பழிபோட ஆள்தேட வேண்டாம்!

ஊர்தோறும் அரசுப் பள்ளிகள் இருக்க மக்கள் தனியார் பள்ளிகளை நாடியோடுவானேன் என்றொரு கேள்வியை எழுப்பிக் கொண்டு

ஊர்தோறும் அரசுப் பள்ளிகள் இருக்க மக்கள் தனியார் பள்ளிகளை நாடியோடுவானேன் என்றொரு கேள்வியை எழுப்பிக் கொண்டு, அரசுப் பள்ளிகளின் தரக்குறைவே காரணம். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களின் கடமையைச் சரியாகச் செய்வதில்லை என முடிவு செய்து, ஆசிரியர்கள் ஒழுங்காகக் கடமையாற்ற என்ன செய்யலாம் என்பதாக ஒரு விவாதம் நாட்டில் நடைபெறுகிறது.
முதலாவது கல்வித்தரமாவது யாது? அரசுப்பள்ளி - தனியார் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் எவ்வாறு அளவிடப்படுகிறது? எழுத்தறிவித்தலாவது நல்லொழுக்கத்தையும் இணைத்துணர்த்து என்பதே வழிமரபாக இருந்து வந்தது. இன்றைய நிலையில் ஒவ்வொரு கட்டத்திலும் நடைபெறும் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களே கல்வித்தர அளவுகோலாகிறது.
பள்ளிப் படிப்பாகட்டும், பல்கலைக் கழகப்பட்டமாகட்டும் கூடுதல் மதிப்பெண்ணுடன் முதல் வகுப்புப் பெறுவோர் அனைவரும் சுய அறிவுத்திறனும், செயல்திறனும் நிரம்பியவர்கள். மூன்றாம் வகுப்பு என்னுமளவில் தேர்ச்சி பெறுவோரெல்லாம் அறிவுக்கூர்மையும், செயல்திறனும் அற்றவர்கள் எனல் பட்டறிவாகும் உண்மைக்குப் புறம்பானது. 
பத்து, பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி விழுக்காடு, கூடுதல் மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை என்னும் முறையில் அரசுப்பள்ளி, தனியார் பள்ளிகளின் தரவேறுபாட்டிற்குரிய காரணங்களை ஆராய்வோம்.
முதலாவது, தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை வடிக்கட்டல் முறையில் நடைபெறுகிறது. அதாவது மாணவனின் குடும்பச் சூழல், பெற்றோரின் கல்விநிலை, முந்தைய வகுப்பில் தேர்ச்சி நிலை எனப்பலவகையாகவும் தேர்ந்து தெளிந்து சேர்த்துக் கொள்ளும் முழு உரிமையும் தனியார் பள்ளித்தலைமையாசிரியருக்கு உண்டு. 
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நானூறுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே பதினோராம் வகுப்பில் சேரமுடியும். அதே போது அரசுப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர வேண்டுமானால் அய்ந்து வயது நிறைவு என்பதற்கான சான்று மட்டும் போதும். 
அடுத்தடுத்த வகுப்பில் சேருவதற்கு, அதற்கு முந்தைய வகுப்பில் தேர்ச்சி என்பதே போதுமானது. தனியார் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை என்னும் பேச்சுக்கு இடமில்லை. அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையே அடிப்படைப் பிரச்னை.
இரண்டவாது, அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விழுக்காடு. குறிப்பாக பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையாகும் ஆசிரியப் பணியிடங்கள், அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், நிரப்பப்பட்ட பணியிடங்கள் என்பன பற்றிய புள்ளி விவரங்களைக் கவனித்தால் வெறும் கையால் முழம் போட வேண்டிய பரிதாப நிலையிலுள்ள அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் ஏராளம். 
மூன்றாவது, தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடங்களையும், பதினொன்றாம் வகுப்பில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்களையும் நடத்துதல், காலை, மாலை கட்டாயத் தனிப்பயிற்சி என்னும் இரண்டும் அரசுப்பள்ளிகளில் சட்டப்படி செயற்படுத்த மாட்டாதவை என்பதை உறைக்கும் வகை உரைத்தும் பலர்க்கும் அது உறைப்பதில்லை. 
அரசுப்பள்ளிகளின் சாதனை குறைதற்கு அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தரம் குறைதலே காரணமென முடிவு செய்து சில திட்டங்களை பலரும் பரிந்துரைக்கின்றனர். ஆசிரியர்கள் அரசு தரும் ஊதியத்திற்கு அப்பாலாக வேறு வேறு தொழில் மூலம் பொருளீட்ட முற்படுகிறார்கள். 
அதனைக் கட்டுப்படுத்திவிட்டால் ஆசிரியர்கள் கற்பித்தல் கடமையில் கருத்தூன்றுவார்கள் என்பது சிலரின் கருத்துரை. ஆசிரியர்களைப் போல அரசு ஊதியமும் ஓய்வூதியமும் பெறும் பிறதுறை அரசு அலுவலர்களும், சட்டமன்று-நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசு ஊதியத்தை மட்டுமே கொண்டு குடும்பம் நடத்துகிறார்களா? 
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று பகுதி நேரப் பணியாற்றுவதைப் போல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பகுதிநேரப் பணியாக தனியார் பள்ளிகளுக்குச் சென்று பாடம் நடத்துகிறார்களா - பயிற்சியளிக்கிறார்களா? 
அடுத்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - தங்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டுமெனச் சட்டமியற்றிக் கட்டாயப்படுத்திவிட்டால் அரசுப்பள்ளிகளின் சாதனைப் பட்டியல் நீளும் என்றொரு பரிந்துரை பலகாலமாகப் பலராலும் கூறப்படுகிறது. 
இலவசக் கல்வி தரும் அரசுப் பள்ளிகளை விடுத்துக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை நாடியோடுதல் மட்டுமே நாட்டில் நடைபெறவில்லை. இலவச மருத்துவம் தரும் அரசு மருத்துவமனைகளை விடுத்துக் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளை நாடியோடுதலும் நடைபெறுகிறதல்லவா? 
எனவே, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நீதிபதிகள் உட்பட மக்கள் வரிப்பணத்தில் அரசு ஊதியமும், ஓய்வூதியமும் பெறுவோர் அனைவரும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அரசுப்பள்ளி - கல்லூரிகளில்தான் சேர்க்க வேண்டும், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் அரசு மருத்துவமனைகளில்தான் மருத்துவம் செய்து கொள்ள வேண்டுமெனச் சட்டமியற்றி நடைமுறைப்படுத்தினால், ஏழை - எளியோர் உட்பட அனைவருக்கும் தரமான கல்வியும், உயர்தரமான மருத்துவமும் கிடைக்குமல்லவா? 
இடைப்பிறவரலாக ஒன்று. ஆசிரியர்கள் தமது துறை சார்ந்து வெளியாகும் பத்திரிகைகளையும், நூல்களையும் தொடர்ந்து படிப்பதன் வழியாகத் துறை சார்ந்த புலமைத் திறனையும், கற்பித்தல் திறனையும் வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும். 
அத்துடன் ஆசிரியர் சங்கங்கள் ஊதிய உயர்வுக்கும், பிற சலுகைகளுக்கும் போராடுவதுடன், பள்ளிக்கல்வியின் தரத்தையும் அரசுப்பள்ளிகளின் தரத்தையும் உயர்த்திடச் செய்ய வேண்டுவன குறித்தும் கோரிக்கை எழுப்பவும், போராடவும் தயாராக வேண்டும்.
இவ்விடத்தே இன்னொன்று. வீட்டிலே கெட்ட வார்த்தை பேசினால் பள்ளியிலே அடிவிழுந்தது அந்தக்காலம். பள்ளியிலே ஆசிரியரிடமே கெட்டவார்த்தை பேசினாலும் ஆசிரியர் பொறுமையாகப் புன்னகை பூக்க வேண்டுமென்பது இந்தக் காலம். 
மாணவர்களைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் உரிமையற்றவர்களாகும் ஆசிரியர் புத்தகத்திலுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதுடன் தமது கடமையை முடித்துக் கொள்ள வேண்டியவராகிறார்.
சமூக வளர்ச்சியின் அடித்தளமாகும் கல்வியைத்தனியார் மயமாக்குதல் சமூகச் சீரழிவாக முடியும் என்பதைச் சமூகப் பொறுப்புணர்வுக்கு உரியோர் நினைவிற் கொள்ள வேண்டும்.
இன்னொரு கேள்வி. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வோரின் எண்ணிக்கை அடிப்படையில் சாதனைப் பள்ளியா - வேதனைப் பள்ளியா என முடிவு செய்தல் சரிதானா? 
இதன்படி மருத்துவர்களும், பொறியாளர்களுமே உயர்தரமானவர்கள். பிறரெல்லாம் தரம் குறைந்த சமூகத்திற்கு அவசியமற்ற வீண் சுமைகளா? 
இனி, அரசுப்பள்ளிகளைச் சாதனைப் பள்ளிகளாக மாற்றுதற்குச் செய்ய வேண்டுவன யாவை? முதலாவது அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். 
இரண்டாவது, குறைந்தளவான மாணவர் விகிதப்படி, ஒவ்வொரு பாடத்திற்கும் தேவையான ஆசிரியர்களைப் பணியமர்த்த வேண்டும். மூன்றாவது, ஆங்கிலவழி வகுப்புக்களைக் கைவிட்டு, ஆங்கில மொழிப்பாடத்திற்கு ஆங்கிலப் பட்டதாரிகளைப் பணியமர்த்தி, ஆங்கிலப் பாடத்தில் பேச்சுப் பயிற்சியைக் கட்டாய அம்சமாக்க வேண்டும். 
நான்காவது, ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கெனத் தனி நூலகம் அமைய வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்திற்கு ஒரு மணி நேரம் நூலகத்திற்கென ஒதுக்க வேண்டும். 
அய்ந்தாவது, தனிப்பயிற்சி. அரசுப்பள்ளியாயினும், தனியார் பள்ளியாயினும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டமாயினும், மாநிலப் பாடத்திட்டமாயினும் பாடப்புத்தகத்திலுள்ள பாடப்பொருளை மாணவன் உளங்கொளச் செய்தல் வேறு; ஆண்டிறுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுதற்கான பயிற்சியளித்தல் வேறு. 
முந்தையதற்குப் பிந்தையது தேவையில்லை. பிந்தையதற்கு முந்தையது தேவையில்லை. பள்ளி வேளையில் இரண்டிலொன்றைத்தான் செய்ய முடியும். அத்துடன், நீட் போலும் நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி மூன்றாவது சுமை. 
இவ்வளவையும் பள்ளிப்பாட வேளையிலேயே நிறைவு செய்தல் எப்படிப்பட்ட திறமைசாலியாலும் இயலாது. எனவே, உயர்நிலை, மேனிலை வகுப்பு மாணவர்களுக்குக் காலை, மாலை தனிப்பயிற்சி கட்டாயமாக வேண்டும். 
தவிர்க்க வியலாத காரணத்தால் தனிப்பயிற்சிக்கு வர இயலாத ஆசிரியர்களுக்கு மாற்றாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
ஆறாவது, பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளை பழைய இண்டர்மீடியட் பான்மையில் ஒருங்கிணைந்த இரண்டாண்டுப் பாடத்திட்டமாக்கி, அதற்கான தேர்வை இரண்டிற்கு மேற்பட்ட பருவமுறைத் தேர்வுகளாக்கி ஒருபருவத் தேர்வில் தோல்வியுறும் பாடங்களை அடுத்தடுத்த பருவத் தேர்வுகளில் நிறைவு செய்து கொள்ளும்படியாக அமைக்க வேண்டும். 
பழியைத்தூக்கி யார் தலையில் போடலாம் என நினைப்பதை விடுத்து, சிக்கலைப் போக்க என்ன செய்ய வேண்டு
மெனச் சிந்தித்தால் வழிபிறக்கும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com