உழுவார் உலகத்தார்க்கு ஆணி!

நம் தேசத்தின் தலையாய பிரச்னையாக விவசாயிகளின் வாழ்க்கைப் பிரச்னை உருவாகியுள்ளது.

நம் தேசத்தின் தலையாய பிரச்னையாக விவசாயிகளின் வாழ்க்கைப் பிரச்னை உருவாகியுள்ளது. இதை சரியானபடி கவனிக்காமல், அரசியல் செய்வது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் விவசாய சங்கங்களுக்கும் பழகிப் போன ஒரு செயலாகி விட்டது. இந்தப் பிரச்னையின் அடிப்படை அம்சங்களை சரியானபடி புரிந்து கொள்ள வேண்டியது நம் எல்லோருக்கும் அவசியமாகியுள்ளது.
இந்தியாவில் 1995-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலும் 3 லட்சத்து, 18 ஆயிரத்து, 528 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பதை தேசிய குற்றக் கணக்கீடு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கூட்டமைப்பு நமது மாநில அரசுகள் இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்ற விவரங்களை கேட்டுள்ளது. 
மேலும் மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்ற விவரங்கûளையும் கேட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் தற்கொலைக்கான அடிப்படை காரணங்கள் என்ன என்பதை கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
நம் நாட்டில் 130 கோடி மக்களில், 11 கோடியே 87 லட்சம் பேர் விவசாயிகள் மற்றும் 14 கோடியே 43 லட்சம் பேர் விவசாயத் தொழிலாளிகள். 1950-51-ஆம் ஆண்டில் நம் நாட்டின் உணவுப் பயிர் உற்பத்தி 5 கோடியே 10 லட்சம் டன். ஆனால் இது உயர்ந்து இந்த ஆண்டில் (2016-17) 27 கோடி 30 லட்சம் டன்னாகியுள்ளது. உணவுப் பொருள்களின் தட்டுப்பாட்டை விடவும், அவற்றிற்கான விலை வீழ்ச்சியே விவசாயம் செய்பவர்களின் நஷ்டத்திற்கான காரணமாகியுள்ளது. 
எல்லா நாடுகளிலும் உணவு உற்பத்தி பன்மடங்காக உயர்ந்து, அதனால் ஏற்றுமதிகள் அதிகமாகி போட்டி விற்பனைகள் உருவாகி உணவுப் பொருள்களின் விலை வீழ்ச்சியடைந்தது. அதிக விஞ்ஞான முறைகளினாலும், சரியான நில கட்டமைப்புகளாலும் உற்பத்தியை அதிகரித்து பிற நாடுகளின் விவசாயிகள் லாபம் ஈட்டும் முறையை கடைப்பிடிக்கிறார்கள்.
2012-13ஆம் ஆண்டில், நம் நாட்டில் விவசாயம் செய்யப்பட்ட நிலங்களின் அளவு 35 கோடியே 50 லட்சம் ஏக்கர்கள். குறுவிவசாயிகள் என விவரிக்கப்படுபவர்கள் 2.5 ஏக்கர் நில உடைமையாளர்கள். பின்னர் குறுவிவசாயிகளின் எண்ணிக்கை உயர்ந்துபோனது. 1971-ஆம் ஆண்டு 3 கோடியே 60 லட்சமாக இருந்த குறு விவசாயிகளின்எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டில் 9 கோடியே 30 லட்சமாக உயர்ந்தது. 
இதனால், நம் நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி பயிரிடும் நிலத்தின் அளவும் குறைந்து போனது. இதை விடவும், 'எழுபது சதவீத விவசாயிகள் நம் நாட்டின் விவசாய நிலங்களில் 30 சதவீதத்தை உடையவர்களே' எனக் கூறுகிறார் விவசாய ஆய்வாளர் யோகிந்தர் அலாஃக். இந்த விவசாயிகளில் பெரும்பாலோரின் நிலம் ஒரு ஏக்கருக்கும் கீழேயே உள்ளது.
இதுபோன்ற சிறிய அளவு நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளில் பலர் அவற்றை தலைமுறை தலைமுறையாகப் பெற்றிருப்பார்கள். அதற்கு முறையான உரிமைகளான பட்டா மற்றும் குத்தகை பதிவுகள் இவர்களிடம் இருக்காது. அதனால் அரசின் விவசாயத் திட்டங்களின் பலன்களையும் மானியங்களையும் அவர்களால் பெற முடியாது. 
நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்தியதால் பரந்துபட்ட நில உடைமைகள் நம் நாட்டின் எந்த மாநிலத்திலும் கிடையாது. மேற்கு வங்கத்தில் 17.5 ஏக்கர் நஞ்சை நிலமும், தமிழ்நாட்டில் 15 ஏக்கர் நஞ்சை நிலமும்தான் தனி ஒருவரால் வைத்திருக்க முடியும்.
உலகின் முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் விவசாயம் பிற உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு ஈடாக போட்டி போடுவதை நாம் கண்கூடாக காண முடியும். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் விவசாயம் செய்யப்படுவதை பார்த்தால், இந்தியர் ஒருவரால் அதை நம்பவே முடியாது. 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மூன்று பேர் விவசாய வேலை செய்வதை பார்க்கலாம். விவசாய நிலங்களை தயார் செய்வது என்பது தலையாய வேலை. 
நிலத்தை சமமாக வைக்காமல் உயரிய இடத்தில் ஆரம்பித்து சாய்வான நிலப்பரப்புடன் தனது 20 ஆயிரம் ஏக்கரையும் புல்டோசர் எனப்படும் இயந்திரத்தை இயக்கி ஒரு விவசாயி உருவாக்குகிறார். பின் மேல் பகுதியில் ஒரு பெரிய குழாயை நீண்ட வகையில் பதிக்கிறார். அதில் உள்ள சிறிய துவாரங்களில் நீர் கசிந்து எல்லா நிலத்திற்கும் பாயும்.
நீர் சரிசமமாக கசிந்து நிலம் தயாரான பின்னர் சிறிய ஹெலிகாப்டர் மூலம் நிலத்திற்கு விதைகள் தூவப்படும். பயிர்கள் வளர்ந்ததும் அவற்றை அறுவடை செய்வதும் பெரிய இயந்திரக் கருவிகளாலேயே. இவற்றை நல்ல விலைக்கு வாங்க பெரிய வியாபார நிறுவனங்களுடன் ஏற்கெனவே ஒப்பந்தங்கள் போடப்பட்டு முன்தொகைகளும் வாங்கப்பட்டு விடும். 
இந்த வேலைகளை ஒரு விவசாய குடும்பத்தின் கணவர், மனைவி, பிள்ளைகள் பெரிய இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து செய்து விடுகிறார்கள். சிறிய ஹெலிகாப்டர் ஒரு ஏக்கருக்கு விதை தூவ இவ்வளவு கட்டணம் என்பதை முன்கூட்டியே அறிவித்து விடுகிறது.
வியாபாரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் ஆலோசனை வழங்க கன்சல்டன்ட்கள் இருப்பதுபோல விவசாயத்திற்கும் கன்சல்டன்ட்கள் அங்கே உள்ளனர். ஒரு விவசாயி ஒரு ஏக்கருக்கு 20 டன் தக்காளி விளைவிக்கும்போது, அவரை அணுகும் ஒரு கன்சல்டெண்ட் தனது விஞ்ஞான முறையிலான பயிர் நடைமுறையை செய்தால், ஒரு ஏக்கருக்கு 80 டன் தக்காளியை அறுவடை செய்யலாம் என கூறுகிறார். இதை நிறைவேற்றித் தந்தால் ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் கட்டணம் என நிர்ணயிக்கப்படுகிறது. 
இது சரியாக நடந்து வெற்றியடைகிறது. இதுபோன்ற விவசாய நடவடிக்கைகளை நியூசிலாந்து நாட்டிலும் காணலாம். நிறைய ஐரோப்பிய நாடுகளிலும் சராசரி விவசாயிகளின் நில உடைமை 2,000 ஏக்கர்களாவது இருக்கிறது.
ஆக, இதுபோன்ற பரந்து விரிந்த நில உடைமைகளை நாம் உருவாக்க முடியாது என்ற நிலைமையில், விஞ்ஞான முன்னேற்றத்தினால் உருவான பல விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு நமது உற்பத்தியை பெருக்க முடியாது என்பது திண்ணம். அதைவிடவும் மேலாக நமது நிலங்களின் தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்துள்ளது. 
கங்கை நதிப் பிரதேசத்தின் நிலங்கள் வண்டல் மண்ணாலானவை. இவை விவசாயத்திற்கு மிகுந்த பலனளிப்பவை. ஆனால், பல ஆண்டுகளாக இந்த நிலங்களின் தரம் குறைந்து கொண்டே வந்துள்ளது. இதற்கான முக்கியமான காரணம் விவசாயம் செய்யும் பலர் நிலத்தின் மண் தரத்தைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாதவர்கள் என்பதே. 
2010-ஆம் ஆண்டு எடுத்த கணக்கின்படி, நம் நாட்டின் விவசாய நில அளவான 82 கோடியே 17 லட்சம் ஏக்கர் நிலத்தில் 30 கோடியே 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏற்கெனவே தரமற்றதாகிப் போய்விட்டன. விவசாயத்திற்கு தேவை இல்லாத உரங்கள் தேவைக்கு அதிகமாக இடப்படுவதாலும் இதுபோன்ற தரக் குறைவான நிலங்கள் உருவாகியுள்ளன.
மத்திய அரசின் திட்டப்படி உர உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதிக அளவில் மானியம் பெற தங்கள் உரங்களின் உற்பத்தி செலவையும், விலையையும் உயர்ந்த நிலையிலேயே உர உற்பத்தியாளர்கள் வைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 
இவை போக, நமது கிராமத்து விவசாயிகள் நிறைய தொகையை விவசாயக் கடன்களாக பெற்று, அவற்றை தங்கள் வாழ்க்கைச் செலவுகளுக்கு உபயோகிக்க வேண்டிய கட்டாய நிலைமையில் உள்ளனர். 
விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நாட்டின் எல்லா பகுதி விவசாயிகளிடமும் பரவிவிட்டதனால் தங்கள் கடன்களை பலர் திருப்பி செலுத்த முடிந்த நிலையில் இருந்தாலும், திருப்பி செலுத்துவதில்லை. இதனால், வங்கிகளிடமிருந்து மேலும் கடன் பெற முடியாத நிலைமைக்கு பல மாநில விவசாயிகளும் தள்ளப்பட்டு விட்டனர்.
எனவே நாம் நமது விவசாயத் துறையை சரிசெய்ய முடியாத நிலைமைக்குக் கொண்டு சென்றுவிட்டோமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசு, விவசாயிகளின் கடன் தொகையான ரூபாய் 36 ஆயிரத்து 359 கோடியைத் தள்ளுபடி செய்துள்ளது. 
இந்த கணக்கை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தினால், அதாவது 2019-ஆம் ஆண்டில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு எல்லா மாநில விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்தால் ரூபாய் 3,000,000,000,000 (மூன்று லட்சம் கோடி) செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மூன்று லட்சம் கோடி ரூபாய் என்பது நமது நாட்டின் இந்த ஆண்டு உற்பத்தி திறனில் இரண்டு சதவீதம் ஆகும்.
இப்படி செய்தால் நம் நாட்டில் விவசாயக் கடன் பெற்றுள்ள மக்கள் மனதில் கடன்களை திருப்பி செலுத்த வேண்டாம், அரசு எப்படியும் அதை தள்ளுபடி செய்துவிடும் என்ற எண்ணம் உருவாகிவிடும் என பலர் கூறுகின்றனர். அப்படி எண்ணம் உருவானாலும் பரவாயில்லை. கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியம் என்று வேறு சிலர் கூறுகின்றனர். 
எது எப்படியாயினும் நமது விவசாயிகளின் வாழ்க்கைப் பிரச்னையை தீர்ப்பது எப்படி என நாம் தீவரமாக சிந்திக்கவில்லை என்பது மிகவும் கவலை தரும் விஷயம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com