தவமும் தவமுடையார்க்கு ஆகும்

அண்மையில் நாளிதழ் ஒன்றில் வந்த ஒரு செய்தி நம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து நின்றது. 'அகில பாரதிய அகார பரிஷத்' என்ற சாதுக்கள் சங்கம் பலரின் பெயர்களை குறிப்பிட்டு 'இவர்கள் எல்லாம் உண்மையான
தவமும் தவமுடையார்க்கு ஆகும்

அண்மையில் நாளிதழ் ஒன்றில் வந்த ஒரு செய்தி நம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து நின்றது. 'அகில பாரதிய அகார பரிஷத்' என்ற சாதுக்கள் சங்கம் பலரின் பெயர்களை குறிப்பிட்டு 'இவர்கள் எல்லாம் உண்மையான துறவிகள் அல்லர்' என்று சொல்லி இருந்தது. இந்தச் செய்தி நம்மை சற்றே சிந்திக்க வைக்கிறது. துறவின் அடையாளம் 'தலைப்பட்டார் தீரத்துறந்தார்' என்பதே!
ஆற்றில் குளிக்கும் துறவி ஒருவர் நீரில் உயிர்க்கு போராடும் தேள் ஒன்றிற்கு சிறு மரத்துண்டு மூலம் உயிர்ப்பிக்க முயன்றபோது தேள் துறவியின் விரலில் கொட்டி விடுகிறது. வலியால் துடித்தபடியே அவர் அத்தேளை காப்பாற்றுகிறார். 
இக்காட்சியைக் கண்ட ஒருவர் ஆற்றோடு போன தேளை ஏன் காப்பாற்ற வேண்டும்? இப்போது ஏன் வலியால் துன்பப்பட வேண்டும்? என்றார். 
இதற்கு துறவி 'தேள் அதன் இயல்புப்படி தன்னை காத்துக் கொள்ளுவதாக எண்ணி காப்பாற்ற வந்தவரை கொட்டுகிறது. இதனையும் பொறுத்துக்கொண்டு என் உதவி கரத்தை நீட்டுவதே என் பணி' என்றார்.
தனக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்தல், மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவையே தவத்தின் வடிவம் ('உற்ற நோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு') என்று கூறினார் திருவள்ளுவர்.
சிலர் பிறவியிலேயே ஞானம் கைவரப்பெற்று உலகியல் இன்பங்களை துறந்து சந்நியாசியாக வாழக்கூடும். இதுபற்றி எண்ணுகையில் பல ஆண்டுகட்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 
திருக்குற்றாலத்தில் திருப்பராய்த்துறை தபோவன கிளை ஆசிரமம் ஒன்றில் நடந்த சத்சங்க கூட்டத்தில் ஒரு அன்பர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு சுவாமி குகானந்தர் கூறினார். ''எந்த ஒரு குடும்பத்தில் இருந்தும் நல்ல மருத்துவர், சிறந்த வழக்குரைஞர், உயர் பொறியாளர், பேராசிரியர், விஞ்ஞானி போன்றோர் உருவாகலாம். 
ஆனால் ஒரு பற்றற்ற சந்நியாசி ஒருவர் தோன்ற வேண்டுமெனில் அந்த பெற்றோர் ஏழு தலைமுறைக்கு புண்ணியம் செய்து இருக்க வேண்டும். சந்நியாசிகள் உருவாக்கப்படுவதில்லை. இயல்பாக மன விகாரங்கள் நீங்கிய நிலையில் தவநெறியில் தோய்ந்து நிற்கின்ற பெற்றோர்கட்கே இத்தகைய பிள்ளைப் பேறு வாய்க்கும்.
இத்தகைய மகவே பின்னாளில் முற்றும் துறந்த முனிவராய், மகானாய், துறவியாய் காட்சி கொள்வர். 'ஓடும் செம்பொன்னும் ஒக்கவே' நோக்க வல்ல சீலராய் 'கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினராய்' வாழ்வர். இவர்களேதுறவிகளாய் விளங்குவர்'' என்றார். 
அபூர்வமான சிலர் திருமணம் புரிந்தாலும் தங்கள் அவதார நோக்கம் கருதி இல்லற பற்று இன்றி துறவு நிலையில் வாழ்வார்கள். அவர்களில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், வடலூர் இராமலிங்க அடிகள் போன்றோர் அடங்குவர். 
ஆதி சங்கரர், காஞ்சி பெரியவர் போன்ற தவ முனிவர்கள் பிறவியில் இருந்தே தெய்வாம்சம் பொருந்தியவராய் இப்புவியில் வாழ்ந்ததும் உண்டு.
பொதுவாக துறவிகள், மகான்கள், சந்நியாசிகள் எல்லோரும் மனித குலத்திற்கு குரு போன்றவர்கள்தாம். மனித குலம், வாழ்க்கையில் நெறிகளோடும், புலன் அடக்கத்தோடும் வாழ்ந்து பிறவி பெருங்கடலை நீந்த, நல்ல குருமார்கள் மிகவும் அவசியம். 
'குருவே நான்முகன், குருவே திருமால், குருவே சிவபெருமான், குருவே பரம்பொருள்'. 'குருப்பிரம்மா, குருவிஷ்ணு, குருதேவோ மகேஸ்வரஹ' என்ற வடமொழி துதி மூலம் இதனை உணரலாம்.
வித்தை, வேதம், ஞானம், திடச்சித்தம், யாகம், யோகம், சாத்திரம், தோத்திரம் முதலியவற்றை தக்க குரு இல்லாமல் கற்க இயலாது. காகுத்தனுக்கும், கண்ணனுக்கும்கூட குரு இருந்தனர். இவர்களும் குருவை வணங்கி நின்றனர். 
எனவேதான் அக்காலத்தில் எல்லாப் பிரிவினரும் தத்தமக்கு என்று ஒரு குருவை வணங்கி வாழ்ந்தனர். இந்தக் குருவும் குருட்டினையும், இருட்டினையும் போக்க வல்ல குருவாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் திருமூலர் கூறியதுபோல் 'குருடும், குருடும் குருட்டு ஆட்டம் ஆடி குழியில்' விழ நேரிடும். 
ஒருமுறை காஞ்சி பெரியவரிடம் ஒருவர் கேட்டார். 'உங்களை ஏன் ஜகத்குரு என்கிறார்கள். நீங்கள் மட்டும்தான் உலக குருவா' என்று. பெரியவர் சொன்னார், 'நான் அப்படி கருதவில்லை. நான் உலகத்தையே தனது குருவாக எண்ணுகிறேன்' என்று. 
முன்னை காலத்தில் வாசஸ்பதி மிஸ்ரர் என்ற பெயருடைய முனிவர் ஒருவர் ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திரத்திற்கு விரிபொருள் செய்ய எண்ணி சுவடியில் உரை செய்யத் தொடங்கினார். தான் தன் பணியில் கொண்ட கவனம் சிதறா நிலையில் இருந்தமையால் வேறு ஒன்றினையும் மனம் கொண்டார் இல்லை. 
காலம், நாள், வாரம், மாதம், ஆண்டு என நீண்டது. இதனிடையே இவரின் தர்ம பத்தினியான பாமதீ என்பாள் தன் கணவரின் பணிக்கும் அவரின் தேவைகட்கும் தக்க பணிவிடைகளை அவ்வப்போது செய்து வரலானாள். 
நீண்ட காலத்திற்கு பிறகு நூல் முற்றுப் பெற்றது. முனிவர் தன் பணியில் இருந்து உலக வாழ்வு நிலைக்குத் திரும்பினார். தன்னை நோக்கினார். இளமை நீங்கி முதுமைப் பருவம் வந்துற்றதைக் கண்டார். 
அப்போது அவர் அருகில் வந்த வயதான பெண்மணியை நோக்கி 'நீ யார் அம்மா?' என்று அன்பொழுக கேட்டார். அவள் 'நான் தான் தங்களின் மனைவி பாமதீ' என்று பதிலுரைத்தாள். முனிவர் தன் கண் மலர்கள் பனிக்க திகைத்தார். 
இத்துணைக் காலமும், தனது பணி சிறக்க உதவிய அவளது தியாக உள்ளத்திற்கு காணிக்கை செலுத்தும் விதமாக தான் யாத்த நூலுக்கு அவளது பெயரான 'பாமதீ' என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தார் என்பது வரலாறு.
இதுபோன்ற காலம் கடந்து நிற்கின்ற தியாக வரலாறுகள் சனாதன தர்மம் என்ற இந்து சமயத்தில் பல இடங்களில் பரவிக் கிடப்பதை இன்றும் காணலாம். இலை, தழை, ஓலைகளால் வேயப்பட்ட எளிய குடில்களே முனிவர்களின் வாழ்விடங்கள். இயற்கை எழில் மீதுற, இறை உணர்வு எங்கும் நிறைந்திட வாழ்ந்த அவர்கள் உறைவிட கல்வி நிலையங்களை தாங்கி நின்றார்கள். 
அரசிளங் குமாரர்களும், ஏனைய எளியவர்களும் ஒருசேர கல்வி பயிலும் கலைக் கூடங்களாக அவைகள் விளங்கின. ஆசிரியர்களாக விளங்கிய தவசீலர்கள் என்புதோல் போர்த்திய உடம்பினை உடைய திருவுருவினர். ஆன்று, அவிந்து, அடங்கிய கொள்கைச் சான்றோர். மெய்யுணர்வு ததும்பும் வேத விற்பன்னர்கள். 
அவர்தம் வாக்கு 'நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளர்ந்த மனமொழி தானே மந்திரம் என்ப' என்று தொல்காப்பியர் கூறியதுபோல புனிதமானது. ஆனால், ஆற்றல் மிக்கது. அவர்களின் சொற் பிரயோகம் கூரிய ஆயுதத்தைக் காப்பாற்றும் வலிமையானது. நல்லறம் என்ற இனிய இல்லறம் நடத்திய மாண்பினர்.
இதனால்தான் பேரரசன் தயரதன்கூட தன் மக்கட் செல்வங்களுக்கு ஜடாமுடி தரித்த முனிவர் வசிட்டனிடம் கல்வி பயில அனுப்பி வைத்தான்.
இன்றைக்கு நாட்டில் நடப்பதென்ன? தூய துறவிகளின் துவராடைகளை போர்த்திய கோலத்தில், நீட்டியும், மழித்தும் நிற்கும் உண்மைத் துறவிகளின் போர்வையில், மாசற்ற மகான்கள் பெயரில் உலா வரும் வேடதாரிகள் தம்மைத் தாமே சாமியார்கள், மகா புருஷர்கள், தெய்வப் பிறவிகள் என்று வரித்துக் கொள்கின்றனர். 
பாமர மக்களின் அப்பழுக்கற்ற சமய, தெய்வ நம்பிக்கை மழையில் பூக்கும் நச்சுக் காளான்கள் இவர்கள்.
அல்லல் போகவும், அவம் குறையவும், வழிகாட்ட வல்ல உத்தம குணம் கொண்ட தவசீலர்கள், துறவிகள் யாவர் என்று கண்டறியும் மெய்யுணர்வு மக்களிடத்தில் இன்மையால் வேடதாரிகளை நம்பி ஏமாறுகிறார்கள். மின்னுவது எல்லாம் பொன் என நம்பும் மக்கள் பெருகுவதால் உண்டாகும் தீமையே இவை.
மெய்ப்பொருளையே கொல்ல வந்த பொய்த்தவ வேட முத்த நாதனும் கற்புக் கனல் சீதாபிராட்டியையே சிறை எடுக்க வந்த புண்ணிய தவ வேடம் தரித்த இராவணனும், பிறன் மனைவியை துய்க்க மணாளன் முகம் கொண்டிருந்த இந்திரனும் அன்று இருந்ததைப்போல் இன்றும் பலர் உண்டு. 
இன்றைய நாளில் போலிகளின் பெருக்கத்தால் உண்மையான தவசீலர்கள் அறவாழ்வு கேலிக்குரியதாக பேசப்படுவதும், எழுதப்படுவதும் காலத்தின் அவலம். 
இராமகிருஷ்ண பரமஹம்சர் அவதாரம் செய்திராவிட்டால், உலகை தன்வசப்படுத்திய சுவாமி விவேகானந்தரையோ, சகோதரி நிவேதிதை பெருமாட்டியையோ பாரதம் பெற்றிருக்குமா? மகான் ஸ்ரீ அரவிந்தர் தோன்றியிராவிட்டால் பிரெஞ்சு மங்கை மக்கள் மனதில் ஸ்ரீ அன்னையாக கொலுவீற்றிருக்க இயலுமா? 
'தன்னை அறிந்த பின் தனக்கு ஒரு கேடில்லை' என்று அருள் மொழி வழங்கிய பகவான் ஸ்ரீ ரமண ரிஷி இருந்திராவிட்டால் அறிஞர் பால் பிரண்டனை நம் நாடு ஈர்த்து இருக்குமா? 
துறவில் மனம் லயித்த கணமே மனை, மனைவி, மக்கள், சுற்றம், பொன், பொருள் எல்லாவற்றையும் துறந்தவர்கள் தாம் மன்னர் மகாவீர வர்த்தமானர், இளவரசர் சித்தார்த்தர், பெரும் தன வணிகர் பட்டினத்து அடிகள், வடலூர் இராமலிங்க அடிகள் ஆகியோர். இதனால் அன்றோ அவர்களை இன்றும் மனிதகுலம் கடவுளராக போற்றி வணங்கி மகிழ்கிறது.
வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபு பெருகட்டும்.
'தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே' என்பது திருமூலர் வாக்கு.

கட்டுரையாளர்:
தலைவர், 
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com