தேவையா இந்தப் பாதுகாப்பு?

நாட்டின் பாதுகாப்புச் செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது.

நாட்டின் பாதுகாப்புச் செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. காங்கிரசு ஆட்சி செலவிட்டதைவிட பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. சுமார் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் தேசப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புச் செலவுதான் இப்படியென்றால் நாட்டில் இருக்கும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புச் செலவும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுபற்றி மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.
எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள தலைவர்களின் எண்ணிக்கை, அவர்களின் பாதுகாப்புக்கு ஆகும் அதிகப்படியான செலவு இவற்றைக் கருத்தில் கொண்டு மிக மிக முக்கிய பிரமுகர் (வி.வி.ஐ.பி.)களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அளவையும் செலவையும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் மிக முக்கியப் பிரமுகர்களுக்குக் "கருப்புப் பூனைப்படை' எனப்படும் "தேசிய பாதுகாப்பு படை' வீரர்களைக் கொண்டு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இது "எக்ஸ்', "ஒய்', "இசட்' என்ற மூன்று பிரிவுகளில் நபர்களின் முக்கியத்துவத்திற்கேற்ப வழங்கப்படுகிறது.
மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 350 பேருக்கு மட்டுமே கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. இது இப்போது 475-ஆக அதிகரித்துள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு இப்போது 50 பேருக்கு வழங்கப்படுகிறது. இது முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 35-ஆக மட்டுமே இருந்தது.
இசட் பிரிவு பாதுகாப்புப் பிரிவில் இருக்கும் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலிருந்து வெளியே செல்லும்போது இந்தப் பாதுகாப்பு தொடரும். இதனால் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது.
ஆனால் இசட் பிரிவு பாதுகாப்பு பெற்ற பலர் தங்களுடைய சொந்த இடங்களை விட்டு வெளியில் செல்வது மிகவும் குறைவாகும். ஆனாலும் அவர்களது பாதுகாப்புக்காக நாள்தோறும் 50 வீரர்களை நிறுத்த வேண்டியுள்ளது.
ஆட்சியிலும், அரசியலிலும் இல்லாதவர்களுக்கும்கூட கொலை, மிரட்டல் போன்ற காரணங்களுக்காக இந்தப் பிரிவில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இப்போது இருக்கும் தலைவர்களுக்குப் பெரிய அளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையென்றாலும்கூட, தொடர்ந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
மேலும் இசட் பிரிவில் இருக்கும் பல முக்கிய தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தலைநகர் தில்லியிலேயே உள்ளனர். இவர்களுக்கு மாற்றுவழியில் பாதுகாப்பு வழங்க முடியும். இதுபற்றியும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் உள்துறை அமைச்சகமும், தேசிய பாதுகாப்புப் படை தலைமையகமும் மிக முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் தங்களால் சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளன.
இதன் அடிப்படையில் அதி முக்கியப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் வி.ஐ.பி.க்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அவர்களுக்குப் பிற வழிகளில் பாதுகாப்பு வழங்கவும் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, இசட் பிரிவு பாதுகாப்பு பட்டியலில் இருக்கும் தலைவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். 
இதற்கு அடுத்தபடியாக உள்ள ஒய் பிரிவில் இருக்கும் தலைவர்களுக்கும் தேசிய பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். எக்ஸ் பிரிவில் துணை ராணுவப் படை வீரர்கள் மட்டுமே பாதுகாப்பு அளிப்பார்கள்.
இதற்கான திட்டம் பற்றி மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த முக்கிய பிரமுகர்களின் செலவுக்காக மத்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுதோறும் ரூ.800 கோடியை செலவழிக்கிறது. 
1993-ஆம் ஆண்டில் இந்தப் பாதுகாப்புச் செலவு ரூ.400 கோடியாக இருந்தது. இசட் பிரிவில் பணிபுரியும் தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்காக மட்டும் ரூ.120 கோடி செலவழிக்கப்படுகிறது.
உண்மையான மக்கள் தலைவர் எப்போதும் காவல்துறைப் பாதுகாப்பை விரும்புவதில்லை. அவர்களுக்கு மக்களே பாதுகாப்பு என்பதால் காவலர் உதவியை நாடுவதில்லை. அரசுக் காவல்துறை அவர்களைக் கேட்காமலும், அவர்களுக்குத் தெரியாமலும் பாதுகாப்பினை அளித்து வந்தனர். அது அவர்களது கவனத்துக்கு வந்தபோது அதனை விலக்கிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விட்ட தலைவர்களும் உண்டு.
மக்களோடு மக்களாக வாழ்ந்த காந்தியடிகள், காமராஜர், கக்கன், ஜீவா முதலியவர்கள் எந்தப் பாதுகாப்பையும் விரும்பியதில்லை. மக்களுக்குத் தொண்டு செய்வதையே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தனர். மக்களோடு மக்களாக இருப்பதையே அவர்கள் விரும்பினர்.
இந்திய விடுதலை நாள் நெருங்க நெருங்க வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அகதிகளாக மக்கள் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்லத் தொடங்கினர். கொலை, கொள்ளை, கலவரங்கள் அரங்கேறின.
மொத்தத்தில் இரண்டு லட்சம் பேர் மடிந்திருப்பார்கள் என்று அப்போது மதிப்பிடப்பட்டது. வீடு வாசல் இழந்து தவித்தவர்கள் தொகைக்குக் கணக்கே இல்லை. இந்திய விடுதலை வரலாற்றில் கறை படிந்த பக்கங்கள் இவை. இந்நிலையில்தான் இந்திய விடுதலை நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
இந்தக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்ற நேரத்தில் நவகாளியில் இந்து - முஸ்லிம் கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்தது. பல்வேறு பகுதிகளிலும் வகுப்புக் கலவரம். கொண்டாட்டங்களைத் துறந்து காந்தியடிகள் நவகாளியை நோக்கித் தனியாகத் தம் பயணத்தைத் தொடங்கினார். பாதுகாப்பைப் பற்றி எப்போதும் அவர் கவலைப்பட்டதில்லை.
விடுதலையடைந்த நாட்டின் உள்துறையமைச்சராக சர்தார் வல்லபபாய் படேல் இருந்தபோது, காந்திஜியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் முன் எச்சரிக்கையாய் காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டுமென்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டபோது காந்திஜி மறுத்து விட்டார்.
"எனக்குப் பாதுகாப்பு எதுவும் தேவையே இல்லை. என்னுடைய உயிர் கடவுளின் கையில் இருக்கிறது. நான் சாக வேண்டும் என்று இருந்தால் எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் என்னைக் காப்பாற்ற இயலாது. 
தனது சுதந்திரத்துக்காகப் பாதுகாப்பைத் தேடுபவர்கள் வாழ்வதற்கு உரிமையற்றவர்கள். ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பரிசோதிப்பதற்கு அனுமதிப்பதை விட நான் பொது பிரார்த்தனையையே நிறுத்தி விடுவேன்' என்று காந்திஜி கூறிவிட்டார்.
1948 ஜனவரி 30 அன்று பிரார்த்தனைக்குப் போகும்போது காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு யாரைக் குறை கூறுவது? பாதுகாப்புக் குறைபாடு காரணமா? சகிப்புத் தன்மையற்ற மத வெறியா?
1984-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டபோது இந்திரா காந்தி படைபலத்தைப் பயன்படுத்தி அதனை அடக்கினார். இதனால் அவரது உயிருக்குத் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்தது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
என்றாலும் என்ன பயன்? பாதுகாப்பு பலமாக இருந்த நிலையில் 1984 அக்டோபர் 31 காலை 9.30 மணியளவில் தம் இல்லத்திலிருந்து அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது தம் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்களினாலேயே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்க நாட்டின் ஒற்றுமைக்காகவும், கருப்பர் அடிமைகளின் விடுதலைக்காகவும், மக்கள் ஆட்சிக்காகவும் அரும்பாடு பட்டவர் ஆபிரகாம் லிங்கன். ஏழைக் குடிமகனாகப் பிறந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். இருமுறை அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1865 ஏப்ரல் 14, இரவு 10 மணியளவில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைகாரனை காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.
இப்படியே பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டலாம். என்றாலும் இன்றைய உலகில் பாதுகாப்பு மூலம் நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று எண்ணுகிறவர்களின் தொகையே அதிகம். 
இதனால் செல்வாக்கு மிக்கவர்கள் அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பைப் பெறுகிறார்கள். மக்களின் பணம் இப்படித்தான் பாழாகிறது.
அரசாங்கம் என்பது பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக இருக்கிறதே ஒழிய, ஒருசில வசதி படைத்தவர்களுக்காக இல்லை. 
செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் தங்கள் சொந்தச் செலவிலேயே பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதனையே அரசாங்கமும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அரசாங்கச் செலவில் இந்தப் பாதுகாப்பைத் தங்களது பந்தா அரசியலுக்குப் பயன்படுத்தும் போக்கை ஒழித்துக் கட்ட வேண்டும். மக்கள் பணத்தை வசதி படைத்தவர்களுக்கு வாரி இறைப்பதா? இது இனியும் தொடரக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com