர், தலித், பிற்பட்டோர் எனப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் இளைஞர்கள். அரசாங்கத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என வளர்ந்த மாநிலங்களிலேயே போராடுகின்றனர். 
அதற்குக் காரணம், படித்தவர்களுக்கு வேலை இல்லை என்பதும், வேலைகள் உருவாகவில்லை என்பதும்தான். வேலைக்குத் தகுதியான ஆட்களை பயிற்சிகளின் மூலம் உருவாக்கவில்லை என்பதைத்தான் தொடர்ந்து தொழில் நிறுவனங்கள் கூறி வருகின்றன. 
வளர்ந்த மாநிலங்களில் இந்த நிலை என்றால் மற்ற மாநிலங்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதைச் சற்று யூகித்துக் கொள்ளவேண்டும். வேலைவாய்ப்பு உருவாகவில்லை, உருவாக்கப்படவில்லை. தொழில் திறனுக்கான கட்டமைப்பு இன்னும் திறம்பட உருவாகவில்லை. 
ஆனால் புற்றீசல்போல் பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, எந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு பல லட்சம்பேர் பயிற்சி பெற்றுவிட்டனர் என்று புள்ளிவிபரங்களுடன் பறைசாற்றப்படுகிறது. 
அது மட்டுமல்ல, சமூகத்தில் தொழில்திறன் மேம்பாடு பற்றிய எந்தப் புரிதலையும் நாம் ஏற்படுத்தவில்லை. அறைகுறையாகப் பொதுப்புரிதலுக்கு நிகழ்த்தும் நிகழ்ச்சிகள்கூட என்ன செய்தியைச் சொல்கிறது என்றால், தொழில்திறன் என்பது தனிமனிதருக்கு வாழ்வாதாரத்திற்கு உள்ள ஒரு வாய்ப்பு என்று சொல்கிறதே தவிர, வாழ்க்கைச் சூழலை மாற்றியமைக்கும் ஓர் ஒப்பற்ற வாய்ப்பு என்று தெரிவிக்கவில்லை. 
ஜெர்மனியில் தொழில்பயிற்சி என்பது வாழ்வாதாரத்திற்கானது அல்ல, வாழ்வில் முன்னேற்றமடைய உதவும் கல்வியாகக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு விட்டன. ஜெர்மனி பல ஆண்டுகள் செலவழித்து வடிவமைத்த ஒரு தொழில்திறன் வளர்ப்பு முறையை, ஒரு சில ஆண்டுகளில் இந்தியா செய்வது அல்லது செய்ய முயற்சி செய்வது எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. 
இதற்கு மிக முக்கிய காரணம், நம் நாட்டில் எதையும் எளிய சடங்காக்கிவிடுவதுதான். இதைச் சரிசெய்ய வேண்டுமெனில், முதலில் நம் நாட்டில் முறையான புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படல் வேண்டும். அத்துடன் தொழில்கொள்கையையும் உருவாக்க வேண்டும். இந்தக் கொள்கைகளுடன் தொழில்திறன் மேம்பாட்டுக் கொள்கையை இணைக்க வேண்டும். 
கல்விக் கொள்கை, தொழிற்கொள்கை நம் நாட்டில் உருவாக்கப்படவில்லை. நம் நாட்டில் பதினாறிலிருந்து இருபது அமைச்சகங்கள் தொழில்திறன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. ஆனால், பல அமைச்சகங்களுக்கான கொள்கைகள் உருவாக்கப்படவே இல்லை. 
தொழில்திறன் பயிற்சியைப் பெருமளவில் விரிவுபடுத்தி நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை ஒருங்கிணைந்து ஓர் இயக்கம்போல் செயல்பட வேண்டும். அது ஒரு பெரிய போராட்டம் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். 
வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழில்திறன் பயிற்சி என்பது மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டவை, நடைமுறைக்கு வந்தவை என்பதை நாம் உணர வேண்டும். 
அதுமட்டுமல்ல, நம் இளைஞர்களை ஒரு போராட்டச் சூழலுக்கு, மேம்பாட்டுக்கான போராட்டச் சூழலுக்குத் தயாராக்க வேண்டும். அப்படியொரு சூழலை நாம் இன்னும் உருவாக்கவில்லை. 
இந்தியா போன்ற நாடுகளில் வேறுபாடுகள், வித்தியாசங்கள், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்துள்ளன. இவற்றை உள்வாங்கிச் செயல்பட புதிய அணுகுமுறைகள் தேவை என்பதை உணர்ந்து, அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வடிவமைக்கப்படல் வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com