சந்தை நோக்கம் ஏற்றம் தராது!

நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படையான விவசாயம், தொழில்துறை, அயல் வர்த்தகம் ஆகியனவற்றை சாதக, பாதகமான வகைகளில் பாதிக்கக்கூடிய இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக
சந்தை நோக்கம் ஏற்றம் தராது!

நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படையான விவசாயம், தொழில்துறை, அயல் வர்த்தகம் ஆகியனவற்றை சாதக, பாதகமான வகைகளில் பாதிக்கக்கூடிய இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தங்கள் மீதான விரிவான பேச்சுவார்த்தையில் இந்திய ஒன்றிய அரசின் வர்த்தக அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. 
முதலாவது, தென் கிழக்கு ஆசிய நாடுகளான புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார் (பர்மா), பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்புடன் ஆசிய - பசிபிக் மண்டலத்தின் பெரும் பொருளாதாரங்களான சீனா, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகியவற்றுடன் இணைந்துள்ள இந்தியா, இந்த 16 நாடுகளும் இணைந்து உருவாக்கிவரும் மண்டல விரிவான பொருளாதார கூட்டாண்மை  (Regional Comprehensive Economic Partnership - RCEP)  எனும் தடையற்ற வர்த்தகக் கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 
இரண்டாவதாக, இந்தியா ஏற்கனவே இணைந்துள்ள உலக வர்த்தக கட்டமைப்பில் (WTO)  பன்னாட்டு வர்த்தகத்தின் மீதான தீர்வைத் தடைகளை மேலும் தளர்த்துவது தொடர்பான பேச்சுவார்த்தையாகும். 
இதில் ஆசியான் பிளஸ் 6 அமைப்பு உருவாக்க முற்பட்டுள்ள மண்டல விரிவான பொருளாதார கூட்டாண்மை என்பது ஆசிய - பசிபிக் மண்டலத்திலுள்ள இந்த 16 நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய ஒப்பந்தத்தை உருவாக்குவதன் மூலம் ஆசிய பசிபிக் மண்டலத்திலுள்ள நாடுகள் மேம்பட்ட வளர்ச்சியை எட்டுவதும் அதன் மூலம் அனைத்து மக்களும் பயனடையும் வகையில் வேலைவாய்ப்புகளை அதிகரித்து பொருளாதார மேம்பாட்டை விரிவுபடுத்துவதும் என்கிற இலக்கை கொண்டது என்று அதன் அமைச்சர்கள் மாநாட்டு அறிக்கை கூறுகிறது. 
1998-இல் உலக வர்த்தக அமைப்பில் இணையும்போது பொருளாதார வளர்ச்சிக்கும் செழுமைக்கும் அவசியமானது என்று சொல்லப்பட்டது போன்றே ஆசியான் பிளஸ் உருவாக்கும் புதிய அமைப்பின் இலக்கும் உள்ளது. இவ்வமைப்பை உருவாக்க இதுவரை 19 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. 
2013-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய பேச்சுவார்த்தையின் 19-ஆவது சுற்று கடந்த ஜூலை மாதம் 19 முதல் 28-ஆம் தேதி வரை தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இத்தனை முறை நடைபெற்றும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு அல்லது முன்னேற்றம் ஏற்பட்டதா என்பது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிக்கை என்று எதுவும் வெளியிடப்படவில்லை. 
மாறாக, கடைசியாக நடந்த ஹைதராபாத் சுற்றுவரை பேசப்பட்ட விடயங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் இத்தனைச் சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் ஏன் உடன்பாடு காணப்படவில்லை என்கிற கேள்விக்கு பதிலாக கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
உலக மக்கள்தொகையில் 45 விழுக்காட்டினர் வாழும் இந்த 16 நாடுகளுக்கு இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பும் வளர்ச்சியும்தான் இலக்கு என்று சொல்லப்பட்டாலும், பேச்சுவார்த்தையின் மையம் ஏற்றுமதி இறக்குமதி மீது விதிக்கப்படும் தீர்வைகளை நீக்கும் ஒற்றை நோக்கத்திலேயே சுழல்கிறது. 
இவ்வமைப்பை உருவாக்க முற்படும் நாடுகளில் மிகப் பெரிய பொருளாதாரமான சீனாவே இதனால் பெரும் பயனடையும் நாடாக இருக்கப் போகிறது என்பதை உணர்ந்துள்ள நமது நாடு, இறக்குமதித் தீர்வைகளை முழுமையாக நீக்கிவிட வேண்டும் என்கிற ஆசிய பசிபிக் நாடுகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து வருவதாலேயே இத்தனை சுற்றுக்களுக்கு பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே போகிறது. 
நமது வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் செல்லிடப்பேசியில் இருந்து பல நூறு வகையான மின்னணுப் பொருட்கள் மட்டுமின்றி, வீட்டு உபயோகப் பொருட்கள், தொழில் உற்பத்தி இயந்திரங்கள், வாகன டயர்கள் என்று 5,000-த்துக்கும் அதிகமான பொருட்களின் மீது இந்தியா விதிக்கும் தீர்வைகளை 92 விழுக்காடு குறைக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபடும் மற்ற 15 நாடுகள் வலியுறுத்துகின்றன. 
தொழிலக உற்பத்திப் பொருட்கள் மட்டுமின்றி, இந்நாடுகளின் வேளாண் மற்றும் தோட்டத் தொழில் உற்பத்திகளுக்கும் விதிக்கும் இறக்குமதித் தீர்வைகளை இந்தியா முழுமையாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கோருகின்றன. அதோடு தொழிலக உற்பத்திப் பொருட்களுக்குத் தேவையான கனிமங்களின் மீதான ஏற்றுமதித் தீர்வைகளையும் நீக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. 
இக்கோரிக்கைகளை இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வருகிறது. ஆசியான் அமைப்பின் 10 நாடுகளுடன் இந்தியா ஏற்கெனவே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளதால் அவற்றை இழக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. அவற்றின் ஏற்றுமதி மீதான தீர்வைகளை 92 விழுக்காடு அளவிற்காவது நீக்க வேண்டும் என்பதையும் ஏற்க மறுத்துவிட்டது. 
சீனா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய முன்னேறிய நாடுகளின் இறக்குமதிகளின் மேல் 42.5 விழுக்காடும், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் இறக்குமதிக்கு 62.5 விழுக்காடும், இதர ஆசியான் நாடுகளுக்கு 80 விழுக்காடு பொருட்களின் மீதான தீர்வைகளை விலக்கிக் கொள்ள இந்தியா முன்வந்தது. 
இந்தத் திட்டத்தை இவ்வமைப்பிலுள்ள வியத்நாம் தவிர வேறு எந்த நாடும் ஏற்கவில்லை. அனைத்து நாடுகளுக்கும் ஒரே தீர்வை என்பதே இலக்கு என்றும் அதனடிப்படையில் 92 விழுக்காடு பொருட்களின் மீதான வர்த்தகத்திற்கு தீர்வை விலக்கு அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. 
இன்றைய நிலையில் கீழை நாட்டு உற்பத்திகளின் மீது இறக்குமதித் தீர்வை நடைமுறையில் இருந்தாலும் கொசுவிரட்டியில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்கள் பலவும் சீனத் தயாரிப்புகளாவே உள்ளன. 
இந்தியாவில் உரிமம் பெற்று தயாரிக்கப்படும் சீன நிறுவனங்களின் செல்லிடபேசிகள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அயல் நாட்டு உற்பத்திகளும் பெருமளவிற்கு விற்பனையாகின்றன. இந்த நிலை நீடித்தால் நமது நாடு நுகர்வோர் சந்தை என்கிற நிலையில்தான் நீடிக்க வேண்டும். 
நம் நாட்டில் தொழிலக வளர்ச்சியும் உற்பத்திப் பெருக்கவும் ஏற்படாவிட்டால் தொழில்நுட்ப வளர்ச்சியும், வேலை வாய்ப்புப் பெருக்கமும் எப்படி ஏற்படும்? 
எடுத்துக்காட்டாக, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரேடியல் டயர்களால் தங்களுடைய தயாரிப்புகளுக்கு சந்தையில் பெரும் போட்டி ஏற்படுகிறது என்று நமது நாட்டின் வாகன டயர் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். 
இப்போது ரேடியல் டயர் இறக்குமதிகள் மீது 25 விழுக்காடு தீர்வை விதித்துள்ளது இந்திய ஒன்றிய அரசு. இதுபோலவே டயர்கள் உற்பத்திக்கான ரப்பரும் சீனாவில் இருந்து பெருமளவில் இறக்குமதியாவதால் தங்கள் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று நம் நாட்டு ரப்பர் தோட்டத் தொழிலகங்கள் கூறுகின்றன. இதற்குக் காரணம் சீன அரசு அந்நாட்டின் தோட்டத் தொழில்களுக்கு அளிக்கும் மானியமும், சலுகைகளும் ஆகும். 
இதுபோலவே விவசாய - உணவு உற்பத்திப் பொருட்களுக்கு நமது நாட்டு அரசு அளிக்கும் மானியத்தை குறைத்திட வேண்டும் என்று கோரும் உலக வர்த்தக அமைப்பு மற்றும் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவர்கள் நாட்டு விவசாய உற்பத்திகளுக்கு கொடுக்கும் மானியங்களைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறது. அந்நாடுகள் கொடுக்கும் அழுத்தத்திற்கு இணங்கியே நமது நாட்டு அரசும் - வேறு காரணங்களைக் கூறி - மானியத்தை குறைத்து வருகிறது.
தங்களுடைய தோட்டத் தொழில் ஏற்றுமதிக்கான தீர்வைகளையும் நீக்க வேண்டும் என்று ஏசியான் - பசிபிக் நாடுகள் கேட்கின்றன. ஏற்கெனவே வியத்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகு சந்தையில் பெருகியதால் இந்நாட்டு மிளகிற்கு விலை கிடைக்காததால் மிளகுச் சாகுபடியில் ஈடுபடப் போவதில்லை என்று நம் விவசாயிகள் கூறியுள்ளார்கள். 
நியூஸிலாந்து நாடு பால் உற்பத்தியில் தனது தேவையைவிட ஐந்து மடங்கு அதிகமாக உற்பத்தி செய்கிறது. அந்நாட்டின் பால் பொருள் இறக்குமதிகளின் மீதான தீர்வைகளை நீக்கிவிட்டால் உலகின் பெரும் பால் உற்பத்தி நாடான இந்தியாவின் நிலை என்னாவது? 
இந்தியாவின் சந்தையை முழுமையாக திறந்துவிட வேண்டும் என்று கோரும் ஆசியான் பசிபிக் நாடுகள், தங்கள் நாடுகளில் வேலைவாய்ப்புகளை இந்தியாவின் இளையோருக்கு வழங்க மறுக்கின்றன! ஆஸ்திரேலியா தனது நாட்டின் பணி அனுமதி விசா விதிகளை தளர்த்த தொடர்ந்து மறுத்துவருகிறது. 
ஆக தங்கள் நாட்டின் வேலைவாய்ப்புகளை பகிர்ந்துகொள்ள மறுக்கும் இந்நாடுகள் தங்கள் உற்பத்திகளுக்கு இந்தியா தனது சந்தையைத் திறந்துவிட வேண்டும் என்று கோருகின்றன. இதுதான் பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டிருப்பதற்குக் காரணம்.
இதுமட்டுமல்ல, நமது நாட்டில் விற்கப்படும் மருந்து பொருட்களின் மூலங்கள் தொடர்பான விவரங்களையும் தர வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. மூலப் பொருட்களில் தங்கள் நாட்டில் பதிவான அறிவுச் சொத்துரிமை இருந்தால் அப்பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை கோருகின்றன. 
இந்தியா 130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட மாபெரும் பொருளாதாரம். இதனை சந்தை நோக்கோடு அணுகும் எந்த அமைப்பின் ஒப்பந்தமும் நமது ஏற்றத்திற்கு எதிரானது என்பதை இந்திய அரசு உணர வேண்டும். 

கட்டுரையாளர்:
பத்திரிகையாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com