சுகமாகுமா சுமைகள்?

வேலைக்குச் செல்லும் பெண்கள் மீது எனக்கு எப்பொழுதும் பிரியம் உண்டு. நானும் அவர்கள் இனம் என்பதாலோ என்னவோ!

வேலைக்குச் செல்லும் பெண்கள் மீது எனக்கு எப்பொழுதும் பிரியம் உண்டு. நானும் அவர்கள் இனம் என்பதாலோ என்னவோ!
இலேசான ஒப்பனையுடன், காலையில் உற்சாகமாக வேலைக்குச் செல்லும் பெண்கள் மாலையில் களைப்புடன் திரும்பினாலும் முகத்தில் மலர்ச்சிக்கு மட்டும் பஞ்சமிருக்காது. பெரும்பாலான பெண்கள் தாங்கள் பணி செய்யும் இடங்களில் தங்கள் கவலைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டுதான் வேலைகளை செவ்வனே செய்கிறார்கள். வசதியான அல்லது வியாபாரப் பின்னணி கொண்ட பெண்களுக்கு பணிக்குச் செல்வது சுமையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நடுத்தரத்திற்கும் கீழே உள்ள மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்களில் பெரும்பாலானோருக்கு வீட்டிலிருந்து வெளியே வந்து பணிக்குச் செல்வது ஒரு சில நேரங்களைத் தவிர பெரும் சுமையாகவே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. பணிச் சுமையுடன், குடும்ப பாரமும் முதுகை அழுத்த 'எப்படா' ஓய்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
கணவன், குழந்தைகளுடன் அணுக் குடும்பமாகத் தனியாக வசிப்பவர்களின் பாட்டை சொல்லி முடியாது. சிறு குழந்தைகளை சம்பளத்திற்கு ஆள் வைத்துப் பார்ப்பதற்கோ அல்லது குழந்தைகளை காப்பகத்தில் விடுவதற்கோ பாதி சம்பளம் போய்விடும். மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து வரும் குழந்தைகள், அம்மா வருகிறார்களா என்று வழி மேல் விழி வைத்துப் பசியுடன் வீட்டில் காத்துக் கிடக்கிறார்கள். களைப்புடன் வீட்டில் நுழையும் அம்மாவைப் பார்த்துக் குழந்தைகள் தவறாமல் கேட்கும் கேள்வி, 'ஏனம்மா தினமும் லேட்டாக வருகிறீர்கள்?' என்பதும், அதற்கு அவர்களை அணைத்தபடி, 'உங்களுக்காகத்தானே வேலைக்குப் போகிறேன்' என்கிற தாயின் பதிலும் வழக்கமானதுதான். 
களைப்பை மறந்து, அடுக்களைக்குள் ஓடிச்சென்று பாலைக் காய்ச்சி காப்பியோ அல்லது எதோ ஒரு பானமோ கலந்து கொடுக்கும் நேரத்தில் அம்மாவின் கைப்பையைக் குடைந்து அம்மா தனக்கு ஏதாவது வாங்கி வந்திருக்கிறாளா என்ற ஆராய்ச்சியை முடித்து தனக்கான தின்பண்டங்களை கடை பரப்புவதை அம்மா ரசித்துப் பார்ப்பது விலை கொடுத்து வாங்க முடியாத சந்தோஷங்களில் ஒன்று. அடுத்து, இரவு நேர சமையலைத் தயார் செய்வது, அடுத்த நாளுக்கு செய்ய வேண்டிய பொறியல், கூட்டு, குழம்பிற்கு காய்கறிகளை வெட்டி வைத்தல், இடையில் நேரம் கிடைக்கும் பொழுது பிள்ளைகளின் வீட்டுப் படிப்பையும் கவனித்துக் கொள்வது என்று வேலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதனிடையே பணி முடிந்து வரும் கணவருக்கும் சாப்பாடு போட்டுக் கொடுத்து, சமையலறையை சுத்தம் செய்து படுப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். மனைவிக்கு வீட்டுவேலையில் உதவி செய்கிற கணவராக இருந்தால் கவலையில்லை. ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப்போடாதவராக வாய்த்திருந்தால் மனைவியின் பாடு பாவம்தான். 
எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கும். என்றாவது அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் இருந்தாலோ அல்லது அதிகாரிகளிடம் திட்டு வாங்கியிருந்தாலோ மனதுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு வீட்டிற்கு வந்தவுடன், குழந்தைகள் சிறிது சத்தம் போட்டாலோ, சண்டை போட்டாலோ எரிமலைக் குழம்பாக வெடித்து வெளிவந்துவிடும். பிள்ளைகள்தான் பலிகடாக்கள். அடி வாங்கி அழும் குழந்தைகளைப் பார்த்து வருந்தி, தானும் அழுது அவர்களை சமாதானப்படுத்தும் பொழுது தன் இயலாமை குறித்து தன் மீதே கோபப்படும் தாய்மார்கள் எத்தனையோ பேர்.
வேலைக்குப் போகும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லையென்றால் நிறைய யோசிக்க வேண்டும். குழந்தைகளைத் தனியாக வீட்டில் விட முடியாது என்பதால், மருந்து கொடுத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும். கூடவே மதிய வேளை மருந்தையும் கொடுத்துவிடுவதும் நடக்கும். உடல் நலமில்லா பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பவே முடியாத அளவுக்கு மோசமென்றால், அலுவலக மேலாளரின் முகச்சுளிப்பை சம்பாதித்துக் கொண்டு, விடுப்பு கேட்டு, வீட்டில் இருந்து குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். 
பணியிடங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழல் இருக்குமானால், அதிக வேலைப்பளு என்றால் கூட சமாளித்து கொள்ளக் கூடியவர்கள்தான் பெண்கள். ஆனால் ஆண்களால் வேறு விதமான பிரச்னைகளுக்கு ஆளாகும் பெண்களின் நிலைமையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. பார்வைக் கணைகளே பெண்களுக்குப் பெரும் தொந்தரவுதான். இன்னும் மோசமான நடவடிக்கைகளை சமாளிக்கும் பெண்களுக்கு தினமும் நரக வேதனைதான்.
வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியாத ஏக்கம் எல்லா தாய்மார்களுக்கும் உண்டு. தங்கள் அம்மா வேலைக்குப் போவதால் நிறைய விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளும் குழந்தைகளைத்தான் பாராட்ட வேண்டும். அப்படிப்பட்ட பிள்ளைகள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க, மற்றவர்களைவிட விரைவாகவே பழகிவிடுகிறார்கள்!
நடுத்தர வகுப்புப் பெண்கள் வேலைக்குச் செல்வதால் குடும்பச் செலவுகளை சமாளிப்பதில் கணவருக்கு உதவியாக இருக்கலாம். ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகள் தங்கள் தாயுடன் செலவழிக்கும் நேரத்தை இழக்கிறார்கள்.
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, இன்ன பிற உறவுகளுடன், ஒரே வீட்டில் கூட்டாக வளர்ந்த குழந்தைகள் சவால்களை தைரியமுடன் எதிர்கொள்ளக் கற்றுக் கொண்டனர். வாழ்க்கை முழுவதற்குமான பாடங்களான அன்பு, இரக்கம், சகிப்புத்தன்மை போன்ற எத்தனையோ அருங்குணங்களுடன், வெற்றி, தோல்விகளை சமமாகப் பாவிக்கும் தன்மையையும் வளர்த்துக் கொண்டனர். அத்தகைய பொற்காலத்தை நம் பிள்ளைகள் இழந்துவிட்டனர் என்றுதான் கூற வேண்டும். 
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வேலைக்குச் செல்வதாகக் கூறிக் கொள்ளும் பெண்கள், வீட்டில் இருந்து குடும்பத்தைப் பராமரிப்பதை விட குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாதுதான்.
ஆனால் பொருளாதாரம் போன்ற அழுத்தங்களால் வேலைக்குச் செல்வதையும் தவிர்க்க முடிவதில்லை. இந்தப் பெண்கள் தங்களின் குடும்பத்துக்கு உழைப்பால் செய்யும் முதலீடு முழு 'லாபத்தை' பெற்றுத் தருகிறதா என்பது மனவேதனையுடன் எழும் கேள்விக்குறி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com