தூய்மையே சேவை

இந்தியாவை தூய்மையாக்க, "தூய்மை இந்தியா' திட்டத்தை மகாத்மா காந்தி ஜெயந்தியன்று 2014-இல் மத்திய அரசு துவக்கியது.

இந்தியாவை தூய்மையாக்க, "தூய்மை இந்தியா' திட்டத்தை மகாத்மா காந்தி ஜெயந்தியன்று 2014-இல் மத்திய அரசு துவக்கியது. மகாத்மா காந்திஜியின் 150-ஆவது ஆண்டு விழாவை 2019-இல் கொண்டாடும் போது இந்தியா முழுவதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் இதன் குறிக்கோள்.
 சுதந்திரத்தை விட சுகாதாரம் தான் நமது முதல் தேவை என்றார் காந்திஜி. தூய்மையான மனம், உடலை சுத்தமாகப் பேணுவது, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பது என சுகாதாரத்தை மூன்று கோணங்களில் காந்திஜி விவரித்துள்ளார்.
 காந்திஜி போற்றிய தூய்மைக்கு ழுழு வடிவம் கொடுக்கும் வகையில் கடந்த 15.9.2017 முதல் காந்திஜி பிறந்த நாளான இன்று வரை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக "தூய்மையே சேவை' இயக்கத்தில் மக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, அதன் மூலம் சுத்தமான, சுகாதாரமான புதிய பாரதத்தை உருவாக்க, தேசிய அளவில் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
 இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தூய்மை ரத ஊர்வலத்தை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தொடங்கி வைத்து, சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.
 வேலூர் மாவட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கமற்ற மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அம் மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.
 சுகாதாரம் என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில், தூய்மை பாரத இயக்கத்தினை அனைத்து மக்களும் பங்கேற்கும் இயக்கமாக மாற்றுவதே "தூய்மையே சேவை' இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
 பொது இடங்களை மக்கள் தாங்களாகவே முன் வந்து சுத்தம் செய்வதையும், சுத்தமாக வைத்திருப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இந்த இயக்கம் நடத்தப்பட்டிருக்கிறது.
 தூய்மையான இந்தியா திட்டத்தின் நோக்கங்களை விரைவில் எட்டுவதே, மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
 மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட நாட்டிலுள்ள தூய்மையான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் 12 இடங்களைப் பெற்றிருப்பது தமிழகத்திற்குக் கிடைத்துள்ள பெருமையாகும்.
 தூய்மை இந்தியா திட்டத்தில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 நாமிருக்கும் இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பது காந்திஜியின் கனவுத் திட்டமாகும். நாம் பணி புரியும் இடங்கள் திருக்கோயில்கள் போன்றவை, அந்த இடங்களைத் தூய்மையாக, பூஜிக்கத் தகுந்ததாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை என்பதில் காந்திஜி உறுதியாக இருந்தார்.
 2.11.1919 நாளிட்ட "நவஜீவன்' நாளிதழில் "தெருக்களில் எச்சில் உமிழ்வதோ, மூக்கை சிந்துவதோ கூடாது. நாம் உமிழும் எச்சில் அல்லது சளியில் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் இருக்கும். அவைகள் பிறருக்கு எலும்புருக்கி போன்ற தொற்று நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
 பொது இடங்களில் எச்சல் உமிழ்வது என்பது குற்றமாகும். பொது இடங்களில் வெற்றிலை, பாக்கு, புகையிலை போன்றவைகளை மென்றுவிட்டு அதன் சாறை உமிழ்பவர்கள் பிறர் என்ன நினைப்பார்கள் என்ற உணர்வே இல்லாமல், பொது நலனில் அக்கறை இல்லாதவர்கள்.
 கிராமங்களில் அல்லது மக்கள் வசிக்கும் இடங்களில் தண்ணீர் தேங்கும் பள்ளங்கள் இருக்கக் கூடாது தண்ணீர் சேராத இடங்களில் கொசுக்கள் உற்பத்திப் பெருகாது' என காந்திஜி குறிப்பிட்டுள்ளார்.
 சுற்றுப்புறங்கள் தூய்மையாக இல்லாவிட்டால், தொற்று நோய்கள் பரவுவது மட்டுமின்றி மன நோய்களும் பரவும் என காந்திஜி அப்போதே வலியுறுத்தியுள்ளர்.
 தனது சுயசரிதை நூலான "சத்திய சோதனை'யில் இந்திய மக்கள் எதிர்காலத்தில் சுத்தமாகமாகவும் சுகாதாரமாகவும் இருப்பார்களா என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் காந்திஜி. மக்கள் கடைப்பிடிக்கும் பல மூடநம்பிக்கைகளே, அவர்களுக்கு சுகாதாரமற்ற வாழ்க்கை முறையையும், அதனால் நோய் நொடிகளையும் ஏற்படுத்தும் என்றார்.
 ஒருமுறை காந்திஜி பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் அங்கே வந்தார். அவர் காந்திஜியிடம், "உங்களை ஒரு நாள் மட்டும் இந்நாட்டின் கவர்னர் ஜெனரலாக நியமித்தால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்.
 அதற்கு காந்திஜி, "கவர்னர் ஜெனரல் மாளிகை அருகே உள்ள துப்புரவு தொழிலாளிகளின் குடியிருப்பைச் சுத்தம் செய்வேன்' என்றார். "உங்களை மேலும் ஒரு நாள் அப்பணியில் நீட்டித்தால்?' என்றார் பத்திரிகையாளர். "மறுநாளும் அதே பணியைத்தான் செய்வேன்' என்றார் காந்திஜி.
 அந்தப் பத்திரிகையாளர் காந்திஜியின் உறுதியைக் கண்டு வியந்தார். சமர்பதி ஆஸ்ரமத்தில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்தும் பணியாளர்கள் அவர்களே சுத்தம் செய்தால், அவர்களை ஊக்கப்படுத்தினார்.
 சுகாதாரம் என்பது நாட்டின் பல்வேறு துறைகளுடன் தொடர்புடையது. யூனிசெஃப் ஆய்வின்படி, நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம், ஒவ்வொரு குடும்பமும் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவை மிச்சப்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
 நாம் தூய்மையைப் பேணுவதன் மூலம் பெருமளவிலான நோய்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.
 வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர்நிலைகள், சுற்றுலா மையங்கள் மற்றும் இதர பொது இடங்களில் தூய்மையைக் கடைபிடிப்பதன் மூலம் நாம் தூய்மையான பாரதத்தை உருவாக்க முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com