உலக அதிசயம் காப்போம்!

உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பட்டியலில் இடம் பெற்றுள்ள, ஆண்டுதோறும் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்ற தாஜ்மஹாலின் பெயர் உத்தரப் பிரதேச மாநில சுற்றுலா கையேட்டில்

உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பட்டியலில் இடம் பெற்றுள்ள, ஆண்டுதோறும் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்ற தாஜ்மஹாலின் பெயர் உத்தரப் பிரதேச மாநில சுற்றுலா கையேட்டில் இடம் பெறவில்லை என்பது, நாடு முழுவதுமுள்ள மக்களை மட்டுமல்ல, உலக அளவில் உள்ள இந்தியர்களை, சுற்றுலா பயணிகளை, அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். 
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 1983-லேயே யுனெஸ்கோவால் கலாசார பிரிவின் கீழ் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்ட பகுதி. போர்க்காலங்களில் கூட பாதுகாக்கப்படும் பகுதி. ஐ.நா.வின் கண்காணிப்பில் உள்ள பகுதி. பல்வேறு பாரம்பரியங்களை உடைய ஓர் உலக அதிசயத்தை முடக்குவது வேதனையளிக்கிறது. 
உலக வங்கியின் பரிந்துரைப்படி மாநில சுற்றுலா துறையை மேம்படுத்த 370 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை உத்தரப் பிரதேச அரசு தயாரித்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்தத் திட்டங்களில், தாஜ்மஹால் மற்றும் அதன் சுற்றுப்புற மேம்பாட்டுக்கு மட்டும், 156 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மூன்று மாதங்களில் திட்டப் பணிகள் தொடங்கும் என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா கையேட்டில் இல்லாத இடத்திற்கு சுற்றுலாத்துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீதம் ஒதுக்கியிருப்பது வியப்பாக உள்ளது. 
இந்துக் கட்டடக்கலைக்கோர் தஞ்சை பெரிய கோவில், இஸ்லாமிய கட்டடக்கலைக்கோர் தாஜ்மஹால், பெளத்த கட்டடக்கலைக்கோர் புத்த கயா, சமணக் கட்டடக்கலைக்கோர் ஸ்ரவணபெலகோலா என சமயம் கடந்த கலாசாரப் பதிவுகளைப் பிரதிபலிக்கும் வானுயர்ந்த கட்டடங்களைக் கொண்டு விளங்குகிறது நம் பாரதம். 
எண்ணூறு ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட மொகலாயர்கள் இந்தியாவுக்கு பல்வேறு பெருமைகள் சேர்த்தனர். அதில் குறிப்பிடத்தக்கது கட்டடக்கலை. மொகலாய சக்கரவர்த்தி ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால், இந்திய கட்டடக்கலையின் உச்சம். 
உலக அதிசயங்களை மாற்றி வரையறுத்தபோது இந்தியாவின் பெருமை மிகு தாஜ்மஹால் முதலிடத்தைப் பிடித்து இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி
யுள்ளது.
காண்போர் கண்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதன் கம்பீரமான அழகு, கல்நெஞ்சத்திலும் காதலின் எல்லையை உணர்த்தும் காவியச் சின்னம். உலக நாடுகளின் அதிபர்கள், ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் போது தாஜ்மஹாலின் அழகை கண்டு வியந்து போகிறார்கள்.
சுவாமி விவேகானந்தர் தாஜ்மகாலைப் பார்த்தபோது கூறிய கருத்து: "இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும். இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும்'.
அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்தபோது தாஜ்மஹாலைப் பார்த்து அதிசயித்து கூறிய சொற்கள் இவை. "உலக மக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் தாஜ்மஹாலை பார்த்து ரசித்தவர்கள்.இன்னொரு வகையினர் தாஜ்மஹாலைப் பார்க்காதவர்கள்'. 
தாஜ்மஹாலை பார்க்கிறபோது ஒவ்வொரு சமயமும் ஒரு அழகு தோன்றும். அதை சமயமாக்க வேண்டாம் என்பதே பலரின் கருத்து. இது சமய சின்னம் என்ற எண்ணம் மாற வேண்டும்.
மனைவியை கல்யாணத்துக்கு பிறகும் காதலித்த காதலன் ஷாஜஹான். அதற்கு சாட்சியே தலைநிமிர்ந்து நிற்கும் ஏழாவது அதிசயம் யாருக்கும் எட்டாத அதிசயம் இந்தியாவின் இந்த தாஜ்மஹால்..! நிலவொளியின் பொழிவில் அழகு தேவதையாக எழுந்து நிற்கும் அந்த வெண் பளிங்கு மாளிகை ஏன் எழுந்தது எப்படிஎழுந்தது? சற்று சரித்திரத்தின் பின்னே சென்று பார்ப்போம்... 
மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து, வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி ஆகிய தலைசிறந்த கட்டடடக் கலைஞர்களை ஷாஜஹான் அழைத்து வந்தார். இவர்களோடு லாகூரைச் சேர்ந்த அகமத் என்பவரும் சேர்ந்து ஷாஜகானின் கனவை முதலில் காகிதத்தில் வடித்தார்கள். 
அடுத்த கட்டமாக கட்டடக் கலைஞர்கள், சிற்பிகள் என இருபதாயிரம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு பணிகளைத் தொடங்கினார். ஷாஜஹான் திட்டமிட்ட இருபதாண்டுகள் உழைப்பு! உலகமே வியக்கும் தாஜ்மஹால் என்னும் கலைப் பூ .
1633-ஆம் ஆண்டு தொடங்கி 1653 வரை சுமார் 1,000 யானைகள், 40,000 பணியாளர்கள் உழைப்பில் உருவான தாஜ்மஹாலின் வெளிப்புறக் கதவுகள் மற்றும் சுவர்களில் பதிக்க இந்தியாவைத் தவிர ரஷியா, திபெத், பாரசீகம் என பல இடங்களில் இருந்தும் வைரம், வைடூரியம், முத்து, பவளம் என விதம் விதமாக வரவழைத்து அழகு பார்த்தார் ஷாஜஹான். 
புனித குரானிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்தார். இதற்காக உலகிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் "அமானாத்கான்' பெயர் சிபாரிசுச் செய்யப்பட்டது. "நான் எந்த வேலைச் செய்தாலும் அதில் என் கையெழுத்தைப் போடுவேன்' என்று உறுதியாகக் கூறிய அவருக்கு அனுமதிக் கொடுத்தார் ஷாஜஹான். இன்றைக்கும் தாஜ்மஹாலில் அந்தச் சிற்பியின் கையெழுத்தைக் காணலாம்.
இப்படி அங்குலம் அங்குலமாக பொன் நகையை உருவாக்குவதுபோல் தாஜ்மஹாலைக் கட்டினார் ஷாஜஹான். தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டு கொஞ்சம் காலம் அதனை முஸ்லிம்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். 
பிற்பாடு உலகெங்கிலும் இருந்து பலர் வர அந்தத் தடை தானாகவே நீங்கிப் போனது. இத்தகைய அழகான தாஜ்மஹால் அதன்பிறகு வந்த ஆங்கிலேயர்களின் கண்களை பறிக்காமல் இருக்குமா? 
பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில் பதிக்கப்பட்ட வைர, வைடூரியங்களை சுரண்டி எடுத்துக் கொண்டு போனார்கள். லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர் இடித்து விடலாம் என்று கூறினார். இன்னும் பல ஆங்கிலேய அதிகாரிகள் தாஜ்மஹாலை ஒவ்வொரு கல்லாக பெயர்தெடுத்து, கப்பலில் ஏற்றிக் கொண்டு போய், இங்கிலாந்தில் இறக்கி மீண்டும் கட்டி விடலாம் என்று ஆலோசனை வழங்கினார். 
இன்றைக்கும் இப்படியோர் அற்புதக் கட்டடம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு. கலைஞர்களின்பால் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டிருந்த அவர், தாஜ்மஹாலை நல்ல முறையில் பராமரிக்க ஒரு சட்டமே இயற்றினார். 
அதோடு மட்டுமல்ல, தாஜ்மஹாலில் மும்தாஜ் - ஷாஜஹான் கல்லறைகளுக்கு மத்தியில் மேலே ஒரு அழகான பித்தளை விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும். இதனைக் கெய்ரோவிலிருந்து வாங்கி, இங்கு தொங்கவிட்டவரே கர்சன் பிரபுதான். 
ஆங்கிலேயர்கள் பாதுகாத்த ஆசியாவின் அழகு கலைப் பொக்கிஷத்திற்கு எதிரான சர்ச்சைகள் என்பது புதிதல்ல. 2015-இல் ஒரு சர்ச்சை உண்டானது. ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில், வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவில், ஆக்ராவில், "தேஜோ மஹாலய' என்ற சிவன் கோவில் இருந்தது. 
இந்த கோவிலைத்தான், மொகலாய மன்னர் ஷாஜகான், கல்லறையாக மாற்றி, தாஜ் மஹால் கட்டினார். அங்கு, சிவன் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள், அடையாளங்கள் இப்போதும் உள்ளன' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசு, மத்திய கலாசாரத்துறை அமைச்சகம், தொல்பொருள் ஆய்வுத்துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 
இதைத் தொடர்ந்து "தாஜ்மஹால் பகுதியில் கோவில் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை' என்று மத்திய கலாசார அமைச்சகம் 2015-ஆம் ஆண்டு மே மாதமே நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்து இருந்தது.
இந்தியா பல்வேறு சமய நம்பிக்கைகள் கொண்ட மக்கள் வாழும் நாடு. இந்திய மக்கள் பிற சமய மக்களின் நம்பிக்கைகளை மதித்து, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் வாழ, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது. 
இனம், மதம், மொழி, நாடு கடந்து நேசிக்கப்படும், நம் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் உலக அதிசயத்தை குறுகிய வட்டத்திற்குள் அடைக்காமல் பரந்துபட்ட நமது கலாசார அடையாளமாய் கருத வேண்டும். 
வேற்றுமையில் ஒற்றுமையாய், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறையாய் வாழ்வதே நம் பாரதத்தின் சிறப்பு. 
"பிற சமயங்களைப் பற்றி அறிந்து கொண்டால் மட்டும் போதாது. பிற சமயங்களைச் சேர்ந்தவர்களின் சாதனைகளில் நம்மால் பங்கேற்க இயல வேண்டும். அப்போதுதான் சமயங்களிடையே நல்லிணக்கம் உருவாகும்' என்ற காந்தியின் சொற்கள் இங்கு நினைவுகூரத்தக்கது. 

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com