சித்தர் சொல் கேளீர்!

மானுடத்தை நேரிய வழியில் நெறிப்படுத்த ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு மதம் தோன்றியது.

மானுடத்தை நேரிய வழியில் நெறிப்படுத்த ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு மதம் தோன்றியது. ஆனால், நாளடைவில் அந்த மதங்கள் தடம் மாறியதோடு, அதனைப் பின்பற்றிய மனிதர்களையும் தடம் புரள வைத்தது. இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கென்று ஐ.நா சபை உருவாகிற்று. ஆனால், வீட்டோ அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கின்ற வல்லரசுகளால், அது செயலிழந்து நிற்கிறது. இப்பொழுது உலகச் சகோதரத்துவத்தை நிலைநிறுத்துவதற்கு மொழி கடந்து, மதம் கடந்து, தேசிய குணம் கடந்து வாழ்கின்ற சித்தர் பெருமக்களால்தான் முடியும்.
 புதிய யுகத்திற்குப் பூபாளம் பாடிய மகாகவி பாரதி, "எனக்கு முன்னே சித்தர் பலர் வந்தாரப்பா, யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்' என்று தம்மை ஒரு சித்தர் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் காலத்தில் வாழ்ந்த மக்களால், இந்தியாவுக்கே நல்வாழ்வு கிடைக்கவில்லை என்பதைப் பாரதி, "மனவலிமையும் பொருள் வலிமையும் அற்ற இந்திய அரசர்களாலோ, வேத மந்திரங்களைப் பொருள் தெரியாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் பிராமணர்களாலோ, கொடைக்குணம் மறந்த வணிகர்களாலோ, மூடத்தன்மை மிக்க மற்றவர்களாலோ, இந்தியாவுக்கு அமரத்தன்மை கிடைக்கவில்லை' என்றவாறு புலப்படுத்துகின்றார்.
 மேலும் சித்தர்களும் யோகியர்களும் தாம் காத்து வருகிறார்கள் என்பதை, "இந்த தேசத்திலுள்ள ஜீவனை யுகயுகாந்தரங்களாக அழியாதபடி பாதுகாத்து வருவோர் யோகிகளே! கொடூரமான கலியில் உலகம் தலைகீழாகக் கவிழ்ந்து போகும் சமயத்தில்கூட, இந்துஸ்தானம் அழியாமல் தானும் பிழைத்து, மற்றவர்களையும் காக்கக் கூடிய ஜீவசக்தி, இந்நாட்டிற்கு இருப்பது அந்த யோகியரின் தபோ பலத்தாலன்றி வேறு இல்லை' என்பதாக பாரதியார் எழுதுகின்றார்.
 பாரதியின் அடிச்சுவட்டில் தடம் பதித்து வந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், "சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும், எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க' என்றார்.
 சித்தர்கள், உலகத்துக்கே ஒரே நாயகனாகத் திகழ்கின்ற இறைவனின் வாக்குப்படி நடப்பவர்கள் என்பதால், "சித்தம் போக்குச் சிவன் போக்கு' எனும் பழமொழி உருவாகிற்று. மேலும், சித்தமயம் இவ்வுலகம் எனும் உறுதி, நம் சித்தத்தில் ஓங்கிவிட்டால், துன்பம் அத்தனையும் வெல்லலாம் என்றார் பாரதியார். சித்தர்கள் சிலரோடு பழகிய மகாகவி பாரதி, சித்தர்களின் சுபாவங்களைக் "கந்தை சுற்றித் திரிவதென்னே? தேவனைப்போல் விழிப்பதென்னே? சிறியாரோடும் தெருவிலே நாய்களோடும் விளையாட்டென்னே? பாவனையிற் பித்தரைப் போல் அலைவதென்னே? பரமசிவன் போலுருவம் படைத்ததென்னே? ஆவலற்று நின்றதென்னே' என்றெழுதிக் காட்டுவதோடு, அவர்களை ஆச்சரியத்தோடும் பார்த்து நிற்கின்றார்.
 பாரதியாரும் ஒரு சித்தரே என்பதால் சித்தர்களின் பேராற்றலை முதன் முதலில் வியந்து சொன்னவரும், அவராகவே திகழ்கின்றார். "தெளிந்த ஞானி, பாசத்தை அறுத்துவிட்டான்; பயத்தைச் சுட்டான்; பாவனையாற் பரவெளிக்கு மேலே தொட்டான்; நாசத்தை அழித்துவிட்டான்; யமனைக் கொன்றான்; ஞானகங்கை தனை முடிமீது ஏந்தி நின்றான்; ஞானகுரு புகழினை நாம் வகுக்கலாமோ? எனச் சித்தர்களின் பெருமையினைப் பேசுகின்றான், பாரதி!
 இறைவனுடைய ஆற்றலுக்கும் சக்திக்கும் ஈடான ஆற்றலைப் பெற்றவர்கள் சித்தர்கள் என்றார், திருமூலர். முற்பிறவியின் முடிச்சை அவிழ்க்கக் கூடியவர்கள் சித்தர்கள் என்றும் அவர்களே இந்தப் பிறவியின் கர்மவினையை வலுவிழக்கச் செய்யக்கூடியவர்கள் என்றும் திருமூலர் கூறினார். நீரின் தன்மையும் நெருப்பின் தன்மையும் நாட்டுக்கு நாடு வேறுபடாதிருப்பது போல், சித்தர்களின் தன்மையும் உலகளவில் ஒன்றாகவே இருக்கும்.
 ஆழ்வார்களும் நாயன்மார்களும் சமய ஒருமைப்பாட்டைப் பாடினார்களே தவிர, உலக ஒருமைப்பாட்டை எண்ணிப் பார்த்ததில்லை. கிறித்தவத்தில் இருக்கின்ற ரோமன் கத்தோலிக்கர்களும், பிராட்டஸ்டன்ட்களும் ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போவதில்லை. அரபு நாடுகளிலுள்ள சியா முஸ்லீம்களும், சன்னி முஸ்லீம்களும் ஒத்துப் போகாததோடு வேற்றுமைகளையும் வளர்த்து வருகின்றனர். அப்படியிருக்கையில் திருமூலர் என்ற சித்தர்தான், "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று உலக ஒற்றுமைக்கும், உலகச் சகோதரத்துவத்திற்கும் முதல் குரல் கொடுத்தார்.
 சித்தர்கள் இறைவனின் பிரதிநிதிகளாய் இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பதை, "மனிதரிலே மரமுண்டு, விலங்குண்டு, பறவையுண்டு, மனிதரிலே மனிதருண்டு, வானவரும் மனிதராய் வருவதுண்டு' எனும் சித்தர் பாடலால் அறியலாம்.
 சித்தர்களுக்குத் தோற்றம் உண்டு; மறைவு கிடையாது. அவர்கள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து வாழ்வதைப் "பரகாயப் பிரவேசம்' என்பர். ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் சாதிகளும் உண்டு; மதமும் உண்டு. சாதி பேதம்தான் ஒழிய வேண்டும் என்று பாடினார்கள். ஆனால், சித்தர்கள் சாதியின் பெயரும் மதத்தின் பெயரும் இல்லாமல் போக வேண்டும் என்று நினைத்தவர்கள். இடைக்காட்டுச் சித்தர், "பலமதம் பொய்ம்மையே என்று ஓது குயிலே!' என்றார். பாம்பாட்டிச் சித்தர் "சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்' எனப் பாடினார். "சாதியாவது ஏதடா?... சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ' என நொந்து பாடினார் சிவவாக்கியர்.
 "சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச், சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்' எனப் பாடினார் பத்திரகிரியார். "பொய் வேதந்தன்னைப் பாராதே! அந்தப் போதகர் சொற்புத்திப் போதவராதே!' என்றார் கடுவெளிச் சித்தர்.
 சமுதாயச் சீர்திருத்தத்தோடு பொருளாதாரச் சமத்துவமும் திகழ்ந்தால்தான், உலக ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என எண்ணியவர்கள் சித்தர்கள். எனவே, "பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ? பறைச்சி போகம் வேறதோ? பணத்தி போகம் வேறதோ?' எனப் பாடினார் என்பது மட்டும் அன்று; சாடினார் சிவவாக்கியர்.
 இன்றைக்கு உலகமெல்லாம் போற்றிப் பின்பற்றுகின்ற மூச்சுப் பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அன்றைக்கே பாடிச் சென்றுள்ளனர் சித்தர்கள்! அப்படி மூச்சுப் பயிற்சியை வழக்கமாகக் கொண்டால், முதியோர்கள் இளமையை அடைய முடியும் என்றும், கருநிறமான மேனியுடையவர்களும் செந்நிறமுடையவர்களாய் ஆக முடியும் என்றும் பாடியுள்ளார், சிவவாக்கியர். (உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே, கபாலம் ஏற்ற வல்லிரேல், வியத்தரும் பாலராவர்; மேனியும் சிவந்திடும்).
 இதே கருத்தை வற்புறுத்தி திருமூலர், மூச்சுப் பயிற்சியின் மூலம் எமனையும் எட்டி உதைக்க முடியும் என்கிறார். "ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும், காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாரில்லை, காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறியதுவாமே' என்பது திருமந்திரம். சித்தர்கள் இவ்வுலகப் பற்றுக்களிலிருந்து தங்களை முற்றாக விடுவித்துக் கொண்டிருந்தாலும், மற்ற மனிதர்கள் வாழ்வதற்குரிய செம்மையான நெறிகளைக் கூறிச் சென்றிருக்கிறார்கள்.
 இவ்வுலகத்தில் வாழும் எல்லா மனிதர்களின் துன்பங்களுக்கும் காரணம், ஆசை - பேராசை என்பதை ஆதியிலே கண்டு சொன்னவர்கள் சித்தர்கள்! வையத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டுமென்றால், மனத்தைப் பக்குவப்படுத்த வேண்டும் என்று உலகத்தவரை எச்சரித்தவர்கள் சித்தர்கள்! அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு, அந்த ஆசை நிறைவேறாதபொழுது ஆத்திரப்பட்டு, அதனால் மன அதிர்வு ஏற்பட்டு, அந்த அதிர்வால் இதயவலி உண்டாகி, அதன் மூலம் உயிரிழப்பிற்கு உள்ளாகின்றனர். இதனைத் தீர்க்கதரிசனமாக உணர்ந்த திரிகாலஞானியாகிய பத்திரகிரியார், "ஓயாக் கவலையினால், உள்ளுடைந்து வாடாமல், மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்?' எனப் பாடுகின்றார்.
 அந்த மனத்தை எப்படிச் செம்மைப்படுத்துவதென்றும் சாற்றினார் இடைக்காட்டுச் சித்தர். புழுவொன்று, குளவியாவது எப்படித் தெரியுமா? குளவி ஒன்று இலையிலே இருக்கும் புழுவை எடுத்து வந்து தனது கூட்டிலே வைத்து, அதனைச் சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும். அந்த ரீங்காரத்திலே வயப்பட்டுப் புழுவும் நாளடைவில் குளவியாகிவிடும்.
 அதுபோல மனத்தை அதன் இடத்திலேயே நிறுத்தி, ஞானம் எனும் உளியால் அதனைச் சுற்றிச் சுற்றிச் செதுக்கிப் பக்குவப்படுத்த வேண்டும்' என்றார் இடைக்காடர். "குளவி புழுவைக் கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல்போல், வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவன்னமே' என்பது அப்பாடல்.
 சித்தர்கள் நாடுகளுக்கிடையேயுள்ள சுவர்களை உடைத்தெறிந்தவர்கள்; மதங்களுக்கு இடையே இருந்த வேலிகளை முறித்து எறிந்தவர்கள்; உலகெங்கனும் மூடியிருந்த மூடநம்பிக்கையாகிய முகமூடிகளைக் கிழித்து எறிந்தவர்கள். மனித குலம் முழுமையும் ஒருமைப்பாட்டோடு வாழ வேண்டுமென்பதை, "குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல், நான் மலபாண்டத்து உள்ளிருந்து மயங்கினேன் பூரணனே' எனத் தம்மை முன்னிலைப்படுத்திப் பாடினார் பட்டினத்தார்.
 இதனையே பாம்பாட்டிச் சித்தர், "எல்லா உலகமும் எல்லா உயிர்களும் எல்லாப் பொருள்களும், எண்ணரிய வல்லாளன் ஆதி பரம சிவனது சொல்லால் ஆகும்' எனப் பாடினார்.
 நீண்ட நாட்களாகப் பாழ்பட்டும், பழுதுபட்டும் கிடக்கும் உலகம், பையக் கையூன்றி எழுந்து நடக்க வேண்டுமென்றால், சித்தர் சொன்ன சொற்களைக் கேட்க வேண்டும்! கழிந்த காலம் போக எஞ்சியுள்ள நாட்களில் இனியது காண வேண்டுமென்றால், சித்தர்கள் காட்டிய வழியில் நடப்போமாக!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com