நன்மை தரும் நவோதயா

நகர்ப்புற, வசதிபடைத்த மாணவர்களுக்கு எப்படித் தரமான கல்வி கிடைக்கிறதோ அதே தரமான, நவீன கல்வி ஏழை கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னதமான

நகர்ப்புற, வசதிபடைத்த மாணவர்களுக்கு எப்படித் தரமான கல்வி கிடைக்கிறதோ அதே தரமான, நவீன கல்வி ஏழை கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில் 1986-இல் ஆரம்பிக்கப்பட்டதுதான் நவோதயா பள்ளி. 
இப்பள்ளியில் மட்டும்தான் 75 சதவீதம் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. மீதம் உள்ள 25 சதவீதம் நகர்ப்புற மாணவர்களுக்கு இடம் அளிக்கப்படுகிறது. தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டுமுறையில் தலித் மாணவர்கள் 15 சதவீதமும், பழங்குடியின மாணவர்கள் 7.5 சதவீதமும் சேர்க்கப்படுகிறார்கள். மூன்றில் ஒரு பங்கு மகளிர்க்கு இடம் அளிக்கப்படுகிறது. 
உதாரணத்திற்கு நவோதயா பள்ளியில் 6-ஆம் வகுப்பில் 2013-14இல் கிராமப்புற மாணவர்கள் 29,796 பேரும், நகர்ப்புற மாணவர்கள் 8,365 பேரும், 2014-15இல் கிராமப்புற மாணவர்கள் 30,841 பேரும், நகர்ப்புற மாணவர்கள் 8,641 பேரும், 2015-16இல் கிராமப்புற மாணவர்கள் 31,272 பேரும், நகர்ப்புற மாணவர்கள் 8,874 பேரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 
அதேபோல் நவோதயா பள்ளியில் கடந்த மூன்று வருடத்தில் 6-ஆம் வகுப்பில் சேர்ந்த தலித், பழங்குடியின மாணவர்களின் பட்டியலை எடுத்துக் கொள்வோம். 
2013-14இல் தலித் மாணவர்கள் 9,673 பேரும், பழங்குடியின மாணவர்கள் 7,346 பேரும், 2014-15இல் தலித் மாணவர்கள் 9,953 பேரும், பழங்குடியின மாணவர்கள் 7,829 பேரும், 2015-16இல் தலித் மாணவர்கள் 10,073 பேரும், பழங்குடியின மாணவர்கள் 8,079 பேரும் சேர்ந்திருக்கிறார்கள். 
அதாவது வருடத்திற்கு 18,000 தலித், பழங்குடியின மாணவர்கள் சேர்கின்றனர். தலித் அல்லாத மாணவர்கள் வருடத்திற்கு 22,000 பேர் சேர்கின்றனர். இதைக் கணக்கிடும்போது தலித், பழங்குடியின மாணவர்களே அதிக அளவில் சேர்கின்றனர். 
இதில் கிராமப்புற தலித், பழங்குடியின மாணவர்களும் அதிக அளவில் உள்ளனர் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
நவோதயா பள்ளி உண்டு உறைவிடப் பள்ளி. இங்கு 6-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புவரை சி.பி.எஸ்.இ. முறையில் பாடம் நடத்தப்படுகிறது. பள்ளிக்கட்டணத்தைப் பொருத்தவரை மிகமிக குறைவு. அதாவது தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கட்டணத்துக்கும் அதே பாடத்திட்டத்தை நடத்துகிற நவோதயா பள்ளிக் கட்டணத்துக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். 
ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் தலித், பழங்குடியின மாணவர்களுக்கும் பள்ளிக் கட்டணம் இலவசம். இவர்களுக்கு சத்துள்ள உணவு, பள்ளிச்சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், எழுதுபொருள்கள், புத்தகப்பை, படுக்கைவிரிப்பு, தலையணை, மருத்துவச் செலவு போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. 
பல்வேறு போட்டிகளில், நிகழ்வுகளில் கலந்துகொள்ள செல்லும் மாணவர்களின் பயணச் செலவாக ஒருநாளைக்கு ரூ.150 வழங்குகிறது இப்பள்ளி. 
கழிப்பறை உபயோகப் பொருட்கள் செலவுக்கு மட்டுமே ஒரு மாணவருக்கு வருடத்திற்கு ரூ.1,000 செலவழிக்கிறது என்றால் மாணவர்களின் சுகாதாரத்தில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது நவோதயா பள்ளி என்பதை புரிந்துகொள்ளலாம். 
தலித்துகளுக்கு, பழங்குடியின மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் சி.பி.எஸ்.இ. தரத்திலான கல்வியையும் சேர்த்து இவ்வளவையும் இலவசமாக தரத்துடன் வழங்கும் நவோதயா பள்ளியை எதற்காக எதிர்க்க வேண்டும்?
இந்தியா முழுவதும் 598 நவோதயா பள்ளிகள் இயங்கிவருகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நவோதயா பள்ளி எந்த மாவட்டத்தில் தலித் மற்றும் பழங்குடியினர் அதிகமாக இருக்கிறார்களோ அங்கு அவர்களைக் கருத்தில் கொண்டு கூடுதலாக மற்றொரு பள்ளியையும் ஆரம்பித்திருக்கிறது. 
இதுவரை கூடுதலாக தலித் மாணவர்களுக்கு 10 பள்ளியையும், பழங்குடியினருக்கு 10 பள்ளிகளையும் நவோதயா நடத்திவருகிறது.
நாடு முழுவதும் நவோதயா பள்ளிகளில் 2,47,153 மாணவர்கள் படித்துக்கொண்டு வருகிறார்கள். (31-3-2016 வரை) இதில் தலித் மாணவர்கள் 62,204 பேர் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது 25.77 சதவீதம். பழங்குடியின மாணவர்கள் 47,073 பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது 19.05 சதவீதம்.
தலித் மாணவர்களும் பழங்குடியின மாணவர்களும் மொத்தம் 1,09,277 பேர் படித்துகொண்டிருக்கிறார்கள். அதாவது 44.84% பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள் பள்ளிக் கட்டணம் இல்லாமல்.
அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு தலித்துகளுக்கு 15 சதவீதம்தான். பழங்குடியினருக்கு 7.5 சதவீதம்தான். ஆனால் நவோதயா அதையும்விட கூடுதலாக தலித்துகளுக்கு 25.77 சதவீதமும் பழங்குடியினருக்கு 19.05 சதவீதமும் கொடுத்திருக்கிறது. இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு பாராட்டியிருக்கிறது. 
புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளிகளில் 30.94 சதவீதம் தலித்துகள் பயில்கிறார்கள். அகில இந்திய இட ஒதுக்கீடு தலித்துகளுக்கு 15 சதவீதம்தான். அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக தலித்துகள் படித்து வருகின்றனர்.
2016-இல் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.21. நவோதயா பள்ளியின் சதவீதம் 98.83. தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 83.05. நவோதயா பள்ளியின் சதவீதம் 96.70. 
ஆக தலித், பழங்குடியின மாணவர்களும் பெரும்பான்மையாக பத்தாம், பனிரெண்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்பதை ஊகிக்க முடிகிறது. இது மற்ற பள்ளிகளைவிட அதிகம்.
நவோதயா பள்ளிகளில் தலித், பழங்குடியின மாணவர்களே அதிகம் பயன்பெறுகிறார்கள் என்பதற்கு இதைவிட ஆதாரம் இருக்க முடியாது. 
அண்ணல் அம்பேத்கரின் நோக்கம் தலித், பழங்குடி மக்கள் கல்வி கற்று அரசியல் அதிகாரத்தைப் பெறவேண்டும் என்பதுதான். அதற்காகவே மக்கள் கல்விக் கழகம், சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் போன்றவற்றை நிறுவி நவீன கல்வியை அதிக அளவில் தலித், பழங்குடியின மாணவர்களுக்கு அளிக்கச் செய்தார். 
அண்ணல் அம்பேத்கரின் கனவைத்தான் நவோதயா பள்ளிகள் நிறைவேற்றி வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com