பாடம் படிக்கவில்லையே...

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடந்த கொடூர சம்பவங்களில் இருந்து அரசும், அதிகாரிகளும் இன்னமும் பாடம் படிக்கவில்லை

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடந்த கொடூர சம்பவங்களில் இருந்து அரசும், அதிகாரிகளும் இன்னமும் பாடம் படிக்கவில்லை போலும். கும்பகோணத்தில் ஓலைக் கூரை வேய்ந்த தனியார் பள்ளியில் கடந்த 2004-இல் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். அதற்குப் பிறகும் பள்ளிகளில் நிகழும் தீ விபத்து சம்பவங்களை ஆராய்ந்துப் பார்த்தால், அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் விதிமுறை மீறல்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது தெரிகிறது.
 திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் கடந்த 18-ஆம் தேதி, தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இரு மாடிகள் கொண்ட கட்டடத்தின் இரண்டாவது மாடியில் விபத்து நிகழ்ந்துள்ளது. ஆசிரியர்களும், ஊழியர்களும் விரைவாகச் செயல்பட்டு மாணவர்களைக் காப்பாற்றியுள்ளனர். தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்துள்ளனர். மின்கசிவு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எளிதில் தீப்பற்றக்கூடிய சில பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
 தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் முதல் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை நடைபெற்று வந்துள்ளன. இந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஐந்து அல்லது ஆறு பிரிவுகள் உண்டு. அதன்படி பார்த்தால் அந்தக் கட்டடத்தில் மொத்தம் சுமார் 1,500 பேர் வரை இருந்திருக்கக்கூடும். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் சென்று பார்வையிட்டுள்ளனர். அப்போது, அந்த கட்டடம் கடந்த 1995-இல் கட்டப்பட்டுள்ளதும், அதற்கு இதுவரையில் முறையான அனுமதி பெறவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
 கட்டடத்துக்கே அனுமதி பெறவில்லை என்றால், அதன் உறுதித்தன்மை மற்றும் தீத் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான தடையில்லாச் சான்று போன்றவற்றைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. இவையெல்லாம், விபத்து நடந்த பிறகுதான் மாவட்ட அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது. இப்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 தனியார் பள்ளிகள், ஒவ்வொரு கல்வியாண்டுத் தொடக்கத்திலும், தீத் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதற்கான தடையில்லாச் சான்றை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டும். இதேபோல், கட்டடத்தின் உறுதித்தன்மைக்கும் சான்று பெற வேண்டியது அவசியம். ஆனால், அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த சான்றிதழ்களை பெறுகின்றனவா, கட்டடங்கள் அனைத்தும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. மேலும், இவற்றை கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
 முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அசம்பாவிதம் நடந்த பிறகு அதற்கான காரண காரியங்களை ஆராய்வதும், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதும், நிகழ்ந்துவிட்ட தவறுகளுக்கு யாரையாவது ஒருவரை பலிகடா ஆக்கிவிட்டு அந்தப் பிரச்னையை அப்படியே கைகழுவி விடுவதும் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் வாடிக்கையாகி வருகிறது. உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அநேக நிகழ்வுகளிலும் இதுதான் நடக்கிறது.
 பள்ளிக் கட்டடங்களுக்கு தீயணைப்பு துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற கட்டணம் கிடையாது. பள்ளிகள் விண்ணப்பித்த உடன் தீயணைப்பு துறை அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்து சான்றிதழை வழங்க வேண்டும். ஆனால், இந்த சான்றைப் பெற ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது என்பது தனியார் பள்ளிகளின் குற்றச்சாட்டு. பல பள்ளிகள் தீத் தடுப்பு ஏற்பாடுகளை செய்யாமலேயே "எப்படியோ' சான்றிதழைப் பெற்று விடுவதும் உண்டு.
 கல்வித் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்தால் இந்த குறைபாடுகள் எல்லாம் தெரிய வரும். அவர்கள் முறையாக ஆய்வு செய்திருந்தால் இந்த பாளையங்கோட்டை பள்ளி எப்படி 23 ஆண்டுகளாக அனுமதி பெறாத ஒரு கட்டடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை வைத்து பாடம் நடத்தி இருக்க முடியும்? தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை பள்ளிக் கட்டடங்கள் இப்படி இருக்கின்றனவோ? உடனே ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
 பள்ளி வாகனங்கள் அதிவேகமாக சென்று விபத்துகளில் சிக்குவதைத் தடுக்க வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை ஒவ்வொரு ஆண்டும் வட்டார போக்குவரத்துத் துறையினர் ஆய்வு செய்து சான்று அளிப்பர். இதனால் இப்போது பள்ளி வாகனங்கள் அதிக வேகம் காரணமாக விபத்தில் சிக்குவது குறைந்துள்ளது. அதேபோன்று பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம்.
 கும்பகோணம் தீ விபத்து நடந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓலைக் கூரை வேய்ந்த பள்ளிக் கட்டடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கான்கிரீட் கட்டடங்களால் மட்டுமே குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்து விடுவதில்லை. எனவே, விதிமுறைகளை உருவாக்குவதுடன் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று அரசும் அதிகாரிகளும் எண்ணாமல், அவற்றைத் தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com