முடிவுக்கு வருமா வங்கி மோசடிகள்?

இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகள் பலவும், நேர்மையற்ற தொழிலதிபர்கள் பலருக்கும் விதிகளை மீறி பல்லாயிரம் கோடி ரூபாய்களை கடனாக வழங்கி,

இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகள் பலவும், நேர்மையற்ற தொழிலதிபர்கள் பலருக்கும் விதிகளை மீறி பல்லாயிரம் கோடி ரூபாய்களை கடனாக வழங்கி, அந்தப் பணத்தை வசூல் செய்ய முடியாமல் நஷ்ட நிலைமைக்கு சென்று விட்டன. இந்த நிலைமை உலகின் எல்லா நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நம் நாட்டின் நிதிநிலைமை சீர்குலைவு, நமது பொருளாதாரத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது குறித்து பல நாடுகளும் விவாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
அரசுடமையாக்கப்படுவதற்கு முன்பு வங்கிகள் பல முறைகேடுகளில் ஈடுபட்டதால், அவற்றில் பணத்தை சேமித்து வைத்திருந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதை நினைவில் கொண்டால்தான் வங்கிகளின் இன்றைய நிலைக்கான காரணம் புரியும். ஒரு தனியார் வங்கி, அதில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் தரவும், கட்டட வாடகை போன்ற நிர்வாகச் செலவுகளுக்கும், வங்கியில் கடன் பெற வரும் வாடிக்கையாளர்களுக்குப் பணம் வழங்கவும் அந்த வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத்தை உபயோகிப்பது நடைமுறை. மிகப்பெரிய பணக்காரர்களின் குடும்பங்கள் வங்கியை ஆரம்பிக்கும்போது, கிராமப்புற மக்கள் அங்கே முதலீடு செய்தால் தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என எண்ணினார்கள்.
பின்னர், நிறைய வங்கிகள் இதுபோன்று சேமிப்பு முதலீட்டுப் பணத்தை தங்கள் வியாபாரத்திற்கும் வங்கியின் நிர்வாகத்திற்கும் செலவிட்டதால், வாடிக்கையாளர்கள் முதலீடு செய்திருக்கும் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு பல வங்கிகள் மூடப்பட்டன. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்களே. 
இவர்கள் பணத்தை வங்கியில் முதலீடு செய்யாமல் தங்கள் வீடுகளில் சேமிப்பு பெட்டிகளில் பணத்தை மறைத்து வைத்து வாழும் நிலைமை உருவாகியது. இதனால், பல வீடுகளில் சேமிப்புப் பெட்டிகளை உடைத்து திருடிச் செல்லும் வழக்கம் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் பரவியது.
அதற்கும் மேலாக, தங்கள் வருமானத்திலிருந்து சேமித்துக் கிடைக்கும் பணத்திற்கு வட்டி வருமானம் கிடைத்தால் மக்களிடம் சேமிப்புக் கலாச்சாரம் உருவாகி, அது நமது பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்ற அடிப்படை தத்துவம் மேலைநாடுகளிலிருந்து கற்றுக் கொள்ளப்பட்டது.
இவை எல்லாவற்றையும் அடிப்படையாக்கி, பெரிய வங்கிகளை நாட்டுடைமையாக்கும் மிகப்பெரிய நடவடிக்கையை அன்றைய மத்திய அரசு எடுத்தது. அதன்பின், வங்கிகள் தரமானதாகவும், ஒழுங்கான வகையிலும் நடந்து வருகின்றன என்ற மனநிலை மக்கள் மனத்தில் உருவானது. தொழில் வளர்ச்சிக்கு தேவையான பல்லாயிரம் கோடி முதலீட்டுப் பணத்தை வங்கிகளுக்கு மக்கள் அளிக்கும் வைப்புத் தொகையிலிருந்து வழங்கும் வழக்கம் உருவானது!
ஆனால், வங்கிகளை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டு நம் நாட்டிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சமடைந்துவிட்ட பல முதலாளிகளின் கதை அண்மையில் வெளிவர ஆரம்பித்துள்ளது. அதில் முக்கிய இடத்தில் இருப்பவர், நீரவ் மோடி எனப்படும் குஜராத் மாநில வைர வியாபாரி. இவர் பல நடவடிக்கைகளை விளம்பரப்படுத்தி தான் ஒரு சிறந்த வைர வியாபாரி என்று பிரகடனப்படுத்தினார். சினிமா நடிகை மற்றும் மாடல் அழகிகளை வைத்து தனது வைர நகைகளை விளம்பரம் செய்ததால் நீரவ் மோடியின் பெயர் எல்லா நாடுகளிலும் பிரபலமானது.
பெரிய அளவில் வர்த்தகம் நடக்கும் நிறுவனங்களுக்கு வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன் வழங்குவது வழக்கம். காரணம், அதிக லாபம் ஈட்டும் கம்பெனிகள் தங்கள் கடனுக்கான வட்டியை ஒழுங்காக செலுத்துவதோடு, கடன் தொகையையும் குறிப்பிட்ட காலத்தில் முறையாக வங்கிகளுக்கு திருப்பி செலுத்தி விடும். ஆனால், பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி'யிடம் கணிசமான தொகையை கடனாகப் பெற்று திருப்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார்.
இவர் செய்த மோசடிதான் இந்திய வங்கிகளின் வரலாற்றிலே மிகப்பெரிய பண மோசடி எனக் கருதப்படுகிறது. இவரிடமிருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி' வசூலிக்க வேண்டிய பணம் ரூபாய் 11,300 கோடி. ஆனால், அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தனது வாழ்க்கையை மிக செழிப்பாக நடத்தி வருகிறார். இவர் ஒரு நாட்டில் இருப்பதாக தகவல் கிடைத்து நமது நாட்டின் போலீசார் இவரை தேடிச்சென்றால், இவர்அந்த நாட்டிலிருந்து தப்பி வேறு நாட்டிற்குச் சென்று விடுகிறார். 
அதாவது, போலீசார் எப்போது தன்னைத் தேடி வருவார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வகையில் பல கையாட்களுக்கு கையூட்டுகள் வழங்கி எளிதாகத் தப்பித்துக் கொள்கிறார். இவரது மோசடி பற்றி பஞ்சாப் நேஷனல் வங்கி' 
சி.பி.ஐ. போலீசாரிடம் புகார் அளித்தபோது, அவர் சில வாரங்களுக்கு முன் தனது குடும்பத்தாருடன் இந்தியாவை விட்டே வெளியேறி விட்டது தெரிய வந்தது. 
நீரவ் மோடி ஓர் இந்தியக் குடிமகன், இவரது மனைவி அமி அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர், மோடியின் சகோதரர் நிஷால் பெல்ஜியம் நாட்டுக் குடிமகன், மற்றுமொரு உறவினர் மெஹுல் சோக்ஸி என்பவர் இந்தியக் குடிமகன். இவர்கள் நான்கு பேருமே நீரவ் மோடியின் பல கம்பெனிகளில் பங்குதாரர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே நம் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டனர். அரசு வங்கிகளில் பணத்தைக் கடனாகப் பெற்று, திரும்பத் தராமல் ஏமாற்றும் தொழிலதிபர்களை விசாரிக்கும் ஒரு மையத்தை உருவாக்க மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு நடவடிக்கைகளை தொடங்கியது. நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்திய நிதி மோசடி ஆணையம்' உருவாக்கப்பட்டது. இது, வங்கிகளை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடும் நபர்களின் இந்திய சொத்துகளைக் கைப்பற்றி அவற்றை விற்பனை செய்து, அந்தப் பணத்தை இந்த மோசடிப் பேர்வழிகளால் ஏமாற்றப்பட்ட வங்கிகளுக்கு செலுத்தும்.
இந்த ஆணையம் உருவாவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே என்.சி.எல்.டி. என்ற பெயரில் ஓர்ஆணையம் இதுபோன்ற நடைமுறைகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் நடைமுறைகளை நன்கு புரிந்து பலர் எளிதாகத் தப்பித்துக் கொண்டனர்.
அதற்கு மிகச்சிறந்த உதாரணம், மிக திறமையான வங்கி கடனாளி விஜய் மல்லையா எனும் மது ஆலைகளின் அதிபரே. லண்டனில் மிக சொகுசான கடற்கரை இல்லத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தும் இவரை நம் நாட்டிற்கு கொண்ட வர நமது நாட்டின் சி.பி.ஐ போலீசாரால் ஏழு ஆண்டுகளாக முடியவில்லை.
வங்கிகளிடம் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மேலைநாட்டிற்கு தப்பிச் சென்று சொகுசு வாழ்க்கை நடத்தும் கலையில் முன் உதாரணமாகத் திகழ்பவர் மல்லையா. வெகு திறமையுடன் மது ஆலைகளை நடத்தி, இந்தியாவின் பீர்பானம் என்றால் அது தன்னுடையதுதான் என்று உலகெங்கம் புகழப்படும் வகையில் திறமையுடன் தனது மது தொழிலை நடத்தி பல்லாயிரம் கோடிகள் சம்பாதித்து வாழ்ந்தவர் மல்லையா.
2005-இல் சொந்தமாக கிங் பிஷர்' விமான நிறுவனத்தை ஆரம்பித்த மல்லையா, 2007-ஆம் ஆண்டில் மிகவும் நஷ்டமடைந்து இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஏர் டெக்கான்' விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கி தனது கம்பெனியுடன் இணைத்தார். அந்தக் காலகட்டத்தில் பல விமான நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்கின. 2008-இல் அந்த நிறுவனத்தின் கடன் தொகை ரூபாய் 5,600 கோடியாக இருந்தது. ஐ.டி.பி.ஐ. வங்கி 900 கோடி ரூபாயை அந்த நிறுவனத்திற்குக் கடனாக வழங்கியிருந்தது. 
2012-ஆம் ஆண்டில், வங்கி கடன் தொகையையும் தனது பெட்ரோல் நிறுவனங்களுக்கான கடன் தொகையையும் திருப்பி செலுத்த முடியாததால், கிங் பிஷர்' விமான நிறுவனம் மூடப்பட்டது. அதில் வேலை செய்தவர்களுக்குப் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மல்லையாவிற்கு இருந்த மொத்த கடன் தொகை 9,000 கோடி ரூபாய் .
2013-ஆம் ஆண்டில், 6,800 கோடி ரூபாய் கடன் தொகையை உடனடியாக திரும்பி செலுத்த வேண்டுமென்று வங்கிகள் நோட்டீஸ் அனுப்பின. விமான நிறுவனத்திற்காக கடன் பெற்ற தொகையை, லாபத்தில் இயங்கும் மது ஆலைகளின் வருமானத்திலிருந்து மல்லையா திரும்பச் செலுத்துவார் என்ற நம்பிக்கையில்தான் வங்கிகளும், எண்ணெய் நிறுவனங்களும் அவருக்கு கடன் வழங்கின. அவர் அவ்வாறு திருப்பி செலுத்தாததால் அவரை வில்ஃபுல் டிஃபால்ட்டர்' பட்டியலுக்கு, அதாவது, வேண்டுமென்றே பணத்தைத் திருப்பிச் செலுத்தாத கடனாளிகள் பட்டியலுக்கு வங்கிகள் கொண்டு சென்றன. மத்திய அரசின் நிதித்துறை, மல்லையா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. 2016-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 2-ஆம் தேதி, மல்லையா லண்டன் மாநகருக்குத் தப்பிச் சென்றார். மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வர சி.பி.ஐ. யால் எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கையும் இன்றுவரை வெற்றியடையவில்லை.
இன்றைய நிலையில், காவலர்களை விடவும் திறமையாக குற்றவாளிகள் இருப்பதை நமது வங்கி மோசடிகள் நிரூபிக்கின்றன. 2017-18 நிதியாண்டில் மட்டும் நமது நாட்டில் அரசு வங்கிகளில் மோசடி செய்யப்பட்ட கடன் தொகை ரூபாய் 87 ஆயிரத்து 300 கோடி!
நமது நாட்டிலுள்ள 21 அரசு வங்கிகளில், இந்தியன் வங்கி, விஜயா வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் தவிர, மற்ற 19 வங்கிகளும் இந்த ஆண்டு நஷ்டத்தை காட்டியுள்ளன. காரணம், இதுவரை வசூலாகாத கடன் தொகைகள் எப்படியும் வசூலாகிவிடும் என்ற கணக்கை மேலோட்டமாக காட்டிய வங்கிகளை, இந்திய ரிசர்வ் வங்கியும் மத்திய நிதித்துறையினரும் கண்காணித்து இந்த தொகைகள் வசூலாகாது எனக் கணித்து அந்த வங்கிகளை நஷ்டக் கணக்கில் கொண்டு வந்துவிட்டனர்.
வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ய ஒரு பிரஜை பிரபல கோடீஸ்வரனாக இருக்கலாம் என்று ஆகிவிட்டது. எப்போதுதான் முடிவுக்கு வருமோ இந்த வங்கி மோசடிகள்?
கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com