கட்டப்பட்ட ஆசிரியர் சமூகத்தின் கைகள்

தமிழகத்தின் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து வகை கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் சிலரின் செயல்பாடுகளைப் பார்த்தால் இருப்பது தமிழகமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

தமிழகத்தின் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து வகை கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் சிலரின் செயல்பாடுகளைப் பார்த்தால் இருப்பது தமிழகமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. பல இடங்களில் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் ஜாதி மோதல்கள் ஒருபுறம் என்றால், ஆசிரியர்களை தாக்கும் புது கலாசாரம் இன்னொரு புறம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. நமது முன்னோர்கள் குருகுல கல்வி முறையில் கல்வி கற்று மிகப்பெரும் அறிஞர்கள் ஆனவர்கள். அன்றைய காலத்தில், அரசனின் மகனே ஆனாலும், குருவுக்கு பணிவிடை செய்துதான் கல்வி கற்க முடியும். குரு என்பவர் அனைத்துமானவர் என்ற எண்ணம் அந்த காலகட்டத்தில் மக்களுக்கு இருந்தது. 
அதன் பின்னர் தங்கள் பிள்ளைகள் எப்படியாவது படித்து உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என நினைத்த பெற்றோர்கள், ஆசிரியர்களை சந்தித்து "எப்படியாவது எனது பிள்ளையை நன்றாக படிக்க வைத்துவிடுங்கள். முட்டுக்கு கீழ் உரித்து எடுங்கள்' என்று கூறிய காலத்தில் படித்த பிள்ளைகள் நல்ல நிலைக்கும் வந்தனர்.
இன்றோ நிலைமை தலைகீழ். "எனது பையனை எப்படி கண்டிக்கலாம், அடிக்கலாம்' என ஆசிரியர்களுடன் தகராறு செய்யும் பெற்றோர்கள் அதிகரித்துவிட்டனர்.
இதையும் தாண்டி, ஆசிரியர் வர்க்கம் என்றாலே, மாணவனை தாக்கிய ஆசிரியர். ஆசிரியர் அடித்ததால் மாணவன் பாதிப்பு என வழக்கமான நிகழ்வைக் கூட காட்சி ஊடகங்கள் பெரிய செய்தியாக்கி, விவாதங்களை முன்வைத்து, மாணவர் பலரின் பேட்டியை ஒளிபரப்பி, மாணவர் பிரதிநிதிகளைக் கொண்டு ஏதோ தலைப்பில் பேச செய்து, சிறு விஷயத்தை பூதாகரமாக்கி அந்த ஆசிரியர் கைது செய்யப்படும்வரை தனது பணியை கடமையாகவே செய்து வருகின்றன. இதைப் பார்க்கும் பிற பள்ளிகளின் மாணவர்கள் தாமும் இதுபோல் செய்தால் ஹீரோவாகிவிடலாமோ? என்று நினைத்து அதை செயல்படுத்தவும் காலம் பார்த்து வருகின்றனர்.
பள்ளிக்கு மாணவர்கள் வருவது எதற்காக? படிப்பதற்காகவா, பொழுது போக்கவா? முந்தைய நாள் செய்துவிட்டு வரச் சொன்ன வீட்டுப் பாடத்தை முடிக்காத ஒரு மாணவனை ஆசிரியர் கண்டிப்பது இயல்புதானே? ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை முயற்சி என புகார் கொடுப்பதும். ஆசிரியர் கைது செய்யப்படுவதும் விந்தை. படிக்காத மாணவரை படிக்க வைக்கத்தானே ஆசிரியர்களும், பள்ளிகளும்? படிக்க விரும்பவில்லை என்றால் எதற்கு பள்ளிக்கு வர வேண்டும்? கண்டிக்கவும் கூடாது. எக்கேடு கெட்டாலும் நமக்கென்ன என ஆசிரியர்கள் இருக்க முடியுமா?
தேர்ச்சி விகிதம் குறைந்தால் அரசும், அதிகாரிகளும் விளக்கம் கேட்டு துளைத்தெடுப்பார்களே? மாணவர்களுக்கு என்னவெல்லாம் அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஏன் படிக்க வைக்க முடியவில்லை என அரசு ஆசிரியர்களை நோக்கி கேள்வி எழுப்பும். "எங்களால் கண்டிக்கவும் முடியவில்லை. தண்டிக்கவும் முடியவில்லை. ஏன் படிக்கவில்லை என கேட்கவும் முடியவில்லை' என ஆசிரியர்கள் அதிகாரிகளிடம் சொல்ல முடியுமா? கூனிக் குறுகி நிற்கத்தான் முடியும்.
ஆசிரியராக வந்துவிட்டோம், சகிப்புத் தன்மையுடன்தான் இருக்க வேண்டும் என இருக்கும் சில ஆசிரியர்களுக்கு வருகிறதே சோதனை மேல் சோதனை. அதுவும் ஆசிரியை என்றால் கேட்கவே வேண்டாம். ஆசிரியையை நோக்கி சாக்பீஸ் எறிந்த மாணவன்; ஆசிரியையிடம் தவறான கேள்வி கேட்ட மாணவன் என எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறி வந்தாலும், வகுப்பறைகளில் நடக்கும் நிகழ்வுகளை நினைத்து நினைத்து மனதிற்குள் மட்டுமே அழும் அவல நிலையில்தான் ஆசிரியைப் பணிக்கு வந்துவிட்ட பல பெண்கள் உள்ளனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
திருப்பத்தூரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமையாசிரியரை அப்பள்ளி மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் இத்தகைய பொறுமையற்ற அதுவும் தலைமையாசிரியரையே கத்தியால் குத்த வேண்டிய அளவிற்கு தீவிரம் காட்டுவதற்கான காரணங்கள் மாணவர்களுக்கு இளம் வயதிலே உருவாவதற்கு காரணம் என்ன என்பதை அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், இது மாணவர், ஆசிரியர் சமூகப் பிரச்னை. எதிர்கால தலைமுறைகளை உருவாக்கும் சக்தியை கொண்டுள்ள ஆசிரியர்களும், எதிர்கால இந்தியாவை நிர்ணயிக்கப் போகும் மாணவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், இதை கவனமாகவே அரசு கையாள வேண்டும்.
மாணவர்களுக்கு இத்தகைய வன்முறைப் போக்குக்கு தொலைக்காட்சிகளும், சமூக ஊடகங்களும் பெருமளவு துணை போகின்றன. வீட்டுக்குள் இருந்தபடியே உலகியல் நிகழ்வுகளை அளிக்கக் கூடிய இரண்டுமே மாணவர்களின் எண்ணங்களில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன. பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் செல்லிடப்பேசியுடன் காலம் கழிக்கும் மாணவர்கள் செல்லிடப்பேசியில் என்ன பார்க்கிறார்கள் என்பது பெற்றோர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதில் சிறார்களைக் கவரும், வன்முறை விளையாட்டுக்கள் ஏராளம். இது தவிர தொலைக்காட்சி மெகா தொடர்களில் வரும் வில்லன்களில் புதிய யுக்திகள் அப்படியே இளம் மனதில் பதிவாவது இந்த வன்முறை கலாசாரத்துக்கு மிக முக்கியக் காரணம் என்பதும் உண்மை.
மாணவர்களுக்குப் பண்பாட்டை கற்றுத் தருவதற்கு, வாழ்க்கை குறித்த அனுபவங்களை கற்றுக்கொடுப்பதற்கு என்ன வழி? அந்த வழியில்லாததால்தான் இது போன்ற போக்கு அதிகரித்து வருகிறது. 
10-ஆம் வகுப்பிலும், 12-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி மட்டும் போதும் என கூறி வரும் அரசு, அந்த தேர்ச்சியை கொண்டு வருவதற்கு வசதியாக மாணவர்களை தண்டிக்க, அது கூட வேண்டாம். குறைந்தபட்சம் கண்டிக்கக் கூடிய அதிகாரத்தையாவது ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டாமா? தேர்ச்சி மட்டுமே வேண்டும் என அரசு கேட்பது எந்த வகையில் நியாயம்? எனவே, ஆசிரியர்களுக்கு சில அதிகாரங்களை வழங்க வேண்டும். இதை செய்யாவிட்டால் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் முன்னோர் போற்றிய வரிசையிலிருந்து, குருவின் பெயர் தானாகவே நீக்கப்பட்டுவிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com