மறைக்கப்படும் உண்மைகள்

மூன்றாண்டுகளாக மழையில்லாமல் கடும் வறட்சியில் தமிழ் நாடு பாதிக்கப்பட்டது. 146 ஆண்டுகளில் ஏற்படாத வறட்சி என்று தமிழக முதல்வர் அறிக்கை விட்டு போதுமான

மூன்றாண்டுகளாக மழையில்லாமல் கடும் வறட்சியில் தமிழ் நாடு பாதிக்கப்பட்டது. 146 ஆண்டுகளில் ஏற்படாத வறட்சி என்று தமிழக முதல்வர் அறிக்கை விட்டு போதுமான நிவாரணப் பணிகள் எதுவம் செய்யப்படவில்லை. நாடு விடுதலையடைந்து, எழுபதாண்டுகளில் வறட்சி காலத்தில் தமிழக மக்கள் குடிதண்ணீருக்குக்கூட வழியில்லாமல் திண்டாடியது இல்லை. உடைக்கப்பட்ட பாறைக்குழிகளில் தேங்கிக்கிடந்த தண்ணீரை சென்னை மாநகர மக்களுக்கு வழங்கப்பட்ட கொடுமையும் நடைபெற்றது.
 மக்களுக்கு உணவு தானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் கடன்களை அடைக்க முடியாமல் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
 வறட்சியால், விவசாயிகளின் தற்கொலையால் மாண்டார்கள் என்பதை ஒப்புக்கொள்ள தமிழ்நாடு அரசு மறுக்கிறது. மத்திய அரசும் போதுமான நிவாரணத் தொகையை வழங்க மறந்துவிட்டது. ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு நிவாரணத் தொகையை மத்திய அரசு அள்ளிக் கொடுக்கிறது.
 மன்னன் விக்கிரமாதித்தன் காலத்தில் நாடு எப்படியிருக்கிறது என்று அமைச்சர்களிடம் கேட்டால், "மன்னா உங்கள் ஆட்சியில் மாதம் மும்மாறி மழை பெய்கிறது. மக்களனைவரும் சுபிட்சமாக வாழ்கிறார்கள்' என்று கூறியதைப்போல் தமிழக அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
 தென் மேற்குப் பருவமழை காலம் தவறிப் பெய்தது. மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் ஜூன் 12-இல் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். 5-ஆவது ஆண்டிலும் குறிப்பிட்ட நாளில் திறக்கப்படவில்லை. காவிரி டெல்டாவிலும் குறுவை சாகுபடி நடைபெறவில்லை.
 வட கிழக்குப் பருவமழையை நம்பி விதைத்த பயிர்கள் மழையால் சேதமடைந்துவிட்டன. வர்தா புயல் சென்னையில் பெரும் சேதத்தை உண்டாக்கிவிட்டது. ஓராண்டிற்கும் மேலாக சென்னை மாநகரமும் வெள்ளத்தில் மிதந்ததை மறந்திருக்க முடியாது.
 மக்களுக்கு முறையான அறிவிப்பு செய்யாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது. வர்தா புயல் அனுபவங்களும் முடிவுகளும் இரண்டாண்டுகளில் நிறைவேற்றப் படவில்லை. அதே நிலை இந்தாண்டு நவம்பரில் வடகிழக்குப் பருவ மழையின் துவக்கத்திலேயே ஓரிரு நாளில் சென்னை மாநகரம் தண்ணீரில் மிதக்கிறது.
 வெள்ளச் சேதங்களை தடுத்திட தமிழக அரசு எந்தவித படிப்பினைகளையும் கற்றுக் கொள்ளவில்லை. ஏரி குளங்களை தூர்வாரப்போவதாகவும் இதுவே சாதனையாகவும் அமைச்சரவை கூடி அறிவித்தது. தூர்வாருவது, குடிமராமத்து முறைகளுக்குப் பொதுப்பணித்துறை விதிகளில் வழிமுறை உள்ளது.
 ஏரி குளங்களின் ஆயக்கட்டு விவசாயிகளின் ஒத்துழைப்பு பெற வேண்டும். ஆனால், வழக்கமான கான்டிராக்ட் முறைகளில் கரை ஓரத்தில் உள்ள மண்ணை மட்டும் தோண்டி கரைமீது போடுவதுடன் முடிந்துவிடுகிறது. முழுமையாகத் தூர்வாரப்படுவதில்லை.
 தூர்வாரப்பட்ட வண்டல் மண்ணும் ஆயக்கட்டுப் பகுதியிலுள்ள விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். தூர்வாரும் பொழுது மணல் அள்ளக்கூடாது என்று உள்ளது. இவ்விதியும் மீறப்படுகிறது. தாமிரவருணி நதியில் திருவைகுண்டம் அணையில் தூர்வார வேண்டுமென்று மக்களிடமிருந்து நீண்டகாலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அணையில் மட்டும் தூர்வாருவதற்கு பதில் ஆற்றில் கிலோ மீட்டர் தூரத்திற்கு மணலை கொள்ளையடித்து விட்டனர்.
 கூட்டுக்குடிநீர் உள்ள கிணறுகளில் அவற்றைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் மணல் எடுக்கக் கூடாது என விதி உள்ளது. இதை மீறி வறண்ட பகுதிகளான குலசேகரப்பட்டனம், சாத்தான்குளம், உடன்குடி ஆகிய ஊர்களுக்கான கூட்டுக்குடிநீர் உறை கிணறுகளைச் சுற்றிலும் மணல் எடுத்து விட்டார்கள். தூர்வாருதல் என்ற பெயரால் நடந்த அநீதியாகும் .
 மணல் கொள்ளைக்கு எடுத்துக்காட்டாக வீராணம் ஏரியில் தூர்வாருகிறோம் என்ற பெயரில் நடந்த மணல் கொள்ளை ஓர் எடுத்துக்காட்டு.
 மணல் கொள்ளை - சிறுகனிம விதி - மணல் எடுப்பதற்கான விதிமுறைகள் 1952-இல் இயற்றப்பட்டுள்ளது.
 மணல் அள்ளுவதற்கு உள்ள விதிகள்:-
 ஒரு மீட்டர் ஆழம்தான் மணல் எடுக்க வேண்டும்; மாலை 6 மணிக்கு மேல் மணல் அள்ளக் கூடாது; மணல் அள்ள ஆறுகளின் குறுக்கே சாலைகள் போடக்கூடாது; மணல் குவாரி அமைக்கப்படும் இடங்களில் எல்லைகளை அடையாளப் படுத்த வேண்டும்; 3 யூனிட் ஒரு லோடாகும். அதற்குரிய டெபாசிட் பணம் வரையறுக்கப் பட்டுள்ளது; வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு மணல் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
 இந்த விதிகளை அமுல்படுத்துவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித்துறை, மாசுகட்டுப்பாட்டுத் துறை, மாவட்ட காவல் துறையும் கொண்ட குழு கண்காணிக்கும்.
 மேற்கண்ட விதிகளை மீறி மணல் கொள்ளை நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 33 ஆறுகளும் பலநுறு ஓடைகளும் உள்ளன. அவை அனைத்திலும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே மணல் அள்ளுவதற்கு ஜேசிபி மற்றும் புல்டோசர் போன்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 இருபதாண்டுகளாக தமிழ்நாட்டில் விதிப்படி மணல் எடுப்பதென்ற பெயரில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. நாளொன்றுக்கு 90 ஆயிரம் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட மணல் 3 கோடியே 60 லட்சம் கன அடியாகும். தமிழ்நாட்டின் தேவையை விட 4.5 மடங்கு அதிகமான மணல் நமது ஆறுகளில் அள்ளப்பட்டு பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்திச் செல்லப்படுகிறது.
 3 அடிக்கு மேலாக, 20 அடி முதல் 100 அடி வரை மணல் அள்ளப்படுகிறது. மணல் வெறும் மண் அல்ல, தொட்டனைத்தூறும் மணற்கேணி என திருக்குறளில் கூறியபடி, மணல் தோண்டத் தோண்ட ஊறிப் பெருகும் நீராகும்.
 ஒரு கன அடி மணல் உருவாக 100 ஆண்டுகள் ஆகும். ஆற்றில் வரும் தண்ணீரில் நான்கில் ஒரு பகுதியை மணல் நிலத்தில் சேமித்து வைக்கிறது. தண்ணீரையும் மணல் சுத்தப்படுத்துகிறது. நீரில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்கிறது.
 2017-ஆம் ஆண்டு மே மாதம் முதல் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என முதல்வர் அறிவிக்கிறார். ஆனால், 2003-லிருந்தே அரசுதான் மணல் குவாரிகளை நடத்தி வந்தது. அது முறையாக அமுல்படுத்தப் படவில்லை.
 அரசு, மணல் குவாரிகளை எடுத்து நடத்தினால் நாள் ஒன்றுக்கு ரூ.20 கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று பொதுப்பணித்துறை அறிவித்தது. டாஸ்மார்க் மதுபான வருவாயை விட அதிகமாக மணல் வருமானம் கிடைக்கும் என்று அதிகாரிகளே கூறியுள்ளனர். உண்மையில் இதையும் விட அதிகமாக வரவும் வாய்ப்புள்ளது. மணல் கொள்ளையர்களின் ஒப்புதல் வாக்கு மூலங்களிலிருந்து தெரிய வருகிறது.
 மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 54 ஆயிரம் டன் மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடங்கிக் கிடப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மணலை தமிழ்நாடு அரசு கைப்பற்றி தமிழ்நாட்டில் பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டிலிருந்து மணலை சாதாரணமானவர்களால் இறக்குமதி செய்வது சாத்தியமில்லை. மணல் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களால் தான் சாத்தியமாகும்.
 தூத்துக்குடியில் இறக்கப்பட்ட மணலை லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட செய்திகளும் பத்திரிக்கைகளில் வருகின்றன. நாகர்கோவில் காவல்துறையால் மணல் லாரிகளை மடக்கி பிடிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக தமிழ்நாட்டில் மணல் லாரிகள் நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே.
 மணல் உண்மையிலேயே மலேசியாவில் எடுக்கப்பட்டதா அல்லது இங்கிருந்து அனுப்பப்பட்டு மீண்டும் திரும்ப இங்கு கொண்டு வரப்பட்டதா என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். பழைய முறையிலேயே மணல் கடத்திச் செல்வதற்கு அனுமதிக்காமல், கப்பலில் இறக்கப்பட்டிருக்கிற மணலை அரசே எடுத்து முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
 தமிழ்நாட்டில் ஆற்று மணல் கொள்ளை, கடற்கரை ஓரத்தில் தாது மணல் கொள்ளை, பாறைகளை உடைத்து கிரானைட் கொள்ளைகள் என பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கின்றன. இதனால் இயற்கை வளங்களும், நிலத்தடி நீரும், நீர் ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனால்தான் மழை பெய்தாலும் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. ஆனால் தொடர்ந்து வறட்சியும், வெள்ளமும் பாதிக்கிறது.
 இயற்கையைப் பாதுகாப்பது பற்றி காந்தி, "இயற்கை மனிதனின் தேவைக்கு ஏற்ப அனைத்தையும் படைத்துள்ளதே தவிர, மனிதனின் பேராசைக்கு அல்ல; இந்த பூமி, காற்று, மணல், நீர் என அனைத்தும் நம் முன்னோர்களின் பரம்பரை சொத்தல்ல, அவையனைத்தையும் நம் குழந்தைகளுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாகும். ஆகையால் நாம் எவ்வாறு பெற்றோமோ அவ்வாறே திருப்தி ஒப்படைக்க வேண்டும்" என்று எச்சரித்திருக்கிறார்.
 "இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு' என திருக்குறளில் கூறியதைப்போல் ஏரி, குளம் எனத் தேங்கும் நீரும், ஆறு ஓடை போல ஓடும் நீரும், உயர்ந்த மலைகளிலும் வானம் பொழிய வருபுனலும் ஒரு நாட்டின் உறுப்புகள். இவை அழிந்து விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும். கானகம் அழிக்கப்பட்டு பல்வேறு அமைப்புகளின் ஆக்கிரமிப்பால் யானை உள்பட பல்வேறு வன விலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வந்து மக்களை அழிக்கின்றன. எனவே இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் தமிழகம் பாலை வனமாவதைத் தடுக்கவும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
 
 கட்டுரையாளர்:
 மூத்தத் தலைவர்,
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com