தவறுகள் திருத்தப்படலாம்

எந்த ஒரு நிறுவனத்திலும் ஓர் அதிகாரியை நியமிப்பதற்கு என்று ஏதேனும் ஒரு தேர்வு முறையைப் பின்பற்றும்.

எந்த ஒரு நிறுவனத்திலும் ஓர் அதிகாரியை நியமிப்பதற்கு என்று ஏதேனும் ஒரு தேர்வு முறையைப் பின்பற்றும். அப்படி தெர்ந்தெடுக்கப்பட்டவர் தவறிழைத்தால் அவரை அப்பதவியில் இருந்து நீக்கும் உரிமையை அந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. 
தகுந்த காரணங்களின் அடிப்படையில் ஒருவரை பணிவிலக்கு செய்யும் அதிகாரம் அவர்களை நியமித்தவர்களுக்கு உண்டு. வேறொருவரை நியமிக்கும் அதிகாரமும் இருக்கிறது.
உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில், வாக்காளர்கள் ஒருமுறை ஒரு வேட்பாளரை தங்களது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டால், அப்பிரதிநிதியின் செயல்பாடுகளில் தவறு இருந்தால் அவரை தேர்ந்தெடுத்தவர்களுக்கேகூட, அவரை பதவி நீக்கும் அதிகாரம் இல்லை. 
அவருக்கு மாற்றாக வேறொருவரை தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமையும் இல்லை. மறுதேர்தல் வரும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் தலைமைக்கு இருக்கும் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம், தேர்ந்தெடுத்த மக்களுக்கு இல்லாதது பெருங்குறை.
நமது அரசியல் சட்டம் உருவாக்கப்படும்போது, இது குறித்து ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த லோக்நாத் மிஸ்ரா என்பவர் கூறியதாவது: அரசியல் கட்சிகள் சார்ந்த தேர்தல் முறையில் , வேட்பாளர்கள், தங்களது கட்சித் தலைமைக்குத்தான் விசுவாசமாக இருப்பர். உண்மையான எஜமானர்களான மக்களுக்கு, வாக்காளர்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்க மாட்டார்கள். 
எனவே, வாக்காளர்களுக்கு தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதியை திரும்ப அழைக்கும் உரிமை இருக்க வேண்டும். இது மிகவும் அடிப்படையான உரிமை ஆகும். 
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு தங்களை தேர்ந்தெடுத்தவர்களை மதிப்பதைவிட, தங்களது கட்சி தலைமையை திருப்தி செய்வதில்தான் கவனம் செலுத்துவர்.
எனவே, நாம் நமது எஜமானர்களான மக்களின், வாக்காளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கும் வரையில்தான் பதவியில் அவர்களது பிரதிநிதியாக திகழ வேண்டும். அவர்களது நம்பிக்கையை இழக்கும்போது, அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை திரும்ப அழைக்கும் உரிமையை, அவர்களை உபயோகிக்கும் அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும் என்றார்.
அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எப்படி தீர்க்க தரிசனத்தோடு பேசினார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் அவரது கருத்துகள் சட்ட வடிவம் பெறவில்லை .
இத்தகைய நிலை நம் நாட்டில் மட்டும்தானா? பிரதிநிதிகளை திரும்ப அழைத்து - வேறு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் வேறு நாடுகளில் இருக்கின்றதா?
உலகில் சில நாடுகளின் மாகாணங்களில் இத்தகைய உரிமை வாக்காளர்களிடம் இருக்கிறது. 
உதாரணமாக, கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், அமெரிக்காவின் அலெஸ்கா, கலிஃபோர்னியா, ஜார்ஜியா, கன்சாஸ் உள்ளிட்ட சில மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களது பிரதிநிதிகளை திரும்பி அழைக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. 
இம்மாகாணங்களில் வாக்காளர்களுக்கு இந்த உரிமை இருக்கிறது என்றாலும், அது சில கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
உதாரணமாக சில மாநிலங்களில், குறைந்தபட்சமாக நாற்பது சதவீத வாக்காளர்கள் கையெழுத்து இட்டு விண்ணப்பித்தால் அக்கோரிக்கை முன்னெடுத்து செல்லப்படும். போதிய காரணங்களின் அடிப்படையில் வாக்கெடுப்பு நிகழ்த்தப்படும். 
அதுபோல தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னரே, இந்த உரிமையை பிரயோகிக்க முடியும். ஒருவர் மீது எத்தனை முறை இந்த உரிமையை பிரயோகிப்பது, எவ்வளவு கால இடை வெளிக்கு பின்னர் இத்தகைய உரிமையை உபயோகிக்க முடியும் என்பன போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளன. 
இவை மூலம், இவ்வுரிமை சரியான முறையில் பயன்படுத்தப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்களே - வாக்காளர்களே, அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளைவிட வல்லமை கொண்டவர்கள் என்ற அடிப்படை உண்மையை நிலை நிறுத்தும் வகையில் இந்த உரிமை வாக்காளர்களுக்கு இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டும்.
நம் நாட்டில் அவ்வப்போது இது குறித்து பேசப்பட்டாலும், தொகுதிகளின் பரப்பளவு, மக்கள்தொகை, நடைமுறை சிக்கல்கள், குழப்பங்கள், ஏராளமான செலவினம் போன்றவை, இத்தகைய சட்டத் திருத்தத்தை இதுவரை கொண்டு வர இயலாததற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
நம் நாட்டில் வாக்காளர்களின் முக்கியத்துவத்தை உறுதி செய்யும் வகையிலும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல்களை கண்காணிக்கும் வகையிலும் இதுபோன்ற சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும். 
குறைந்தது அறிஞர் பெருமக்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் இன்னும் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் உச்சநீதிமன்றம் இது குறித்து முனைப்பு காட்டினால் ஒருவேளை பயனளிக்கும்.
இவற்றையெல்லாம்விட தேர்தல் நேரங் களில் வாக்களிக்கும் முன்னர், நன்கு சீர்தூக்கி, நல்ல நாணயமான - திறமையான - சேவை மனோபாவம் கொண்ட வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தால் அவரைத் திரும்பி அழைக்கும் அவசியமே எழாது போகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com