வரி விதிப்பு யுத்தம்

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் மண், பொன் என்று பொருள் ஆதாயம் சார்ந்த காரணங்களுக்காகவே அதிக அளவில் போர்கள் நடைபெற்று இருப்பதை அறிய முடியும்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் மண், பொன் என்று பொருள் ஆதாயம் சார்ந்த காரணங்களுக்காகவே அதிக அளவில் போர்கள் நடைபெற்று இருப்பதை அறிய முடியும். போர்களில் கையாளப்படும் ஆயுதங்கள் காலத்துக்கு ஏற்ப மாறி வந்தபோதிலும், போருக்கான காரணங்கள் மட்டும் பெரிய அளவில் மாற்றமில்லாமல் தொடர்கின்றன. அந்த வகையில் இப்போது சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கையில் எடுத்துள்ள வர்த்தகப் போர், சர்வதேச அளவில் பெரும் பொருளாதாரப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர் என்பது அதில் ஈடுபடும் அனைத்துத் தரப்புக்குமே இழப்பை ஏற்படுத்துதான்; யாருக்கு இழப்பு மிக அதிகமோ அவர்களே தோல்வியடைந்தவர்கள், சற்று குறைவான இழப்பைச் சந்திப்பவர்கள் வெற்றியாளர்களாக வர்ணிக்கப்படுகிறார்கள். எனினும், இழப்பு என்பது மட்டும் சர்வ நிச்சயம். அந்த வகையில் இப்போது அமெரிக்கா}சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரால் இரு நாடுகளுக்குமே வெவ்வேறு வகையில் பாதிப்புகள் ஏற்படும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
"தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும்' என்ற மனோபாவத்துடன்தான் இந்த வர்த்தகப் போருக்கு முதலில் முரசு கொட்டினார் அமெரிக்க அதிபர் டிரம்ப். 
அமெரிக்கர்களுக்கும், அமெரிக்காவின் நலன்களுக்குமே முன்னுரிமை என்ற கொள்கையை தொடக்கத்தில் இருந்தே கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனா மீது இந்த வர்த்தகப் போர் தொடுக்க வெளிப்படையாக பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமாக, அமெரிக்காவுக்கு சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பது) சுமார் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துவிட்டது. சீனாவில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு 506 பில்லியன் டாலர் (ரூ.32.89 லட்சம் கோடி) மதிப்புக்கு இறக்குமதி செய்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவிடம் இருந்து சீனா 130 பில்லியன் டாலர் (ரூ.8.45 லட்சம் கோடி) அளவுக்கே இறக்குமதி செய்துள்ளது. இதனால், சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபடி சீனாவில் இருந்து 100 பில்லியன் டாலர் அளவுக்கே இறக்குமதி இருக்க வேண்டும் என்ற இயலாத இலக்கை வலுக்கட்டாயமாக நிர்ணயித்துள்ளார் டிரம்ப். மேலும், சர்வதேச காப்புரிமை விதிகளை மதிக்காமல், அமெரிக்க நிறுவனங்களின் பொருள்களை காப்பியடித்து தயாரித்து தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பை சீனா ஏற்படுத்தி வருகிறது என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கான முதல் கட்ட நடவடிக்கைதான் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பது. அதனைப் படிப்படியாக அமல்படுத்த தொடங்கிவிட்டார் டிரம்ப். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரியை அதிகரித்தாலும், இப்போதைய நிலையில் அமெரிக்காவின் கைதான் ஓங்கியுள்ளது.
சீனத் தயாரிப்புகள் என்றாலே மலிவு விலையில் கிடைக்கும் தரமற்ற பொருள்கள் என்ற பெயர் எப்போதும் உண்டு. ஆனால், இப்போது சீனத் தயாரிப்பு செல்போன்களை ஆன்லைனில் வாங்க அலாரம் வைத்து காத்திருக்கும் இளைஞர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தரமான பொருள்களை மற்ற நாடுகளைவிட குறைந்த செலவில் தங்களால் தயாரிக்க முடியும் என்பதை சீனா நிரூபித்துள்ளதுதான் இதற்குக் காரணம்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்கள் மட்டுமல்லாது, பல்வேறு மூலப் பொருள்களையும் குறைந்த செலவில் தயாரிப்பதில் சீனாதான் இப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும் சமீப ஆண்டுகளில் சீனத் தயாரிப்புகளுக்கு பெரிய சந்தை ஏற்பட்டது. இதுவும் அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி அதிகரிக்க காரணமாக அமைந்தது. தரம் குறைந்தவை என்பதால் குறைந்த விலைக்கு சீனா பொருள்களை அளிக்கிறது என்று கூறினாலும், மற்ற நாடுகளைவிட அபரிமிதமாக மனிதவளத்தைக் கொண்டுள்ள அந்நாடு, அதனைத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்வதும் உற்பத்திச் செலவு குறைவதற்கு முக்கியக் காரணம். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மையங்களை சீனாவில் அமைத்துள்ளன. சீனாவில் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்தால் போதுமானது என்பதும் இதற்கு முக்கியக் காரணம்.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக சீனா எடுத்துள்ள நடவடிக்கை அமெரிக்காவில் நீண்ட கால பாதிப்பை உருவாக்காமல் போகாது என்று அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏனெனில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா பீன்ஸ், இறைச்சி, கார், ரசாயனப் பொருள்களுக்கு சீனா வரியை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் சோயா பீன்ஸ் ஏற்றுமதியில் 61% சீனாவுக்குதான் செல்கிறது. இது தடைபடும்போது அமெரிக்காவில் உள்ள விவசாயிகள் சிக்கலை எதிர்கொள்வார்கள். மேலும், அமெரிக்காவின் ரசாயனம், கார் தயாரிப்பு நிறுவனங்களும் சிக்கலை சந்திக்கும். இது அத்துறைகளில் வேலைவாய்ப்பின்மை 
போன்ற பிரச்னைகளை உருவாக்கும்.
அமெரிக்கா } சீனா இடையிலான இந்த வர்த்தகப் போர் சர்வதேச அளவில் எதிர்மறையான தாக்கங்களையே ஏற்படுத்தும். சீனப் பொருள்கள் இறக்குமதிக்கான வரியை அமெரிக்கா உயர்த்திய அன்றே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டதே இதற்கு உதாரணம். "மனிதர்களின் விவேகம் தோல்வியடையும் இடத்தில்தான் யுத்தம் ஏற்படுகிறது' என்ற பழமொழி இந்த வர்த்தகப் போருக்கு மிகவும் பொருந்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com