வன்முறைக்கும் உண்டு மறுபக்கம்

'சூரியன் கிழக்கே உதிக்கிறது' என்பதைப் பிரபஞ்ச உண்மையாகக் கூறலாம் என்றால், அந்த வரிசையில் 'மாணவன் நல்லவன்; மாணவர்கள் கெட்டவர்கள்!' என்பதையும் பிரபஞ்ச உண்மையாகக் கூறலாம்.

'சூரியன் கிழக்கே உதிக்கிறது' என்பதைப் பிரபஞ்ச உண்மையாகக் கூறலாம் என்றால், அந்த வரிசையில் 'மாணவன் நல்லவன்; மாணவர்கள் கெட்டவர்கள்!' என்பதையும் பிரபஞ்ச உண்மையாகக் கூறலாம். தமிழகத் தலைநகரில் மாணவர்களிடையே அவ்வப்போது வெடிக்கும் மோதல்கள் அந்தப் பழமொழியைப் பிரபஞ்ச உண்மையாக நிலைநாட்டி வருவதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.
நான்கைந்து மாணவர்கள் ஓர் இடத்தில் கூடினால் வன்முறை கலாட்டா அரங்கேறுவது கட்டாயமாகிவிட்டது. வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையேயும், ஒரே கல்லூரியைச் சேர்ந்த ஒருசில மாணவர் குழுக்களிடையேயும் பகை உணர்வும் மோதல் போக்கும் எழுவது வழக்கம்தான்.
ஆனால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கற்களாலும், கட்டைகளாலும் தாக்கிக் கொண்ட காலம் மலையேறிவிட்டது. பட்டாக்கத்தியுடன் புறநகர் ரயில் வண்டிகளில் உலாவரும் இளம் மாணவர்கள் தங்களுக்கு வேண்டாத குழுவினரை வெட்டுவதும், அப்பாவிப் பயணிகளை அச்சுறுத்துவதும் அடிக்கடி நிகழும் சம்பவமாகிவிட்டது.
பொதுவாக ஒரே கல்லூரியின் மாணவர்களிடையே சீனியர்- ஜூனியர், 'ராகிங்' எனப்படும் பகடிவதை, மாணவர் சங்கத் தேர்தல் மற்றும் விளையாட்டு மைதான அரசியல் போன்ற காரணங்களுக்காகப் பகை உணர்வு ஏற்படும். 
இருபாலார் படிக்கும் கல்வி நிலையம் என்றால் காதல் விவகாரங்களாலும் மோதல் வெடிக்கும். ஆனால் பல சமயங்களில் மோதலுக்குக் காரணம் உப்புச்சப்பில்லாத ஒன்றாகவே இருக்கும்.
தென் மாவட்டங்களில் உள்ள பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாதிப் பாகுபாடு காரணமாகவும் மாணவர்களிடையே மோதல் எழுவதாக அறிகிறோம். இவற்றுக்கும் மேலாக, பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கும் மாணவர்களிடையே எழும் மோதல்கள் தனி ரகம்.
கல்லூரி வளாகத்திற்குள் யார் 'பெரிய பிஸ்தா' என்று ஸ்தாபிக்க நிகழும் வன்முறைகள் போன்று, பேருந்து மற்றும் ரயில் பயணத்தடங்களில் 'யார் ரூட் தல?' என்று நிரூபிப்பதற்காகப் பல்வேறு கல்லூரி மாணவர்கள் அரங்கேற்றும் வெற்று பந்தாவே இந்த வன்முறைகளுக்குக் காரணமாகிறது. 
இளைய தலைமுறையினரின் இத்தகைய போக்குக்கு எது அடிப்படைக் காரணம் என்று கேட்டால், அனிச்சையாக நமது சுட்டுவிரல் திரைப்படங்களை நோக்கியே திரும்புகின்றது.
திரைப்படங்களில்தான் வன்முறையாளர்கள் எப்போதும் தம்மைச் சுற்றி அடியாட்களும், கவர்ச்சிப் பெண்களும் சூழ்ந்திருக்க சகல வசதிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்வதாகச் சித்திரிக்கப்படுகின்றது. போக்கிரித்தனம் செய்யும் முரடர்களைக்கூட அழகான பெண்கள் விழுந்து விழுந்து காதலிப்பதாகக் காட்டப்படுகின்றது. வன்முறை செய்வதுதான் ஆண்மைத்தனம் என்று வசனங்களாலும் காட்சிகளாலும் நிறுவப்படுகின்றது. 
இதற்கெல்லாம் மேலாக, வன்முறையில் ஈடுபடுபவனைப் பார்த்து எல்லோரும் பயப்படுவது சற்று மிகைப்படுத்தியே காண்பிக்கப்படுவதும் இளம் நெஞ்சங்களில் கல்வெட்டாகப் பதிந்துவிடுகின்றது. நம்மைக் கண்டு பிறர் பயப்படுகிறார்கள் என்ற எண்ணமே ஓர் அலாதியான இன்பத்தை அளிப்பதை மறுப்பதற்கில்லை. 
இன்றைய தினம் நமது கை ஓங்கியிருக்கிறதா என்பதிலேயே திருப்தியடைந்துவிடுகின்ற மாணவ நெஞ்சம், எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதேயில்லை. எந்த ஒரு வினையும் அதற்கேற்ற எதிர்வினையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
தங்களால் தாக்கப்படுகிறவர்களும் ஆயுதம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், அந்த எதிர்த் தாக்குதலால் எந்த விளைவும் ஏற்படலாம் என்றும் ஆராய்ந்து பார்க்காத வன்முறைச் சிந்தனையைப் பெரும்பாலான திரைப்படங்கள் வளர்த்துவிட்டிருக்கின்றன. 
திரைப்படங்களைப் பார்த்து வன்முறையை கற்றுக்கொள்ளும் இளைய சமுதாயத்தினர், நிதர்சனமான அன்றாடச் செய்திகளையும், நாட்டு நடப்புகளையும் சற்று ஆராய்ந்து பார்த்தால்போதும், வன்முறையின் பக்கம் அவர்கள் திரும்பவே மாட்டார்கள்.
உள்ளூர் பேட்டை ரெளடி முதல், சர்வதேச பயங்கரவாதி வரையில் யாரானாலும் சரி, அவர்கள் உயிர் பயத்துடனேதான் வாழ்ந்து வருகிறார்கள். தங்களது வசதிக்கேற்ப, தங்களைச் சுற்றி சிறியதாகவோ பெரியதாகவோ ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்பாடு செய்துகொண்டு கொண்டுதான் அவர்களால் வெளியே தலை காண்பிக்க முடிகிறது. பொதுவாகவே வன்முறையாளர்களின் ஆயுள் மிகக் குறைவு. உள்ள ஆயுளில் நிம்மதியோ அதைவிடக் குறைவு.
வன்முறையில் ஈடுபடாத சாதாரண மனிதன் தனது குடும்பத்துடன் நிம்மதியாக இருக்க முடியும். எந்தக் கவலையுமின்றி படுக்கைக்குச் செல்ல முடியும்.
வன்முறையாளர்கள் அனுபவிக்கும் சில மகிழ்ச்சிகள் நீர்க்குமிழி போன்றவை. அதை அனுபவிக்க அவர்கள் கொடுக்கும் விலையும் மிக அதிகம். தங்களது எதிரிகளுக்கும், என்கவுன்ட்டருக்கும் பயந்தபடிதான் அவர்களது ஒவ்வொரு நாளும் கடந்துசெல்லும். 
செய்த, செய்யாத குற்றங்களுக்கான வழக்குகள் இன்னொரு பக்கம் பயமுறுத்தும். வன்முறைப் பாதையில் நுழைவது என்பது புலிவாலைப் பிடித்த கதைதான். நமக்கே வெறுப்பு உண்டானாலும் கூட, அதை விட்டுவிட முடியாது என்பதை மாணவப் பருவத்தினர் நினைத்துப் பார்க்க வேண்டும். பள்ளி, கல்லூரி பருவத்தினரிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவை ஒருபோதும் வன்முறையாக வெடிக்கக் கூடாது. 
மாணவப் பருவத்தினரின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் அரசும், காவல் துறையும் தங்களைச் சற்றே மென்மையாகக் கையாள்வதையே தங்களது வன்முறைகளுக்கு வழங்கப்பட்ட உரிமைச்சீட்டாக மாணவர்கள் நினைத்துவிடக் கூடாது.
பட்டாக்கத்திகளையும் மற்ற ஆயுதங்களையும் கீழே போடுங்கள் கண்மணிகளே! உங்கள் விரல்களுக்கு அழகும் கம்பீரமும் கொடுப்பவை எழுதுகோல்கள் மட்டுமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com