தரணியெங்கும் தமிழ்க்கல்வி

உலக நாடுகளில் முதன்முதலில், அதாவது 1816-இல் தமிழ்ப் பள்ளியை தொடங்கிய நாடு மலேசியா! அங்கு தமிழ்ப் பள்ளி தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.
தரணியெங்கும் தமிழ்க்கல்வி

உலக நாடுகளில் முதன்முதலில், அதாவது 1816-இல் தமிழ்ப் பள்ளியை தொடங்கிய நாடு மலேசியா! அங்கு தமிழ்ப் பள்ளி தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. தமிழ்க் கல்வியின் 200-ஆவது ஆண்டு நிறைவு விழா மலேசியாவிலும், தமிழ்நாட்டிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவுக்கு, 1840-இல் கரும்புத் தோட்டங்களிலும், 1870-இல் காபி தோட்டங்களிலும், 1890-இல் ரப்பர் தோட்டங்களிலும் வேலை செய்வதற்காகத் தமிழர்கள் புலம் பெயர்ந்தனர்.
தென்கிழக்கு ஆசியாவிலே பினாங்கில், 1816-இல் 'தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ்' என்ற ஐரோப்பிய மாநிலத்தைச் சேர்ந்த ராபர்ட் ஸ்பார்க் ஹச்சிங்ஸ் (Robert Sparke Hutchings)   என்ற பாதிரியாரால் 'பினாங் இலவசப் பள்ளி' என்ற பள்ளி தொடங்கப்பட்டது. 
தென்கிழக்கு ஆசியாவின் முதல் ஆங்கிலப் பள்ளி என்ற பெருமை இந்த பள்ளியையே சாரும். இதே ஆண்டில் 21 அக்டோபர், 1816-இல் இந்த பள்ளியின் ஒரு பிரிவாகத் தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது.
இதுதான் உலக நாடுகளில் தொடங்கப்பட்ட முதல் தமிழ்ப் பள்ளி என்றும் போற்றப்படுகிறது. 1912-இல் 7 வயது முதல் 10 வயதுக்கு உட்பட்ட பத்துக் குழந்தைகள் இருந்தாலே அந்த 'தோட்ட நிர்வாகம்' ஒரு தமிழ்ப் பள்ளியை நிறுவ வேண்டும் என அப்போதைய ஆங்கில அரசு சட்டம் இயற்றியது. 
மாணவர்களின் வருகைப்பதிவு, தேர்ச்சி முடிவு இவற்றினை அடிப்படையாகக் கொண்டு தோட்ட நிர்வாகம் மாணாக்கர்களுக்கு ஆறு வெள்ளி நிதியுதவியும் செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இதன் காரணமாகவும் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை கூடியது. மலேசியா 1957-இல் சுதந்திரம் அடைந்தபோது அங்கு 888 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. 
தற்போது மலேசிய அரசு தேசியக் கல்வித் திட்டத்தில் 524 தமிழ்ப் பள்ளிகளில் தமிழ்மொழியை மூன்றாம் மொழியாகக் கற்றுக்கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. 
மலேசிய நாட்டின் முதல் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1956-ஆம் ஆண்டு முதலே இந்தியவியல் துறையில் தமிழ்மொழி கற்பிக்கப்பட்டு வருவதுடன் மலாய் மொழியிலும் தமிழ் இலக்கியமும், பண்பாடும் கற்பிக்கப்பட்டு வருகிறது. 
இப்பல்கலைக்கழத்தில் 1998-ஆம் ஆண்டு முதல் இளநிலை தமிழ் பட்டப் படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தமிழ்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று - தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே சிங்கப்பூரில்தான், அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழி தமிழ்மொழி ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1951 முதல் சிங்கப்பூரில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. 
1968 முதல் பல்கலைக்கழக புதுமுக வகுப்பு நிலையிலும் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் நான்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் தமிழ்மொழியைப் பயிற்றுவித்து வருகின்றன. 
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மோரீஷஸ் போன்ற நாடுகளில் அரசு பள்ளிகளிலோ, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளிலோ, தமிழ்மொழியினை இரண்டாவது மொழியாகவோ அல்லது மூன்றாவது மொழியாகவோ மழலையர் கல்வியில் இருந்து மேல்நிலைக் கல்வி வரை தொடர்ச்சியாக படிக்கும் வாய்ப்பும் சூழலும் உள்ளது.
அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் என்ற தன்னார்வ அமைப்பு, இந்தக் கல்வி ஆண்டு முதல் (2017-2018) தமிழ்ப் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை அரசிடம் இருந்து பெற்றுத் தந்ததோடு, மாணவர்கள் தமிழ் மொழியினைப் படித்து மொழிப்பாடத்திற்கான உரிய மதிப்பெண்களைப் பெறும் வாய்ப்பினை உருவாக்கித் தந்துள்ளது.
இதேபோன்று கலிபோர்னியா தமிழ் கல்விக் கழகமும், சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்க்கல்வியை வழங்கி வருகிறது. 
அமெரிக்காவில் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்கும் பணியை, பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள்தான் தன்னார்வத்துடன் விடுமுறை நாட்களில் செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய பள்ளிப் பருவத்தில் பெற்ற தமிழ்க்கல்வி அறிவினைப் பயன்படுத்தியும், தானே கற்றும்தான் கற்பிக்கிறார்கள்.
அவர்களுக்கு உயர்நிலை இலக்கணப் பாடங்களையும், செய்யுள் பாடங்களையும் கற்பிப்பதற்கு போதிய பயிற்சி இல்லை. பயிற்சி அளிக்கக்கூடிய ஆசிரியர்களும் இல்லை. ஒரு சிலர் அப்படி இருந்தாலும் பல்வேறு மாநிலங்களுக்கும் நீண்டதூரப் பயணம் மேற்கொண்டு மற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் சாத்தியமில்லை. எனவே இதற்கான உதவியை அவர்கள் தமிழக அரசிடம் இருந்தும் தமிழகப் பல்கலைக்கழகங்களிடம் இருந்தும் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
இவை அனைத்தும் பள்ளி நிலையில் தமிழ்க்கல்வி பெறும் வாய்ப்புகளாகும். உயர்கல்வியைப் பொருத்தவரை இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மோரீஷஸ் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு என்று தனித்துறைகள் தொடங்கப்பட்டு இளநிலை படிப்பில் இருந்து ஆராய்ச்சிப் படிப்புகள் வரை வழங்கப்படுகிறது.
ஜெர்மன் நாட்டில் உள்ள மிகத் தொன்மையான பல்கலைக்கழகமான ஜடல்போர்க் பல்கலைக்கழகத்திலும், கோலோன் பல்கலைக்கழகத்திலும் தொடக்க நிலையில் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் 1209-இல் தொடங்கப்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், உலகிலே அதிக மாணாக்கர்களைக் கொண்ட (ஆண்டிற்கு 1,30,000 பேர்) லண்டன் பல்கலைக்கழகத்திலும், தெற்காசிய பிரிவில் தொடக்க நிலையில் இருந்து இளங்கலை பட்டம் வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது.
கனடாவில் 1827-இல் தொடங்கப்பெற்ற ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழியல் பிரிவு உள்ளது என்றாலும், தொடக்கநிலையில் மட்டுமே தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது. யோர்க் பல்கலைக்கழகத்திலும், மில்கில் பல்கலைக்கழகத்திலும் தமிழ் அறிமுக நிலைப் பாடங்களாகவும், அயலக மொழியாகவுமே கற்பிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் பதினைந்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி பல்வேறு நிலைகளில் கற்பிக்கப்படுகிறது. உலகத் தரவரிசையில் தொடர்ந்து இடம்பெறும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தெற்காசியவியல் பிரிவில் தமிழ் தொடக்க நிலையிலும், இடைநிலையிலும், உயர்நிலையிலும் கற்பிக்கப்படுகிறது. 
அதிக அளவிலான பாடநூல்களைப் பயன்படுத்தி குறிப்பாக நவீன தமிழ் இலக்கியப் பிரதிகளைப் பயன்படுத்தி பேசுதல், எழுதுதலை மையப்படுத்தி இங்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இத்துடன் சமீபத்தில் தமிழ் இருக்கை (Tamil Chair) உருவாக்கப்பட்டு, தமிழ்மொழியில் உயர் ஆய்வு மேற்கொள்ளும் நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. 
இதுமட்டுமல்லாது வசதியற்ற மாணவர்கள் உயர்கல்வி பயில சுமார் 800 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்தப் பல்கலைக்கழகமானது முன்னாள் மாணவர்கள், தனிப்பட்ட ஆர்வலர்களின் நிதியுதவியுடன் தன்னாட்சி நிலையில் நிர்வகிக்கப்படுகிறது என்பது இதன் தனிச்சிறப்பாகும். 
இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியைப் பயில்வதும் ஆராய்ச்சி மேற்கொள்வதும் பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது.
ஹார்வர்டைவிட நீண்ட சாதனைப் பட்டியலைக் கொண்டது பெர்கிலி மாநிலத்தில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று தனித்துறையே செயல்படுகிறது. தமிழில் ஆராய்ச்சிப் படிப்பு வரை இங்கு படிக்க முடியும்.
இலினொய் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தில் படித்த 89 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள். அந்தப் பல்கலைக்கழகத்திலும் தமிழ் ஒரு மொழியாகக் கற்றுக் கொடுப்பதுடன் தமிழில் உயர் ஆய்வு மேற்கொள்ள தேவையான வாய்ப்பும் உருவாக்கித் தரப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம், தொன்மையான யேல் பல்கலைக்கழகம், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுவதுடன் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
உஸ்பெஸ்கிஸ்தான், ரஷியா, செக், பிரான்ஸ் நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் போலந்தில் உள்ள வர்சா பல்கலைக்கழகத்திலும் தமிழ் மொழிக்கென்று தனிஇடம் உள்ளது. வர்சா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் இருந்து பேராசிரியர்கள் சென்று தமிழ் கற்பிக்கிறார்கள்.
இது தவிர்த்து பல்வேறு நாடுகளில் உள்ள மொழி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் தமிழ்மொழியினை, தனிப்பட்ட நிலையில், வணிக ரீதியாக குறுகிய கால, கோடைகால வகுப்புகளாகவும், இணையவழிப் பயிற்சி வகுப்புகளாகவும் நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் குறிப்பாக தமிழ் மொழிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனங்கள் உலகளாவிய நிலையில் பல்வேறு நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களோடு, குறுகிய கால, நீண்டகால ஒப்பந்தங்கள் செய்துகொண்டு பணியாற்ற வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது தற்போதைய தேவையும் கூட.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com