சீரமைக்க வேண்டிய நேரம்

காவல்துறை சட்டங்கள் பிரிட்டிஷ் அரசு 1861-இல் உருவாக்கியவை ஆகும். மக்களின் நலனைவிட, அரசின் நலன் - அதிகாரம் ஆகியவற்றுக்காகவே செயல்பட்ட இத்துறை, நகைமுரணாக சுதந்திரத்துக்கு பின்னரும் மாற்றங்கள்

காவல்துறை சட்டங்கள் பிரிட்டிஷ் அரசு 1861-இல் உருவாக்கியவை ஆகும். மக்களின் நலனைவிட, அரசின் நலன் - அதிகாரம் ஆகியவற்றுக்காகவே செயல்பட்ட இத்துறை, நகைமுரணாக சுதந்திரத்துக்கு பின்னரும் மாற்றங்கள் அதிகமின்றி, மாநில அரசாங்கங்களுக்கு மிகவும் கட்டுப்பட்ட அமைப்பாக இருக்கிறது. மக்களுக்கும், இத்துறைக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவு
கிறது. 
இந்த துறை குறித்த ஒரு பிரச்னை சற்று வித்தியாசமானது: இத்துறையினருக்கு வழங்கப்படும், அதிக சுதந்திரம் இந்த துறையினரை அதிகார துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம்; இவர்கள் மீதான அரசின் அதீத கட்டுப்பாடுகள், போலீசாரை கருவியாகக் கொண்டு, அரசே அதிகார துஷ்பிரயோகம் செய்ய முகாந்திரமாக அமைகிறது என்ற குற்றச்சாட்டு மறுபுறம்.
நெருக்கடி நிலையின்போது காவல்துறை சார்ந்த ஏராளமான அத்துமீறல்கள் நிகழ்ந்தன. அந்த அடிப்படியில், பின்னர் ஜனதா கட்சியின் ஆட்சியில், இது குறித்து ஆய்வு செய்யவும், இவைபோன்ற துஷ்பிரயோகங்களை தடுக்க வழி வகை செய்யவும், "தேசிய போலீஸ் ஆணையம்' (National Police Commission) அமைக்கப்பட்டது. 
இந்த ஆணையத்தின் சிபாரிசுகள் முழுமையாக சமர்ப்பிக்க படுமுன்னர், மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால் இந்த ஆணையத்தின் உத்தரவுகள் செயலாக்கப்படுவதில் பெரும் தொய்வு ஏற்பட்டது.
இந்த தேசிய போலீஸ் ஆணையம் குறிப்பிட்ட சில முக்கிய விஷயங்களை கவனிப்போம்:
மாநில பாதுகாப்பு ஆணையம் அமைத்தல்: போலீஸ் இலாகா மந்திரி, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் இருவர், நீதித்துறை மற்றும் அரசு நிர்வாகத் துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், மக்களால் பெரிதும் மதிக்கப்படும் பிரமுகர் சிலர் அடங்கிய குழு சட்டரீதியாக அமைக்கப்பட வேண்டும்
இந்த மாநில பாதுகாப்பு ஆணையம் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும். இதன் உறுப்பினர்கள் பாரபட்சமின்றி தெரிவு செய்யப்பட வேண்டும். போலீஸ் இலாகா மீது தேவையற்ற அழுத்தம் ஏற்படாமல் இருப்பதனை உறுதி செய்ய வேண்டும். இருப்பினும், அவை பெருமளவில் ஏட்டளவிலேயே இருந்தன.
இந்நிலையில், 1996-இல் போலீஸ் துறையில் சீரமைப்புகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. மத்திய அரசும் ரிபெரியோ கமிட்டி (1996), பத்மநாபா கமிட்டி (2000), சோலி சோரப்ஜி கமிட்டி (2006) என பல்வேறு கமிட்டிகளை நிறுவியது. இந்த கமிட்டிகளின் சிபாரிசுகள் தேசிய போலீஸ் ஆணையத்தின் கட்டளைகளை ஒட்டியே பெருமளவு அமைந்தன .
ஆனாலும், மாநில அரசாங்கங்கள் தங்களது நிலையினை கணிசமாக மாற்றிக் கொள்ளவில்லை. அதற்கான முக்கிய காரணங்கள்: போலீஸ் இலாகாவின் செயல்பாடுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பொறுப்பாக இருக்கும்போது, அதன் நிர்வாகத்துக்கும் - கண்காணிப்புக்கும் அரசு மட்டுமே அதிகாரம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அதனை வேறு பிற அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் மாநில அரசுகள் கருதியதால், எந்த வித முன்னெடுப்பும் நிகழவில்லை.
போலீஸ் துறையில் செய்யப்படும் எந்த மாறுதலும் அரசாங்கத்தின் அதிகாரத்தினை குறைப்பதாக அமையும் என்ற கருத்தும், தற்போதிருக்கும் நிலை (ள்ற்ஹற்ன்ள் வ்ன்ர்) தொடருவதே அரசுக்கு சாதகம் என்பதாலும் சீர்திருத்தங்கள் குறித்து அரசு பெரும் அக்கறை காட்டவில்லை . 
பல்வேறு மாநிலங்களின் நிலை இவ்வாறிருக்க, ஏ.கே. அந்தோணி தலைமையிலான கேரளா அரசு முழு மனதோடு இத்துறையை சீரமைக்க 2001-ஆம் ஆண்டு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் இலாகாவுக்கு, பெருமளவு நிர்வாக சுதந்திரமும் - அரசியல் தலையீடுகள் அற்ற ஒரு சூழலும் ஏற்படுத்தப்பட்டது. போலீஸ் துறையில் அரசியல் தலையீடு அற்ற நிலை இருக்கும் என்ற அறிவிப்பினை அரசே வெளியிட்டது. 
அரசியல் கட்சிகளுக்கு மெய்யான கட்டுப்பாடு விதித்தது. இதன் மூலம், போலீஸ் துறை எந்த அரசியல் தலையீட்டிற்கும் - நெருக்கடிக்கும் ஆளாகாத நிலை ஏற்படுத்தப்பட்டது.
இந்நடவடிக்கை போலீஸ் துறையில் ஒரு முக்கிய மைல் கல் முடிவாக கருதப்பட்டது. சட்ட அந்தஸ்து தரப்படாவிட்டாலும் செயலளவில் இந்த ஏற்பாடு சிறப்பாக இருந்தது. 
மேலும், போலீஸ் துறைக்கு அளிக்கப்பட்ட நிர்வாக சுதந்திரம் சரிவர பலனளிக்கின்றதா என்பது குறித்து ஆராயவும், போலீஸ் இலாகாவின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், இத்துறையினரது நடவடிக்கைகளுக்கு அவர்களைப் பொறுப்பாக்குவதும் குறித்து ஆராய ஒரு அமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி போலீசார் செயல்பாடு மற்றும் பொறுப்புடைமை ஆணையம் - (Police Performance and Accountability Commission) என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது. ஆனாலும், 2004-இல் அந்தோணி, பதவி விலகியதும் இந்த போலீஸ் துறை நிர்வாக சீரமைப்பும் முடிவுக்கு வந்தது .
இருப்பினும், அரசுக்கு உறுதி - Political will  - இருப்பின், போலீஸ் துறையில் சீரமைப்பு முயற்சிகள் வெற்றி பெரும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாகும். அதுமட்டுமல்ல, இது மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டியதுமாகும் .
போலீஸ் இலாகா சீரமைப்பு என்பது அத்துறை சிறப்பாக செயல்பட உதவுவது மட்டுமல்ல, தனிமனிதனின் சுதந்திரம் - பாதுகாப்பு - அடிப்படை மனித உரிமைகளை உறுதி செய்யும். இன்னொரு புறம், மாநிலங்கள் தங்கள் உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள உதவும் ஒரு முக்கிய செயல்பாடும் ஆகும்.
எனவே, இவை குறித்த விவாதங்களை அரசியல் கட்சிகள், தொலைகாட்சிகள், பத்திரிகைகள், தன்னார்வ அமைப்புகள் ஆகியவை நடத்த முற்படுவது மக்களிடம் விழிப்புணர்வையும், அரசின் மீது அழுத்தத்தையும் ஏற்படுத்தி நற்பயனளிக்கும் என நம்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com