வழிகாட்டியாகட்டும் வாசிப்புப் பழக்கம்

தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பதிப்பகத்தினர் புத்தக கண்காட்சிகளை பெரும் பொருள் செலவில் நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பதிப்பகத்தினர் புத்தக கண்காட்சிகளை பெரும் பொருள் செலவில் நடத்தி வருகின்றனர். இதற்கு தற்போது கிடைத்து வரும் வரவேற்பைப் பார்த்தால் வாசிப்பை நேசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற மகிழ்ச்சி மேலோங்குகிறது.
இளைய தலைமுறையினருக்கு நாம் சொல்ல வேண்டியது இதைத்தான் } பாட நூல் கழகங்கள், பல்கலைக் கழகங்கள் வழங்கும் புத்தகங்கள் அந்தந்த படிப்பு குறித்த அறிவை மட்டுமே தரும். நம் தவறுகளைக் களைந்து, திறன்களை மேம்படுத்த வேண்டுமானால் அதற்கு பாடப் புத்தகத்தை தாண்டிய அறிவு அவசியம்.
அத்தகைய பல்திறன் சார்ந்த அறிவினை வழங்குபவைகள்தான் நூல்கள். வாழ்க்கைக்குத் தேவையான அறிவையும், உயர்நிலையில் இருப்பவர்கள் அந்த நிலையை அடைவதற்கு என்ன செய்தார்கள் என்பதையும், பின்னடைவைச் சந்தித்தவர்கள் எவ்வாறு மேலெழுந்தார்கள் என்பதையும் அறிந்து கொள்வது மிக அவசியம் என்ற உணர்வை சிறுவர்களுக்குப் புகட்ட வேண்டும். இன்றைய சமூகம் உள்ள இருப்பில், புத்தகங்களே சிறந்த வழிகாட்டிகளையும் முன்மாதிரிகளையும் நமக்கு அடையாளம் காட்டித் தருபவையாக உள்ளன. 
நாளிதழ்கள் வெளியிடும் தலையங்கங்கள், கட்டுரைகள், பதிப்பகத்தார் வெளியிடும் நூல்கள், சமூகம் குறித்தும், பொருளாதாரம் குறித்தும், அரசியல் குறித்தும் ஏராளமான தகவல்களுடன் வெளிவரும் பருவ இதழ்கள் என அனைத்தையும் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்களால் மட்டுமே அனைத்து வகை தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியும் என்பதுடன் உயர் பதவியையும் எட்ட முடியும் என்பது, மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அல்லது உயர்ந்த நிலையில் இருக்கும் பலரும் தெரிவிக்கும் கருத்தாக உள்ளது. 
இப்படி வாசிப்புடன் ஒன்றியிருந்த நம்மை வாசிப்புக்கு அந்நியமாக்கி, ஏன், வாசிப்பை அடியோடு நிறுத்தச் செய்த பெருமை முதலில் தொலைக்காட்சிகளைத்தான் சேரும். அதன் பின்னர் வந்த சமூக ஊடகங்கள் இன்றைய இளைஞர்களை ஒட்டுமொத்தமாகப் பல விஷயங்களில் புரட்டிப் போட்டு விட்டன என்றே சொல்லலாம். அப்படி புரட்டிப் போடப்பட்ட விஷயங்களில் மிக முக்கியமானது வாசிப்புப் பழக்கம்தான்.
முன்பெல்லாம் முழு நீள நாவலை ஒரே மூச்சில் படித்தவர்கள் பல பேர். நாளிதழ்களை வரி விடாமல் வாசிப்பவர்கள் பலர். ஆனால், அவை ஒவ்வொன்றாகக் குறைந்து, நாவல் என்பது குறுநாவலாகி பின் தொடர்கதையாகி, தொடர்ந்து சில பக்க அளவிலான கதையாக குறைந்து, பின் சிறுகதையாக வடிவெடுத்து, அதன் பின் ஒரு பக்கக் கதையாக சுருங்கி, இப்போது மைக்ரோ கதையாக சிறுத்து, சிதைந்து கிடக்கிறது.
அப்படிச் சுருங்க கொடுத்தாலும் கூட படிப்பதற்கு ஆளில்லை என்ற நிலையை இன்றைய சமூக ஊடகங்கள் உருவாக்கி விட்டன. முகநூல், கட்செவி அஞ்சல், யூ}டியூப் என உலகத்தைச் சுருங்க செய்து விட்ட சமூக ஊடகங்களால் வாசிப்பு என்பது வசப்படாமலேயே போய்விட்டது என்று அங்கலாய்த்தால் அது முற்றிலும் தவறு என்று தள்ளிவிட முடியாது. போதாக் குறைக்கு விரல் சொடுக்கில் கூகுள் கொடுக்கின்ற விஷயங்களாலும், பாட விஷயத்தைத் தவிர பிறவற்றுக்குப் புத்தகத்தை நாடிப் பக்கங்களைப் புரட்ட வேண்டிய தேவையே இல்லையென்று இளைஞர்களுக்குத் தோன்றிவிட்டதோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
வாசிப்பும், புதிய தேடலும் குறையக் குறைய, இளைய தலைமுறை ஒருவித சோம்பேறித்தனத்துக்கு அடியாகிவிடுகிறது. இதனால், சமூக ஊடகங்களுக்கு மனது அடிமையாக மாறி வருகிறது. எதிர்கால தலைமுறை யாருக்கும் அடிமையாகாமல் உயர, வாசிப்புப் பழக்கத்தை நமது பிள்ளைகளுக்கு முறையாக கற்றுத் தர வேண்டும். அறிவை வளர்க்கும் அடிப்படை விஷயம் வாசிப்பு மட்டும்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
ஒருவகையில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பு ஊக்கமும் ஆறுதலும் அளிக்கிறது. வாசிப்புப் பழக்கத்தை இன்றைய மாணவர்கள் மத்தியில் கொண்டு வர பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் பெரும் முயற்சி எடுத்து வருவது மன நிறைவைத் தந்த போதிலும், பள்ளிகளில் இருக்கும் நூலகங்கள், புத்தகங்கள் தூங்கும் அறையாக மட்டுமே இன்றும் இருந்து வருவது வேதனை. மாணவர்கள் இடைவேளை நேரங்களைப் பயனுள்ளதாகக் கழிக்க கதைகளை வாசிக்க, புத்தகங்களை படிக்க அந்த நூலகங்களை செயல்படுத்த வேண்டும். அதற்குப் பள்ளிகள்தோறும் ஆயிரக்கணக்கான புத்தகங்களை வழங்கினால் மட்டும் போதாது. அதை நிர்வகிக்க நூலகரையும் நியமிக்க வேண்டும். 
இன்றோ பள்ளிகள் பலவற்றில் மதிப்பு மிக்க, கிடைப்பதற்கரிய நூல்கள் பல பாதுகாக்கப்படாமல் சேதமுற்று கிடக்கின்றன. பொது நூலகங்களில் பல நூலகங்கள் தனியார் கட்டடத்தில் எந்தவிதப் பராமரிப்பும் இன்றி செயல்பட்டு வருகின்றன. அவை ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ அல்லது கிடைக்கும் இடத்திலோ பெயரளவில் செயல்பட்டு வருகின்றன. 
அவற்றை எல்லாம் மக்கள் பயன் பெறும் வகையில் நகரப்பகுதிக்குள் சொந்தக் கட்டடத்தில் செயல்படச் செய்தால் நூலகங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களின் தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம் நூலகக் கட்டடம் கட்டுவதற்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும் முன்னுரிமை கொடுக்கும் வகையில் நிதி செலவீட்டை அறிவித்தால் நூலகங்களின் தரம் உயர்த்தப்பட்டுவிடும். 
அதைவிட நாம் ஒவ்வொருவரும் செய்ய இயல்வது ஒன்றுண்டு. திருமணம், பிறந்த நாள், அதிலும் குறிப்பாக சிறுவர்களின் பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளில் வேறு எந்த பரிசுப் பொருளையும்விட, நல்ல நூல்களைப் பரிசாக கொடுப்போம். அப்படிச் செய்தால் வாசிப்பு நம் வசப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com