மாளவியாவின் சாதனை இன்று சாத்தியமா?

பண்டிட் மதன் மோகன் மாளவியா 1904-ஆம் ஆண்டு பனாரஸ் மின்ட் ஹவுசில் ஒரு பல்கலைக்கழகம் துவங்கலாம் என்று தெரிவித்த பொழுது காசி அரசர் உட்பட அனைவரும் அவருடைய இந்த தொலைநோக்குத் திட்டத்தைப்
மாளவியாவின் சாதனை இன்று சாத்தியமா?

பண்டிட் மதன் மோகன் மாளவியா 1904-ஆம் ஆண்டு பனாரஸ் மின்ட் ஹவுசில் ஒரு பல்கலைக்கழகம் துவங்கலாம் என்று தெரிவித்த பொழுது காசி அரசர் உட்பட அனைவரும் அவருடைய இந்த தொலைநோக்குத் திட்டத்தைப் பாராட்டினர். அப்பொழுது இந்த திட்டத்திற்கு எப்படி செலவு செய்வது என்று அவரிடம் யாரும் கேட்டவில்லை. 
'பிச்சைக்காரர்களின் இளவரசர்' என்று அழைக்கப்பட்ட மாளவியா, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இத்திட்டத்திற்கான நிதி திரட்டுதலில் ஈடுபட்டார். நாட்டை வடிவமைக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பல்கலைக்கழகமாக மாளவியாவின் விடா முயற்சியால் 1915-ஆம் ஆண்டு 'பனாரஸ் ஹிண்டு யூனிவர்சிட்டி' என்ற பெயரில் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 
இப்பல்கலைக்கழகம் தற்பொழுது இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக, உலகளாவிய பொருளாதார அறிவை மேம்படுத்தும் மையமாக விளங்குகிறது. சரியாக 102 ஆண்டுகளுக்கு பின், தற்பொழுது பல்கலைக்கழக மானியக்குழுவால்(UGC) ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 
இதன்படி 20 கல்வி நிறுவனங்கள் (புதிதாகவோ அல்லது தற்போது உள்ள நிறுவனங்கள் கண்டறியப்பட்டோ) தலைசிறந்த கல்வி நிறுவனங்களாக (Institutions of Eminence -IoE)  உயர்த்தப்பட உள்ளன. இது குறித்து எழும் முக்கிய கேள்வி என்னவென்றால், தற்போது 20 மாளவியாக்கள் இருந்தால் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறவனங்களை இந்தத் திட்டத்தின் கீழ் அமைக்க முடியுமா என்பதுதான். இக்கேள்விகளுக்கான விடையை காணலாம்.
உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி மையங்களை ஏற்படுத்தும் மனிதவள மேம்பாட்டுத்துறையின் திட்டம் போற்றப்பட வேண்டியதுதான். இது உயர்கல்வித் துறையில் தற்போதைய உலகளாவிய போக்கை ஒத்து இருக்கிறது. 
பல்கலைக்கழக மானியக்குழு இத்திட்டத்தின் செயல்முறை, நடைமுறை, கால அளவு, நிதி ஒதுக்கீடு, நோக்கம் போன்றவற்றை உலக அளவில் கல்வியாளர்களும் திட்ட வல்லுனர்களும் வகுத்துள்ள கொள்கைகளுக்கு இணங்க செயல்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற திட்டங்கள் உலக அளவில் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 
அமெரிக்க, ஐரோப்பிய, ரஷிய மற்றும் ஜப்பானிய மாதிரிகளில் உள்ள பொதுவானவற்றை பல்கலைக்கழக மானியக்குழு எடுத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்க பல்கலைக்கழக முறை ஆரம்பத்தில் ஆக்ஸ்பிரிட்ஜ் (Oxbridge) மாதிரியை பின்பற்றியதாக இருந்தது. இந்த ஆக்ஸ்பிரிட்ஜ் மாதிரி உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. 
ஜெர்மனியின் எக்ஸலன்ஸ் இனிஷியேட்டிவ்(Excellence Initiative),, பிரான்ஸின் இனிஷியேட்டிவ் ஆப் எக்ஸலன்ஸ் (Initiatives of Excellence)  ரஷியாவின் பிராஜக்ட் '5-100' (Project 5-100), ஆஸ்திரேலியாவின் குருப் ஆப் 8 (Group of  8), ஜப்பானின் குளோபல் 30 (Global 30) மற்றும் டாப் குளோபல் பல்கலைக்கழக இனிஷியேட்டிவ்(Top Global University Initiative),  பிரிட்டனின் ரிசர்ச் எக்ஸலன்ஸ் வடிவமைப்பு (Research Excellence Framework),  சீனாவின் டபுள் வேல்டு கிளாஸ் புராஜக்ட்(Double World-Class Project) என ஒவ்வொரு நாட்டிலும் உருவெடுத்தது. 
இவை அனைத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்கும் திட்டங்களை கொண்டவை. இத்திட்டங்களில் நிதி ஆதாரங்கள், ஆசிரியர் தேர்வு முறை, ஆட்சி முறை, கல்வி செயல்பாடு, பாடதிட்டமுறை போன்றவை உலகளாவிய பண்புகளை ஒத்தவையாக உள்ளன. 
மேலும் இவை அந்தந்த நாடுகளில் தேசிய குறிக்கோள்களை அடையக்கூடிய வழிவகைகளையும் உள்ளடக்கியதாகும். இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசு நிதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்கள் அதிகம் உள்ளன. 
ஆனால் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, சீனா, ரஷியா (குறைந்த அளவு மட்டும்) போன்ற நாடுகளில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இணைந்த கல்வி முறை உள்ளது. எல்லாவற்றிற்கும் ஏற்ற ஒரே மாதிரி பல்கலைக்கழகத்தை நிறுவும் திட்டம் எந்த அளவுக்கு உலகளாவிய போட்டிக்கு உகந்ததாக அமையும்? இந்த கேள்விக்கு விடை முடியாதுதான். இருப்பினும் இந்த பிரச்னையில் சில பொதுவான இழைகள் உள்ளன.
இதுபோன்ற முயற்சிக்கு முக்கிய காரணம், உலகப் பல்கலைகழகங்களின் வரிசையில் இடம் பெறுவது ஆகும். இந்த தர வரிசையில் இடம் பெறுவதற்கு முக்கியமான காரணிகள் முனைப்பான கொள்கை தயாரித்தல் மற்றும் பொருளாதார வசதியாகும். 
ஜெர்மனியின் இந்த முயற்சிக்கு இரண்டு முறை பொருளாதார உதவி அமைந்தது: 2006 முதல் 2011 வரை 1.9 பில்லியன் யூரோக்கள் மற்றும் 2012 முதல் 2017 வரை 2.7 பில்லியன் யூரோக்கள் ஆகும். ரஷியாவின் முதன்மை '5-00' திட்டத்திற்கு 2013 முதல் 2016 வரை 750 மில்லியன் யூரோக்கள் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. 
பிரான்ஸ் மூன்று நிலைகளில் தன்னுடைய பட்ஜெட்டில் 2010 முதல் 7.7 யூரோக்களை ஒதுக்கியது. 2014 முதல் 2023 வரை ஜப்பான் 77 மில்லியன் டாலரும், சீனா தன்னுடைய இரட்டை உலகத்தர புராஜெக்ட்டிற்காக தன்னுடைய முந்தைய புராஜெக்ட் 211 விட அதிக ஒதுக்கீடும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கல்விச் சிறப்பிற்கு அதனுடைய தாராள மத்திய மற்றும் மாநில பட்ஜெட்டுகளும் தனியாரின் அதீத பண உதவியும் காரணம் ஆகும்.
இந்தியாவில், இத்தகைய திட்டத்திற்கு பத்து அரசு நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டு கால இடைவெளியில் ரூபாய் 10,000 கோடியை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். இந்தத் தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நிறுவனங்களுக்குப் போதுமானதாக இருக்குமா என்று கூறுவது கடினம். 
அப்படியிருந்தால் அந்த பட்ஜெட் தொகையை, இருக்கும் ஓட்டைகளை அடைப்பதற்கு செலவிடாமல், அதன் மேன்மையை ஊக்குவிக்க பயன்படுத்தபட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அரசு நிறுவனங்களுக்கு மட்டும் பண உதவி என்ற முடிவு தகுதியுடைய தனியார் நிறுவனங்களை பாதிக்கிறது. 
மேலும் தனியார் நிறுவனங்களின் விண்ணப்ப தொகை ரூபாய் ஒரு கோடி என்பது உலக நடப்பிற்கும் கல்வியின் ஊக்கத்திற்கும் ஏற்றதாக இல்லை.
பல்கலைக்கழகங்களின் சிறப்பை உறுதி செய்யும் இந்த முயற்சியில் பல்கலைக்கழக மானியக்குழுவின் கொள்கையில் மாற்றங்கள் உடனடியாக தேவைப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடையே தகுதி அடிப்படையில் காட்டப்படும் பாரபட்சமான போக்கு நீக்கப்பட வேண்டும். 
தனியார் நிறுவனங்களுக்கு உதவித்தொகை அளிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அவர்களை தகுதி அடிப்படை என்ற பெயரில் குறிப்பிட்டு தற்போதைய திட்டம் செயல்படுகிறது. நிறுவனங்களின் தகுதியை நிர்ணயிக்கும் முறையில் பெரிய அளவிலான மாற்றம் தேவை. 
புதிய தனியார் நிறுவனங்களை நடத்தும் முதலீட்டாளர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5,000 கோடியாகவும், நடப்பில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் முதலீட்டாளர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.3,000 கோடியாகவும் இருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத நிர்ணயமாக இருப்பதால், பல தகுதியான தனியார் நிறுவனங்கள் இந்த புதிய IoE விதிமுறையால் பாதிக்கப்பட்டுள்ளன. 
NAAC  மற்றும் NIRF-இன் கல்வி அடிப்படைத் தேவைகளை பல தனியார் நிறுவனங்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் பண வலிமையோடு தொழில் நடத்தும் முதலீட்டாளர்கள் அல்ல. அவ்வாறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்களின் உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தங்களுடைய பொருளாதார வளங்களை கொண்டு இதற்குள் உலத்தரத்தை அடைந்திருக்க வேண்டும். 
இத்தகைய தொழில் நிறுவனர்கள் ஏற்கெனவே தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளித்திருக்கும் சுய உத்தரவாரத்தைப் பற்றி இந்தIoE கட்டுப்பாடு எதுவும் கூறாமல் ஊமையாக உள்ளது. 
தகுதியான தனியார் நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களின் உதவி பெறும் பல்கலைக்கழகங்களைவிட மேன்மை பெற்ற நிறுவனங்களாக இருந்தாலும் இந்த ஒப்புக்கொள்ள முடியாத அளவுகோலால் ஊனமாக்கப்பட்டுள்ளன.
இதற்கான விடை சுலபம். ஒன்று, இந்த மொத்த மதிப்பு அளவுகோலை மனிதவள மேம்பாட்டுத்துறை திரும்ப பெற வேண்டும். அல்லது பெருநிறுவனங்கள் தாங்கள் பல்கலைக்கழகத்திற்கு பக்கபலமாக இருப்போம் என்ற ஒப்புதல் கடிதத்தை அளித்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 
அவ்வாறு செய்யவில்லை என்றால், தகுதியுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் பின்தள்ளப்படுவார்கள். 
மாளவியா போன்ற பெரியவர்கள் இன்று இருந்தால் அவர்களால் 'பனாரஸ் ஹிண்டு பல்கலைக்கழகம்' போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. முடியும் என்று நம்புவோமாக!

கட்டுரையாளர்:
முதன்மையர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com