அரசு துறைத் தேர்வுகள் - சில குறிப்புகள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான பணியாளர்களைத் தெரிவு செய்து தரும் முதன்மை அமைப்பான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு ஊழியர் சார்ந்த மற்றொரு முக்கியமான பொறுப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான பணியாளர்களைத் தெரிவு செய்து தரும் முதன்மை அமைப்பான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு ஊழியர் சார்ந்த மற்றொரு முக்கியமான பொறுப்பு, பல்துறை ஊழியர்களுக்குமான "துறைத் தேர்வுகளை' நடத்தித் தருவது.
அனைத்துத் துறை ஊழியர்களுக்குó பொதுவான தேர்வுகள் "சிறப்புத் தேர்வுகள்' என்றும், அந்தத் துறை சார்ந்த ஊழியர்கள் மட்டுமே எழுதத் தேவையான தேர்வுகள் "துறைத் தேர்வுகள்' என்றும் இரு வகையாக இருந்தன. இவையிரண்டும் ஒருங்கமைக்கப்பட்டு 1990-ஆம் ஆண்டு முதல் "துறைத் தேர்வுகள்' என்ற ஒரே தலைப்பின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசுப் பணி நாடி லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றாலும், தகுதியானவர்களை மட்டும்தானே ஆணையம் தேர்வு செய்கிறது? அப்படியிருக்க, அரசுப் பணிக்கு வந்த பின் மீண்டும் ஒரு தேர்வு எதற்கு?
இந்த நியாயமான கேள்விக்கு, நேர்மையான பதில் சட்டத் துறையில் காணப்படுகிறது. "அறியாமை என்பது மன்னிப்புக் கோருவதற்குரிய காரணமல்ல' என்பதுதான் அது. அதவாது, "அரசுப் பணியில் உள்ள எவரும் விதிமுறைக்கு மாறாக ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, தெரியாமல் செய்துவிட்டேன் என்று மன்றாடுவது, மன்னிப்புக்குப் போதுமான காரணமல்ல!' என்பதுதான் அரசு ஊழியர் அரசுப் பணிக்கு வந்ததும் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விதி! இதன் பொருட்டு நடத்தப்படுவதே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தித் தரும் துறைத் தேர்வுகள்.
இத்துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதன் மூலம் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிகிறது. முதலாவதாக, நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால்தான் பணியில் தொடர்ந்து நீடிக்கலாம். அதிகபட்ச காலக்கெடுவான 5 ஆண்டுகளுக்குள் துறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியிலிருந்து விலக்கப்படலாம். மருத்துவப் பணிகளில் உதவி மருத்துவராகப் பணியில் சேர்வோர் இந்த நிபந்தனைக்கு உட்பட்டவர்கள். முன் ஊதிய உயர்வு (அட்வான்ஸ் இன்க்ரிமென்ட்) பெறுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த துறைத் தேர்வுகளை அரசுப் பணிக்கு வந்த பிறகுதான் எழுத வேண்டும் என்பது கிடையாது. பதினாறு வயது நிரம்பிய எவரும், அரசுப் பணிக்கு வருவதற்கு முன்பே தேர்வு எழுதி, தேர்வு பெற்று ஆயத்தமாக இருக்கலாம்!
ஆண்டுக்கு இரு முறை, மே மாதத்தின் இறுதிப் பத்து நாட்களிலும், டிசம்பர் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களிலும் நடத்தப்பட்டு வரும் துறைத் தேர்வுகளில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் சில சீரமைப்புகள் கொண்டு வரப்பட்டன. தேர்வுக்கான குறியீட்டு எண்களில் மாற்றம், தேர்வுக்கான பாடத் திட்டம், தேர்வுக்கான நேரம், தேர்வுக் கட்டணம், வினாத்தாளில் மாற்றம் ஆகியவை குறித்து சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் முக்கியமானவையாகக் கருதப்படுபவை தேர்வுக்கான நேரம் மற்றும் வினாத்தாளின் வடிவம்.
அதாவது, இதுவரை 3 மணி நேரமாக இருந்த தேர்வு எழுதுவதற்கான அவகாசம், சில தேர்வுகளுக்கு இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மற்றொன்று, வினாத்தாளில் செய்யப்பட்டுள்ள வரவேற்கத்தக்க மாற்றம் பற்றியது. ஒட்டுமொத்த வினாத்தாளுக்கும் பத்தி வடிவில் விரிவான விடை (டிஸ்கிரிப்டிவ்) எழுதி வந்த முறையை சீரமைத்து, வினாத்தாளை இரு பிரிவுகளாகப் பகுத்து அமைத்திருப்பது ஒரு மாற்றம். 
இவற்றுள் முதல் பகுப்பு வினாக்களுக்கு, வினா ஒவ்வொன்றுக்கும் நான்கு விடைகளைக் கொடுத்து சரியான விடையைத் தேர்வு செய்யும் (அப்ஜக்டிவ் டைப்) முறை. இது முதல் பிரிவு. வினாத்தாளின் இரண்டாவது பிரிவு -வினாக்களுக்கு முன்னர் இருந்தது போல பத்தி வடிவில் விரிவான விடை எழுதும் (டிஸ்கிரிப்டிவ்) முறை. பிரிவு ஒவ்வொன்றிலும் குறைந்த பட்ச மதிப்பெண்ணுக்குக் குறையாமல் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி என்பது விதி.
மேற்காணும் தேர்வு செய்யும் (அப்ஜக்டிவ்) முறை மற்றும் விரிவான விடை (டிஸ்கிரிப்டிவ்) முறை என்று இரு பிரிவுகளாக இல்லாமல், முழுத் தேர்வையுமே அப்ஜக்டிவ் முறையில் விடையைத் தேர்ந்தெடுக்கும் துறைத் தேர்வுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சீரமைக்கப்பட்ட தேர்வு நடைமுறையில் கடந்த மாதம் தேர்வு எழுதி முடித்துவிட்டு வந்த தேர்வர்களின் பரவலான கருத்து, "தேர்வை எழுதி முடிக்க நேரம் போதவில்லை" என்பதாக இருக்கிறது.
அதிலும், பல வகைப்பட்ட கணக்குத் தேர்வு (அக்கவுண்ட் டெஸ்ட்) எழுதியவர்களின் கருத்து என்னவெனில், அப்ஜக்டிவ் பிரிவு விடை எழுதும் நேரத்தைக் குறைத்தாலும் பரவாயில்லை, விரிவான விடை எழுதும் டிஸ்கிரிப்டிவ் முறை பதில்கள் எழுதுவதற்கான கால அவகாசத்தை சற்றே அதிகரித்தால் நல்லது என்பதுதான்.
தேர்வர்களின் "கால அவகாசம் தேவை' என்ற கோரிக்கை பரிசீலனைக்கு உரியதுதான் என்றாலும், நேரமின்மைக்கு இரண்டு காரணிகள் மறுக்க முடியாதவை.
ஒன்று, இப்போதெல்லாம் கணினி பயன்பாடு காரணமாக கையால் எழுதும் பழக்கம் குறைந்து போனதால், விரைந்து எழுத முடியாமல் போனது. இது முதன்மைக் காரணம். பள்ளி, கல்லூரி பருவத்துக்குப் பிறகு கையால் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது எனலாம்.
தேர்வு எழுதுவதற்கு கால அவகாசம் போதாமல் போனமைக்கு மற்றொரு காரணம், மை பேனாவால் எழுதும் பழக்கத்தைக் கைவிட்டு பந்து முனைப் பேனாவால் எழுத ஆரம்பித்தது எனலாம். ஏனென்றால், மை பேனா கொண்டு எழுதும் வேகத்துக்கு இணையாகப் பந்து முனைப் பேனால் எழுத முடியாது. அது மட்டுமன்றி, மை பேனா பிடித்து கை நோகாமல் நீண்ட நேரம் எழுத முடியும். பந்து முனைப் பேனா கொண்டு நீண்ட நேரம் எழுதுவது சிரமமே!
தேர்வர்கள் இருபதின்மராகவும் இருக்கலாம்; ஐம்பதின்மராகவும் இருக்கலாம். எந்த வயதினராக இருந்தாலும், மை பேனா பயன்பாட்டின் முக்கியச் செயல்பாட்டை, பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு துறைத் தேர்வுகளை குறித்த நேரத்தில் எழுத முயற்சி செய்ய வேண்டும். இந்த வகை வினாத்தாளுக்கு கூடுதல் கால அவகாசம் கோரும் கோரிக்கையும் பரிசீலனைக்கு உரியதே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com