மருத்துவத் துறைக்கு அறுவை சிகிச்சை

மூன்று முக்கியத் துறைகளை சந்தையாளர்களின் (பணம் படைத்தவர்கள்) தயவில் விட்டோமானால், அது சமுதாயத்துக்குப் பேரழிவாக ஆகிவிடும். உணவு, கல்வி, சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய துறைகளும்

மூன்று முக்கியத் துறைகளை சந்தையாளர்களின் (பணம் படைத்தவர்கள்) தயவில் விட்டோமானால், அது சமுதாயத்துக்குப் பேரழிவாக ஆகிவிடும். உணவு, கல்வி, சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய துறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இவற்றில் சுகாதாரத் துறையில் அரசின் கட்டுப்பாடு, முறைப்படுத்துதல் ஆகியன சிறிது சிறிதாகக் குறைந்து வருகின்றன. 
அதேநேரம், இந்தத் தொழில் வர்த்தகமயமாக மாறிவருகிறது. இந்தத் துறையில் அரங்கேறும் மிகப் பெரிய முறைகேடுகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் நிலுவைத் தொகை காரணமாக, பிராணவாயு (ஆக்சிஜன்) உருளை விநியோகம் செய்யப்படாததால் கடந்த ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் 60 குழந்தைகள் இறந்த கோர சம்பவம் அரங்கேறியது. 
அரசுத் துறையினரின் தொடர் அலட்சியப் போக்கு காரணமாக, இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்துக்குள் அதே மாநிலத்தில், அதே காரணத்தினால் ஃபரூக்காபாதில் 14 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
நோய்களின் தீவிரத்தன்ûம் காரணமாகவோ, நோயாளிகளுக்கு மிக அவசரமாக சிகிச்சை அளித்தே ஆகவேண்டும் என்பதற்காகவோ இரக்கமற்ற மருத்துவமனைகள் நோயாளிகளை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களது கட்டணம் செலுத்தும் திறனை வைத்தே ஏற்கின்றன. 
நோயாளியின் பொருளாதார நிலை அல்லது அவரது நிறுவன உரிமையாளர் அல்லது அரசு அளிக்கும் உத்தரவாதம் அல்லது மருத்துவக் காப்பீடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேறு சொற்களில் கூறுவதென்றால், பணம் இருப்பவர்களுக்கு நோய் இல்லையென்றாலும் சிகிச்சை கிடைக்கிறது. பணம் இல்லாத நோயாளிகள் ஈவு இரக்கமே இல்லாமல் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.
பரிசோதனைகள் தேவை இல்லை என்றபோதும், பரிசோதனைக் கூடங்கள் அளிக்கும் லஞ்சத்துக்காக பல்வேறு பரிசோதனைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதற்காக, சங்கேத வார்த்தைகளையும், ரகசியக் குறியீடுகளையும் மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். 
உதாரணத்துக்கு, பரிசோதனைப் பட்டியலில் சிங்க் டெஸ்ட், மார்க்கிங் என மருத்துவர்கள் எழுதுகின்றனர். பட்டியலில் உள்ள அனைத்துப் பரிசோதனைகளுக்கும் என ரத்தம் சேகரிக்கப்படுகிறது. பட்டியலில் சங்கேத வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும். 
மற்ற பரிசோதனைகளுக்குச் சேகரிக்கப்படும் ரத்தம் குப்பைத் தொட்டியில் (சிங்க்) வீசப்படும். பரிசோதனை மேற்கொள்ளப்படாத அனைத்துக்கும் நார்மல் (இயல்பு நிலை) என குறிப்பிடப்படும். இந்த அனைத்துப் பரிசோதனைகளுக்கும் என "கறக்கப்படும்' பணம் அவர்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளப்படும்.
தேவையற்ற வகையில் ஒரு மருத்துவர், நோயாளியை மற்றொரு மருத்துவருக்குப் பரிந்துரைப்பார். நோயாளியிடம் பெறப்படும் கட்டணத்தை இருவரும் பகிர்ந்து கொள்வர். எந்த மருத்துவர் அதிகமாகப் பணம் கொடுக்கிறாரோ, அவருக்கு அதிகம் பரிந்துரைகள் வரும்.
தேவையற்ற அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக பெண்களுக்கு கர்ப்பப் பை அகற்றுதல், அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பேறு (சிசேரியன்), கண்புரை அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை போன்றவை தேவையின் அடிப்படையில் செய்யப்படுவதில்லை. 
மாறாக, அதிகமாகப் பணம் ஈட்டும் நோக்கத்திலேயே செய்யப்படுகின்றன. இதனால், அப்பாவி மக்கள் பெரும் அபாயத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது பற்றி மருத்துவர்கள் கவலைப்படுவதில்லை.
தங்களது நிறுவனத்தின் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதற்காக, மருத்துவர்களுக்கு மிக உயர்ந்த விலை உள்ள பரிசுப் பொருள்களையும் மருத்துவ உபகரணங்களையும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அளிக்கின்றன. 
பரிசுப் பொருள்கள் மட்டுமல்ல, ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கும் வசதியுடன் மருத்துவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தருகின்றன. 
ஒவ்வொரு மருத்துவரும் பரிந்துரைக்கும்போது, மருந்தின் வேதியியல் பெயரையே எளிதில் படிக்கத்தக்க வகையில் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும் என்றும், நியாயமான பரிந்துரையாக இருப்பதுடன் மருந்து பயன்பாடும் நியாயமான வகையில் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறை தெளிவாக வரையறுத்துள்ளது. 
ஆனால், மருத்துவர்களுக்கும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையேயான கள்ளக் கூட்டு இந்த விதிமுறையை மீறுவதாக உள்ளது.
ஏழைகளும், படிப்பறிவற்றவர்களும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு எலிகளைப் போல பயன்படுத்தப்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டும் மருத்துவத் துறையினர் மீது உள்ளது. உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை தங்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவதற்காக ஆம்புலன்ஸ் சேவையாளர்களுக்குத் தனியார் மருத்துவமனைகள் லஞ்சம் தருவதாகவும் புகார் உள்ளது. 
மருத்துவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதால், மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வருவாய் ஈட்டப்பட வேண்டும் என மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் நெருக்குதல் அளிக்கிறது. இதன் காரணமாகவே, தேவையற்ற பரிசோதனைகளுக்கும், சிகிச்சைகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 
சிறிய மருத்துவமனைகளில் அந்த மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவரே மருந்துக் கடையையும், பரிசோதனைக் கூடத்தையும் நடத்தி வருபவராக உள்ளார். எனவே, அதற்கு முழு அளவில் வருவாய் வருவதற்காக தேவையற்ற பரிசோதனைகளையும், மருந்துகளையும் பரிந்துரைக்கிறார்.
தொழில் நடத்தை தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சில் (2002) விதிமுறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. மருத்துவர் தான் ஊழலில் ஈடுபடாமல் இருத்தல் மட்டுமல்ல, தன்னைச் சுற்றி இருக்கும் மற்றவர்கள் ஊழலில் ஈடுபட்டால் எந்தவிதமான பாரபட்சமும், அச்ச உணர்வும் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும் என்றும், நோயாளிகளின் நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
மேலும், தனது பொருளாதார நலனுக்காக நோயாளியைப் பயன்படுத்தக் கூடாது என்றும், எந்த நோயாளிக்கும் சிகிச்சை அளிக்கத் தன்னிச்சையாக மறுக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது.
தேவையற்ற வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளக் கூடாது என்றும், பரிசோதனைகளுக்குப் பரிந்துரைக்கும்போது இயந்திரத்தனமாக அல்லாமல், சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. தங்களது கட்டணத்தை அனைவரும் அறியும் வகையில் தங்கள் வளாகங்களில் எழுதி வைக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் வரையறுக்கின்றன.
மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றுக்குப் பரிந்துரைக்க பணமோ, பரிசுப் பொருள்களோ கொடுப்பதோ, வாங்குவதோ கூடாது என்றும், நோயாளிகளைப் பிடிக்க ஏஜென்டுகளை பயன்படுத்தக் கூடாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தெளிவாகக் கூறியுள்ளது. 
துரதிருஷ்டவசமாக, லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இந்த விதிமுறைகள் பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை.
நம்பகத்தன்மை வாய்ந்த, வெளிப்படையான, பொறுப்புள்ள ஒழுங்காற்று முறை சூழ்நிலையில், மருத்துவத் துறையில் உயர்தர அறநெறிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கையும் (2017) பிரகடனப்படுத்தியுள்ளது.
மருத்துவத் துறையில் நிலவும் நோய்களுக்குத் தீர்வு காண அதிதீவிரமான மாற்றங்கள் நிகழ வேண்டும். அப்போதுதான் தேசிய சுகாதார கொள்கையில் வெளியிடப்பட்ட இலக்கை எட்ட முடியும். தனியார் மருத்துவமனைகளின் ஆதிக்கத்தால் மேற்கொள்ளப்படும் அறநெறிக்குப் புறம்பான நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும் என்றால், சுகாதாரத் துறையில் அரசின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்.
ஆனால், இந்தியாவில் இதற்கு நேரெதிரான போக்குதான் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளுக்குப் போவதை, கிராமப்புறங்களில்கூடத் தவிர்க்கிறார்கள். அதனால், கடனாளியாகும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் சேர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 1.2 சதவீதத்தையே தற்போது சுகாதாரத் துறைக்கு ஒதுக்கி வருகின்றன. 
இதை, 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டம் நிறைவடையும்போது குறைந்தபட்சம் 2.5 சதவீதமாகவும், 2022-இல் மூன்று சதவீதமாகவும் உயர்த்த வேண்டும் என திட்டக் குழுவால் டாக்டர் கே. ஸ்ரீநாத் ரெட்டி தலைமையில், 2011-இல் அமைக்கப்பட்ட உயர்நிலை நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com