குழப்பத்தில் வீடு கட்டும் திட்டம்

இந்தியாவில் அனைவருக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்தி தருவதற்கான பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டம் தமிழகத்தில் அரசியல் மற்றும் நிர்வாக குழப்பங்களால் நிலைகுலைந்து உள்ளது. 

இந்தியாவில் அனைவருக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்தி தருவதற்கான பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டம் தமிழகத்தில் அரசியல் மற்றும் நிர்வாக குழப்பங்களால் நிலைகுலைந்து உள்ளது. 
இந்த திட்டத்தின் படி கடந்த 2016-ஆம் ஆண்டில் முடிக்க வேண்டிய பணிகளே தேங்கியுள்ள நிலையில், இந்தாண்டுக்கான (2017) புதிய இலக்கை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 
ஆனால் பயனாளிகள் தேர்வு முதல், மணல், சிமெண்ட் வரையிலான பிரச்னைகளுக்கு அரசு தீர்வு எற்படுத்தினால்தான் இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்று ஊரக வளர்ச்சி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பா.ஜ.க. அரசு 2022-க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி என்ற லட்சியத்தை எட்டுவதற்காக பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டம் என்ற இந்தத் திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகிறது. 
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2017-18இல் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 214 வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் மத்திய - மாநில அரசுகள் இணைந்து ரூபாய் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மானியம் வழங்கும். 
தமிழகத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட பணிகளே இன்னும் நிறைவடையவில்லை. குறிப்பாக, பயனாளிகள் தேர்வில் குளறுபடி மணல், சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இப்போது வரை எட்டப்படவில்லை.
இந்நிலையில் இந்தாண்டுக்கான புதிய இலக்கை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை வட்டாரங்களிடம் கேட்டால், அனைவருக்கும் வீட்டுவசதி வழங்கும் திட்டம் நல்ல திட்டம்தான். 
ஆனால் வழக்கம்போல் அரசியல் லாப நோக்கம், நிர்வாக குழப்பங்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் இந்தத் திட்டம் நிலைகுலைந்துள்ள நிலையில் உள்ளது. அதோடு இந்தத் திட்டத்திற்கான பயனாளிகளை சமூக பொருளாதார கணக்கெடுப்புப் பட்டியலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. 
இதில்தான் சிக்கலும் குளறுபடியும் தொடங்குகின்றன. தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள், தங்களை கவனித்தவர்கள், தங்களின் கட்சிக்காரர்கள் என்ற முறையில் பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்ய வேண்டுமென்று ஆளுங்கட்சி தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
பயனாளிகளைத் தேர்வு செய்த பின்னர் அவர்களே பெயரை பதிவு செய்ததும் வீடுகட்டும் பணியை தொடங்குவதற்கான உத்தரவைக் கொடுக்கச் சொல்கின்றனர். அந்த ஆர்டர் கொடுத்ததும் மானிய பணத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். ஆனால் மானிய பணத்தை குறித்த காலத்தில் சரிவர ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்கிறார்கள். பயனாளிகள் வங்கிப் பணத்தை வைத்து வீடு கட்டும் பணியை செயல்படுத்த வேண்டும். 
ஆனால் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பலரும் அந்தப் பணத்தை வேறு நடவடிக்கைகளுக்கு செலவு செய்கின்றனர். இந்தநிலை திட்டத்தின் பொறுப்பாளர்களான ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்துள்ளதால் ரூபாய் 1.70 லட்சத்தை வைத்து வீடு கட்டும் பணியை தொடர முடியாத பெரும் திணறல் ஏற்பட்டுள்ளது. மணல் தட்டுப்பாடு பிரச்னை இன்னும் முடிந்தபாடில்லை. ஒரு யூனிட் மணல் விலை ரூ.36,000 வரையுள்ளது. செங்கல் விலையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. 
கொடிக்கட்டி பறந்த செங்கல் தொழிலில் சமீப காலமாக சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆற்று மணல் தட்டுப்பாடு காரணமாக செங்கல் விற்பனை சரிந்துவிட்டது. உற்பத்தியான செங்கல் எல்லாம் விற்பனையாகாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. புதியதாக உற்பத்தியும் நடக்கவில்லை. 
தொழில் முடக்கம் காரணமாக இங்குள்ள தொழிலாளர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். பொதுவாக கட்டுமானத் துறையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கேற்ப தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் செங்கல் உற்பத்தி இருக்கும். சிறிது சரிவு எற்பட்டாலும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். ஆனால் சமீப காலமாக செங்கல் உற்பத்தி தொடர் சரிவை நோக்கி செல்கிறது. 
ஏற்கெனவே சீமை கருவேல மரங்களை வெட்டி அழித்ததால் செங்கல் சூளையில் வேகவைக்க விறகு கிடைக்காமல் சிறிது தொய்வு ஏற்பட்டு செங்கல் விலை அதிகரித்துள்ளது. சிமெண்ட் தட்டுப்பாடு பிரச்னையை அம்மா சிமெண்ட் மூலம் தீர்க்கலாம் என்றாலும் அது குறித்த காலத்தில் வந்து சேருவதில்லை. 
இத்தகைய பிரச்னைகளால் 2016-17இல் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 338 வீடுகளின் கட்டுமான பணிகள் தேங்கியுள்ளன.
இந்நிலையில் நிகழாண்டில் மேலும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 214 வீடுகள் கட்டப்படும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
ஆண்டுதோறும் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடுவதால் யாருக்கு என்ன லாபம்? பயனாளிகள் தேர்வு முதல் மணல், சிமெண்ட் வரையிலான பிரச்னைகளுக்கு அரசின் தீர்வு என்ன? 
அரசியலிலும் ஆட்சியிலும் ஏற்பட்டுள்ள குழப்பம் எப்போது தீரும்? இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்தால்தான் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தி இலக்கை அடையமுடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com