வங்கிகளும் பீதி செய்திகளும்!

வாராக்கடன்களின் சுமையால் சோர்ந்து போயிருந்த வங்கி துறைக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக, மறு முதலீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டு சில வாரங்கள் கூட முடியவில்லை.

வாராக்கடன்களின் சுமையால் சோர்ந்து போயிருந்த வங்கி துறைக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக, மறு முதலீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டு சில வாரங்கள் கூட முடியவில்லை. அதற்குள், நலிவுறும் வங்கிகளின் விதியை நிர்ணயிக்கும் நோக்கத்தில் புனையப்பட்ட "நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகைக்கான காப்பீட்டுச் சட்ட மசோதா'வின் வரைவில், வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை சம்பந்தமான எதிர்மறை குறிப்பு பகுதிகள் வெளியாகி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் பல்வேறு மாறுபட்ட கருத்துகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. வங்கிகள் மட்டுமின்றி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற நிதி நிறுவனங்களும் இந்த மசோதோவின் வரம்புக்குள் அடங்கும்.
 ரூ.115 லட்சம் கோடி அளவிலான வங்கி டெபாசிட்டுகளின் பெரும்பகுதி, நடுத்தர மக்களின் பங்களிப்பாகும். அந்த டெபாசிட் தொகைதான் சிறு தொழில் முதல் பெரிய நிறுவனங்கள் வரை கடன் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கல்வி, திருமணம், சொத்துகள் வாங்குதல், மருத்துவம், முதுமைக் காலம் போன்ற பல தேவைகளுக்காக சேமிக்கப்படும் வைப்புத் தொகையை அதன் முதிர்வு காலத்தில், வங்கி நிர்வாகத்தின் எந்த தலையீடுமின்றி, சுதந்திரமாக எடுத்து செலவழிக்கத்தான் ஒவ்வொரு வாடிக்கையாளரும் விரும்புவார். அந்த எதிர்பார்ப்புக்கு எதிர்மறையான எந்த நடவடிக்கையும், வங்கி வாடிக்கையாளரின் நம்பிக்கையை பாதித்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.
 உயர் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்ற மத்திய அரசின் பொருளாதாரக் கணைகளின் தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டு வந்து கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்கு, வங்கி வைப்புத் தொகை சார்ந்த எதிர்மறை செய்திகள், புதிய வகையான பீதியை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 வழக்கமான "பெயில்-அவுட்' முறையைப் பின்பற்றாமல், திவால் நிலைக்குத் தள்ளப்படும் வங்கிகளின் விதியை கையாள "பெயில்-இன்' என்ற மாறுபட்ட முறை இந்த வரைவில் குறிப்பிடப்பட்டிருப்பதுதான் அனைத்து விவாதங்கள் மற்றும் சந்தேகங்களுக்கும் வித்திட்டிருக்கிறது. இது மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மாறுபட்ட வழிமுறையாகும்.
 2008-ஆம் ஆண்டு அமெரிக்கா சந்தித்த பொருளாதார வீழ்ச்சி என்கிற சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டு திவாலான 400-க்கும் மேற்பட்ட வங்கிகளை அரசால் காப்பாற்ற முடியாமல் போன பிறகு, பிறந்த புதிய பொறுப்பு துறப்பு சித்தாந்தம்தான் "பெயில்-இன்' முறையாகும். திவால் நிலையில் தவிக்கும் வங்கிகளுக்கு போதிய நிதி ஆதாரத்தை வழங்கி அரசு காப்பாற்றினால் அது பெயில்-அவுட் முறையாகும்.
 பெயில்-இன் முறையில், நலிந்த வங்கிகள், தங்கள் நோய்க்கு சுயமாக மருந்து கண்டுபிடித்து, வாழ்வா அல்லது சாவா என்ற தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அந்த விதி நிர்ணயப் போராட்டத்தில், வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி பலியாகும் அபாயம் காத்திருக்கிறது. தங்கள் நிர்வாக சீர்கேட்டினால் நலிவுறும் வங்கிகள், ஒரு தவறும் செய்யாத டெபாசிட்தாரர்களின் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பது அல்லது தப்பிப்பது இந்த முறையில் சாத்தியமாகும்.
 மேற்கண்ட புதிய சித்தாந்தம் அமெரிக்காவிலிருந்து ஜி-7 நாடுகளுக்குப் பரவி, இந்தியா போன்ற ஜி-20 நாடுகளுக்குள்ளும் கசிந்ததன் விளைவுதான் இந்த வரைவு மசோதாவில் அடங்கியிருக்கும் குறிப்புகளாகும்.
 மறு முதலீட்டு திட்டம் போன்ற ஆதரவு திட்டங்கள் மூலம் நலிவுற்றிருக்கும் அரசு வங்கிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளின் இனிய ஸ்வரங்கள் ஒருபுறம் ஒலித்துக்கொண்டிருக்க, மறுபுறம், அதற்கு எதிர்மறையான முறைகளை உள்ளடக்கிய திட்டங்களைப் பற்றிய அபஸ்வரங்கள் வெளியானது சற்று முரண்பாடுதான்.
 இந்த மசோதாவின்படி, நலிவுறும் வங்கிகளை, நிதி ஆதாரங்கள் மூலம் அரசு காப்பாற்றாது; அதற்கு பதிலாக, அந்த வங்கியின் விதியை புதிதாக அமைக்கப்படவுள்ள தீர்வுக் கழகம் நிர்ணயிக்கும். முற்றிலும் திவால், நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற முக்கிய முடிவுகள் தீர்வுக் கழகத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்படும். வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையில் ஒரு பங்கு திருப்பித் தரப்படலாம். பெரும்பங்கு, பங்குகளாக அல்லது கடன் பத்திரங்களாக மாற்றப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
 இம்மாதிரி மாற்று யோசனைகள், வங்கி வியாபாரத்தின் ஆணிவேரான வாடிக்கையாளரின் நம்பிக்கையைச் சிதைத்து விடும் வல்லமை படைத்தவை என்று வாதிடப்படுகிறது.
 இந்திய வங்கி வரலாற்றில், கடந்த 40 ஆண்டுகளில் வங்கிகள் திவாலாகி, அதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழந்ததாக சரித்திரம் இல்லை. உண்மையில், டெபாசிட்தாரர்களை காப்பாற்றுவதற்காகவே, பாங்க் ஆஃப் தஞ்சாவூர், பாங்க் ஆஃப் தமிழ்நாடு, பாங்க் ஆஃப் கொச்சின், குளோபல் டிரஸ்ட் பாங்க் போன்ற நலிவுற்ற வங்கிகள் மற்ற வங்கிகளோடு இணைக்கப்பட்டன. இம்மாதிரி பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர, டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மூலம் ஒவ்வொரு வங்கி டெபாசிட்டுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு பாதுகாப்பும் நடமுறையில் உள்ளது. ஆனால், இந்த காப்பீட்டு நிறுவனம் இதுவரை, 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிளான ப்ரீமியம் வருமானத்தை மட்டும்தான் ஈட்டியிருக்கிறதே தவிர, இழப்பீட்டு தொகைக்கான விண்ணப்பங்களைச் சந்தித்தது இல்லை.
 மேலும், சமீப காலங்களில் வெளியாகும் உடனடித் திருத்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் வங்கிகள் பற்றிய செய்திகளும் வங்கி வாடிக்கையாளர்களை பீதியில் ஆழ்த்துகின்றன. இந்திய வங்கித் துறைக்கு இந்த நடைமுறை புதிது அல்ல. ஒரு வங்கியின் வியாபாரச் செயல்பாடுகள் அபாய கட்டத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே, ரிசர்வ் வங்கி, அதற்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ், சம்பந்தப்பட்ட வங்கிக்கு, அதன் குறைபாடுகளை நீக்கும் வண்ணம், நுண்ணிய ஆலோசனைகளை வழங்குகிறது. புதிய கடன் வழங்குதல் மற்றும் செலவுக் கட்டுப்பாடுகள், வாராக்கடன் வசூலை வேகப்படுத்துதல் போன்ற ஆலோசனை நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
 சமீப காலங்களில், சுமார் 10 அரசு வங்கிகள் இந்த நடவடிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது வங்கிகளையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாக்கும் திட்டம்தானே தவிர, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மூடு விழா கொண்டாடும் திட்டம் இல்லை என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். அந்த புரிதல்தான், தேவையற்ற பீதியைக் களைய உதவும்.
 வாராக்கடன்களின் வரலாறு காணாத வளர்ச்சிதான் வாடிக்கையாளர்களின் பீதிக்கு வித்திடும் இம்மாதிரி பல நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகின்றன. தங்களுக்கு ஒதுக்கப்படிருக்கும் சமூக கடமைகளைத் தவிர்த்து, மற்ற விஷயங்களில் அரசு வங்கிகள், முற்றிலும் வியாபார நோக்குடன்தான் செயல்பட வேண்டும்.
 ஆனால், வங்கி நிர்வாகங்கள் பல்வேறு காரணங்களினால், தங்கள் அன்றாடச் செயல்பாடுகளில் அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க முடிவதில்லை என்பதுதான் உண்மை நிலைமை ஆகும்.
 இதற்கான காரணத்தின் ஒரு பகுதி, அரசியல்வாதிகள் மூலம் தங்கள் பணி மேம்பாட்டை மேம்படுத்த துடிக்கும் சில உயர்நிலை வங்கி அதிகாரிகளைச் சாரும். கடன் வழங்கும் முறையில் நுழையும் அரசியல் தலையீடுகளைப் பற்றி, வங்கிகள், வங்கி கூட்டமைப்பின் தலைமைக்கு ரகசிய அறிக்கை அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
 சுமார் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது கூடும் வங்கி நிர்வாக இயக்குநர் குழுக்கள், வங்கியின் வருவாயை உலுக்கும் பல்வேறு செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து, குறைபாடுகளைக் களைவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதற்கு, இயக்குநர் குழுவினரின் வங்கி சார்ந்த நிபுணத்துவம் மிக அவசியம். அம்மாதிரி நிபுணத்துவத்தை மேம்படுத்தும் விதமாக தற்போதைய வங்கி இயக்குநர் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வங்கியின் இயக்குநர் குழுவில் அங்கம் வகிக்கும் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி, வெறும் பார்வையாளராக மட்டும் செயல்படுவதைத் தவிர்த்து, ரிசர்வ் வங்கியின் பொருளாதார தூதுவராக இயங்க வேண்டும்.
 கடன் வழங்குதல், வழங்கிய கடன்களின் நிர்வாகம், கடன் வசூல் ஆகியவற்றில் வங்கிப் பணியாளர்களின் திறன் உடனடியாக பல மடங்கு உயர்த்தப்பட வேண்டியது மிக அவசியம். மக்களின் வரிப்பணம் வாராக்கடன்கள் மூலமாக வீணடிக்கப்படுவதை தவிர்க்கும் பொறுப்புணர்வோடு வங்கி அதிகாரிகள் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
 அரசு வங்கிகளின் தற்போதைய பொருளாதார நிலைமையை மேம்படுத்த நிதி ஆதாரத்துடன், அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாத, நாட்டு நலனில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய, திறமையான அதிகார வர்க்கம் தேவை.
 தற்போதைய கருத்து கணிப்புப்படி, பல அரசு வங்கிகள் முடக்க நிலையில்தான் உள்ளன. இந்த முடக்க நிலைமையை அப்படியே நீடிக்கவிட முடியாது. அரசு வங்கிகள் திவால் ஆனால், அரசே திவால் ஆனது போல்தான் என்பதால், நலிவுற்ற வங்கிகளை வங்கி இணைப்புகள் மூலம் காப்பாற்றும் நடவடிக்கை இந்த சூழலில் வங்கித் துறைக்கு அருமருந்தாகக் கருதப்படுகிறது.
 நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் அரசு வங்கிகள் திவாலாகும் பேச்சுக்கே இடமில்லை. ஆகவே, புதிய மசோதாவினால், அரசு வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் தங்கள் வைப்புத்தொகை பறிபோய்விடும் என்ற வாடிக்கையாளர்களின் அச்சம் தேவையற்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.
 அவசியமற்ற அச்சங்களைத் தவிர்த்து, பல அரசு நிதி திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அரசு வங்கிகள் விரைவில் தற்போதைய நிலைமையிலிருந்து மீண்டு எழுந்து, புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்ற நம் அனைவரது நல்வாழ்த்துகளை இங்கு பதிவு செய்வோம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com