ஆடம்பரம் தவிர்ப்போம்

ஆடம்பரத்திற்கு அளவுகோல் உண்டா என்றால் இல்லை என்று உறுதியாக கூறிவிடலாம். ஆடம்பரத்தின் மூலம் அமைதியும் ஆனந்தமும் பெருகிடுமா, அதுவும் இல்லை.

ஆடம்பரத்திற்கு அளவுகோல் உண்டா என்றால் இல்லை என்று உறுதியாக கூறிவிடலாம். ஆடம்பரத்தின் மூலம் அமைதியும் ஆனந்தமும் பெருகிடுமா, அதுவும் இல்லை. மாறாக, அடங்கா ஆசையும் ஆர்ப்பரிப்பும் தன் முனைப்புமே வளர்ந்திடும்.
"மனநிறைவு என்பது இயற்கையிலேயே நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை' என்கிறார் சாக்ரடீஸ்.
நாம் போற்றிப்புகழும் எத்தனையோ அருளாளர்களும் அறிஞர்களும் சிறந்த தலைவர்களும் வசதி வாய்ப்புகள் இருந்தபோதும் எளிமையான வாழ்க்கை முறையே மேற்கொண்டு நிறைவு கண்டனர்.
நம்மில் பலர் வசதி வாய்ப்புகள் வந்த
வுடன் தங்களின் செல்வாக்கைப் பறைசாற்றும் விதமாக வீட்டில் தேவைக்கு மிகுதியான ஆடம்பரப் பொருட்கள், விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள், வாகனங்கள் என வாங்கிக் குவிப்பதும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது உறவினர்களும் நண்பர்களும் பார்த்து வியக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் பகட்டாக நடத்துவதும் வகைவகையான உணவுகளைத் தயாரித்துப் பரிமாறுவதும் அதில் ஒரு பகுதி இலையிலேயே உண்ணாமல் வீணாக்கப்படுவதும் அதிகரித்து வரும் ஆடம்பரக் கலாசாரமாகிவிட்டது.
பல்லாயிரம் ரூபாய் பெருமதிப்புள்ள பட்டாசுகளை மண்டபத்திற்கு முன்பாகச் சாலையில் வைத்து வெடிக்கச் செய்வதும் அதனால் அங்கு நச்சுப் புகைமண்டலம் சேர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களுக்கும் சாலையில் செல்வோருக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுவதும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாவதும் சரியா?
நம் வீட்டு நிகழ்ச்சிக்கோ விருந்துக்கோ வரும் விருந்தினர்களைப் பாரபட்சமின்றி மனமுவந்து உபசரித்து உவகை கொள்வதுதானே சிறந்த விருந்தோம்பல் பண்பு.
அதனைவிடுத்து ஆடம்பர உடை உடுத்தி, அளவில்லா ஆபரணங்கள் அணிந்து, சொகுசு காரில் வருபவர்களை ஒருவிதமாகவும் எளிமையான தோற்றத்
துடன் வரும் விருந்தினர்களைத் துச்சமாக நினைத்து அவர்களை வேறுவிதமாகவும் நடத்துவதைப் பார்க்கும்போது வெற்றுப் பகட்டுக்கும் புறத்தோற்றத்திற்குமே மதிப்பளிப்பதாக ஆகிவிடாதா?
வசதி படைத்தோர் நடத்திடும் ஆடம்பர நிகழ்ச்சிகளைப் பார்த்து நடுத்தர வர்க்கத்தினரும் கடனை வாங்கியாவது தம் வீட்டுத் திருமண நிகழ்ச்சிகளையும் ஆடம்பரமாக நடத்திட வேண்டும் என்று நடத்திப் பின்னர் கடனைத் திரும்பக் கட்ட முடியாமல் வாழ்நாள் முழுவதும் வருந்தியவர்கள் பலர்.
வீட்டில் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஆடம்பரம் எது, அவசியம் எது என்பதை நன்கு உணர்த்திட வேண்டும். குழந்தைகள் விரும்பியதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்த முயல்வது அவர்கள் பின்னாளில் பிடிவாதக்காரர்களாகவும், ஊதாரிகளாகவும் உருவாகிட வழிவகுத்துவிடும்.
குடும்ப நிலவரத்தை குழந்தைகள் உணரச் செய்வதும், தாய் - தந்தையர் தாம் பொருள் ஈட்ட படும் பிரயத்தனங்களை அவர்கள் அறியச் செய்திடவும் வேண்டும்.
நற்பண்புகளான எளிமை, இரக்கம், அன்பு, அடக்கம் போன்றவற்றை அவர்கள் மனத்தில் வேர் ஊன்றச் செய்திடல் பெற்றோரின் கடமையாகும். அதுவே பின்னாளில் அவர்கள் வாழ்விலும் ஏற்றம் தரும் நற்பண்புகளாகப் பரிணமிக்கும்.
குடும்பத்தில் ஆடம்பரச் செலவுகளும், அதிகத் தேவைகளையும் வளர்த்துக் கொண்டால் குடும்பத் தலைவன் தகாத முறையில் பொருள் தேடிக்கொண்டு வருவதற்கு வழிகுத்துவிடும்.
முறையற்ற வகையில் தேடும் செல்வம் தகாத நண்பர்களின் சேர்க்கைக்கும் வேண்டாத பழக்கங்களுக்கும் அடிமையாவதற்குக்கூட காரணமாகிவிடும்.
வருவாய் அதிகமாக வருகிறது என்பதற்காகத் தேவைக்கு மிகுதியான ஆடம்பர உடைகள், பொருட்களை வீட்டில் வாங்கிக் குவிப்பது என்பது வீண் செலவு மட்டுமின்றி அதனைக் கையாள்வதும் பாதுகாப்பதுமே பெரும் சுமையாகிவிடும்.
ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தால் பணம் மீதமாகித் தக்க சமயத்தில் அது பயன்படும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல் வழிக்காட்டியாய் இருக்க வேண்டும்.
படிக்கின்றபோதே கைபேசியும், இரு சக்கர வாகனம் மற்றும் ஆடம்பரப் பொருட்களையும் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் தேவையின்றிச் சுற்றிடவும், கைபேசியே கதி என்று பொன்னான நேரத்தை வீணாக்கிடவும் படிப்பில் கவனமின்றி ஒழுங்கீனம் வளர்வதற்கும் வாய்ப்பாகிவிடும்.
நம் முன்னோர்களால் எளிமையாகக் கொண்டாடப்பட்ட தீபாவளி, பொங்கல், திருமணச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளிலும், அமைதியாக நடைபெற வேண்டிய இறுதிச் சடங்குகளிலும் ஆடம்பரச் செலவினங்களும் ஆர்ப்பரிப்புகளும் அதிகரித்துவிட்டனவே, இதனை நாகரிக வளர்ச்சி என ஏற்றுக் கொள்ள முடியுமா?
ஒருவன் எப்படிப் பணம் ஈட்டுகிறான் என்பதைவிட எப்படிச் செலவிடுகிறான் என்பதை வைத்தே அவன் எத்தகையவன் என்பதைத் தீர்மானித்து விடலாம். குறைவான வருவாய் உள்ளோர் அதற்குள் தங்கள் செலவினங்ளைத் திட்டமிடலாம். அதிக வருவாய் பெறுவோர் ஏழை, எளியவர்களுக்காக எத்தனையோ வகையான நலத் திட்டங்களுக்கு உதவிடலாம்.
இலவச மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஏற்படுத்திச் செலவுகள் செய்திடலாம். தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளைத் தரலாம். ஊனமுற்றோருக்கு ஏற்ற தொழிற்கூடங்கள் அமைத்து உதவலாம்.
ஆடம்பரப் பகட்டு வாழ்க்கைக்காக அனாவசியமாகச் செலவிடுவதைத் தவிர்த்துத் தனது செல்வத்தால் அறச் செயல்கள் பல செய்து நிறைவு காண்பதே செல்வம் பெற்றதன் பயனாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com