தென்னாப்பிரிக்காவில் தொடரும் காந்தியத் தொண்டு

மகாத்மா மறைந்துவிட்டார்; உண்மைதான். ஆனால் அவரது சித்தாந்தங்கள் மறையவில்லை. அவற்றை காந்தியவாதிகள் பரப்பிவருகிறார்கள்.

மகாத்மா மறைந்துவிட்டார்; உண்மைதான். ஆனால் அவரது சித்தாந்தங்கள் மறையவில்லை. அவற்றை காந்தியவாதிகள் பரப்பிவருகிறார்கள். அதற்கு இணையாக அண்ணலின் வாரிசுகள் அவரது நெறிமுறைகளை உலகின் பல பகுதிகளிலும் பரப்பி வருகிறார்கள்.
அண்ணல் காந்தி - அன்னை கஸ்தூர்பா தம்பதியின் நான்கு பிள்ளைகள் ஹரிலால், மணிலால், ராம்தாஸ் மற்றும் தேவதாஸ். மூத்த மகன் ஹரிலால் ஒருவர்தான் காந்தி காட்டிய நெறிக்கு மாறாக நடந்தவர். மற்ற மூவரும் அண்ணல் வழி நடந்து, அவர் காட்டிய அறநெறி பரப்பியவர்களே! அவர்களது வாரிசுகளும் அப்படியே!
காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் 1892 -ஆம் ஆண்டு (காந்திஜியின் 23-ஆவது வயதில்) இந்தியாவில் பிறந்தார். அண்ணலின் அரவணைப்பில் வளர்ந்தார். இளம் வயதிலேயே தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தன் மகன் ஒரு போராளியாக உருவாக வேண்டும் என்பதே தந்தையின் தணியாத தாகம். அவரது தாகம் நிறைவேறியது உண்மையே! ஒரு போராளி பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்றார் காந்தி! ஆனால் அவர் சொல்லை மீறி, அன்னை கஸ்தூர்பாவின் ஆசைப்படி சுசீலா மஸ்ருவாலாவை 1927-இல் மணந்தார்.
1904 -ஆம் ஆண்டு காந்திஜி தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாகச் சிறை சென்றபோது, மணிலாலுக்கு வயது 12. அந்த இளம் வயதில் பீனிக்ஸ் ஆசிமரத்தை திறம்பட நிர்வகித்தவர் என்று அண்ணலின் பாராட்டைப் பெற்றவர். தனது 15-ஆவது வயதிலேயே தென்னாப்பிரிக்க அரசை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர். 25 முறை சிறை சென்று சித்திரவதை அனுபவித்தவர். மொத்தம் சுமார் 15 ஆண்டுகள் சிறைவாசம் செய்தவர். இது தேசப்பிதா உட்பட இந்தியத்தலைவர்கள் எவரும் அனுபவித்த சிறைவாசத்தைவிட அதிகம் என்பார்கள்.
உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்தார் மணிலால். போராட்டத்தில் பங்கேற்றபோது பிரிட்டிஷ் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். மண்டை ஓடு உடைந்து, மூளையிலும் காயம். சுய நினைவை இழந்தார். நீண்ட கால சிகிச்சைக்குப் பின்புதான் மீண்டும் பொதுவாழ்வில் ஈடுபட முடிந்தது. காந்தியைவிட சிறந்த இதழாசிரியர் எனப் பெயர் எடுத்தார். 
ஒரு புனிதருக்கு உண்டான குணங்கள் கொண்ட ஆன்மிக மனிதர் இவர் என்கிறார் ரெவரெண்ட் ஹாரிங்டன். மணிலால் 1956-இல், தனது 64-ஆவது வயதில் மறைந்தார்.
மணிலால்-சுசீலா தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். அவர்கள் முறையே சீதா, அருண்காந்தி மற்றும் இலா காந்தி ஆவார்கள். கடைசி மகளான இலா காந்தி 1940-இல் பீனிக்ஸ் ஆசிரமத்தில் பிறந்தார். ஆசிரமச் சூழலிலேயே மணிலால் தம்பதியால் வளர்க்கப்பட்டார். தந்தை மறைந்தபோது இலா காந்தியின் வயது 14. 
தந்தை காட்டிய வழியில் மாகாத்மாவின் இலட்சிய தீபத்தை இன்றுவரை தென்னாப்பிரிக்காவில் ஏந்திப் பிடித்து வாழ்ந்து வருபவர் இலா காந்தி. அமைதிக்காகவும் தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைக்காகவும் இன்றும் போராடி வருகிறார். இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் தன் மகன்களில் ஒருவரை இழக்கும் துயரமும் அவரது வாழ்வில் நிகழ்ந்தது. அந்த இழப்பு இலாவின் போராட்ட உணர்வை எள்ளளவும் பாதிக்கவில்லை.
இளமைக் காலம் முதலே இனவெறிக்கு எதிராகப் போராடினார் இலா காந்தி. அவரது அரசியல் செயல்பாட்டுக்கு தடை விதித்தது ஆப்பிரிக்க அரசு. ஒன்பதாண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு அவதியுற்றார். காந்திஜி வளர்ச்சி அறக்கட்டளையை நிறுவினார். காந்திய சித்தாந்தங்களைத் தொடர்ந்து தொய்வில்லாமல் பரப்பிவருகிறார். மகாத்மாவின் உப்பு சத்தியாகிரகக் குழு ஒன்றை நிறுவினார். அதன் தத்துவம், அணுகுமுறை, அடைந்த வெற்றி, அதனை தென்னாப்பிரிக்காவில் நடைமுறைப்படுத்தலாமா என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தினார்.
டர்பன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பல ஆண்டுகள் பதவி வகித்து கல்விப்பணி ஆற்றினார். தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் 10 ஆண்டுகள் உறுப்பினராகப் பணிபுரியும் பெருமை பெற்றார் (1994-2004). 
இந்தியாவில் பிறந்த மோகன்தாஸ் காந்தி, மகாத்மாவாக மறுபிறவி எடுத்து மலர்ந்தது தென்னாப்பிரிக்காவின் பீனிக்ஸ் ஆசிரமத்தில் என்கிறார் இலா காந்தி.
ஆரம்ப காலத்தில் பெண்களின் பெருமையையும் அவர்களது ஆற்றலையும் அண்ணல் அதிகம் அறிந்தவராக இல்லை என்றும், பெண் இனப் போராளியான சோன்யா செலிசின் என்பவர் அவரின் செயலாளராக இருந்தபோது ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றத்தால், மகளிர் மகத்துவம் பற்றிய பெரும் மாற்றத்தை அண்ணலிடம் ஏற்படுத்தியது என்கிறார் இலா காந்தி. இவ்வாறாக, பீனிக்ஸ் ஆசிரமத்தில்தான் சமூக, பொருளாதார அரசியல் தொடர்பான புரட்சிகரமான மாற்றங்கள் அண்ணலின் உள்ளத்தில் நிகழ்ந்தன.
'உங்கள் தாத்தா காந்திஜியை-உங்களுக்கு நினைவு இருக்கிறதா? ஏதாவது சொல்ல இயலுமா' எனக் கேட்டால், இலா காந்தியின் முகம் மலர்கிறது. கண்கள் பளிச்சிடுகின்றன. உற்சாகத்தோடு சொல்லுகிறார். '
1946-47-ஆம் ஆண்டு என் பெற்றோர் இந்தியா சென்று, சேவாகிராம் ஆசிரமத்தில் தங்கினார்கள். நானும் அங்கு 2 மாதங்கள் வசித்தேன். அப்போது என் வயது 7. நாள்தோறும் சுமார் ஒரு மணி நேரம் எங்களோடு பாபுஜி இருப்பார். சுவையான கதைகள் சொல்லுவார். அத்துடன் எங்கள் கடமைகளையும் சொல்லுவார். நேற்று செய்த நல்ல செயல் என்ன எனக் கேட்பார். 
தேசப்பிரிவினை, இந்து-முஸ்லிம் கலவரம், அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்குதல் போன்ற பல முக்கிய பிரச்னைகள் நிகழ்ந்த காலகட்டத்தில் என் போன்ற இளம் குழந்தைகளுக்காக நாள்தோறும் 1 மணி நேரம் செலவு செய்தார் என்பதை இன்று என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை' என்கிறார்.
அன்னை கஸ்தூர்பா பற்றிய நினைவு இருக்கிறதா? என்ற கேள்விக்கு அவர் சொல்வது: நான் 4 அல்லது 5 வயதுக் குழந்தையாக இருக்கும்போதே அவர் காலமாகிவிட்டார். ஆனால் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வரலாற்றில் கொடுக்கப்படவில்லை; அவரது பங்களிப்பை, சாதனைகளை, தியாகங்ககளை விளக்கும் நூல்களும் அதிகம் இல்லையே என ஏங்குகிறார்.
ஆனால் பாபுஜி சொல்வார்: 'துணிச்சல்' என்ற பண்பை நான் கஸ்தூர்பாவிடமிருந்துதான் படித்தேன். அவர் நெஞ்சுரம் மிகுந்தவர்; உறுதியானவர்; எப்பொழுதுமே காரணமில்லாமல் கீழ்படிய மாட்டார். 
அடக்கமே பெண்ணின் குணம் என்று சொல்லி அடிபணிய மாட்டார். நான் அடக்கி ஆதிக்கம் செலுத்த ஆரம்ப காலத்தில் நினைத்ததுண்டு; அதற்கு அவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்கிறார். 
'நான் மறக்க முடியாத நிகழ்வு ஒன்று உண்டு. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் நான் இந்தியாவில் இருந்தேன். மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரின் சிறு பள்ளியில் நான் படித்தேன். அன்று தேசியக் கொடியை ஏற்றும் பெருமையை எனக்கு அளித்தார்கள். கொடி ஏற்றிய பின் தேசிய கொடிப் பாடலை உணர்வுபூர்வமாகப் பாடினேன்' என்று உணர்ச்சி பொங்கக் கூறுகிறார் இலா காந்தி.
'தென்னாப்பிரிக்காவுக்கு வந்தாலும் அதே தேசப்பற்று என் உள்ளத்தில் கொழுந்துவிட்டுப் பிரகாசிக்கிறது. உண்மையில் நான் இரு தேசங்களையும் இதயபூர்வமாக நேசிக்கிறேன்' என்கிறார்.
இலா காந்தி உருவாவதற்கு வேர் தந்தது இந்திய தேசம்; அவர் வளர்வதற்கும் சேவை புரிவதற்கும் வாய்ப்பு தந்தது தென்னப்பிரிக்கா. அவர் எங்கிருந்தாலும் முதலில் அவர் ஒரு காந்தியவாதி. 
'என் வாரிசுகள் அரசியல் அதிகார பீடத்தில் அமர்வதை அனுமதிக்க மாட்டேன். அவர்கள் சமூக அவலங்களை எதிர்த்துப் போராடும் போராளிகளாகவே வாழ வேண்டும்' என்று அண்ணல் காந்தி அன்று சொன்னார்.
அதைப் போலவே அவரது வாரிசுகள் சமூக நலப் போராளிகளாக உலகின் பல பகுதிகளில் பணிபுரிந்து வருகிறார்கள். வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இத்தகைய அழுத்தமான அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட போராளிகள், சிந்தனையாளர்கள், செயல் வீரர்கள் உருவாகவில்லை! இதுவே உண்மை!
அத்தகைய சமூகப் போராளிகளில் ஒருவர்தான் - காந்தியின் பேத்தி - இலா காந்தி! தனது 78-ஆவது வயதிலும் காந்தியப் பணியை தென்னாகப்பிரிக்காவில் தொடர்ந்து ஆற்றிவருகிறார்! 
இலா காந்தி போன்ற ஒரு சிலரையாவது அண்ணலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது இந்தியாவுக்கு அழைக்கலாமா? அவர்களது கருத்துகளைக் கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டுமா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com