சட்டத் திருத்தத்தால் சாதிக்க முடியுமா?

குழந்தை திருமணங்களை செல்லாததாக அறிவிக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சரவையை அணுக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்

குழந்தை திருமணங்களை செல்லாததாக அறிவிக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சரவையை அணுக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், சட்டத் திருத்தம் மேற்கொண்டால் மட்டும், குழந்தை திருமணங்களைத் தடுத்து நிறுத்தி விட முடியுமா?
இந்தியாவில் பெண்ணுக்கான சட்டப்பூர்வ திருமண வயது 18-ஆகவும், ஆணுக்கான திருமண வயது 21-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதை எட்டுவதற்கு முன்பே நடைபெறும் திருமணங்கள் குழந்தை திருமணங்களாக வரையறுக்கப்படுகின்றன. 
ஆணோ, பெண்ணோ, அவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பக்குவப்படுவதற்கு முன்னரே அவர்களை திருமண பந்தத்துக்குள் திணிப்பது இக் குழந்தை திருமணங்கள். மதச் சம்பிரதாயங்கள், சமூக பழக்க வழக்கங்கள், பொருளாதார நிலை, அறியாமை என்று பல்வேறு காரணங்களால் குழந்தை திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. 
இச்செயல் மனித உரிமை மீறலாகும். மிக இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் ஆணோ, பெண்ணோ உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். 
குழந்தை திருமணங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்யும் ஒரு பெண் தாய்மைப் பேறு அடைந்து, குழந்தை பிறக்கும்போது, அக்குழந்தை இறப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், அந்தப் பெண், குடும்பத்தில் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 
பெண் குழந்தை பிறந்தால் பிரச்னைகள் அதிகம் என எண்ணி, பிறந்தவுடனேயே கள்ளிப் பால் ஊற்றி கொல்லும் அவலம் நமது மாநிலத்திலேயே சில மாவட்டங்களிலேயே இருந்து வந்தது. தற்போது அச்செயல் குறைந்துள்ளது. தற்போது பெண் குழந்தை என்று கணடறியப்பட்டால், அது கருவிலேயே அழிக்கப்படுகிறது. 
தங்களது சொத்து அடுத்தவருக்குச் சென்றுவிடக் கூடாது, உறவு விட்டுப் போய் விடக் கூடாது என பல்வேறு காரணங்களைக் கூறி, அத்தை மகனையும், மாமன் மகளையும் பிறந்தவுடனேயே மணமக்களாக்கி, இளம் வயதிலேயே (அவர்கள் இருவருக்கும் விருப்பம் இந்தாலும் சரி, இல்லையென்றாலும் ) திருமணத்தையும் முடித்து விடுகின்றனர். 
தமிழகத்தில் உள்ள ஒரு கடைக்கோடி மாவட்டத்தில், குடும்பச் சூழ்நிலை, பொருள் தேட வெளியிடங்களுக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண் குழந்தை 10-ஆவது, 12-ஆவது வகுப்புப் படிக்கும்போதே, திருமணம் செய்து விடுகின்றனர். இப்படிப்பட்ட பெண்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்களா அல்லது குடும்பத்தைக் கவனிப்பார்களா? இது ஒருபுறம் என்றால், பெரிய குடும்பமாக வசிப்போர், பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக பெண் குழந்தைக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து விடுகின்றனர். இந்தியாவைப் பொருத்தவரையில், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. 
குழந்தை திருமணங்களால், ஒரு குடும்பம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில்தான் அதிக குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன என்று யுனிசெஃப்' அமைப்பு கூறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
குழந்தை திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துத் தெரிந்தும் மாற்றம் ஏற்படவில்லை. இதை இன்னும் முடுக்கிவிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. பெண் குழந்தைகள் குறைந்தது உயர்நிலைக் கல்வியாவது பெறும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தை திருமணங்கள் அதிகமாக கிராமப்புறங்களிலே நடப்பதால், அப்பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
குழந்தை திருமணங்களைத் தடுக்கும் வகையில், பிரிட்டிஷ் அரசு குழந்தை திருமணத் தடைச் சட்டத்தை 1929-இல் கொண்டு வந்தது. இதுவே குழந்தை திருமணங்களுக்கு எதிராக முதல்முறையாக கொண்டு வரப்பட்ட சிறப்பு சட்டப் பிரிவாகும். இச் சட்டத்தை மீறினால் விதிக்கப்பட்ட தண்டனையோ, அபராதமோ மிகவும் குறைவாக இருந்தது. 
இதன் பிறகு, 2006-இல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இச் சட்ட மீறலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை கடுமையாகவும், அபராதம் கூடுதலாகவும் இருந்தன. அதாவது, இரு ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கணவர் மேஜராக இருந்தால், மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டும். கணவர் மைனராக இருந்தால், அவரது பெற்றோர் ஜீவனாம்சம் தர வேண்டும் என சட்டம் சொல்கிறது. 
குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, குழந்தை திருமணத் தடைச் சட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், திருமணம் முடிந்துவிட்டால், சம்பந்தப்பட்ட இருவரும் விரும்பினால், திருமணத்தை செல்லத்தக்கதாக அங்கீகரிப்பதற்கு மேற்கண்ட சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு அனுமதிக்கிறது. இருவரில் ஒருவர் நீதிமன்றத்தை அணுகினால் மட்டுமே திருமணத்தை ரத்து செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. 
இந்நிலையில், ஒட்டுமொத்தமாக குழந்தை திருமணங்களை செல்லாததாக அறிவிக்கும் வகையில், குழந்தை திருமணத் தடைச் சட்டத்தில் உரிய திருத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய அமைச்சரவையை அணுக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.
இதை சட்டத்தின் மூலம் சாதிப்பதை விட, அனைவரும் தனி மனித சுதந்திரத்துக்கு மதிப்பளித்து, ஆணோ, பெண்ணோ உரிய வயதை எட்டியவுடன் திருமணம் செய்து வைப்பதே சாலச் சிறந்தது. இதை ஒவ்வொரு பெற்றோரும் உறுதிமொழியாக எடுத்துக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com