தாய்மொழியைப் போற்ற ஒரு தினம்!

கொலம்பியா நாட்டின் ரக்பி சாலமன் என்பவர் 1998-ஆம் ஆண்டில் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று ஐக்கிய நாட்டுச் சபை பொதுச் செயலாளருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதினார்.

கொலம்பியா நாட்டின் ரக்பி சாலமன் என்பவர் 1998-ஆம் ஆண்டில் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று ஐக்கிய நாட்டுச் சபை பொதுச் செயலாளருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதினார். இது பரிசீலிக்கப்பட்டது. இது 1999-இல், ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
பிப்ரவரி 21-ஆம் நாள் உலகத் தாய்மொழி தினமாக 2000-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. வங்க தேசத்தில் நடைபெற்ற தாய்மொழிப் போராட்டமும் இதற்குப் பின்புலமாக இருந்தது.
தாய்மொழி தேசியம் வளர்க்கும், நாட்டுப்பற்றை ஊட்டும் தாய்மொழி எந்த நிலையிலும் இன்பம் தரும். தாய்மொழி, சிந்தனையை வளர்க்கும். ஆகவே புதிய புதிய இலக்கியங்கள் பிறக்கும். தாய்மொழி அறிவியல் வளர்ச்சிக்கு உரமாக அமையும். தாய்மொழி மன ஒற்றுமைக்கு வழி வகுக்கும். இன முன்னேற்றத்துக்குப் பாதை போடும். 
ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தும், அண்ணல் காந்திஅடிகள் தாய்மொழி குஜராத்தியில் தன்வரலாறு எழுதினார். ரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்றுத் தந்த கீதாஞ்சலி கவிதை நூலைத் தனது தாய்மொழியான வங்க மொழியில் படைத்தார்.
தாகூர் தமிழ்நாட்டுக்கு ஒருமுறை வந்தபோது அவருக்கு வரவேற்புரை படித்து வழங்கப்பட்டது. அது ஆங்கிலத்தில் இருந்தது. 'இந்த வரவேற்புரை உங்கள் தாய்மொழியில் இருந்திருக்கலாமே' என்று கூறி அவர் வருத்தப்பட்டார். டி வேலரா என்பவர் அயர்லாந்து நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர். ஒரு கூட்டத்தில் அவரைப் பாராட்டி, சிலர் உரையாற்றினார்கள். 
அவர்கள், ஃபிரெஞ்சு, ஜெர்மன் முதலிய மொழிகளில் பேசினார்கள். அவரது தாய்மொழியான ஐரிஷ் மொழியில் ஒருவரும் உரையாற்ற வந்திருக்கவில்லை. தன் தாய்மொழியில் பாராட்டுரை கேட்க முடியவில்லையே என்று கூறி டி வேலரா கண்ணீர் விட்டார். 
இன்று குறுகிய நிலப்பரப்பில் உள்ள தமிழ்மொழி, ஒரு காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பரவி - விரவி இருந்தது. இந்த உண்மையை தாமஸ் ட்ராட்மன், அலெக்சாந்தர் கோந்தரதோவ், பண்டார்கர் முதலியவர்கள் எடுத்துரைத்தார்கள். சிந்தி மொழியில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை சிந்தி மொழி அறிஞர் பர்சோ கித்வானி ஆய்ந்து அறிவித்தார். 
மராத்திய மொழியில் கலந்துள்ள தமிழ்ச் சொற்களை அம்மொழிப் புலமையாளர் விசுவநாத் கைரே கண்டு உணர்த்தினார். சங்க காலத்துத் தமிழரின் ஊர்ப்பெயர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், சிந்து வெளிப் பகுதியில் இன்றும் உள்ளன.
தமிழ் நாகரிகமே, இந்திய நாகரிகத்தின் அடித்தளமாக அமைந்தது என்று சுனிதி குமார் சட்டர்ஜி ஆய்ந்துரைத்தார். தென்னாட்டுக்குரிய - தமிழருக்குரிய - சிவ வழிபாடு இந்தியா முழுவதும் பரவியிருப்பது, ஒரு சிறிய சான்று. 
உலகின் பல மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. ஹீப்ரு மொழியில் ரிசா (அரிசி) துகி(தோகை) முதலிய சொற்கள் இடம் பெற்றுள்ளன. தமிழினின் அரிசி, கிரேக்கத்தில் ஒரிசா என்று திரிந்து, ஆங்கிலத்தில் ரைஸ் என்ற உருவில் உள்ளது. 
கிரேக்கத்திலும் லத்தீனிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை ஞானகிரியார் ஆராய்ந்து நூல்கள் எழுதினார். சாத்தூர் சேகரனும் உலகின் பல மொழிகளில் தமிழ்ச் சொற்கள் இருப்பதை ஆய்ந்துரைத்தார். 'கல்' எனும் சொல் உலகம் முழுவதும் பரவியிருப்பதை அரசேந்திரன் தன் நூல்கள் மூலம் தெரிவித்தார். 
அம்மா என்ற சொல், முப்பது மொழிகளில் திரிபு நிலையில் வழங்கப்படுகிறது. ஆப்பிரிக்க மொழிகளில் தமிழ்ச் சொற்கள் திகழ்வதை செனகல் நாட்டு முன்னாள் தலைவர் செங்கோர் கூறினார். 
ஜப்பான் மொழியில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் விளங்கி வருவதை மேனாள் துணைவேந்தர் பொற்கோவின் துணையுடன் ஜப்பானிய அறிஞர் சுசுமு ஓனோ ஆராய்ந்து கூறினார். 
கொரிய மொழியில் தமிழ்ச் சொற்கள் இருப்பதை ஜங் நாம் கிம் என்ற கொரிய அறிஞரும் ஒரிசா பாலு என்ற தமிழறிஞரும் உணர்த்தியுள்ளனர். 
தமிழ் மொழியின் சிறப்பை, வின்ஸ்லோ, ஸ்லேட்டர், பெர்சிவல், மாக்ஸ்முல்லர், ஈராஸ், போப் முதலியோர் பலவாறு கூறிப் பாராட்டியுள்ளனர். 
கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் தமிழனைத் தலை நிமிரச் செய்தது. தமிழ், உலகின் முதல் செவ்வியல் மொழி (செம்மொழி) என்று தேவநேயப் பாவாணர் எடுத்துரைத்தார். தொன்மை, இயன்மை, தூய்மை, தாய்மை, முன்மை, வியன்மை, வளமை, மறைமை, எண்மை, இளமை, இனிமை, தனிமை, ஒண்மை, இறைமை, அம்மை, செம்மை என்ற 16 சிறப்புகளைத் தமிழ் தன்னுள் கொண்டிருக்கிறது என்றார் அவர். 
தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை, நீர்மை, அகப்பொருள், வீரம், இறைமை, சைவ சமயம், படைவீரர், நாடு, மன்னன், நூல் என்ற பொருள்கள் உள்ளன.
துறவிகளும் துறவாத மொழி தமிழாகும். குமரகுருபரர், சிவப்பிரகாசர், இராமலிங்க வள்ளலார், வண்ணச்சரபம், தண்டபாணி, ஞானியார் சுவாமிகள் முதலிய பல அடிகளார் தமிழைத் தலை மேல் வைத்துப் போற்றினார்கள். சமயம் பரப்ப வந்த பெஸ்கி முதலிய மேனாட்டுத் துறவிகள் தமிழ்த்தாசர் ஆனார்கள். 
உலகத்து பக்தி இலக்கியங்களின் பட்டியலுக்கு தமிழ், தலைமை தாங்குகிறது என்று தனிநாயகம் அடிகளார் அறிவித்தார். திணை, நானிலப் பாகுபாடு ஆகியவை தமிழுக்கே உரியவை. உலகத்திற்கு அறிவுக்கொடை அளித்துள்ளது தமிழ். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றவன் தமிழன். 
தமிழை 'என்றுமுள தென்தமிழ்' என்றார் கம்பர். 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பன்மொழிப் புலமைப் பாரதியார் இரத்தினச் சுருக்கமாய்ச் சொன்னார். 
உலகத் தாய்மொழி தினத்தன்று தமிழின் வளர்ச்சிக்குரிய வழிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். திட்டம் இட வேண்டும். 
செயற்படுத்தவும் வேண்டும்.
தமிழ் செழிக்க கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், ஊடகம், ஆகிய அனைத்துத் துறைகளிலும் தமிழ் நல்லாட்சி புரிய வேண்டும் என்று டாக்டர் அப்துல் கலாம் வழிகாட்டினார். 
மழலையர் பள்ளிமுதல் பல்கலைக் கழகப் படிப்பு வரை, தமிழே கல்வி மொழியாக விளங்க வேண்டும். அழிவு நிலை மொழிகளின் பட்டியலில் தமிழும் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
இந்த நிலையை மாற்றுவதற்கு முழுமுயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். 1956-இல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டது. இது எல்லாத் துறைகளிலும், எல்லா நிலைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
மொழியாலும் பண்பாட்டாலும் உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்த வேண்டும். இங்கிலாந்து, ஃபிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைநகரங்களில் பழைமையான நூலகங்கள் இருக்கின்றன. அங்கு அரிய தமிழ் நூல்கள் உள்ளன. அவற்றின் படிகளைப் பெற்று, தமிழக நூலகங்களில் சேர்க்க வேண்டும்.
நீதிமன்றங்களில் தமிழ் வாழவில்லை என்று மயிலாடுதுறை முன்னை நீதிபதி வேதநாயகர் வேதனைப்பட்டார். இன்றும் நிலைமை அதேதான். 
இனி நீதிமன்றங்களிலும் தமிழ் செழிக்கச் செய்ய வேண்டும். திரைப்படம், தொலைக்காட்சி, நாளேடு, பருவ இதழ் முதலியவை சக்தி வாய்ந்த ஊடகங்கள் நல்ல தமிழை வளர்க்கும் நிலை உருவாக வேண்டும். 
தமிழகக் கோயில்களில் ஓதுவார்களின் பக்தித் தமிழிசை இனிதாக முழங்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும். தமிழ் வழிபாடு நடைபெற வேண்டும். சித்த மருத்துவம் தமிழுடன் பிறந்தது என்று முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் சொன்னார். இந்தச் சித்த மருத்துவமும் ஓங்கி வளரும் நிலை உருவாக வேண்டும்.
உலகின் உயர்ந்த இலக்கியங்களையும் அறிவியல் புதுமைப் படைப்புகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள பன்னாட்டுத் தரத்தில் மொழிபெயர்ப்புத் துறை, புதிய கலைச் சொல்லாக்கத் துறை ஏற்படுத்த வேண்டும். 
சங்க காலத்திலிருந்து இன்றுவரை வாழும் செங்கம் போன்ற ஊர்களில் அகழாய்வு தொடங்கப்பெற வேண்டும். எந்தெந்த முறைகளில் தமிழை வாழ வைக்க முடியும் என்று முனைப்போடு தமிழர், அனைவரும் சிந்திக்க வேண்டும், செயற்படவும் வேண்டும்.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்றான் மகாகவி பாரதி. உலகத் தாய்மொழி தினத்தில் தமிழின் சிறப்பை உணர்வோம். தாய்மொழியாம் தமிழின் உயர்வையே விழைவோம். எங்கும் தமிழ் சிறக்கச் செய்வோம்.

பிப்ரவரி 21-ஆம் தேதி உலக தாய்மொழி தினம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com