எல்லோருக்கும் நல்லவர்!

இமாசல பிரதேசத்தின் புதிய முதல்வராக ஜெய்ராம் தாக்குர் பதவி ஏற்றிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பல்வேறு மாநில பாஜக முதல்வர்கள்

இமாசல பிரதேசத்தின் புதிய முதல்வராக ஜெய்ராம் தாக்குர் பதவி ஏற்றிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பல்வேறு மாநில பாஜக முதல்வர்கள் முன்னிலையில் 52 வயது ஜெய்ராம் தாக்குர் முதல்வராகப் பதவி ஏற்றிருக்கிறார்.
 இமாசல பிரதேச சட்டப்பேரவை முடிவுகள் வழக்கம்போல ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாகவே, காங்கிரஸும் பாஜகவும் தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது வழக்கமாகியிருக்கிறது. இந்த முறையும் அதேபோல காங்கிரஸிடமிருந்து பாஜகவுக்கு ஆட்சி கைமாறி இருக்கிறது என்றாலும்கூட, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் திருப்புமுனைத் தேர்தலாகவும் அமைந்திருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்க மாற்றம்.
 காங்கிரஸ் வெற்றி பெற்றால் வீரபத்ர சிங்கும், பாஜக வெற்றி பெற்றால் பிரேம் குமார் துமலும் முதல்வராவது என்பதுதான் கடந்த 20 ஆண்டுகளாகத் தேர்தலுக்குத் தேர்தல் நடைபெற்று வந்தது. இந்த முறை வீரபத்ர சிங் வெற்றி பெற்றார் என்றாலும்கூட, அவரது தலைமையில் தேர்தலில் களம் கண்ட காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது என்றாலும், அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம் குமார் துமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார். விளைவு - ஜெய்ராம் தாக்குர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
 முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் ஜெய்ராம் தாக்குர், இமாசல பிரதேச அரசியலுக்குப் புதியவரொன்றும் அல்ல. பிரேம் குமார் துமலின் முந்தைய பாஜக அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இமாசல பிரதேச பாஜகவின் தலைவராகவும் இருந்தவர்.
 அந்த மாநிலத்தில் ராஜபுத்திரர்கள்தான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இவருக்கு முன்னால் முதல்வர்களாக இருந்த வீரபத்ர சிங்கும், பிரேம் குமார் துமலும்கூட ராஜபுத்திரர்கள்தான். ஆனால் அவர்களைப் போல, ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல ஜெய்ராம் தாக்குர்.
 மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜெய்ராம் தாக்குரின் அரசியல் வாழ்க்கை மாணவப் பருவத்திலேயே அகில பாரத வித்யார்த்தி பரிஷத் உறுப்பினராகத் தொடங்கியது. 1993-இல் தனது 28-ஆவது வயதில் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, தோல்வியைத் தழுவிய ஜெய்ராம் தாக்குர், 1998 முதல் தொடர்ந்து 5 முறையாகத் தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு வருகிறார்.
 இமாசல பிரதேச சட்டப் பேரவையின் 68 இடங்களில் 44 இடங்களை பாஜகவும், 21 இடங்களை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் பெற்றன. பாஜக ஏறத்தாழ 50% வாக்குகளைப் பெற்றது மட்டுமல்ல, இதுவரையில் இல்லாத அளவுக்கு 44 இடங்களைப் பெற்று சாதனையும் புரிந்திருக்கிறது.
 இந்த முறை முதல்வரைத் தேர்வு செய்வது என்பது பாஜக தலைமைக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிர மாநிலங்களில் நடந்ததுபோல, பாஜக தலைமையால் அடையாளம் காட்டப்படுபவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவது என்கிற வழக்கத்துக்கு, உத்தரப் பிரதேசத்தைப் போலவே, இமாசல பிரதேசமும் விதிவிலக்காக மாறியது.
 சட்டப்பேரவைத் தேர்தலில், குஜராத்தில் எதிர்கொண்டது போன்ற பலமான எதிர்ப்பை பாஜக எதிர்கொள்ளவில்லை. குஜராத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்குக் காட்டிய முனைப்பை, காங்கிரஸ் கட்சித் தலைமை இமாசல பிரதேசத்தில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதில் காட்டவில்லை. சுலபமாக வெற்றியடைந்து ஆட்சியையும் கைப்பற்றிய பிறகுதான், பாஜக மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. முதல்வர் வேட்பாளரான பிரேம் குமார் துமல் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில், யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற சிக்கல் பாஜகவுக்கு எழுந்தது.
 பாஜக தலைமையும், பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை முதல்வராக்க விரும்பினாலும், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. முன்னாள் முதல்வர்கள் சாந்தகுமார், பிரேம் குமார் துமல் இருவரின் ஆதரவு உறுப்பினர்களையும் ஒருங்கிணைப்பது மட்டுமல்லாமல், மத்திய அமைச்சர் நட்டாவின் ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்தியாக வேண்டிய நிர்பந்தம் கட்சித் தலைமைக்கு ஏற்பட்டது.
 ஏறத்தாழ ஒருவார காலப் பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் ஜெய்ராம் தாக்குர் முதல்வராக அறிவிக்கப்பட்டு, பொறுப்பேற்றிருக்கிறார். அனைவருக்கும் ஏற்புடையவர் என்பதும், நீண்ட கால அரசியல் அனுபவசாலி என்பதும்தான் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் காரணம்.
 விஐபி கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது; வீரபத்ர சிங்கின் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கும் ஏராளமான ஓய்வுபெற்ற அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்வது; அவசர கோலத்தில் முந்தைய அரசு எடுத்த சில முடிவுகளையும், நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்வது உள்ளிட்ட சில முடிவுகளை எடுக்க இருப்பதாக முதல்வர் ஜெய்ராம் தாக்குர் அறிவித்திருக்கிறார்.
 இமாசல பிரதேசத்தைப் பொருத்தவரை, சுற்றுலாவையும், காய்கனி விவசாயத்தையும் நம்பித்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இவையெல்லாம் ஜெய்ராம் தாக்குருக்குத் தெரியாதவை அல்ல. அவரது அரசியல் அனுபவம் இலக்கை எதிர்கொள்ளக் கை கொடுக்கும் என்று நம்பலாம்!

 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com