மக்கள் பிரதிநிதிகளுக்கும் கட்டாய கல்வித் தகுதி?

ஜனநாயகம் எனும் உயர்ந்த கட்டடத்தை நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் எனும் நான்கு தூண்கள் தாங்கிப் பிடித்துள்ளன.

ஜனநாயகம் எனும் உயர்ந்த கட்டடத்தை நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் எனும் நான்கு தூண்கள் தாங்கிப் பிடித்துள்ளன. இதில், அரசு இயந்திரத்தின் பல்வேறு துறைகளில் பணிபுரிய விரும்புவோர், அப்பணிகள் தொடர்பான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கவே, வேலையின் தன்மையை பொருத்து பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியுள்ளது. நீதிமன்றத்துக்குள் வழக்குரைஞராக நுழைய சட்ட பாடப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டியது அடிப்படைத் தகுதி.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகத் துறையில் பணிபுரியவும் பட்டப்படிப்புடன் மொழி ஆளுமையும், மொழிப்பெயர்ப்புத் திறனும் அவசியமாக உள்ளது. நாட்டில் சட்டம் -ஒழுங்கை நிலை நாட்டும் காவலர் ஆவதற்கு, பதவியைப் பொருத்து பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகிறது. 
ஆனால், ஜனநாயகத்தின் அடிநாதமாகத் திகழும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு செல்லும் நம் மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர், முதல்வருக்கும், அவர்களால் அடையாளம் காணப்படும் அமைச்சர் பெருமக்களுக்கும் இந்த பதவிகளுக்கு போட்டியிட, குறிப்பிட்ட கல்வித் தகுதி எதுவும் வரையறுக்கப்படாதது ஏற்புடையதாக இல்லை.
'லாமேக்கர்ஸ்' - அதாவது சட்டம் இயற்றுவோர் எனப் பெருமையாக அழைக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் இயற்றும் சட்ட, திட்டங்களைத்தான் அரசு இயந்திரத்தின் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அதிகாரிகள் நிறைவேற்றுகின்றனர். 
அரசு இயந்திரத்தின் செயல்பாட்டில் ஏதேனும் குறைபாடோ, முறைகேடோ, ஊழலோ நிகழ்ந்தால் அதனை தீர விசாரித்து தண்டனை வழங்கும் முக்கிய இடத்தில் நீதிமன்றங்கள் உள்ளன. 
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகள், அரசு இயந்திரம், நீதிமன்றம் ஆகியவற்றின் அன்றாட நிகழ்வுகளை வெளியிலிருந்து ஊடகங்கள் கண்காணித்து வருகின்றன. 
அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் என இந்த மூன்றில் பணியாற்ற அடிப்படை கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்போது, இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான நாடாளுன்றம், சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகளாகப் பணியாற்றச் செல்வோருக்கு அடிப்படை கல்வித் தகுதி கட்டாயமாக்கப்படாதது நகை முரணாகவே தோன்றுகிறது.
நாட்டின் குடிமகனாக இருக்கும் எல்லோருக்கும் எப்படி வாக்குரிமை உள்ளதோ, அதேபோன்று மக்களின் பிரதிநிதியாக விரும்பும் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது. 
தேர்தலில் வெற்றி பெறுபவர்கள்தானே நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு செல்கிறார்கள்? தொகுதி மக்களின் விருப்பப்படிதானே ஒருவர் எம்.பி.யாவோ, எம்எல்ஏவாகவோ தேர்ந்தெடுக்கப்படுகிறார்? இந்த நடைமுறைக்கு மாறாக, மக்கள் பிரதிநிதியாகி, சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவோர் தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட கல்வியை தகுதியாக நிர்ணயிப்பது அவர்களின் அடிப்படை உரிமையை பறிப்பது ஆகாதா என்ற கேள்வி நமக்கு எழலாம். 
அப்படியானால், அரசு இயந்திரத்தில் பணியாற்றுவதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்ற விரும்புவோருக்கு மட்டும் ஏன் கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்ற எதிர் கேள்வியும் எழுகிறது.
அரசுப் பணியில் சேர்ந்து அதன் மூலம் சமூகத்துக்கு சேவகம் செய்ய விழைவோரின் கல்வித் தகுதி, வயது வரம்பு என எதையும் கருத்தில் கொள்ளாமல், ஆர்வம், விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் அவர்களை போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அனுமதிப்பது சரியாக இருக்குமா? இந்த யோசனை சரியில்லை என்றால், குறிப்பிட்ட கல்வித் தகுதி என எதையும் நிர்ணயிக்காமல், எம்.பி., எம்எல்ஏக்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை அனுமதிப்பதும் தவறுதான். 
நம் ஜனநாயக நடைமுறையின் மிகப்பெரிய இந்த முரண்பாட்டை களைய, எம்பி., எம்எல்ஏக்களாக போட்டியிட விரும்புவோர், அரசியல் அறிவியலை முதன்மைப் பாடமாகவும், நிர்வாகம், சட்டம் ஆகியவற்றை துணைப் பாடங்களாகவும் கொண்ட, இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 
அமைச்சர்களாக விரும்புவோர், எந்தத் துறையில் அமைச்சராக உள்ளாரோ அந்தத் துறை சார்ந்த படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிரதமர், முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் அரசியல் அறிவியல் பாடத்தில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்திருக்க வேண்டுமென இவர்களுக்கு ஏன் கல்வித் தகுதியை நிர்ணயிக்கக் கூடாது?
இதன்மூலம் படித்தவர்கள், இளைஞர்கள் அதிகமாக அரசியலுக்கு வருவதற்கு வழி பிறக்கும். அதன் பயனாக, அரசியலில் குற்றப் பின்னணி உள்ளவர்களின் ஆதிக்கம் படிப்படியாக குறையும். முக்கியமாக, பணம், பெயர், புகழ் என எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது; இனி அரசியலில் குதிக்க வேண்டியதுதான் மிச்சம் என்ற சினிமா பிரபலங்களின் கடைசிப் போக்கிடமாக அரசியல் இருக்கும் அவலநிலை மாறும்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, சில மாநிலங்களில் அடிப்படை கல்வித் தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் நீட்சியாக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கான தேர்தலில் போட்டியிடுவோருக்கும் கட்டாய கல்வித் தகுதியை வரையறுக்கும் வகையிலும், அதனை தொலைநிலைக் கல்வியில் இல்லாமல், கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று பட்டம் பெறும் விதத்திலும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் அவசியம் மற்றும் கட்டாயமும் கூட.
ஏன் காமராஜர், கக்கன் போன்றவர்கள் எல்லாம் சிறந்த ஆட்சியாளர்களாக வரலாற்றில் இன்றளவும் பேசப்படவில்லையா? அவர்கள் என்ன மெத்தப்படித்த பட்டதாரிகளா? என விதிவிலக்குகளை இங்கு நாம் உதாரணம் காட்டலாம். 
ஆனால், அன்றாட அரசியல் நிகழ்வுகள் நாளுக்கு நாள் மிகவும் மோசமாக போய் கொண்டிருப்பதன் விளைவாக, தங்களின் பிரதிநிதிகள் மீது மக்களுக்கு தீராத கோபமும், அரசியல் குறித்து ஒருவித வெறுப்புணர்வும் ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. 
தேர்தல் ஆணையம் எவ்வளவுதான் முனைந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி தேர்தலை நடத்தினாலும், வாக்குப்பதிவு அளவு குறைவாக இருப்பது அரசியல் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வுக்கு உதாரணம். இத்தகைய சூழலில்தான் அரசியலுக்கு வருவோருக்கு ஏன் கட்டாயக் கல்வித் தகுதியை நிர்ணயிக்கக் கூடாது? அதன் மூலமாக அரசியல் புனிதம் பெறாதா? போன்ற கேள்விகள் சாமானியர்கள் மனதில் மீண்டும் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com