மனிதாபிமான அணுகுமுறை தேவை!

மியான்மர் நாட்டரசின் ஆயுதப் படைகளின் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு அடைக்கலம்
மனிதாபிமான அணுகுமுறை தேவை!

மியான்மர் நாட்டரசின் ஆயுதப் படைகளின் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வந்துள்ள ரோஹிங்கயா முஸ்லிம்களை சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது நியாயமுமல்ல; இந்திய நாடு கடைபிடித்துவரும் மனிதாபிமான மரபுகளுக்கு ஏற்புடையதும் அல்ல.
இந்தியாவின் கீழை அண்டை நாடான மியான்மரின் அராக்கன் மாநிலத்தில் பல இலட்சக்கணக்கில் வாழும் மொழி - மத சிறுபான்மையினரான ரோஹிங்கயா முஸ்லிம்களை நாடற்றவர்கள் என்று கூறி, அவர்கள் மியான்மரை விட்டு அவர்களை வெளியேற்றும் நோக்கில் 1970-ஆம் ஆண்டிலிருந்து அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை மியான்மர் அரசு மேற்கொண்டு வருகிறது. 
வெள்ளையரின் காலனி ஆதிக்கக் காலத்திலும், அதற்கு முற்பட்ட காலங்களிலும் அந்நாட்டில் குடியேறியவர்கள்தான் ரோஹிங்கயா முஸ்லிம்கள் என்பதும், அந்நாட்டில் வாழும் 130-க்கும் மேற்பட்ட மொழிவழி இனங்களில் ஒன்றான ரோஹிங்கயாக்களை மட்டும் 1982-ஆம் ஆண்டு, அந்நாட்டின் இராணுவ அரசாட்சி நிறைவேற்றிய புதிய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் நாடற்றவர்கள் என்று மியான்மர் அரசு அறிவித்தது நியாயமற்றது என்பதையும் நமது நாட்டரசு அறியாததல்ல. 
ஒரு நாடு விடுதலை பெறும்போது அந்நாட்டில் குடியேறி வாழ்ந்து வருபவர்கள் அனைவரையும் - அவர்கள் தங்களை வேற்று நாட்டவர்கள் என்று கூறாத நிலையில் - தம் நாட்டவராக ஏற்று அவர்களுக்கும் குடியுரிமை வழங்கி ஏற்க வேண்டும் என்பதே சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட வழிமுறையாகும். 
வெள்ளையர் காலனி ஆதிக்கக் காலத்தில் - 150 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு, தேயிலை, ரப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்ட 15 இலட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளித் தமிழர்களை, 1948-இல் விடுதலை பெற்ற இலங்கை அரசு நாடற்றவர்கள் என்று கூறியபோது அதனை கடுமையாக எதிர்த்தவர் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு. ஆனால் அவர்களுக்கு குடியுரிமையும், வாக்குரிமையும் வழங்க மறுத்தது இலங்கை அரசு. 
பின்னாளில் அவர்களில் ஐந்து இலட்சம் பேருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதென்ற உடன்பாட்டை ஏற்று, மீதமுள்ள பத்து இலட்சம் இந்திய வம்சாவளியினரை ஏற்பது என்று அன்றைய இந்தியப் பிரதமர் லால் பகாதூர் சாஸ்திரி, இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை இந்தியா - இலங்கை மட்டுமல்ல சர்வதேசமும் கண்டித்தது. இலங்கையை இனவாத அரசியல் கபளீகரம் செய்த முதல் நடவடிக்கை இதுதான். 
எனவே மியான்மரில் 12-ஆம் நூற்றாண்டு முதல் தாங்கள் வாழ்ந்துவருவதாக கூறும் ரோஹிங்கயா இனத்தவர்களை நாடற்றவர்கள் என்று கூறுவதை ஐ.நா.வின் மனிதாபிமானச் சட்டங்களை அறிந்த எந்த அரசும் ஒப்புக்கொள்ளாது. 
இந்திய நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையோ இனங்கள் இந்நாட்டிற்கு வந்து நிலைபெற்று வாழ்ந்து வருகின்றன. அதனால்தான் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவிப்பிற்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் வருத்தம் தெரிவித்துள்ளது. 
சர்வதேச விதிகளின்படி தஞ்சமடைந்தவர்களை மட்டுமே ஏற்க முடியும், மற்றவர்கள் சட்டத்திற்குப் புறம்பான குடியேறிகளே என்றும் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 
இங்கே கவனிக்கத்தக்கது, மியான்மாரில் இருந்து வெளியேறி, மியான்மரின் அராக்கன் மாநிலத்திற்கு அருகிலுள்ள அண்டை நாடான வங்க தேசத்திலும், பிறகு அங்கிருந்து இந்தியாவிற்கும் வந்துள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கயாக்கள், இந்தியா தங்களுக்கு அரசியல் ரீதியான புகலிடம் அளிக்க வேண்டும் என்று வந்தவர்கள் அல்ல. தங்கள் நாட்டரசின் ஒடுக்குமுறையில் இருந்து உயிரையும் உறவுகளையும் காப்பாற்றிக்கொள்ள இந்நாட்டில் தஞ்சமடைந்தவர்கள். 
இப்படித்தான் இலங்கையில் உள்நாட்டுப் போர் மூண்டபோது பெருமளவிற்கு ஈழத் தமிழ் மக்கள் இந்நாட்டிற்கு அகதிகளாக வந்தனர். அதுபோலத்தான் ரோஹிங்கயாக்களும் இந்நாட்டின் கிழக்கு மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் தஞ்சமடைந்துள்ளனர். இந்தியாவிற்கு வந்துள்ள ரோஹிங்கயாக்களின் எண்ணிக்கை 14,000 என்று நாடாளுமன்றத்தில் இந்திய அரசு கூறியுள்ளது. 
ஐ.நா.வின் அகதிகள் ஆணையம் 16,300 ரோஹிங்கயாக்கள் இந்தியாவில் உள்ளதாகவும், அவர்களில் 7,500 பேர் அகதிகளாக வாழ்ந்து வருவதாகவும், 8,800 ரோஹிங்கயாக்கள் புகலிடம் கோரியுள்ளதாகவும் தனது இணையதளத்தில் கூறியுள்ளது. 
ஆனால் 40,000 மேற்பட்ட ரோஹிங்கயாக்கள் இந்தியாவில் அகதிகளாக வந்துள்ளனர் என்றும் சில செய்திகள் கூறுகின்றன. 
இந்தியா இவர்களை அகதிகளாக ஏற்றுத்தான் தீர வேண்டும் என்று ஐ.நா. அகதிகள் ஆணையம் உட்பட எந்த ஒரு அமைப்பும் நிர்பந்திக்க முடியாது. ஏனென்றால் ஐ.நா.வின் அகதிகள் பிரகடனம் (1951), அகதிகள் தொடர்பான வழிமுறைகள் உடன்படிக்கை (1967) ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திடவில்லை. ஐ.நா. அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்திடாத நிலையிலும், அதன் முக்கிய விதியை இந்தியா கடைபிடித்து வருகிறது. 
எந்த ஒரு நாட்டில் இருந்தும் தனது உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக இந்தியாவிற்கு வரும் அகதிகளை அவர்களின் விருப்பத்திற்கு எதிராக அவர்களின் சொந்த நாட்டிற்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பக் கூடாது என்கிற கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. எனவே ரோஹிங்கயாக்களின் விருப்பத்திற்கு முரணாக இந்திய அரசு செயல்படுமேயானால் அது இதுவரை கடைப்பிடித்த கொள்கை நிலைக்கு எதிரானதாக ஆகிவிடும். 
அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்திடாத இந்தியா, சித்ரவதைக்கு எதிராக ஐ.நா.வின் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியா வந்துள்ள ரோஹிங்கயாக்களை மீண்டும் மியான்மருக்கு அனுப்பினால் அவர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதை இந்திய அரசு அறிந்திருக்கவில்லையா? 
தெற்காசிய நாடுகளில் எழும் உள்நாட்டுப் பிரச்னைகளில் அரசியல் ரீதியாக அமைதி வழிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பது என்பதே நீடித்த அமைதியை தரக்கூடியது என்பதை தனது நிலைப்பாடாக இந்திய அரசு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலமுறை உறுதியாக அறிவித்துள்ளது. 
இலங்கை இனச் சிக்கலில் கூட இப்படிப்பட்ட நிலைப்பாட்டையே அடுத்தடுத்து வந்த அரசுகள் கடைபிடித்தன. அதன் காரணமாகத்தான் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை சர்வதேச உதவியுடன் நடந்தது. 
ஆனால் இலங்கை அரசு அப்பாதையில் இருந்து விலகி போரை திணித்ததும் அதனை இந்திய அரசு மறைமுகமாக ஆதரித்ததும்தான் அங்கு தமிழின அழிப்பு நடந்தேறியதற்கும்,அதில் ஒன்றே முக்கால் இலட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் முக்கிய காரணமானது என்பதும் மறுக்கவியலாத உண்மைகளாகும். 
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த அதே தவறை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசும் செய்துவிடக் கூடாது. மியான்மர் நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் குடியேறி பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் ரோஹிங்கயாக்கள் உள்ளிட்ட எந்த ஒரு இனத்தவரையும் வெளியேற்றும் திட்டத்தை மியான்மர் அரசு கடைப்பிடித்தாலும் அதனை இந்திய அரசு தீவிரமாக எதிர்த்திட வேண்டும். 
மாறாக, ரோஹிங்கயாக்களுக்கு எதிராக கடுமையான இராணுவ ஒடுக்குதலை மேற்கொண்டுவரும் மியான்மர் அரசின் நடவடிக்கைகளை இந்திய அரசு ஆதரிக்குமானால், மியான்மர் அரசின் கொடும் செயல் தொடரும். அது உச்சகட்டமாக இலங்கையில் நடந்ததுபோன்று மற்றொரு இன அழித்தலுக்கு வழிவகுக்கும்.
உலகின் பல நாடுகளின் அரசுகள் தங்களுக்கு எதிரான அரசியல் போராட்டங்களை இராணுவ பலம் கொண்டு ஒடுக்குவது வழக்கமாகிவிட்டது. அதன் விளைவு இன்று ஆறரை கோடி மக்கள் தங்கள் நாட்டைத் துறந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாகவும், சொந்த நாட்டிலேயே வீடிழந்து உள்நாட்டு அகதிகளாவும் வாழ்ந்து வருகின்றனர். 
இந்த நிலை தொடர வேண்டுமா? இதற்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காண வேண்டிய பாதையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டாமா? ஒவ்வோர் இந்தியனின் மனதிலும் மேலோங்கி நிற்பது நம்நாடு மனிதாபிமான பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதே. என்ன செய்யப் போகிறது இந்திய அரசு?

கட்டுரையாளர்:
பத்திரிகையாளர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com